'கலைஞர் காவியம் படைப்பேன்' மகாகவிதை புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 2, 2024

'கலைஞர் காவியம் படைப்பேன்' மகாகவிதை புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து அறிவிப்பு

featured image

சென்னை, ஜன.3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டளையை ஏற்று அடுத்ததாக கலைஞர் காவி யத்தை படைக்க இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் வாழ்த்துரை

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ புத்தக வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங் கில் நேற்று (1.1.2024) நடந்தது. விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாழ்த் துரை வழங்கி பேசியதாவது,

உலகம் தோன்றிய கதை மகா கதை _ கவியும், கதையும் சந்திக் கும் இடத்தில்தான் கவிதை பிறக்கிறது. இப்படிதான் கவிஞர் வைரமுத்து இந்த மகா கதையை சந்திக்கும் இடத்தில் ‘மகா கவிதை’ பிறந்துள்ளது என்று நினைக்கிறேன்.

பரிணாம வரலாற்றை 3 சொற்களில் அடக்கி விடுகி றோம். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதுதான் நமக்கு தெரிந்த வரலாறு. இந்த 3 சொற்களில் மட்டும் பரிணாம வரலாறு அடங்கிவிடாது என் பதை ‘மகா கவிதை’ சொல்கிறது. கற்றல், கற்பித்தல்தான் மானு டத்தை இயக்கும் சக்தி, அதைப் போலவே தான் கற்றதை நமக்கு கற்பிக்கும் பேராசிரியராக வைர முத்து மாறி இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.

கமல்ஹாசன், மயில்சாமி அண்ணாதுரை

கமல்ஹாசன் பேசியதாவது:- கவிஞர் வைரமுத்துவின் படைப் புகள் படித்தவுடன் மனதில் முத்திரை பதித்தது போன்று பதிந்து விடும். இந்த ‘மகா கவிதை’ புத்தகம் கிடைக்கவே, கிடைக்காது என்பது போல விற்பனையாக வேண்டும் என் பது என்னுடைய வாழ்த்து மட்டுமல்ல, கணிப்பு. எதிர் காலங்களில் ஏற்படப் போகும் அபாயங்களை சொல்லியாக வேண்டும். அதை இந்த புத்தகம் சொல்கிறது.

இந்த பூமியை பொலிவு கெடாமல் பாதுகாத்து, எதிர் கால சந்ததியிடம் ஒப்படைக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இது வாடகை வீடு. இதில் ஓட்டை போடக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து சொல்லி இருக் கிறார் ‘மகா கவிதை’ மூலம் பஞ்சபூதங்களையும் பாடிய கவிஞர் என்ற பெருமையை வைரமுத்து பெற்று விட்டார் –
இவ்வாறு அவர் பேசினார்.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: ‘மகா கவிதை’ புத்தகம் அறிவியலா, கவிதையா? என்று குழம்பினேன். இரண்டையும் ஒன்றாக்கி கூர்நோக்குடன் படித்தேன். புரிந்தது. உயிப்புடன் மனதை உரசும் இலக்கிய சொற் களுடன் இப்புத்தகம் அமைந் திருக்கிறது.

பேரண்டத்தின் பெரு வெடிப்பு நிகழ்ந்தது 1,380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவான கதை, மகா கவிதையின் தோரணவாயில். இதில் இடம் பெற்றுள்ள வரிகள் வாசகர்களின் அறிவொளியை தீண்டும். சூரியன் எங்களின் ஒரே நம்பிக்கை, எங்களுக்காக தீக் குளிக்கும் தியாக நட்சத்திரம், மகா கவிதையில் அறிவியல், இலக்கியமாக மிளிர்கிறது. இந்த புத்தகத்துக்காக தேடி தேடி அறிவியல் சேர்த்திருக் கிறார் வைரமுத்து. இது ஆண்டுகள் பல கடந்து தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் மகா முயற்சி. –
இவ்வாறு அவர் பேசினார்.

கவிஞர் வைரமுத்து

பின்னர் கவிஞர்வைரமுத்து ஏற்புரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசிய தாவது:- நான் இந்த படைப்பை படைப்பதற்கு காரணம் இந்த பூமி உருண்டையின் மீது கொண்டிருக்கிற காதல். இந்த பூமியை நாம் காப்பாற்றாவிட் டால் யார் காப்பாற்றுவது? இந்த பூமி அழிந்துவிட்டால் இந்த மனித குலம் எங்கு சென்று வதியும் என்று யோசித்து யோசித்துப் பார்த்த போது ஒரு கவிஞனாய், தமிழனாய், இயற் கையின் காதலனாய்

இந்த அய்ம்பூதங்களை கட்டிக்காத்து பூமியை காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கைதான் என்னை இதை எழுத வைத்தது.
நிலக்கரி, பெட்ரோல் ஆகிய 2 புதைவடிவ எரிபொருளை கடந்து மனிதன் சூரிய சக்தியின் இயற்கை மின் சக்தியை கண்ட றிந்தாலொழிய இந்த பூமியை காப்பாற்ற முடியாது. எரிபொரு ளுக்கு மாற்று சக்தியை கண்டு பிடிப்பதற்கு இந்திய விஞ்ஞானிகள், உலக விஞ்ஞானிகள் முயல வேண்டும்.

“அடுத்து கலைஞர் காவியம் எழுது. இது என் கட்டளை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக் கிறார். அரசாங்கம் போட்ட ஜி.ஓ.வை (அரசாணை) ஒரு ஏழை மாற்ற முடியுமா? உங்கள் கட்டளையை நான் கர்வமாக ஏற்றுக்கொண்டு செய்வேன்.

-இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment