‘துக்ளக்’ ஆசிரியர் திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யர்வாள் எதற்கெடுத்தாலும் தனது குருநாதர், குருநாதர் என்று ‘சோ’ ராமசாமியை அர்ச்சித்துக் கொண்டிருப்பார்.
ஆனால் இனவுணர்வுச் சிக்கல் என்று எதிர்பாராதவிதமாக வருகிறபோது அவரையும் காலில் போட்டு மிதித்துத் தள்ளி விடுவார் ஆடிட்டர் என்பதற்கு இந்த ராமன் கோயில் பிரச்சினை ஒன்றே போதுமானது.
பாபர் மசூதியை சங்பரிவார்களும், அதிலும் குறிப்பாக விஷ்வ ஹிந்து பரிசத்தினரும், பிஜேபியினரும் முன்னின்று தலைவர்கள் வழிகாட்ட ஒரு பட்டப் பகலில் இடித்து நொறுக்கியபோது ‘துக்ளக்’கில் அதன் ஆசிரியர் ‘சோ’ எழுதிய தலையங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா?
“அயோத்தியில் அயோக்கியத்தனம்” என்பதாகும்.
இதோ அந்தத் தலையங்கத்தின் ஒரு பகுதி:
“அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது.
அயோத்தியில் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும். அவர்களால் குவிக்கப்பட்ட வெறியர்களுமாகச் சேர்ந்து, மசூதியை இடித்துத் தள்ளி விட்டார்கள். ஆலயத் திருப்பணி என்ற பெயரில், அசல் காட்டுமிராண்டித்தனத்தை நடத்தியிருக்கிறார்கள்.
‘மசூதிக்கு எந்தவிதச் சேதமும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று பொது மேடைகளில் பா.ஜ.க.வினர் பேசிய பேச்சு காற்றோடு போயிற்று. இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு. எழுத்து மூலமாக உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதி, மசூதி இடிவதற்கு முன்பாகவே பொடிப் பொடியாகி விட்டது. உ.பி. அரசுக்காக, ‘சுப்ரீம் கோர்ட்’டில் ஆஜராகிய பிரபல வக்கீல் மனம் நொந்து போய், ‘அவமா னத்தில் தலை குனிகிறேன்’ என்று கோர்ட்டிலேயே கூறியிருக்கிறார்.
கோவில் மூலம் கிடைக்கக் கூடிய ஓட்டுக்காக, நாட்டிற்கே பா.ஜ.க., ஒரு பெரும் நாசத்தை விளைவித்து விட்டது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், கரசேவகர்களைத் தடுக்க முயன்றார்கள் – முடியவில்லை, வி.ஹெச்.பி.யினர் பொறுமையைக் கடைப்பிடிக்கும்படி வேண்டினார்கள் – நடக்கவில்லை. பா.ஜ.க.வினர், மன்றாடிக் கேட்டுக் கொண்டனர் – அடக்க ‘முடியவில்லை’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லலாம். இதெல்லாம் கால் காசு பெறாத வெற்று வார்த்தைகள்.
இந்த வெறிக்கூட்டத்தை அங்கே கூட்டும்போது இவர்களுக் கெல்லாம் புத்தி எங்கே போயிற்று? ‘மசூதி இடிக்கப்பட்டே ஆகவேண்டும்’ என்று முழங்கி, வெறியைத் தூண்டிய போதெல்லாம். இவர்களுடைய மனிதத் தன்மை என்னவாயிற்று? ‘நீதிமன்றத்திற்கு இதில் தலையிட தகுதி இல்லை’ என்று சவால் விட்ட போதெல்லாம். இவர்களுடைய பொறுப்புணர்வு எங்கே போயிற்று? வெறியைக் கிளப்பத் தெரியும்: வெறியர்களைக் கூட்டமாகச் சேர்க்கத் தெரியும் – ஆனால், அதற்குப் பிறகு நடக்கும் அட்டூழியத்திற்கு வேறு யாரோ பொறுப்பா? மாய்மாலம் செய்கிறார்கள்.
அங்கு கூடிய வெறியர்கள் ஒருவர் முகத்தைக் கூட அறியாத – அவர்கள் எந்த அளவுக்குத் தூண்டி விடப்பட்டிருக்கிறார்கள் என்பதை நேரடியாகக் காணாத – என்னைப் போன்ற ஒரு பத்திரிகையாளனுக்கே இவர்கள் மசூதியை இடிக்கும் அபாயம் இருக்கிறது” என்று முன்கூட்டியே புரிந்து கொள்ள முடிந்தது. அப்படியிருக்க இந்த வெறிக் கூட்டத்தை அங்கு கொண்டு வந்து குவித்த பாஜ.க., ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., – ஆகிய அமைப்புகளுக்கு இப்படி நடக்கக் கூடும் என்பது தெரியாமற் போய்விட்டதா? தெரிந்துதான் இருந்திருக்கிறது. கண்மூடித்தனமான ஓட்டு வேட்டையில் இறங்கி விட்டதால், அவர்களுடைய மனதில் பொதுநலன் பற்றி அலட்சியம் வந்து விட்டது.
அது மட்டுமல்ல. சம்பவம் நடப்பதற்கு முன்பாக, அங்கு பா.ஜ.க. தலைவர் அத்வானி ‘மத்திய ரிசர்வ் படையினர் நெருங்குவதற்கு முயல்வார்கள். அவர்களை வழிமறித்து விட வேண்டும்’ என்று அங்கு கூடிய வெறியர்களுக்கு உத்தரவு பிறப்பித்ததாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.”
‘துக்ளக்கில்’ சோ ராமசாமி இவ்வளவுக் காரசாரமாக கண்டித்து எழுதியிருக்க, திருவாளர் குருமூர்த்தியோ 31.1.2024 நாளிட்ட ‘துக்ளக்’ தலையங்கத்தில் எவ்வளவுத் தகிடு தத்தமாக – தப்பிலித்தனமாக – பார்ப்பனத்தனத்தோடு எழுதி இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
“வாக்கு வங்கி நோக்கத்துடன், 1980-1990களில் ராம ஜென்மபூமி இயக்கம் எப்படித் துர்ப்பாக்கிய வசமாக அரசியலாக்கப்பட்டது என்று இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. பிறகு, சுமார் 30 ஆண்டுகள் நடந்த வழக்கு 2019இல் முடிந்து, உச்சநீதிமன்றம் ராமர் பிறந்த இடத்தில் இடிபட்ட கோயில் இருந்தது என்று கண்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது. அதன் பிறகும், இன்றும், அதே வாக்கு வாங்கி அரசியல் தொடர, ராமர் கோயில் கும்பாபிஷேகமும், துரதிர்ஷ்டவசமாக அரசியலாக்கப்படுகிறது. ராம ஜென்ம பூமி இயக்கத்தை எதிர்த்ததால், தேசிய அளவில் தன் மய்ய ஸ்தானத்தை இழந்தது காங்கிரஸ்.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திண்டாடும் அதுதான், அன்று போல, ஆனால் இன்று அதைவிட தரமிறங்கிய, வாக்கு வங்கி அரசியலின் மய்ய நாயகன் – இதனால் ராமரைப் போற்றிய காந்தி, மோடி ஒருபுறம் – ராமன் கோயிலைப் புறக்கணிக்கும் காங்கிரஸ் எதிர்ப்புறம் என்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. காந்தி பெயரைப் போற்றும் காங்கிரஸ், காந்தி போற்றிய ராமரை ஒதுக்கியது ஆச்சரியமே!” என்று துக்ளக் தலையங்கத்தில் குறிப்பிடுகிறார் திருவாளர் குருமூர்த்தி.
திருவாளர் குருமூர்த்தி அய்யர், ராமன் பிரச்சினையை அரசியலாக்குவது காங்கிரஸ் என்று இப்பொழுது எழுதுகிறார் (‘துக்ளக்’ 31.1.2024 பக்கம் 3)
ஆனால் இவரின் குருநாதரான திருவாளர் சோ ராமசாமியோ இப்படி எழுதுகிறார்.
“ராமர் கோயில் விவகாரத்தில் மத நம்பிக்கையோ தெய்வ பக்தியோ எந்த சம்பந்தமும் கிடையாது. ஓட்டு அரசியல் ஒன்றுதான் இப்பிரச்சினையில் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் தீர்வு காண்பதும் கடினமாக இருக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்புக்கும் கட்டுப்பட முடியாது என்ற விபரீதமான பிடிவாதத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் கைவிட வேண்டும். மறுத்தால் விஸ்வ ஹிந்து பரிஷத்தையே கைவிட பா.ஜ.க. முன் வர வேண்டும். மறுத்தால் பா.ஜ.க.வையே கைவிட விவரமறிந்தவர்கள் முன் வருவார்கள்” (‘துக்ளக்’ 1.8.1992).
இருவர் கூறுவதில் எது உண்மை?
ராமன் கோவில் கருத்தில் நான் மாறுபடுகிறேன் என்று அறிவு நாணயமாக ஒப்புக் கொள்வாரா குருமூர்த்தி அய்யர்வாள்?
அறிவு நாணயத்துக்கும் அவாளுக்கும் எந்தக் காலத்தில் உறவு இருந்திருக்கிறது என்று கேட்பதில்தான் அறிவு நாணயம் இருக்கிறது என்பது தெரிய வரும்.
இதில் காந்தியாரையும் ராமனையும் வேறு முடிச்சுப் போடுகிறார் குருமூர்த்தி.
அதே காந்தியார்தான் “நான் சொல்லும் ராமன் வேறு, ராமாயண ராமன் வேறு” என்று மட்டை ஒன்று கீற்று இரண்டாகக் கிழித்து எறிந்து விட்டாரே!
அப்படியே பார்த்தாலும் அவர்கள் கூறும் ராமனைப் போற்றிய காந்தியாரை சுட்டுக் கொன்ற கூட்டம் எது? அதற்குச் சொல்லப்பட்ட காரணம் எது? அந்தக் காரணத்தை இன்றளவும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கும் சங்பரிவார், பிஜேபிக்குத் தொங்கு சதையாக இருக்கும் குருமூர்த்தி – கோட்சேயின் உடன் பிறவா சகோதரரா?
தந்தை பெரியாரின் காருண்யத்தால், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அக்கிரகாரம் தப்பியது என்பதையும் மறந்துவிட வேண்டாம். அதே நேரத்தில் மும்பையில் என்ன நடந்தது என்பதையும் மறக்க வேண்டாம்! குடுமி குருமூர்த்திக்கும் மொட்டை சோவுக்கும் இடையில் இருக்கும் பூணூல் உறவிலும் விரிசலா?
No comments:
Post a Comment