அனைவரையும் பேசத் தூண்டும் "மௌனத்தின் மொழி" நூல் விமர்சனம்: முனைவர் வே.இராஜவேல், தஞ்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 27, 2024

அனைவரையும் பேசத் தூண்டும் "மௌனத்தின் மொழி" நூல் விமர்சனம்: முனைவர் வே.இராஜவேல், தஞ்சை

featured image

நூல்: “மௌனத்தின் மொழி”
ஆசிரியர்: ச.எ.கவின்மொழி
வெளியீடு: ஆரோ பதிப்பகம்
முதல் பதிப்பு செப்டம்பர் 2021
பக்கங்கள் 80
நன்கொடை ரூ. 150/-

தஞ்சாவூர் மாவட்டம் சூலியக்கோட்டை கிராமத்தைச் சார்ந்த ஆசிரியர் எழிலரசன் ஆசிரியை சந்திரா ஆகியோரின் அன்பு மகள் ச.ஏ.கவின்மொழி தன்னுடைய 17 வயதில் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது 2021இல் மவுனத்தின் மொழி என்ற கவிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் அரோ பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் அழகிய வடிவமைப்பில் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டு இருக்கிறது.
தான் படித்த பள்ளிக்கூடத்தை அந்த வகுப்பறையையும் கற்றுத்தந்த ஆசிரியர்களையும் எத்தனை வயதானாலும் நம்மால் மறக்க முடியாது – மறக்கவும் கூடாது என்பதை உணர்த்தி தொடங்குகிறது முதல் கவிதை. கூட்டுக் குடும்பத்திற்கு எடுத்துக்காட்டு தேனீக்கள் என்று தான் சொல்வது தான் வழக்கம். ஆனால், இந்த கவிஞர் நட்புக்கு இலக்கணமாக தேனீக்களை கொண்டு வந்திருக்கிறார். எதையும் எதிர்பார்க்காமல் கூடுகட்டி தேனை சேகரித்து வைப்பது தேனீக்கள் தான் என்று கூறுகிறார் ‘நட்பு’ எனும் கவிதை மூலம். அர்த்தம் பொதிந்திருக்கும் நம் பண்பாட்டை மீட்டெடுக்க அழைக்கிறது பண்பாட்டுக் கவிதை.
கந்தை கசக்குபவனுக்கு கந்தை கூட கிடையாது
ஊரை சுத்தம் செய்பவனுக்கு தன் உடையே சுத்தம் இல்லை
நிழற்குடை அமைப்பவனுக்கு நிழலாக வந்ததும் வறுமையே!

இவை வறுமையின் கட்டளையா? இல்லை விதியின் வரையறையா? என்று பொதுவுடைமை பேசுகிறது ‘வறுமை’ எனும் தலைப்பில் அமைந்த கவிதை. நான் இருட்டுக்கு பயப்பட்டாலும் இருட்டில் பயப்படாமல் இருந்த ஒரே அறை உனது கருவறை என்று தனக்கு தைரியம் கொடுப்பவள் தாய் தான், அந்த தாய்க்காக நாம் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசுகிறது அம்மா என்ற கவிதை.
பூக்கள் தொடங்கி பணம், நட்பு, பயம், தனிமை, ஆணவம், அவமானம், சோகம், சிரிப்பு, மாற்றம் என அனைத்திலும் முதல் மரியாதை எப்போது எங்கு என்பதை எடுத்துக் கூறி பரணி பாடுகிறது ‘முதல் மரியாதை’ எனும் கவிதை. தாயின் கருவறைக்குப் பிறகு ஒருவனை வளர்த்த அறை, பாதுகாத்த அறை, பண்படுத்திய அறை, மனிதனாக்கிய அறை பள்ளி வகுப்பறை. அந்த வகுப்பறையை தன் கோணத்தில் பல்வேறு பள்ளிப் பருவ நிகழ்வுகளை முன்வைத்து கவிதை பாடி இருக்கிறார் இந்த இளம் கவிஞர்.
கரும்பலகையின் ஆட்சியாளர்களே!
சுன்னக்கட்டியின் சொந்தக்காரர்களே!
பிரம்பின் முதலாளிகளே!
ஆறாம் அறிவை புகட்டும் ஆசான்களே!
எல்லோர் வாழ்விலும் கடந்து செல்லும் ஒரு நபர் ஆசிரியர் தான் என்று ஆசிரியர்களை அடையாளப்படுத்துகிறது ‘ஆசிரியர் தின’ கவிதை.
உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று கொடூரத்தை அம்பலப்படுத்துகிறது ‘கொரோனா கவிதை’. தமிழனின் நிறம் கருப்பு. அந்தக் கருப்புதான் அழகு என்று கருமை நிற பெண்களுக்காக வாதாடுகிறது ‘கருப்பு’ கவிதை. பள்ளிக்கூட தேர்வுகளை பார்த்து பயப்படும் மாணவர்களுக்கு ஆறுதல் கூறுகிறது வாழ்க்கையும் தேர்வு தான் என்று ‘தேர்வு’ கவிதை.

பெண்ணுக்கு தற்காப்பை புகட்டும் உலகம் ஏனோ அவளை துன்புறுத்துபவனுக்கு அறிவு ஊட்டவில்லை!
உடையில் குறை காணும் உலகமே பார்வையில் கட்டுப்பாடு விதிக்கவில்லை!! என்று கேள்வி கணை தொடுக்கிறது பெண்ணுக்கான ‘சமூகம்’ கவிதை.
80 பக்கங்களில் 50 தலைப்புகளை உள்ளடக்கிய இந்நூல் பள்ளி தொடங்கி நட்பு, தனிமை, வகுப்பறை, பண்பாடு, அமைதி, முதல் மரியாதை, கொரோனா, தேர்வு, மொழி, இசை, விவசாயம் போன்ற பல்வேறு தலைப்புகளை விளக்கி கவிதைகளாக கொண்டுள்ளது. இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நானும் ஒரு படைப்பாளியாக கவிஞனாக எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். காலத்திற்கேற்ற கருத்துகள் அடங்கிய இந்நூலை படித்து பயன்பெருக.

No comments:

Post a Comment