ஞானியாரடிகள் விரும்பி வந்தோர்க்கெல்லாம் சமய வேறுபாடில்லாமல் தமிழ் மொழியை போதித்தார். அடிகளின் ஆலோசனையின்படி தான் பாண்டித்துரைத்தேவரும், அவர் சகோதரர் பாஸ்கர சேதுபதியும் மதுரையில் தமிழ்ச்சங்கத்தை 1901இல் இல் நிறுவினர்.
தூயத் தமிழ்மொழியை மக்களிடையே கொண்டுசெல்ல சைவ சித்தாந்த அமைப்பு ஒன்றை உருவாக்கி, அமைப்பின் செயலாளராக மறைமலை அடிகளாரை நியமித்தார். அந்த அமைப்பின் சார்பில் சித்தாந்தம் என்ற இதழும், பல மாநாடுகளும் நடத்தப்பட்டன.
தமிழ்க் கல்விக்கு எனத் தமிழ்க் கல்லூரி எதுவும் இல்லாத காலமாக அக்காலம் இருந்தது. அக்காலத்தில் திருவையாற்றில் சரபோஜி மன்னரால் நிறுவப்பட்ட சமஸ்கிருதக் கல்லூரி இருந்தது. அது பிற்காலத்தில் தஞ்சை மாவட்ட ஆளுகைக் கழகத்தின் (DISTRICT BOARD) மேற்பார்வையில் இயங்கியது. அடிகளார் ஒருசமயம் அக்கல்லூரிக்கு சென்றிருந்தார். அக்கல்லூரியின் தோற்றம் வளர்ச்சி – அதன் பணிகள் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். வடமொழி மட்டும் கற்பிக்கப்படும் அந்தக் கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடிகளாருக்கு உருவானது.
திருவையாறு கல்லூரியை இயக்கி வந்த தஞ்சை மாவட்டக் கழகத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த உமாமகேசுவரம் பிள்ளையவர்களை அடிகளார் தம் இருப்பிடத்துக்கு அழைத்து திருவையாறு கல்லூரி அறக்கட்டளை பற்றி ஆராயத் தூண்டினார். அப்போது மாவட்டக் கழகத்தின் தலைவராக இருந்தவர் சர். ஏ. டி. பன்னீர் செல்வம் ஆவார். தஞ்சாவூர் சென்ற உமாமகேசுவரனார், திருவையாறு கல்லூரி உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் வடமொழி செப்புப்பேட்டை எடுத்துக் கொண்டு, பன்னீர் செல்வத்தையும் உடன் அழைத்துக் கொண்டு திருப்பாதிரிப்புலியூர் வந்தார். செப்பேட்டைப் படித்துப் பார்த்த அடிகளார் அந்தப் பட்டயத்தில் அதன் குறிக்கோள் பற்றி “கல்வி வளர்ச்சிக்குப் பணியாற்ற“ என்று பொதுவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே – தமிழையும் அக்கல்லூரியில் கற்பிக்கலாம் என்பதை அடிகளார் முன்னிலையில் இருவரும் தீர்மானித்தர்கள். அதன்படி அக்கல்லூரியில் தமிழ் வித்துவான் கல்வியும் கற்பிக்க ஏற்பாடு செய்தார்கள்! வடமொழிக் கல்லூரி என்னும் பெயரையும் மாற்றி பொதுவாக அரசர் கல்லூரி என்ற பெயராக மாற்றியமைக்கப்பட்டது.
காங்கிரசை விட்டு விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பெரியார் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காக ‘குடிஅரசு’ இதழ் அலுவலகத்தைத் திறந்து வைக்க ஞானியாரடிகளை அழைத்தார். அங்கு சென்ற ஞானியாரடிகள் அலுவலகத்தைத் திறந்தவைத்து வாழ்த்துரை வழங்கினார்.
1938ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயமாக்கப் பட்டபோது, அடிகளார் ஹிந்தியை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment