வைக்கம் நூற்றாண்டு விழா - கலைஞர் நூற்றாண்டு விழா - ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 18, 2024

வைக்கம் நூற்றாண்டு விழா - கலைஞர் நூற்றாண்டு விழா - ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு பரப்புரை

featured image

♦ அரசமைப்புச் சட்டத்தின் முக்கியமானவற்றையெல்லாம் கரையான் அரிப்பதுபோன்று அரித்துவிட்டார்கள்!
♦ 2014 இல் காவி உள்ளே நுழைந்தது; அந்த ஆபத்தை யாரும் உணரவில்லை -நாங்கள்தான் முதன்முதலில் சொன்னோம்!
ஜனநாயகத்திற்கு ஆபத்து, சமூகத்திற்கு ஆபத்து அரசமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து என்று!
கோவை: வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு பரப்புரை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சிறப்புரை

கோவை, ஜன.18 அரசமைப்புச் சட்டத்தின் முக்கியமான வற்றையெல்லாம் கரையான் அரிப்பதுபோன்று அரித்து விட்டார்கள்! ‘‘2014 இல் காவி உள்ளே நுழைந்தது; அந்த ஆபத்தை யாரும் உணரவில்லை – நாங்கள்தான் முதன் முதலில் சொன்னோம்! ஜனநாயகத்திற்கு ஆபத்து, சமூகத்திற்கு ஆபத்து அரசமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து என்று!” என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு’’ பரப்புரைக் கூட்டம்
கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த 11.1.2024 அன்று மாலை கோவை புலியகுளம் ரெட் பீல்டு சாலையில் ‘‘வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு’’ பரப்புரை சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால்…

அன்றைக்கு ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அன்றைக்கு அந்தத் திட்டம் தொடர்ந் திருந்தால், என்ன ஆகியிருக்கும்? நான் இன்றைக்கு வழக்குரைஞர் – நம்முடைய இராசா அவர்கள் எம்.எல். படித்திருக்கிறார்.
இந்தப் படிப்பையெல்லாம் அந்தக் காலத்தில் நாமெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது.
கா.சு.பிள்ளை எம்.எல்.,
ஒரே ஒருவர்தான் சுப்பிரமணியப் பிள்ளை அந்தக் காலத்தில் படித்திருந்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த சைவப் பிள்ளை அவர்.
கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் வைதீகர், சிறந்த தமிழறிஞர். கா.சு.பிள்ளை என்று அவரை அழைப் பார்கள். அவரை எம்.எல். பிள்ளை என்றும் அழைப் பார்கள். ஏனென்றால், எம்.எல். படிப்பு படித்தவர்கள் அந்தக் காலத்தில் கிடையாது.

இயக்கம் இல்லையென்றால், வந்திருக்குமா?

இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், நம்முடைய இராசா அவர்கள், அவருடைய வழக்கில், அவரேதான் கட்டமைத்தார். இந்த வாய்ப்பெல்லாம் எப்படி வந்தது? திராவிட இயக்கம் இல்லையென்றால், வந்திருக்குமா? நான் எம்.ஏ., பி.எல்., படித்திருக்க முடியுமா? உங்களு டைய பிள்ளைகள் படித்திருக்க முடியுமா? முழங்காலுக் குக் கீழே வேட்டிக் கட்டிக் கொண்டிருக்க முடியுமா? தோளில் துண்டு போட முடியுமா? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.
பழைய நிலைக்குக் கொண்டு போகவேண்டும் என்று நினைப்பதுதான் பி.ஜே.பி. அதுதான் ஆர்.எஸ்.எஸ்.
அதை நினைத்துத்தான் இன்றைக்கு எங்களுக்குக் கவலை.

அமலாக்கத் துறை அதிகாரியே சிறைக்குப் போகிறார்!

அதிகமாகப் போனால், எங்களை சிறைச்சாலையில் அடைப்பார்கள். இப்பொழுது சிறைச்சாலைக்குப் போகா தவர்கள் யாரும் கிடையாதே! இன்னுங்கேட்டால், அம லாக்கத் துறை அதிகாரியேகூட சிறைக்குப் போகிறார்; பிணை கேட்டும் அவருக்குக் கிடைக்கவில்லை.

நாங்கள் சிறைச்சாலைக்குப் போகிறோம் என்றால், அது கொள்கைக்காகத்தான். மற்றவர்கள் போன்று இல்லையே!
எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.
இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கின்ற ஆட்சி இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல், போட்டு மிதிக்கின்ற நிலைதான்.
இந்திய அரசமைப்புச் சட்டம் – சமத்துவத்தை உண்டாக்கக் கூடியது; பெண்களுக்கு சமத்துவத்தைக் கொடுக்கக் கூடியது!
அம்பேத்கர் கொடுத்த இந்திய அரசமைப்புச் சட்டம் – சமத்துவத்தை உண்டாக்கக் கூடியது – பெண்களுக்கு சமத்துவத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனால், அதை மாற்றி, மனுதர்மத்தைக் கொண்டு வர நினைக்கிறார்கள்.

மோடி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் என்ன சொன்னார், ‘‘ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்போம்” என்று சொன்னார்.
அந்தக் கூட்டணியில் இருந்த ஒரு அம்மையார் 2014 இல், தேர்தல் நடைபெறும் நேரத்தில் என்ன சொன்னார் என்றால், ‘‘உங்கள் வீட்டுக் குழாயில் தண்ணீர் வர வில்லை என்றால், மோடிக்குப் போன் செய்யுங்கள்; உடனே தண்ணீர் வந்துவிடும். ஏனென்றால், அதற்காக ஒரு தனி பிரிவையே வைத்திருக்கிறார்” என்று சொன்னார்.
பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று?
இன்றைக்கு அவர்கள் சொன்ன 2 கோடி பேருக்கான வேலை என்ன ஆனது?

‘‘வேலை கொடு, வேலை கொடு” என்று கேட்டால், இவர்கள் இரும்பில் ஒரு வேல் செய்து, அதனை எல்.முருகன் கையில் கொடுத்தார்கள்; அவர் அதை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செய்ய ஆரம்பித்தார்.
‘‘வேலை கொடு என்றுதானே கேட்டீர்கள், என்னிடம் வேல் இருக்கிறது, நீயும் வேலை தூக்கிக் கொண்டு என் பின்னால் வா” என்று சொன்னார்.
ஆகவே, கம்ப்யூட்டர் காலத்தில், ‘‘நாங்கள் கேட்டது வேல் அல்ல; வேலை” என்று கேட்கக்கூடிய அளவிற்கு வந்தார்கள்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து,அரசமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து, சமூகத்திற்கு ஆபத்து!

2014 இல் அப்பொழுதுதான் காவி உள்ளே நுழைந்தது; அந்த ஆபத்தை யாரும் உணரவில்லை. நாங்கள்தான் முதன்முதலில் சொன்னோம் – ஜனநாயகத்திற்கு ஆபத்து, அரசமைப்புச் சட்டத் திற்கு ஆபத்து, சமூகத்திற்கு ஆபத்து என்று. ஆனால், அதைக் கேட்கவில்லையே!
இளைஞர்கள் உள்பட எல்லோரும் ஏமாந் தார்கள். நீண்ட காலம் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறதே, அவர்களைவிட இவர்கள் அதிகம் செய்வார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், நடந்தது என்ன?

மோடி கொடுத்த வாக்குறுதி என்ன?

‘‘ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பொத்தென்று வந்து விழும்.
வெளிநாட்டில் உள்ள அத்துணை கருப்புப் பணத்தை யும் கொண்டு வந்துவிடுவோம்.
கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் திடீரென்று ஒரு நாள் இரவில், ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று சொல்லி, பண மதிப்பிழப்பைக் கொண்டு வந்தார்கள். அதற்குப் பதிலாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொண்டு வருகிறோம் என்றார்.
இன்றைக்கும் அதே ஆட்சி நீடிக்கிறது – அந்த ஆட்சி என்ன சொன்னது என்றால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னார்கள்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். 2 ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொண்டு வந்தது யார்? செல்லாது என்று சொன்னது யார்? இதிலிருந்து அவர்களுடைய ஆளுமைத் திறமை யைத் தெரிந்துகொள்ளலாம்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இரண்டு மடங்கு உயர்த்தி விடுகிறோம் என்றார். குறைந்தபட்ச ஆதார விலையைக் கொடுப்போம் என்றார்.
செய்தாரா? இல்லையே!
மணிப்பூரில் இவ்வளவு பெரிய கொடுமை நடந்தது; அதைப்பற்றி விவாதம் செய்யலாம் என்றால், அதற்கு வழியில்லை.
அதற்கடுத்தபடியாக, நாடாளுமன்றத்திலேயே சிலர் உள்ளே நுழைந்து புகைக் குண்டுகளை வீசி இருக் கிறார்கள்.

