தமிழர் தலைவர் ஆசிரியரின் காணொலி உரை
பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக் குறித்தும், பெரியார் கொள்கைகள் ஏன் தேவை என்பது குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் மாணவர்களிடம் பேசினார். பெரியாரின் தனித்தன்மைகள், அவர் ஏன் ஒப்பற்றச் சிந்தனையாளர், இளைஞர் உலகம், மாணவர் உலகம் அவரை ஏன் பின்பற்ற வேண்டும், அவரின் அயராத பொதுத் தொண்டு, உலக வரலாற்றிலே இல்லாத அவரின் 95 ஆண்டு கால உழைப்பு, தன்னம்பிக்கை, தன்மானம் மீது அவர் கொண்ட ஈடுபாடு, யார் மீதும் வெறுப்புக் கொள்ளாமல், மனிதர்கள் மீது அவருக்கு இருந்த ஆசை, பிரிந்து வாழ்ந்த மக்களைச் சேர்த்து வைத்த அவரின் சுயமரியாதை இயக்கம், இறப்பதற்கு முன்கூட அய்யோ, அம்மா, வலிக்குதே என அலறியபடி மக்களிடம் பேசிய காட்சிகள் எனப் பல்வேறு செய்திகளை ரத்தினச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார் தமிழர் தலைவர்!
2023-எங்கெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள்!
“நீங்கள் ஓர் சிறந்த பிள்ளை”, என உங்கள் பெற் றோர் உங்களைப் பாராட்டினால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? “நீங்கள் ஓர் திறமையான மாணவர்”, எனப் பள்ளியில் புகழ்ந்தால், உங்கள் உணர்வு எப்படி இருக்கும்? “நீங்கள் ஓர் சிறந்த மனிதர்”, எனச் சமூகத்தில் ஓர் அங்கீகாரம் கிடைத்தால் அப்போது எப்படி இருக்கும்?”, என்கிற கேள்விகள் மாணவர்களிடத்தில் கேட்கப்பட்டன.
“அப்படியான சூழ்நிலை அமையும் போது, அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைப்போம்”, என உற்சாகக் குரலில் கூறினர். “தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்” என்கிற வகுப் பில் தான் இப்படி தொடங்கியது. முதலில் வகுப்புக்கான தலைப்பு மாணவர்களிடத்தில் சொல்லப்படவில்லை!
ஒரு கதை சொல்லட்டுமா?
ஒரு திரையில் 10 வயது சிறுவன் படம் ஒன்று ஒளிபரப்பானது! அதில், “குட்டிப் பையன் சாரங்க பாணி, பிறந்தது 1933”, என இருந்தது. ஒரு கதை சொல்லட்டுமா? என மாணவர்களிடத்தில் கேட்கப் பட்டது. அவர்கள் கண்கள் விரிய ஆச்சரியமாகப் பார்த்தனர்! ‘‘இங்கே சொல்லப் போகும் விசயங்கள் ஏதோ அய்ரோப்பிய நாடுகளிலோ, வேறெங்குமோ நடைபெற்றது அல்ல! நம் தமிழ்நாட்டுச் செய்தி களையே பகிர்ந்துக் கொள்ளப் போகிறோம்!
இந்தக் குட்டிப் பையன் சாரங்கபாணி முதல் கூட்டம் பேசியது 10 வயது, திருமணத்தில் வாழ்த்துரை வழங்கியது 11 வயது, பொதுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தது 12 வயது, மாநாட்டில் கொடியேற்றியது 13 வயது, பெரியார் படம் திறந்து வைத்து உரையாற்றியது 14 வயது” என வரிசையாகக் கூறப்பட்டது!
அதுவும் மாணவர்கள் நிறைந்த அந்த அரங்கத்தில் “கலந்து பேசி” (Intarct) வகுப்பு அமைக்கப்பட்டது! ஆக “குட்டிப் பையன் சாரங்கபாணி முதல் கூட்டம் பேசியது எப்போது?”, எனக் கேட்கும் போது, 10 வயது என்பதை மாணவர்கள் சத்தமாகக் கூறினார்கள். அதேபோல “மாநாட்டில் கொடியேற்றியது எப் போது?”, எனும் போது, மாணவர்கள் 13 வயது எனக் கூறினார்கள். திரையில் அதற்கான விவரங்கள் இருந்தன.
அடைமொழி ஒன்றே போதும்!
தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் பொருளாதாரப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றதோடு, தங்க மெடல் வாங்கியதும் பகிரப்பட்டது. சென்னை சட்டப் பல்கலைக் கழகத்தில் வழக்குரைஞர் படிப்பு முடித்த போது சாரங்கபாணி அவர்களின் வயது என்ன? இருப்பத்தி ஏழு! அதே சாரங்கபாணி அவர்கள் தமிழ்நாடு அளவில் ஒரு இயக்கத்திற்குப் பொதுச்செயலாளர் ஆகிறார். அப்போது அவரின் வயது என்ன? இருபத்தி ஏழு!
தமிழ்நாட்டில் முக்கியமான சில தலைவர்களுக்கு, அவர்களின் பெயர்கள் சொல்ல வேண்டியது இல்லை. அவர்களின் பட்டத்தை, உழைப்பை, சிறப்பை விளக்கும் அடைமொழி சொன்னாலே போதும். உதாரணமாகப் பெரியார், பேரறிஞர், கலைஞர், பேராசிரியர் இப்படி! அதேபோல இந்தக் குட்டிப் பையன் சாரங்கபாணி தமது 29 ஆம் வயதி லேயே ஒரு பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப் பேற்கிறார். பிறகு அந்த இயக்கத்தின் தலைவராக 40 வயதில் பொறுப்பிற்கு வருகிறார்!
தலைவர் ஆகிறார் ஒரு சிறுவர்!
ஆக 1933 இல், கடலூரில், நமது தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் சிறுவராக, பள்ளி மாணவராக, கல்லூரி மாணவராக, பிறகு இளைஞராக என்னென்ன பணிகள், என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறார் என்று பார்த்தோம்! ஒரு மனிதரின் மத்திய வயதில், அதாவது 45 வயதிலே தலைவராகவே மாறிப் போனதைக் கண்டோம்!
இப்போது அவர் யாரென்று சொல்லட்டுமா? அவரைக் குட்டிப் பையன் என்றும், சாரங்கபாணி என்றெல்லாம் அழைத்தோமே அவர்தான் இவர் என ஒரு படம் காண்பிக்கப்பட்டது! இடதுபுறம் 10 வயது சாரங்கபாணி – வலதுபுறம் 91 வயது தமிழர் தலைவர் படம்! யாரென்றே தெரியாமல், ஒரு பகுத்தறிவுக் கதை கேட்ட மாணவர்கள், இறுதியில் ஆசிரியர் படம் பார்த்த போது, கையொலி எழுப்பி ஆமோதித்தனர்!
பிறகு டாக்டர் சி.நடேசன், டாக்டர் டி.எம்.நாயர், சர்.பிட்டி தியாகராயர், பானகல் அரசர்,
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், டாக்டர் கலைஞர் என வரிசையாகப் படம் காண் பிக்கப்பட்டு, இறுதியில் ஆசிரியர் படமும் இணைக்கப்பட்டு அவர்களுக்கு விளக்கம் தரப்பட்டது! ஆக ஒரு சிறுவர் தலைவரான கதை மாணவர்களுக்குப் புரிந்தது!
இது நூறாண்டு கடந்த வரலாறு!
சரி! இந்தத் தலைவர்கள் எல்லாம் என்ன செய் தார்கள்? கடந்த 100 ஆண்டுகளில் இவர்கள் செய்த பணிகள் யாவை என்பது குறித்தும் பேசப்பட்டது. இவர்கள் கட்டிக் காப்பாற்றிய இயக்கங்கள் என திராவிட விடுதி, திராவிட சங்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என அனைத்துத் திராவிட இயக் கங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கீழ்க்கண்ட கேள்விகள் இடம் பெற்றிருக்கும். “நீங்கள் ஒரு சிறந்த பிள்ளை”, என உங்கள் பெற்றோர் பாராட்டினால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? “நீங்கள் ஒரு திறமையான மாணவர்”, எனப் பள்ளியில் புகழ்ந்தால் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்? “நீங்கள் ஒரு சிறந்த மனிதர்”, எனச் சமூகத்தில் சொன்னால் உங் களுக்கு எப்படி இருக்கும்?
ஆக இப்படியான மகிழ்ச்சியோடும், சுயமரியாதை யோடும், உயர் கல்வியோடும், பொருளாதார வளத்தோடும் வாழ நீங்கள் ஆசைப்படலாம். அது தனிப்பட்ட முயற்சி; தன்னலம் சார்த்தது! ஆனால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் இப்படித்தான் வாழ வேண்டும் என ஓர் இயக்கம் பாடுபட்டு வரு வதை நீங்கள் அறிவீர்களா? உங்கள் தாத்தா – பாட்டி, உங்கள் அம்மா – அப்பா, இப்போது நீங்கள் எனத் தொடர்ந்து பாடுபடுவதுதான் இந்த இயக்கமும், தலைவர்களும் என எடுத்துக் கூறப்பட்டது. இது நூறாண்டைக் கடந்த வரலாறு எனவும் உணர்வுகள் கடத்தப்பட்டன!
பயிற்சி வகுப்பின் நாயகர்!
ஆளுக்கொரு ஜாதி, எல்லோருக்கும் ஒரு மதம், சமத்துவமின்மை, நிற வேறுபாடு, சுயமரியாதைத் தாக்குதல், கல்வி மறுப்பு, கூலி வேலை தவிர ஏனைய பணிகள் மறுப்பு, பொருளாதார நசிவு, ஒட்டு மொத்தமாய் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை என்பது தானே தமிழர்களின் வாழ்க்கையாக இருந்தது! மேற்கண் டற்றில் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் பாதிப்படைந்து இருப்பீர்கள். ஆக சமூகத்தின் அனைத்துப் பிரச் சினைகளையும் ஒரே அடியாக தீர்த்து வைப்பதற்கே நமது தலைவர்கள் கல்வி, வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்! அப்படி முயற்சி எடுக்கும் போது, எதிராளிகள் கொடுத்த இன்னல் களையும் நீங்கள் அறிய வேண்டும்.
இந்த வகுப்பின் நாயகர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகளில் கல்விப் போராட்டத்திற்கு மிக முக்கியப் பங்குண்டு! 9 ஆயிரம் ஆண்டு வருமான வரம்பு, ஒன்றிய அரசின் 27 விழுக்காடு மண்டல் பரிந்துரை, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குப் பாதுகாப்பு என வரலாற்று நிகழ் வுகள் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டன. இட ஒதுக்கீடு என்பதை ஏதோ தத்துவார்த்தமாக நினைத்துக் கொண்டு நீங்கள் கடந்து போகக் கூடாது. அது எளிமையானது; அதேநேரம் நம்மை வெகுவாகப் பாதிக்கக் கூடியது!
இந்த வகுப்பில் 50 பேர் இருக்கிறீர்கள். ஆனால் 25 இருக்கைகளே உள்ளன. மீதம் 25 மாணவர்கள் எங்கே அமர்வார்கள்? அவர்களுக்கான உரிமைகள் எங்கே? அவர்களுக்கான சமத்துவம் எங்கே? அவர் களுக்கான வாய்ப்புகள் எங்கே? என அத்தனைக் குமான கேள்விகள் கேட்டு, போராட்டங்களைச் செய்து, அதில் வெற்றியும் பெற்ற இயக்கம்தான் திராவிடர் கழகம்! அதன் தலைவர்தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! வயது 90 இல் 80 ஆண்டு காலப் பயணங்கள், பிரச்சாரங்கள், எழுத்துகள், பேச்சுகள், போராட்டங்கள், கல்விப் பணிகள் என 40 நிமிடத்தில் ஒரு வரலாற்று வகுப்பு முடிந்தது!
தலைப்பும், வகுப்பும்!
மேட்டுப்பாளையம் திராவிடர் கழகம் சார்பில் 30.12.2023 நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்ட றையில், ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்” எனும் தலைப்பில் வி.சி.வில்வம், ‘‘தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, ‘‘பார்ப் பனப் பண்பாட்டுப் படையெடுப்புகள்” என்கிற தலைப்பில் முனைவர் க. அன்பழகன், ‘‘பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்” என்கிற தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ‘‘பேயாடுதல், சாமி ஆடுதல்” எனும் தலைப்பில் மருத்துவர்
இரா.கவுதமன், ‘‘மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்” எனும் தலைப்பில் புரபசர் ஈட்டி கணேசன் ஆகியோர் வகுப்பெடுத்தனர்!
முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட இளைஞரணி தலைவர் மு.வீரமணி வர வேற்றுப் பேசினார். மேட்டுப்பாளையம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் சு.வேலுச்சாமி தலைமை யேற்றார்.
மாவட்டக் காப்பாளர் சாலைவேம்பு சுப்பய்யன், மாவட்டச் செயலாளர் க.சுஅரங்கசாமி, மாவட்டத் துணைத் தலைவர் பாசமலர் ஆறுமுகம், மேட்டுப் பாளையம் நகரத் தலைவர் கோ.அர.பழனிச்சாமி, மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் சந்திரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநிலப் பொறுப் பாளர் தேக்கம்பட்டி சிவக்குமார், காரமடை ஒன்றியத் தலைவர் ஏ.எம்.ராஜா, குட்டைப்புதூர் கழகத் தலைவர் நாராயணன், தேக்கம்பட்டி வெள்ளையங்கிரி, மாவட்ட அமைப்பாளர் நடுர் செல்வராசு, காரமடை முத்துசாமி, முருகேசன், மேட்டுப்பாளையம் ரங்கராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.பிரதீப், ஆசிரியர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் கோவை ஆ.பிரபாகரன் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
பயிற்சிப் பட்டறையில் சிறப்பாகக் குறிப்பெடுத்த கோபி, உதயசங்கர், ஆனந்தன், தனுஷ் ஆகிய மாணவர்களுக்கு இயக்கப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன! நிறைவாக மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. காரமடை ஆசிரியர் காலனியில் அமைந்துள்ள தேக்கம்பட்டி சிவக்குமார் உணவக இடத்தில் நடைபெற்ற இவ்வகுப்பில் 40 மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்! 2400 ரூபாய் மதிப்பில் நூல்கள் விற்பனையாயின!
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளரும், பெரியாரியல் பயிற்சிப் பட்டறைப் பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த மாவட்டக் கழகத் தோழர்களையும் பாராட்டிப் பேசினார்!
தொகுப்பு: வி.சி.வில்வம்
No comments:
Post a Comment