புதுடில்லி, ஜன.24 மக்களவை தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
டில்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ சமீபத்தில் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், ‘ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கும். எனவே, தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்த சுற்றறிக்கையை ஆதாரமாக வைத்து, ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கும் என்று ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து டில்லி யூனியன்பிரதேச தலைமை தேர்தல் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. ‘தேர்தல் நடவடிக்கைகளை விரைவாக தொடங்க, ‘மேற்கோளாக’ மட்டுமே ஒரு தேதி (ஏப்ரல் 16) சுற்றறிக் கையில் குறிப்பிடப்பட்டது’ என்று தேர்தல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, மார்ச் 10-ஆம் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் அட்டவணை பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் 10-ஆம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணி ஜனவரி 31-ஆம் தேதிக்குள் நிறைவடையும். ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment