வானொலி உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 12, 2024

வானொலி உரை

featured image

தந்தை பெரியாரின் பொது வாழ்க்கையில்
ஒரு சுவையான – கொள்கை ரீதியான நிகழ்வு
கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தந்தை பெரியார் வாழ்ந்த காலம்
94 ஆண்டுகள் 3 மாதங்கள் – 7 நாட்களாகும்.
பொது வாழ்வில் அவர் மேற்கொண்ட – பயண நாட்கள் 8200
மொத்த தொலைவு 13,19,662 கி.மீ.
ஒப்பீட்டளவில் இத்தொலைவு பூமியின் சுற்ற ளவைப் போல் 33 மடங்கு! பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவைப் போல் 343 மடங்கு.
பங்கேற்ற பிரச்சாரக் களங்கள் 10,700, கருத்துரை ஆற்றிய காலம் நாள் கணக்கில் 891, மணிக் கணக்கில் 21,400.
தந்தை பெரியாரின் உரைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஒலி பரப்பப்பட்டால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

உலகில் இவ்வளவு நீண்ட அளவு பொது வாழ்க்கை என்பது வேறு எவருக்கும் கிட்டியிருக்காது.
இந்தத் திரண்ட பொது வாழ்வில் எத்தனை எத்தனையோ காட்டாறுகள், நெருப்பாறுகள் உண்டு. சுவையான நிகழ்வுகளும் உண்டு.
தந்தை பெரியாரின் தனிச் செயலாளராக
15 ஆண்டு அளவில் அரும் பணியாற்றிய புலவர் இமயவரம்பன் அவர்கள் எழுதியுள்ள ஏராள நிகழ்வுகளுள் ஒன்றினை மட்டும், தந்தை பெரியாரின் நினைவு நாளில் நினைவூட்டுகிறோம்.
தந்தை பெரியார் அவர்களுக்கு ஏற்காடு கடை வீதியில் ஒரு பங்களா உண்டு.

தந்தை பெரியார் அவர்கள் வெய்யில் காலங்களில் ஏற்காடு வருவதானால் சிறு வாடகை வீடு அமர்த்திக்கொண்டுதான் தங்குவது வழக்கம். ஒரு தடவை மின் வசதி கூட இல்லாத வீட்டைப் பிடித்துத் தங்கினார்கள். தங்கி இருந்த வீட்டைச்சுற்றி, மிக்க ஏழ்மையில் உழலும் தாழ்த்தப்பட்ட மக்களே பெரிதும் சிறு, சிறு குடிசைகளில் வசித்தனர். அனேகமாக ஏற்காட்டில் அப்படிப்பட்ட மக்கள்தான் மிகுதியாக அன்று வசித்தார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் ஏற்காட்டில் வந்து தங்கி இருக்கின்ற செய்தி நகரில் பரவி விட்டது. தினம் காலை முதல் இரவு வரையில் ஏராளமான மக்கள் தந்தை பெரியார் அவர் களைக் கண்டு வணக்கம் செலுத்தி அளவளாவிச் சென்ற வண்ணம் இருந்தனர்.
இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு சில இளைஞர்கள் அய்யா அவர்களை சந்தித்து “இவ்வூர் மக்கள் தங்கள் அறிவுரையினைக் கேட்க மிக்க ஆவல் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். நாங்கள் ஓர் கூட்டம் ஏற்பாடு செய்கின்றோம். அய்யா அவர்கள் எங்கள் வேண்டுகோளை ஏற்று வந்து பேச வேண்டும்” என்று வேண்டிக் கொண்டனர்.

அய்யா அவர்களுக்கு ஓய்வு என்பதே பிடிக்காத ஒன்றாயிற்றே! மிக்க சலிப்போடு இருந்தவருக்கு இப்படி மக்களை வழக்கம்போல சந்தித்து அறிவுரை வழங்கும் வாய்ப்புக் கிடைத் தால் விடுவாரா? “ஆகா! அப்படியா மிக்க மகிழ்ச்சி. போய் ஏற்பாடு பண்ணுங்கள் அவசியம் கலந்து கொள்கின்றேன்’ என்று கூறினார்கள்.
கூட்டம் ஏரிக்கரையருகே இருந்த மைதானத் தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்காடு நகர மக்களே ஒருசேர ஓர் இடத்தில் திரண்டு விட்டார்கள்.

தந்தை பெரியார் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டிய அவ சியம் பற்றியும், அவைகளால் விளைந்துள்ள கேடுகள் பற்றியும், மூட நம்பிக்கைகள் ஒழிக்கப் பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்க உரையாற்றிக் கொண்டே வரலானார்.
கூட்டத்தில் ஒருவர் திடீர் என்று எழுந்து “அய்யா, இப்படி எல்லாம் பேசி மக்களைக் கெடுத்துவிட்டுப் போகவா இங்கு வந்திருக்கின் றீர்கள்? ஜாதி கூடாது, மதம் கூடாது, உயர்வு தாழ்வு கூடாது என்று கூறுகின்றீர்களே. அது எப்படி முடியும்? கையில் உள்ள அய்ந்து விரல்களும் ஒரே மாதிரியாகவா உள்ளன? எனவே, எல்லா ஜாதி மக்களும் எப்படி ஒன்றாக முடியும்? சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வைத்தான் எப்படி ஒழிக்க முடியும்? அது நம்ம கையிலா உள்ளது? ஆண்டவன் கட்டளையினை மாற்ற நீங்கள் யார்? ஜாதி கூடாது, மதம் கூடாது என்று மேடையிலே பேசுகின்றீர்களே, நாளை உங்கள் வீட்டுப் பெண்ணை ஒரு ஒடுக்கப்பட்ட வாலிபனுக்குத் திருமணம் செய்து கொடுக்க முன் வருவீர்களா?” என்று கேட்டார்.
தந்தை பெரியார் அவர்கள் அந்தத் தோழரைப் பார்த்து “அய்யா, பெண் விரும்பி இப்படி மணம் செய்துகொள்ள முன்வந்தால் கண்டிப்பாக நான் தடுக்க மாட்டேன். மனமுவந்து செய்து வைப்பேன் ஆனால், எனக்குப் பெண்ணோ, பையனோ இல்லையே! ஆகவே, நான் அந்தக் கருத்துக்கு உடன்பாடு உடைய வனே ஒழிய நான் என்றுமே எதிர்க்க மாட்டேன்” என்று சொன்னார்.

மற்றொருவர் “ஜாதி கூடாது, மதம் கூடாது, எல்லோரும் சமத்துவமாகப் பழக வேண்டும் என்று கூறுகின்றீர்களே! தாழ்த்தப்பட்டவர் களாகிய எங்கள் வீட்டில் நாளைக்கு நீங்கள் சாப்பிட வருவீர்களா?” என்று கேட்டார்.
தந்தை பெரியார் அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். ”அய்யா! மிக்க நன்றி. நான் யார் வீட்டிலே வேண்டுமானாலும் சாப்பிடத் தயாராக இருக்கின்றேன்.
நீங்கள் சொல்லும் வீட்டில் தாராளமாக சாப்பிட வருகின்றேன். எப்போது வரவேண்டும்? என்றைக்கு வரவேண்டும்? என்று கேட்டார்கள். கேள்வி கேட்டவரோ திகைத்துப் போய் நின்று விட்டார்.
உடனே. ஏராளமான தோழர்கள் எழுந்து, “அய்யா நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாருங்கள்! எங்கள் வீட்டுக்கு வாருங்கள்!” என்று உணர்ச்சி மேலிட்டவர்களாக பெரியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள்.
அய்யா அவர்கள் வேடிக்கையாகக் கூறி னார்கள். “எல்லார் வீட்டுக்கும் வருவதானாலும் தினம் ஒரு வீட்டுக்கு வருகின்றேன். எனக்கு சாப்பாட்டுச் செலவு மிச்சமாயிற்று.

ஆனால், நீங்கள் உங்களுக்குள்ளாகவே முடிவு பண்ணிக்கொண்டு யார் வீட்டுக்கு வர வேண்டும். என்றைக்கு வரவேண்டும் என்பதைக் கூறுங்கள் வருகின்றேன்.
இன்னொன்றும் சொல்கின்றேன். நான் வருவதாக இருந்தால் நான் மட்டும் தனியாக வர முடியாது. மணியம்மையார் மற்றும் நான்கைந்து பேர்களாவது கூட வருவார்கள்.
உங்களுடைய நிலைமைக்கு இத்தனைப் பேருக்கும் உணவு போட வசதி இருக்காது. இதற்கு நான் ஓர் வழியும் சொல்கின்றேன். தாராளமாக நீங்கள் இன்னும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யுங்கள். நான் வேண்டுமானால் அரிசி, பருப்பு. செலவுக்கு பணம் ஆகியவைகளும் கொடுக்கின்றேன்.
நீங்களே சமைத்து உங்கள் இடத்திலேயே போடுங்கள். உங்கள் கஷ்ட நிலைமையை நன்றாக உணர்ந்து இருக்கின்ற காரணத்தினால் இதைச் சொல்லுகின்றேன்.

நான் கொடுத்துச் செய்யச் சொல்லுகின்றேன் என்பது தங்களுக்கு இழுக்கு என்று தயவு செய்து கருத வேண்டாம். ஆகவேதான் சொல்லு கின்றேன்” என்று கூறிவிட்டு மேடைக்குப் பின் புறத்தில் அமர்ந்து இருந்த அன்னை மணியம் மையார் அவர்களை அழைத்து “அம்மா, நாளைக்கு இவர்கள் வருவார்கள். எத்தனைப் பேருக்கு சாப்பாடு செய்கின்றார்களோ அதற்குத் தேவையானவைகளை எல்லாம் கொடுத்து விடு” என்றார்.
அடுத்த நாள் அய்யாவின் இருப்பிடத்திற்கு வந்து “நாங்கள் சுமார் 20, 25 பேர்களுக்கு சமைக்கலாம் என்று இருக்கின்றோம்.
இந்த ஊரில் உள்ள பெரியவர்களை எல்லாம் கூப்பிட்டுப் பார்க்கின்றோம். யார் யார் வரு கின்றார்கள் என்று பார்த்து விடுவதாக உள்ளோம். தங்களைப்பற்றி எங்களிடம் தவறான கருத்துக்களைச் சொல்லி வைத்தவர்களுடைய வண்டவாளமும் இதில் இருந்து விளங்கிவிடும்” என்றனர்.
அம்மா அவர்கள் தயாராக வாங்கி வைத்து இருந்த அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றைய தேவையான பண்டங்களையும் பெற்றுச் சென்றார்கள்.

சாப்பாடு இரவு வேளைக்கு வைத்து இருந்தார்கள். அய்யா அவர்களோடு தந்தை பெரியார் அவர்களிடம் செயலாளராக இருந்த காலஞ்சென்ற அமைச்சர் திரு. என்.வி. நடராசன், சேலம் பிரபல வியாபாரியும் தந்தை பெரியாரிடம் நெருங்கிய நட்பு பூண்டிருந்தவருமான காலஞ்சென்ற திரு. ரோ.சு.அருணாசலம், மணி யம்மையார் மற்றும் இரண்டொருவருமாகச் சென்றார்கள். விருந்து நடந்த இடம் சாலையில் இருந்து பள்ளத்தில் இறங்கி சந்து வழியாக உள்ளே போக வேண்டும். கீழே மாட்டுக் கொட்டகைகள் நிறைய மாடுகள் கட்டக்கூடிய இடம் அது. ஏர்க்காடு மலைப் பிரதேசம் ஆன படியால் குளிர் அதிகம். வெய்யிலும் அதிகம் அடிக்காது. ஆகவே, அங்கு மாட்டுச் சாணங்கள், மூத்திரங்கள் எல்லாம் சீக்கிரத்திலே காயாது. அதனாலே ஈரம் எப்போதும் சொதசொத என்று இருந்துகொண்டே இருக்கும்.

வசதியற்ற சூழ்நிலையில் வசித்த அவர்கள் அன்பின் மிகுதியால் தங்கள் குடிசையிலேயே சாப்பாடு, கோழி எல்லாம் செய்து வைத்துவிட்டு பரிமாறுவதற்கு வசதி இல்லாததினால் பக்கத்தில் இருந்த மாடுகளை எல்லாம் வேறு இடத்துக்குக் கொண்டுபோய் கட்டிவிட்டு, மாட்டுக் கொட்டிலில் இருந்த மாட்டுச்சாணம் கும்பிகளை எல்லாம் வழித்து எடுத்துச் சுத்தம் செய்துவிட்டு அதன் மேலே மணலைத் தூவி அதன் மேல் வைக்கோலைப் போட்டு அதன்மேலே ஏதோ பரப்பி அதன் மீது இலைகளைப் போட்டு அவர்களையெல்லாம் உட்கார வைத்தார்கள்.
விருந்தும் பரிமாறப்பட்டு விட்டது. ஒரு பக்கம் துர்நாற்றம். இன்னொரு பக்கம் உட்கார்ந்த இடத்தில் இருந்து ஜில் என்று ஈரம் ஏறுகின்றது. இரவுநேரமானபடியால் குளிரோ தாங்க முடியவில்லை.
அந்தக் காலகட்டமோ மணியம்மையார் அவர்கள் அப்போதுதான் அய்யாவிடம் தொண்டு புரிவதற்காக வந்து சேர்ந்த புதிது. அம்மா அவர்கள் மிகத் துடிப்பாகப் பணியாற் றுபவர் என்ற போதிலும் அம்மா அவர்களுக்கே அது ஒரு புதிய அனுபவமாக அமைந்துவிட்டது. “என்னால் அன்று அந்த நாற்றம், ஈரம், குளிர் முதலியவைகளை தாங்கிக்கொள்ள முடியாத வளாக ஆகி, குமட்டலும், வாந்தியும் ஏற்படும்படி ஆகிவிட்டது” என்று அம்மா அவர்களே கூறியுள்ளார்கள்.

அம்மா அவர்கள் இலையில் வைக்கப்பட்ட சாப்பாட்டினை சாப்பிடுவதுபோல் பாவனை செய்து கொண்டும், யாரும் பார்க்காதபோது கொஞ்சம் கொஞ்சமாக சோற்றினை இலைக்கு அடியிலே எடுத்து வைத்துக் கொண்டும் இருந்தார்கள்.
பெரியார் அவர்கள் “சாப்பிடு அம்மா, சாப்பிடு அம்மா!” என்று சொல்லிக் கொண்டு அம்மா அவர்கள் கீழே வைத்து இருந்த சாப்பாட்டை எல்லாம் அவரது இலையிலேயே அள்ளி அள்ளி போட்டார். அம்மா அவர்களோ சாப்பிட்டால் வாந்தி வந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டதால் சாப்பிடாமல் தயங்கித் தயங்கிக் கொண்டு இருந்தார்கள்.
அய்யா அவர்கள் அந்த வீட்டுக்கார அம்மாவைப் பார்த்து, “மங்காணி கொஞ்சம் குழம்புக் கொண்டு வா அம்மா!” என்று கூறினார்கள். அந்த அம்மாவும் வீட்டிற்குள் குழம்பு எடுக்கச் சென்று விட்டார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் அம்மா பக்கம் திரும்பி கன்னத்தில் ஓங்கி ஓர் அடி கொடுத்தார். அவ்வளவுதான், அந்த அம்மா குழம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வருவதற்குள்ளாக இலையில் இருந்த சோறு, கறி எல்லாம் உள்ளே போய்விட்டது.
பக்கத்தில் உள்ள இலையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த திரு. என். வி. நடராசன் அவர்களும், திரு. ரோ.சு.அருணாசலம் மற்றவர் களும் கபக், கபக் என்று அவர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள்.
அம்மா அவர்கள் அந்த நிகழ்ச்சியினைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘பக்குவப்படாத அந்தக் காலத்தில் பட்ட அந்த அடி எனக்கு என்றென் றைக்கும் உதவும்படியான பல படிப்பினைகளை எல்லாம் தந்தது” என்று பல தடவைகள் குறிப்பிட்டு உள்ளார்கள்.
சொல்லுவதைச் செய்வார் – செய்வதைச் சொல்லுவார் – ஆம் அவர்தான் பெரியார்! அவரின் கடைசி முழக்கம் இதே நாளில் 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்றாலும் கொள்கையாய் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். வாழ்க பெரியார்!

குறிப்பு: 24.12.2023 அன்று வானொலி யில் ஒலிபரப்பப்பட்டது

No comments:

Post a Comment