பா.ஜ.க. பாதகர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 2, 2024

பா.ஜ.க. பாதகர்கள்

சாமியார் முதலமைச்சராக உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்கள் பாஜக பிரமுகர்கள் என்று தெரியவந்த நிலையில் காவல்துறை தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளதற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் பனாரஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு நவம்பர் 1-ஆம் தேதியன்று மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் விடுதி வாசலில் நின்றுகொண்டு இருந்த பல்கலைக்கழக மாணவியை மோட்டார் சைக்கிளிலேயே தூக்கிச்சென்று பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். மேலும் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் அவரை மோசமான முறையில் சித்திரவதை செய்து ஆடை களின்றி விரட்டி விட்டுள்ளனர். இவை அனைத் தையும் படமாகவும் எடுத்தனர். இந்த நிலையில் அவர்களிட மிருந்து தப்பிய மாணவி அருகில் உள்ள ஆசிரியர்கள் தங்கு மிடத்தில் ஒரு ஆசிரியரின் அறைக்குச் சென்று உதவி கேட்டுள்ளார். மாணவியின் நிலையை அறிந்த பேராசிரியர் அவருக்கு ஆடைகளைக் கொடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் வளாகத்தில் உள்ள அனைத்துக் கண்காணிப்பு காமிராக்களிலும் பதிவான காட்சிகளை பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதனை அடுத்து மூன்று நபர்கள் வளாகத்திற்குள் மோட்டார் சைக்கிளில் வருவதும் அவர்கள் பெண்கள் விடுதி வளாகத்தை நோக்கி செல்வதும், தெரிய வந்தது, பெண்கள் விடுதி வளாகத்தில் மாணவி ஒருவரைத் தூக்கிச் செல்வதும் பதிவானது.

இதனை அடுத்து சான்றுகளோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. முதலில் புகாரை எடுத்துக்கொண்ட காவல்துறையினர் குற்றவாளிகள் மூவரும் அங்குள்ள பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் என்பதால் விசாரணையை நடத்துவதில் மெத்தனம் காட்டத்துவங்கினர்.
குற்றவாளிகள் அனைவருமே பா.ஜ.க. பிரமுகர்கள் என்பதால் வழக்கை அப்படியே கிட்டப்பில் போட்டதுடன் பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தைக் கூட சரிவரப்பதிவு செய்யாமல் ஆண் காவலரை வைத்து மாணவியிடம் வாக்குமூலம் பெற முயன்றனர்.
பாலியல் வன்கொடுமை நடந்து இரண்டு மாத காலம் ஆகியும் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இருந்தது தொடர்பாக கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அவர்கள் டில்லியில் உள்ள அனைத்து பா.ஜ.க. பெரும் தலைவர்களின் பேராதரவைப் பெற்றவர்கள் என்பதாலும், அவர்கள் கைது செய்யப் படாமல் இருப்பதாக பல்கலைக் கழக மாணவர்கள் புகார் அளித்தனர்.
விரைவில் போராட்டம் எனும் அறிவிப்பு வெளியான நிலையில், ஆளும் மாநில பா.ஜ.க. அரசு 2 மாத காலத்திற்குப் பிறகு குணால் பாண்டே, ஆனந்த் என்ற அபிஷேக் சவுகான் மற்றும் சக்ஷாம் படேலை கைது செய்தது. இதில் குணால் பாண்டே மற்றும் சக்ஷாம் படேல் ஆகியோர் மோடியின் தொகுதியான வாரணாசி யில் பா.ஜ.க. சமூக வலைதளப்பிரிவில் பெரும் பொறுப்பில் உள்ளனர். பாஜகவிற்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் தான் 2 மாத காலம் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் உத்தரப்பிர தேச காவல்துறையினர் அவர்களை காப்பாற்ற திட்டம் வகுத்துள்ளனர். மாணவர்களின் போராட்ட அறிவிப்பாலும், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளில் குணால் பாண்டே பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கி ணைப்பாளர், சாக்‌ஷம் படேல் பா.ஜ.க. தலைவர் திலீப் படேலின் உதவியாளர் ஆவார். இருவரும் வாரணாசி நகரின் பா.ஜ.க. பிரச்சார வேலைகளை கவனிப்பவர்கள் என்பதால், மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு மிக நெருக்கமானவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் பிரதமர் மோடி, உ.பி., முதலமைச்சர் ஆதித்யநாத் ஆகியோருடன் ஒளிப்படம் எடுத்து வாழ்த்து பெற்றுள்ளனர். வாரணாசிக்கு மோடி மற்றும் ஆதித்யநாத் வருகை தந்தால் குணால் பாண்டே மற்றும் சக்ஷாம் படேலின் தலைகள் தான் முதன்மையாக தெரியும். அந்தளவுக்குப் பிரச்சாரம் தொடர்பான வேலைகளில் பா.ஜ.க. மூலம் வாரணாசியில் செல்வாக்காக வலம் வரும் நிலையில், அதே செல்வாக்கு மற்றும் அதிகாரத்துடன் பல்கலைக் கழக வளாகத்திற்குள் மாணவியைப் பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை – மாணவியின் விருப்பத்தின் பெயரிலேயே அவர்கள் விளையாட்டாக நடந்து கொண்டுள்ளனர் என்று பா.ஜ.க.வினர் சமூகவலைதளங்களில் போலி செய்திகளைப் பரப்பி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி குறித்தும் தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை – ஆகையால் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுவார்கள் என்று வாரணாசி காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். (குற்றவாளிகள் படம் காண்க).
பாரதீய ஜனதா ஆட்சி ஒன்றியத்தில் இருந்தாலும் மாநிலங் களில் இருந்தாலும் சட்டம் என்பது பா.ஜ.க. சங்பரிவார் கைகளில் தான் – பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது பூஜ்ஜியம்தான்.
பிஜேபி ஆட்சியை ஒழித்தே தீருவது என்ற சூளுரையை முதலில் எடுக்க வேண்டியது பெண்களின் கைகளில்தான் முக்கியமாக இருக்கிறது.

 

 

No comments:

Post a Comment