கல்வியில் அதிகரிக்கும் அநீதி – சிறுபான்மையினருக்கு மறுக்கப்படும் கல்வி – முற்றிலும் ஹிந்துத்துவத்திற்கு ஆதர வான அரசியலை கல்வி வழி திணிக்கும் அவலம் இந்திய அமைப்பில் தலை விரித்தாடும் நிலை உள்ளது. மக்கள் தொகை விழுக்காட்டிற்கும், ஜாதி மற்றும் மதம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இதன் மூலம், சிறுபான் மையினரில் பெரும் பகுதி மக்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பற்றாக்குறை நீடித்து வருகிறது.
இந்நிலையில், இருக்கின்ற இடஒதுக்கீடு வேறுபாட்டை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க. ஆட்சி மேற்கொண்டு வருகிறது, இந்திய ஆட்சி முறையில் தாழ்த்தப் பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் பொதுப்பிரிவினர் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு வரையறைப்படி, தாழ்த்தப்பட்ட வகுப்பார் 15%, பழங்குடி – 7.5%, இதர பிற்படுத்தப் பட்டோர் 27%, மாற்றுத் திறனாளிகள் – 4% மற்றும் பொதுப்பிரிவினருக்கு – 36.5% என்ற கல்விநிலை இட ஒதுக்கீடும், அரசு வேலைகளில் பொதுப்பிரிவினர் 36.5% க்கும் அதிகமான இடஒதுக்கீடும் செய்யப்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்று கூறி 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின் கீழ் வாழும் மக்களே அதிபெரும்பான்மைப் பெற்ற வர்களாக இருக்கின்றனர்.
உயர்ஜாதியினரில் மக்கள் தொகை 20%க்கும் குறைந்த அளவே உள்ளது. (இங்கு உயர்ஜாதி என குறிக்கப் பெறுபவர்கள், இந்து மதத்தின் உயர்ஜாதியினர் மட்டுமே) இஸ்லாமியர் மற்றும் இதர மதங்களில் உள்ள அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிற்குள் அடக்கப்படும் சூழலே நிலவிவருகிறது. இவ்வாறாக சரியான கணக்கீடின்றி பகிரப்படும் இடஒதுக்கீட்டின் மூலம், சிறுபான்மை சமூகத்தினரான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் இதரப் பிரிவினருக்கு, அவர்தம் மக்கள் தொகைக்கேற்ப இடங்கள் ஒதுக்கப்படுவது இல்லை. இதனால், பலருக்கும் கல்வி கிடைக்கப்பெறாத, அரசு வேலைகள் கிடைக்கப் பெறாத நிலை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
எனினும், அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டினை ஒழுங்குபடுத்த அதிகாரமற்ற நிலையில், கல்வி நிலையங்களில் மட்டுமாவது தங்களுக்கான கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில், சிறுபான்மையினர் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த வாய்ப்புகளுக்கும் முட்டுக்கட்டைப் போடும் வேலையை பாஜக செய்யத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பின் ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்படாத நிலையில், தனியார் கணக்கீடுகளின்படி, சுமார் 79% மக்கள் ஹிந்து மதம், 15% மக்கள் இஸ்லாமிய மதம், மீதமுள்ள 6% மக்கள் கிறித்தவம், பவுத்தம் போன்ற மத வழிமுறையாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு கருநாடகத்தில் பாஜக ஆட்சி செய்தபோது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அறிவித்தார் அமித்ஷா. அதனைத் தொடர்ந்து, தற்போது அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல சிறுபான்மையினருக்கான கல்விக் கூடங்களின் செயல்பாடுகளைச் சட்டப்பூர்வமாக நீர்த்துப் போகவைக்கும் வழக்கை, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது ஒன்றிய அரசு. அது மட்டுமின்றி, கல்வித் துறையில் சிறுபான்மை யினருக்காக ஒதுக்கப்படும் குறைந்த அளவு இடஒதுக்கீடு களுக்கும் தடை விதிக்க முனையும் பாஜகவின் நடவடிக்கை களுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஏறக்குறைய 15% ஆக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு 4% என்பதே குறைவு. இந்நிலையில் அதையும் குறைக்க முற்படும், பாஜகவின் செயல்பாடுகள், 1000 ஆண்டுகளுக்கு முன்னான, மனுவாதக் கொள்கைகளை முன்னெடுப்பதாகவே உள்ளன. இதன் மூலம் சிறு பான்மையினருக்கான அடிப்படை உரிமை களில் ஒன்றாக இருக்கும் கல்வியிலும் கைவைக்க ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களைத் தாஜா செய்ய – அஜ்மீர் தர்காவுக்கு புனிதப் போர்வை வழங்கினார் பிரதமர் மோடி என்பதெல்லாம் யாரை ஏமாற்றிட? ஹிந்து மதத்திலும் பெரும்பான்மை மக்களின் சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைப்பது ஒரு பக்கம் – பக்தியை முன்னிறுத்தி ராமன் கோயில் என்று அவர்களை மயக்குவது மற்றொரு பக்கம்!
பாம்பு பால் குடிக்கிறது என்பது போன்ற ஏமாற்று வித்தை – ஏமாறாதீர்!
No comments:
Post a Comment