196 எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தனர்!

அதுகுறித்து விவாதம் நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்பது நியாயம் அல்லவா! அது ஆளுகிறவர்களின் கடமையல்லவா!
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம் நடத்த வேண் டும் என்று சொன்னதற்காக, 196 பேரை சஸ்பெண்ட் செய்தனர்.
இது அரசமைப்புச் சட்டப்படி நடக்கும் ஆட்சியா?

பிரதமர் மோடி எதைச் செய்தாலும், ‘மோடி வித்தை’ என்று சொல்கிறீர்களே, என்று சிலர் புரியாமல் கேட்கலாம்.
நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் – இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பார் மோடி – அந்தக் காட் சியை தொலைக்காட்சியில் நீங்கள் எல்லாம் பார்த் திருக்கலாம்.
இந்திய அரசமைப்பு சட்ட – கல்வெட்டின்மீது தலையை வைத்துக் கும்பிட்டார்!
பதவியேற்பின்போது மேடையிலிருந்து கீழே இறங்கிப் போகிறார் – அவர் யாரையோ அல்லது முக்கியமானவரையோ கும்பிடப் போகிறார் என்று நினைத்தால், திடீரென்று ஒரு கல்வெட்டின்முன் நின்றார் – அது என்ன கல்வெட்டு என்று பார்த்தால், இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடையாள கல்வெட்டுதான் அது – அதன்மீது தலையை வைத்துக் கும்பிட்டார்.
ஏனென்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தை அந்த அளவிற்குப் பாதுகாக்கிறாராம்.
அரசமைப்புச் சட்டத்தின் முக்கியமானவற்றையெல் லாம் கரையான் அரிப்பதுபோன்று அரித்துவிட்டார்கள்.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டமே இருக்கக் கூடாது என்று சொல்கிறவர் – வெளியுலகத்திற்கு என்ன சொல்கிறார் என்றால் – இந்திய அரசமைப்புச் சட்டத் தின்மீது எந்த அளவிற்குப் மதிப்பு வைத்திருக்கிறேன் பாருங்கள் என்று அந்தக் கல்வெட்டின்முன் நின்று மரியாதை செலுத்தினார்.

ஒன்றிய ஆட்சியில் நீதி படும்பாடு!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உரிமையின் படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவையில் பேசு வதற்கு உரிமையில்லை.
நிர்வாகம் – நீதித்துறை – சட்டமன்றத் துறை. நாடாளு மன்றத் துறைதான் இப்படி ஒரு நிலையில் இருக்கிறது.
இந்த ஒன்றிய ஆட்சியில் நீதி படும்பாடு எப்படிப் பட்டது என்பதை எண்ணிப்பார்க்கவேண்டாமா?
குஜராத்தில், பில்கிஸ் பானு வழக்கில் சில நாள்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கர்ப்பிணிப் பெண்ணை, குழந்தை உள்பட மதவெறி அடிப்படையில், ஜாதிவெறி அடிப்படையில் கொன்றனர் என்ற வழக்கில், குஜராத் உயர்நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்தது. அப்பொழுது யார் முதலமைச்சர்? யார் உள்துறை அமைச்சர்? என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

சகோதரர்கள், மற்றவர்களை, சிறைச் சாலையில் நீண்ட காலமாக இருப்பவர்களை விடுவிக் கலாம் என்கிற உரிமை மாநில அரசுக்கு உண்டு – முதலமைச்சருக்கு உண்டு.
கதாகாலட்சேபம் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஆளுநர் ஆர்.என்.இரவி
எனவே, அமைச்சரவையில் முடிவெடுத்து, அப்படிப் பட்டவர்களை விடுதலை செய்யலாம் என்று மசோதா நிறைவேற்றி, ஆளுநருக்கு அந்த மசோதாவை அனுப்பி வைத்தார்கள்.
ஆனால், இங்கே இருக்கும் ஓர் ஆளுநர், அவ ருடைய பணியைத் தவிர, மீதி எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக்கூடியவர்.
அவர், ‘‘சத்கலா காலட்சேபம்” நடத்திக் கொண் டிருக்கக்கூடிய ஆர்.என்.இரவி என்கிற பீகார் பார்ப்பனர்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்மீது ஊழல் குற்றச்சாட்டு வந்திருக்கிறது.
அதற்குப் பதில் சொல்லவேண்டும் துணைவேந்தர் என்று உயர்நீதிமன்றம் கேட்கிறது. வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அந்தப் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.இரவி போகிறார்.

ஆளுநர் வேலை என்ன?

சட்டம் தெரிந்தவர்கள் என்பதினால் சொல்கிறோம் – குற்றவாளி என்று சொல்லப்பட்ட ஒருவரை, ஆளுநர் பதவியில் உள்ள ஒருவர் சந்திக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடு கிறார் என்றுதானே அர்த்தம்!
எனவேதான் நண்பர்களே, அரசமைப்புச் சட்டத் தினுடைய அம்சங்கள் என்ன?
ஓர் ஆளுநர் வேலை என்ன என்பதுபற்றி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 162 பிரிவு இருக்கிறது.
அதில், ஆளுநர் என்பவர் மாநில அரசினுடைய ஓர் அங்கம். மாநில அரசு ஒருவர்மீது நடவடிக்கை எடுத்தால், மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுத்தால், அந்தக் குற்றவாளியை ஓர் ஆளுநர் சென்று சந்திப்பது எவ்வகையில் நியாயம்?
இப்பொழுதே இந்தச் சூழ்நிலை என்றால், மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து விட்டால், சட்டம் ஒழுங்கு என்னாகும்?

குற்றவாளிகளுக்கு பி.ஜே.பி.யினர் மாலை அணிவித்து
மரியாதை செய்கிறார்கள்!

பில்கிஸ்பானு வழக்கில், குற்றவாளிகளை விடுவித்தது தவறு என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. ஆனால், அவர்கள் விடுவிக்கப்பட்ட போது, அந்த 11 பேருக்கும் பி.ஜே.பி.யினர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள். அந்தப் படம் செய்தித்தாள்களிலும் வெளிவந்தது.
பி.ஜே.பி. கட்சி வளருகிறது, வளருகிறது என்று தம் பட்டம் அடித்துக் கொள்கிறார்களே, எப்படி வளருகிறது?
அதில் சேருபவர்கள் எல்லாம் தேடப்படும் குற்ற வாளிகள்; தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட குற்றவாளிகள்; சிறைச்சாலையில் இருந்து வெளிவந்த குற்றவாளிகள். அவர்கள் எல்லாம் பி.ஜே.பி.யில் சேர்ந்து பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இன்னுங்கேட்டால், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரியில், தமிழ்நாட்டின் பழைய பா.ஜ.க. தலைவர் ஒருமுறை ஆட்களை சேர்க்கிறார்; ‘மிஸ்டு கால்’ கொடுத்து கட்சியில் சேர்ப்பதை கையாண்டார்கள்.
ஒருவர், கட்சியில் சேருவதற்காக அங்கே பா.ஜ.க. தலைவரின் முன் வருகிறார்; அவர் தேடப்படும் குற்ற வாளி. ஆகையால், அந்த நேரத்தில் காவல்துறையினர் அவரைப் பிடிக்கப் போகிறார்கள்; காவல்துறையினரைப் பார்த்ததும் அவர் ஓட்டம் பிடிக்கிறார். அதைப் பார்த்த பா.ஜ.க. தலைவருக்கு ஒன்றும் புரியவில்லை.
இதுதானே உங்களுடைய அமைப்பு. இதுதானே உங்களுடைய ஆட்சி! இதில் மற்றவர்களை நீங்கள் குறை சொல்வதற்கு என்ன இருக்கிறது?

(தொடரும்)

No comments:

Post a Comment