சென்னை புத்தகக் காட்சியில் நூல் அறிமுக விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 21, 2024

சென்னை புத்தகக் காட்சியில் நூல் அறிமுக விழா

featured image

பெரியாருடைய சிறப்பு என்பது தனித்தன்மை வாய்ந்தது
மற்றவர்களோடு ஒப்பிடப்பட முடியாத அளவிற்கு ஒரு சுதந்திர சிந்தனையாளர்- அவருடைய சிந்தனைகள் என்பது யாருக்கும் கட்டுப்படாது!
தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை வைத்தே செதுக்கப்பட்டவர்

சென்னை புத்தகக் காட்சியில் நூல் அறிமுக விழா: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

சென்னை, ஜன.21 பெரியாருடைய சிறப்பு என்பது தனித்தன்மை வாய்ந்தது. அதுதான் சுதந்திரமான சிந்தனை. மற்றவர்களோடு ஒப்பிடப்பட முடியாத அளவிற்கு ஒரு சுதந்திர சிந்தனையாளர். அவருடைய சிந்தனைகள் என்பது யாருக்கும் கட்டுப்படாது. நல்ல வாய்ப்பாக அவர் பள்ளிகளாலோ அல்லது கல்லூரி களாலோ செதுக்கப்பட்டவர் அல்லர். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை வைத்தே செதுக்கப்பட்டவர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

47 ஆவது புத்தகக் காட்சி அரங்கத்தில் நூல் அறிமுக விழா: தமிழர் தலைவர் சிறப்புரை

கடந்த 16-1-2024 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் – 47 ஆவது புத்தகக் காட்சி அரங்கத்தில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

அறிவியக்க நூல்கள், சிந்தனையைத் தூண்டக்கூடிய மூன்று நூல்கள்!

மிகுந்த மகிழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் இடையில் சிறப்பான வகையில், சென்னை புத்தகக் காட்சி அரங்கில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்று அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால் உருவாக் கப்பட்ட நிறுவனத்தின் சார்பாக – அறிவியக்க நூல்கள், சிந்தனையைத் தூண்டக்கூடிய 3 நூல்கள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன.

அருமைத் தோழர் பாலசிங்கம்!

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களைப்பற்றிய நூல் ‘‘உலகத் தலைவர் பெரியார் – வாழ்க்கை வரலாறு (தொகுதி 8)”. இந்நூலினை வெளியிட நம்முடைய பெருமிதத்திற்கும், பாராட்டுதலுக்கும் உரிய, நம்மில் ஒருவராகவே நாம் என்றைக்கும் கருதக்கூடிய, கொள்கைக் குடும்பத்தவராக இருக்கக் கூடிய எழுச்சித் தமிழர் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள், தவிர்க்க முடியாத காரணத் தினால் இன்றைக்கு இங்கு வராவிட்டாலும், அவர் சார்பில், இங்கு வந்துள்ள அவருடைய கொள்கைத் தோழர், நிழல்போல் இருக்கக்கூடிய அருமைத் தோழர் பாலசிங்கம் அவர்களே,
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைசிறந்த, தமிழர்கள் பெருமைப்படக்கூடிய, உலகளாவிய நிலையில் மதிக்கப்படக் கூடிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், சிங்கப்பூர் பெரியார் சேவை மன்றத்தினுடைய ஆண்டுவிழா கடந்த 5.11.2023 அன்று நடைபெற்றபொழுது, அவ் விழாவில் ‘‘பெரியாரும் – அறிவியலும்‘’ என்ற தலைப்பில் ஓர் அற்புதமான உரை நிகழ்த்தினார்.

சிங்கப்பூரியர்கள் உள்பட பலதரப்பட்டவர்கள் அவருடைய உரையை, அவர் சொன்ன முறையை மிக வெகுவாக ஏற்று, அவர் உரையை முடித்தவுடன், ‘‘எழுந்து நின்று கைதட்டி” அதனை வரவேற்றார்கள்.

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன்!

அத்தகைய பேருரையை, சிறப்பு மிகுந்த அந்த உரையை நாங்கள் எல்லாம் கேட்டோம். அவ்வுரை அங்குள்ள மக்களுக்கு மட்டும் பயன்படவேண்டும் என்ற ஒரு குறுகிய எல்லையில் அடைக்காமல், எல்லா மக்களுக்கும் அவருடைய உரை பயன்படவேண்டும் என்பதற்காக, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல் கலைக் கழகத்தின் சார்பாக ‘‘பெரியாரும் – அறிவியலும்’’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டு, இன்றைக்கு அப்புத்தகத்தினைப்பற்றி அற்புதமான ஓர் ஆய்வை ஆயிரம் விளக்குத் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினரும், தலைசிறந்த மருத்துவரும், இவை எல்லாவற்றையும் தாண்டி, மிகத் தீவிரமான பகுத்தறிவாளருமான அன்புச் சகோதரரும், நம்முடைய பாராட்டுதலுக்குரிய பாரம்பரிய சுயமரி யாதைக் குடும்பத்தைச் சார்ந்த அருமைத் தோழர் டாக்டர் எழிலன் அவர்களே,

பேராசிரியர் அ.கருணானந்தம்!

இந்நிகழ்வில், நம்முடைய கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு எழுதிய ‘‘நீதிக்கட்சியும் – சமூகநீதியும்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள புத்தகத்தை சிறப்பான முறையில் ஆய்வு செய்துள்ள திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தம் அவர்களே,
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன் அவர்களே, இவ்விழாவிற்குத் தலைமையேற்று, மிகச் சிறப்பாக பல பணிகளை எங்களோடு இணைந்து நடத்திக் கொண் டிருக்கின்ற பெருமைமிகு பொருளாளர் மானமிகு வீ.குமரேசன் அவர்களே,
இவ்விழாவினை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கக் கூடிய கழகத்தினுடைய துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
இந்நிகழ்விற்கு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே, வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களே, வெங்கடேசன் அவர்களே, பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக்கூடிய வை.கலையரசன் அவர்களே,
வாசக நேயர்களாகவும், புத்தக விரும்பிகளாகவும், புத்தகப் பிரியர்களாகவும்…
இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு வாசக நேயர்களாக வும், புத்தக விரும்பிகளாகவும், புத்தகப் பிரியர்களாகவும் இங்கே வந்திருக்கக்கூடிய சான்றோர்ப்

பெருமக்களே, தோழர்களே, தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக அருமையாக மூன்று புத்தகங்கள்பற்றிய ஆய்வை எடுத்துச் சொன்னார்கள். அதிகமாக நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.

ஒப்பற்ற தலைவர் – தனித்த சிந்தனையாளர் தந்தை பெரியார்!

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது மிகவும் விரிவானது. ஏனென்றால், 60 ஆண்டுகளுக்குமேல் பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தலைவர் மட்டுமல்ல – ஒப்பற்ற தலைவர் – தனித்த சிந்தனையாளர்.
பெரியாருடைய சிறப்பு என்பது என்னவென்று சொல்லுகின்ற நேரத்தில், ஒரு தனித்தன்மை தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு. அதுதான் சுதந்திரமான சிந்தனை.
மற்றவர்களோடு ஒப்பிடப்பட முடியாத அளவிற்கு ஒரு சுதந்திர சிந்தனையாளர். அவருடைய சிந்தனைகள் என்பது யாருக்கும் கட்டுப்படாது. நல்ல வாய்ப்பாக அவர் பள்ளிகளாலோ அல்லது கல்லூரிகளாலோ செதுக்கப்பட்டவர் அல்லர். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை வைத்தே செதுக்கப்பட்டவர்.

ஏற்றுக்கொள்வதற்கோ, தள்ளுவதற்கோ உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு!

அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை தன்னைப்பற்றிய ஓர் அறிமுகம் செய்கின்ற நேரத்தில், ‘‘நான் சுதந்திர கருத்து உள்ளவன்; சுதந்திர கருத்துள்ள வன் என்பதைவிட, சுதந்திர சிந்தனையாளன். சுதந்திர சிந்தனையாளன் என்பதைவிட, சுதந்திர அனுபவம் உள்ளவன். சுதந்திர அனுபவம் உள்ளவன் என்பதைவிட, சுதந்திர உணர்ச்சி உள்ளவன். எனவே, என்னுடைய கருத்தை மற்றவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா? என்பதுபற்றி எனக்குக் கவலையில்லை. என்னை பாராட்டுகிறார்களா? வைகிறார்களா? திட்டுகிறார்களா? என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு சரியென்று பட்டது – என்னுடைய அறிவுக்குச் சரியென்று பட்டது- எனவே, என்னுடைய அறிவுக்குச் சரியென்று பட்டதை உங்கள் முன்னால் நான் வைக்கிறேன். அதனை ஏற்றுக்கொள்வதற்கோ, தள்ளுவதற்கோ உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஏனென்றால், நான் சுதந்திர சிந்தனை உடையவன், சுதந்திர எண்ணம் உடையவன், சுதந்திர உணர்ச்சியுடையவன், சுதந்திர அனுபவம் உள்ளவன். எனவே, உங்களுக்கும் அந்த சுதந்திரம் உண்டு. இவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்; இவர் சொல்வதை நாம் புறக்கணிக்கலாம் என்று சொல்லுகிற முழு உரிமை உண்டு. நீங்கள் நம்ப வேண்டும் என்று வலியுறுத்தமாட்டேன். தள்ளுவதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு” என்றார்.
எனவே, தனது கருத்தைச் சொல்லும்பொழுதும், தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் இவ் வாறு குறிப்பிட்டார்.
‘‘தமிழகத்தின் முதல் பேராசிரியர்

தந்தை பெரியார்!’ என்றார் அண்ணா!

தாம் மறைவதற்கு முன், சென்னை தியாகராயர் நகரில்தான் அய்யா அவர்கள் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியில் அவருடைய கடைசிப் பேருரையை நிகழ்த்தினார். சுயமரியாதை இயக் கத்தை அவர்கள் உருவாக்கி, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கூட்டங்களில் அவர் பேசிய நிலையில், தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் மிக அருமையாகச் சொன்னார், ‘‘தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்” என்று.
அதைக் கேட்ட எல்லோருக்கும் ஆச்சரியம். பள்ளிக் கூடத்திற்கே போகாத பெரியாரை, பேராசிரியர் என்று எப்படி சொல்கிறார்? என்று.

மக்களைச் சந்தித்த மக்களின் பேராசிரியர்!

உடனே இதற்குத் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அறிஞர் அண்ணா சொன்ன விளக்கம் – ‘‘அந்தப் பேராசிரியரின் வகுப்பு கல்லூரி எல்லைக்குள் வராது; மக்கள் மன்றத்தில் மாலை 6 மணிக்குமேல்தான் தொடங்கும். அந்த வகுப்பு மூன்று மணிநேரம், நான்கு மணிநேரம் இருக்கும். அன்றாட மக்களைச் சந்தித்த மக்களின் பேராசிரியர் அவர்” என்றார்.

அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றி எழுதும்பொழுது, எத் தனையோ நிகழ்வுகள்! 8 ஆவது பாகம்தான் இன்றைக்கு வெளியிடப்பட்டு இருக்கிறது. இன்னும் 2 பாகமோ அல்லது மூன்று பாகமோ வெளிவரும்.

கடைசி வரியில்கூட, நான் சொன்னதுபோன்று, ‘‘நான் சொல்வதை நம்பாதீர்கள்; உங்கள் அறிவு என்ன சொல்கிறதோ, அதன்படி நடங்கள்!” என்பார்.

உங்கள் அறிவு என்ன சொல்லுகிறதோ, அதன்படி நடங்கள்!

உரையைத் தொடங்கும்பொழுதும் இப்படித்தான் சொல்வார்; இரண்டு, மூன்று மணிநேரம் தொடர்ந்து பேசிவிட்டு, ‘‘நான் பேசுவதைக் கேளுங்கள்; நம்பாதீர்கள். உங்கள் அறிவு என்ன சொல்லுகிறதோ, அந்த அறிவுப்படி நடங்கள்” என்றார்.

இதுவரையில், அறிவுக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்த தலைவரை வரலாற்றில் தேடித் தேடிப் பார்த் தாலும், மூன்று பேரைத் தவிர வேறு தலைவர் கியைடாது.
முதலாவது புத்தர்; அறிவைப் பயன்படுத்து. ஏனென் றால், புத்தர் என்ற சொல்லே அறிவை அடிப்படையாகக் கொண்டதுதான். புத்தருடைய சொந்தப் பெயர் சித்தார்த்தன்.

சென்னை எழும்பூரில் உள்ள மகாபோதி சங்கத்தில் நடைபெற்ற புத்தருடைய பிறந்த நாள் விழாவில் நானும் கலந்துகொண்டேன். அவ்விழாவில் தந்தை பெரியார் அவர்கள் பேசினார்.

‘‘யாரெல்லாம் புத்தியைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் எல்லாம் புத்தன்தான்!’’

‘‘இங்கே உரையாற்றிய வீரமணி அவர்கள், என்னை 20 ஆம் நூற்றாண்டின் புத்தன் என்று பேசினார். அவர் என்மீது உள்ள பிரியத்தினால், என்னை பெருமைப்படுத்தவேண்டும் என்பதி னால் அப்படி சொன்னார். நான் மட்டுமா, புத்தன்? நீங்கள் எல்லோரும் புத்தன்தான்” என்றார்.
எல்லோரும் அதிர்ச்சியடைந்து ஆச்சரியமாகப் பார்த்தனர்.

அடுத்தகட்டமாக பெரியார் உரையைத் தொடர்ந்தார், ‘‘இதை யாரும் மறுக்க முடியாது என்று சொல்லிவிட்டு, யாரெல்லாம் புத்தியைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் எல்லாம் புத்தன்தான்” என்றார்.

பாலி மொழி பேராசிரியரின் வியப்பு!

புத்தன் என்ற பெயர் எப்படி வந்தது? புத்தி என்பது பாலி மொழி. நாகபுரி பல்கலைக் கழகத்தில் 30 ஆண்டு களுக்கு முன்பு ‘‘டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை” சொற்பொழிவில் நான் உரையாற்றியபொழுது, மேற் சொன்ன தந்தை பெரியாரின் கருத்தைச் சொன்னேன்.

அங்கே வரிசையாக பேராசிரியர்கள் அமர்ந்திருந் தார்கள். அதில் பாலி மொழி பேராசிரியர் ஒருவர், அவரை அறியாமலேயே எழுந்து மேடைக்கு வந்து, என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘‘நான் 20 ஆண்டு காலமாக பாலி மொழிக்கு இங்கே பேராசிரியராக இருக்கிறேன். ஆனால், எனக்குத் தோன்றாத கருத்து, அன்று பெரியாருக்குத் தோன்றி, சொல்லியிருக்கிறாரே” என்றார்.

யார் புத்தியைப் பயன்படுத்துகிறானோ, அவன் புத்தன்!

அதுபோன்று தந்தை பெரியார் அவர்கள் சிந்திப்பதற்கு என்ன காரணம்?
சுதந்திர சிந்தனை – சுதந்திர அறிவுதான் காரணம்.

அறிவியல் மனப்பான்மையும் – பெரியாரும் பிரிக்கப்பட முடியாதவை!

ஆகவேதான், அறிவியல் மனப்பான்மையும் – பெரியாரும் பிரிக்கப்பட முடியாதவை. சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவாளர் இயக்கம் என்று சொல்லுவதே, அறிவியல் மனப்பான்மைதான்.

அறிவியல் என்று சொன்னாலே, நம்மாட்கள் என்ன நினைக்கிறார்கள், சயின்ஸ் என்றால், நமக்குப் புரியாத விஷயம் என்று. ஆனால், அதை எவ்வளவு எளிமையாக ஆக்கிவிட்டார் டாக்டர் எழிலன். அதனுடைய எல்லா பரிமாணங்களையும் அழகாக விளக்கிக் காட்டியுள்ளார் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.

மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான அய்ந்து!

பெரியார் சொல்வார், மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை அய்ந்து அம்சங்கள்.
ஏன்? எதற்கு? எப்படி? எப்பொழுது? எவ்வாறு? என்பதுதான்.

இதையெல்லாம் கேட்டதினால்தான், இந்த ஒலி பெருக்கியில் நான் பேசுவதை நீங்கள் எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்.

முதலில் ஆடியோ; பிறகு வீடியோ!

எதிர்காலத்தில் இது எங்கே போகும் என்றால், இதை விட அறிவியல் வளர்ச்சி, நுண்ணறிவு ஆய்வு வளர்ந் திருக்கும்.
இதையெல்லாம் கண்டுபிடித்தது மனிதன். மழை மற்ற காரணங்களால் சென்ற ஆண்டைவிட, இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு கூட்டம் குறைவு என் கிறார்கள்.
ஆனால், அதேநேரத்தில், அய்யப்பன் சாமி கோவிலுக்கு கூட்டம் குறையவில்லை என்கிறார்கள்.

டாக்டர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்; நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும்!

ஏனென்றால், எப்பொழுதுமே வியாதி மிக வேகமாகப் பரவும்; அவ்வியாதியை தீர்க்கும் சிகிச்சை என்பது மிக மெதுவாகத்தான் இருக்கும். டாக்டர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்; நோயாளிகளின் எண் ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும்.

ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டதினுடைய அடிப்படை யினால்தான் சிந்தனை வளர்ச்சி அடைந்தது.
அதோடு முடிந்துவிடவில்லை. அறிவு, அறிவிற்காக அல்ல; தான் பெரிய அறிவாளி என்று காட்டுவதற்காக அல்ல.
வெளிநாட்டில், பகுத்தறிவு இயக்கம் பெரிய அள விற்கு இங்கே இருப்பதுபோன்று மக்கள் இயக்கமாக இல்லை, பல நாடுகளில், உலக அளவில். ஒரு குறுகிய ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கக்கூடிய ஓர் இயக்க மாகத்தான் இருக்கிறது.

எது மக்கள் பிரச்சினையோ, அந்தப் பிரச்சினையை கையிலெடுத்தார் தந்தை பெரியார்!

ஆனால், இங்கே மக்கள் இயக்கமாக மாற்றியிருக் கிறார், தந்தை பெரியார் அவர்கள். அதற்கு என்ன காரணம்? மக்களுக்குப் பயன்படவேண்டும்; எது மக்கள் பிரச்சினையோ, அந்தப் பிரச்சினையை கையிலெடுத்தார் அவர்.

அதைத்தான் இங்கே உள்ள நூல்களிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். மனிதர்களுக்குப் பயன்படவேண்டும்.

மனித சமுதாயத்தில், மனிதர்கள், மனிதம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்பது மிகவும் முக்கியம்.
மனிதனுக்கு என்ன சிறப்பு – பகுத்தறிவுதான்.

அய்யா அவர்கள் அழகாக விளக்கம் சொன்னார் அதற்கு – பகுத்தறிவினுடைய பயன் என்ன?
வளர்ச்சி அடையும்!

அய்ந்தறிவு அறிதல்; ஆறாவது அறிவு பகுத்தறிதல்.
அந்த ஆறாவது அறிவு என்ன?
பெரியார் அவர்கள் சொல்கிறார்,

‘‘இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குருவி எப்படி கூடு கட்டியதோ, அதேபோன்றுதான் இன்றுள்ள குருவியும் கூடு கட்டுகிறது. அதற்கு மட்டும் தான் கூடு கட்டுகிறது. ஆனால், இன்றைக்கு மனிதன் பல மாதிரிகளில் வீடு கட்டுகிறான்.
ஓரிடத்தில் இருக்கும் மரத்தை, வேரோடு பிடுங்கி, இன்னொரு இடத்தில் வைக்கிறார்கள்

‘‘அசையா சொத்து – அசையும் சொத்து” என்று சட்டத்தில் சொன்னார்கள். அசையும் சொத்து என்றால், நகருகின்ற சொத்துகள்; அசையா சொத்து என்றால், கட்டடம், வீடு போன்றவை.

ஆனால், சோவியத் ரஷ்யாவில் நீண்ட நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்டது, கடவுளின் உதவியில்லாமல், மனிதனுடைய அறிவினால், ஓரிடத்தில் இருக்கும் கட்ட டத்தை அப்படியே தூக்கி, இன்னொரு இடத்தில் வைக் கிறார்கள். பல ஆண்டுகளாக ஓரிடத்தில் இருக்கும் மரத்தை, வேரோடு பிடுங்கி, இன்னொரு இடத்தில் வைக்கிறார்கள்.

இவையெல்லாம் எப்படி?
1938 ஆண்டு ஆண்டு நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பின் போது, கடற்கரையில் கூட்டம் போட்டார்கள்.

எங்கள் அய்யமும் – தந்தை பெரியாரின் விளக்கமும்!

அப்பொழுது தந்தை பெரியார் அவர்களிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டோம்.
‘‘அய்யா, 10 ஆயிரம் பேர் கூடியிருந்தார்கள் என் றெல்லாம் செய்தி வருகிறதே; நீங்கள் உரையாற்றுவதற்கு முன்பே இதுபோன்ற செய்தி வந்திருக்கிறதே- ஒரு சந் தேகம் எங்களுக்கு, 10 ஆயிரம் பேருக்கு எப்படி அய்யா உங்கள் குரல் கேட்கும். உங்களுடைய கருத்துப் போய்ச் சேரும்” என்று கேட்டோம்.

உடனே தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், ‘‘அதைச் சொன்னால் உங்களுக்கு அதிசயமாக இருக்கும். அந்தக் காலத்தில், மூன்று இடத்தில் நிற்பார்கள் தோழர்கள். நான் ‘தோழர்களே!’ என்று சொன்னவுடன், அங்கே நிற்கும் ஒருவர் ‘தோழர்களே’ என்பார்; அதற்குப் பிறகு இன்னொரு இடத்தில் நிற்கும் தோழர் ‘தோழர்களே!’ என்பார். அதற்குப் பிறகு மூன்றாவதாக நிற்கும் தோழர், ‘தோழர்களே!’ என்பார்.
ஆனால், இன்றைக்கு அதுபோன்ற நிலை இல்லை. நான் இங்கே உரையாற்றிக் கொண்டிருப்பதை, உலகம் முழுவதும் உள்ளவர்கள் கேட்பதற்கு வசதியாக, பெரியார் வலைக்காட்சியின்மூலம் ஒளி- ஒலிபரப்பா கிறது.

முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒரு பயலுக்காவது இது தெரியுமா? நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளில் ஒருவருக்காவது இது தெரியுமா?
ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? என்று யோசனை செய்யவேண்டும்!

மயில்சாமி அண்ணாதுரை உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘நிலவில் தண்ணீர் இல்லை என்று அமெரிக்காகாரன் சொல்லிவிட்டான்; அதோடு முடிந்து போய்விட்டது என்று நிறுத்தவில்லையே!”

யார் சொன்னால் என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? என்று யோசனை செய்யவேண்டும்.
பெரியாரால்தான் அந்த சிந்தனை எனக்கு வந்தது: மயில்சாமி அண்ணாதுரை ‘‘பெரியார் சொன்னார் அல்லவா, அவ்வாறே யோசனை செய்தோம்; நிலவில் நீர் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். பெரியாரால்தான் அந்த சிந்தனை எனக்கு வந்தது” என்று அவர் சொன்னார் என்றால், பகுத்தறிவு, மனிதனுக்குப் பயன்படும் என்பதால்தான்.

ஆகவேதான் தந்தை பெரியார் சொன்னார், ‘‘அறிவுக்காக அறிவு தேவையில்லை; செயலுக் காகவே தேவை!” என்றார்.
அறிவு செயலுக்குத் தேவை என்று சொன்ன நேரத்தில்கூட, சமூக நலன் என்ற அந்த செயலுக் குத் தேவை. அதனால்தான், மனிதத்தைப் பாராட்டு கின்றோம்.

‘‘சமூகநீதி நாள்’’ – ‘‘சமத்துவ நாள்’’ அறிவிப்பு!

‘திராவிட மாடல்’ ஆட்சியில், நம்முடைய முதல மைச்சர் அவர்கள் தெளிவாக, தந்தை பெரியாருடைய பிறந்த நாளை ‘‘சமூகநீதி நாள்” என்றும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை ‘‘சமத்துவ நாள்” என்று அறிவித்தார்.
தந்தை பெரியார் பிறந்த நாளான சமூகநீதி நாளில், அய்யா அவர்கள் பயன்படுத்திய ஒரு சொல்லை, உறுதிமொழியில் சேர்த்திருக்கிறார்.
என்ன அந்த சொல்?

சமூகநீதி என்றால் என்ன? இன்றைக்கு இந்தியா முழுவதும் சமூகநீதி முழக்கம்தான்.

நாட்டில் இரண்டே அணிதான்!

இன்றைக்கு இரண்டே அணிதான் நாட்டில் உள்ளது.
சமூகநீதியை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற ஓரணி. சமூகநீதியைக் காக்கவேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பது இன்னொரு அணி.
இந்தியா, இரண்டு இந்தியாவாக இருக்கிறது.
சமூகநீதியை அழிக்கின்ற இந்தியா ஒன்று.

சமூகநீதியைப் பரப்புகின்ற, காக்கின்ற இந்தியா இன்னொன்று!
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சமூகநீதி என்றால் என்ன? தந்தை பெரியார் அவர்கள் சொன்ன எளிமை யான விளக்கம் ‘‘அனைவருக்கும் அனைத்தும்!” என்பது தான்.
எல்லோரும் அமர்வதற்கு நாற்காலி இருந்தால், நமக்குள் ஏன் சண்டை. எல்லோருக்கும் சம உணவு இருந்தால், ஏன் கவலைப்படப் போகிறோம்?

திராவிடத்தின் பெருமை – அதுதான் அறிவின் சிறப்பு!

ஆகவேதான், ‘‘எல்லோருக்கும் எல்லாமும்” – ‘‘அனைவருக்கும் அனைத்தும்” இந்தத் தத்துவத்தை நண்பர்களே, நீண்ட காலத்திற்கு முன்பே நாம் உரு வாக்கிக் காட்டியிருக்கின்றோம். அதுதான் திராவிடத்தின் பெருமை! அதுதான் அறிவின் சிறப்பு.
‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.”

‘‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”
‘‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.”

இப்படி சொன்னதினால்தான், அறிவுக்குச் சுதந்திரம் என்று சொன்னேன் பாருங்கள், புத்தியைப் பயன்படுத்து பவர்கள் புத்தன் என்று.
அந்தப் புத்தர்தான் சொன்னார், ‘‘முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக நீ நம்பாதே! முனிவர்கள் வழிவந்தது என்பதற்காக நம்பாதே! முன்னோர்கள் நடந்தார்கள் என்பதற்காகப் பின்பற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை. உன்னுடைய அறிவு என்ன சொல்லு கிறது, அதைப் பார்” என்று அறிவுக்கு முதன்முதலில் சுதந்திரம் கொடுத்தவர் புத்தர்.
இரண்டாவது, எனக்குத் தெரிந்து வள்ளுவர். ‘‘எப் பொருள் யார் யார்வாய்க் கேட்பினும்” என்று சொன்னார்.
அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள்.

கல்லூரி மாணவரின் கேள்வி!

குடியாத்தத்தில் ஒரு கல்லூரியில் உரையாற்றும் பொழுது ‘‘யார் சொன்னாலும் நீங்கள் நம்பாதீர்கள்” என்று பேசத் தொடங்கினார்.
ஒரு மாணவன் எழுந்து, ‘‘அய்யா, யார் சொன்னாலும் நம்பாதீர்கள் என்று சொல்லுகிறீர்களே, நீங்கள் சொல்லு வதை நம்புவதா, வேண்டாமா?” என்று துணிச்சலுடன் கேட்டார்.

கொஞ்சம்கூட யோசிக்கவில்லை தந்தை பெரியார் அவர்கள். அந்த மாணவன் கேட்ட வேகத்தைவிட, மிக வேகமாக, ‘‘நான் சொன்னாலும் நம்பாதே” என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக, ‘‘உன்னுடைய அறிவு என்ன சொல்லுகிறதோ, அதை நம்பு!” என்று சொன்னார்.
இந்தத் துணிச்சல், இந்த வெளிப்படையான தன்மை யைச் சொல்லிவிட்டு, சமூகத்திற்கு அது பயன்பட வேண்டும் என்றார்.
மனிதன் என்று சொல்லுகின்ற நேரத்தில், மனிதனு டைய பகுத்தறிவினால், ஒருவருக்கொருவர் பேதத்தை வளர்க்கக் கூடாது.
மனிதர்களையே பிரித்து வைத்தது எது?

ஒருவருக்கொருவர் தொடக்கூடாதவன், படிக்கக் கூடாதவன்; ஆண் உயர்ந்தவன்; பெண் தாழ்ந்தவர். ஆண் எஜமானன் – பெண் அடிமை; எந்தக் காலத்திலும் பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று சொல்லி, மனிதர்களையே பிரித்து வைத்தது எது?
இங்கே உரையாற்றிய நம்முடைய பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் சொன்னார்கள்; அதேபோன்று, டாக்டர் எழிலன் அவர்களும் சொன்னார்கள். மற்ற தோழர்களும் சொன்னார்கள்.

அவர்கள் சொல்லும்பொழுது, நீதிக்கட்சியினுடைய பகுதியை எடுத்து மிக அழகாகச் சொன்னார்கள்.
நாங்கள் ‘திராவிட அல்லாதார்’ என்று மகிழ்ச்சியாக சொல்லவில்லை. நீங்கள் அப்பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். முதலில் எடுத்தவுடன் ஆரியம்- ஆரியம் அல்லாதவர்கள் என்று சொன்னோம்.

இப்பொழுது அதுபற்றி வேண்டாம்; திருவிழா என்று கொண்டாட வைத்திருக்கிறார்கள் பாருங்கள்; பொங்கல் விழாவைத் தவிர, மீதமுள்ள எல்லா விழாக்களையும் எடுத்துக்கொண்டால், அந்த அசுரனைக் கொன்றான்; இந்த அசுரனைக் கொன்றான்; அந்த ஊரில் இருக்கின்ற கடவுள், அசுரனை அழித்தான். தீபாவளிக்கு என்ன பெருமை? நரகாசுரனை கொன்ற நாள்தான் என்று சொல்கிறார்கள்.
அசுரன், அசுரன் என்று இழிவுபடுத்தி சொன்னார்கள்; ஆனால், இன்றைக்கு அசுரன் என்பதற்கான கருத்தே மாறுகிறது. திரைப்படத் தலைப்புகளே, அசுரன் என்று வந்தாயிற்று.

‘‘உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை’’
ஆனால், அசுரன் என்றாலே, நம்மாள் அதை வெறுப் பது போன்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள். ‘‘உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை” என்று சமஸ்கிருதத்திலே ஒரு பழமொழி இருக்கிறது.
அசுரன் என்றால் என்ன அர்த்தம்?
இங்கே பொதுவானவர்கள் அதிகமாக இருக்கிறீர்கள்; இந்தக் கூட்டத்தை நான் பயன்படுத்திக் கொள்ளவேண் டும் என்று நினைக்கிறேன்; எங்கள் தோழர்கள் குறை வாக இருந்தாலும், மற்றவர்கள் நிறைய பேர் இருக் கிறீர்கள்.
அய்யா சொன்னதுபோன்று, நான் சொல்வதை நீங்கள் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற அவசியம் இல்லை. முதலில் கேளுங்கள், அதற்குப் பிறகு நீங்கள் யோசியுங்கள்!
அசுரன் என்றால் என்ன?

சுரா பானத்தைக் குடிப்பவன் சுரன் – குடிகாரன்.
அசுரன் என்றால், சுராபானத்தைக் குடிக்காதவர்கள் என்று அர்த்தம்.
குடிக்காதவர்கள் எல்லாம் கெட்டவர்களா? நன்றாக நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
நம்முடைய மூளைக்குச் சாயம் ஏற்றி, ஏற்றி எப்படி ஆக்கி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

‘மூளைச் சாயம்‘ என்றுதான் சொல்வோம்!

ஆங்கிலத்தில் ‘ப்ரைன் வாஷ்’ என்று சொன்னார்கள்; தமிழில் அதை அப்படியே மொழி பெயர்த்து, ‘‘மூளைச் சலவை”, ‘‘மூளைச் சலவை” என்கிறார்கள். நாங்கள் அந்த வார்த்தையை ‘விடுதலை’யிலோ, திராவிடர் கழகத்திலோ பயன்படுத்துவதில்லை.
‘மூளைச் சாயம்’ என்றுதான் சொல்வோம். மூளை சுத்தமாகத்தான் இருக்கிறது; அதற்கு அவன் சாயம் ஏற்றுகிறான் – காவிச் சாயத்தை ஏற்ற முடியுமா? என்று பார்க்கிறார்கள்.

அசுரன், அசுரன் என்று சொல்கிறார்கள். அசுரன் என்ன செய்தான்? மக்களைப் பாதுகாத்தான்; குடிக்காத வன் அசுரன். யோக்கியன் – அயோக்கியன் போன்று, சுரன் – அசுரன். சுராபானம் குடிப்பவன் சுரன் – சுராபானம் குடிக்காதவன் அசுரன். சுராபானத்தையும், சோமபானத்தையும் சுரன் குடித்தான்.

‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!’’

பெரியார்தான் சொன்னார், மனிதத்தை, மனிதர் களைப் பிரிக்காதே என்று. ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்றார்.
ஒரு மனிதனுக்கு அறிவு என்பது எப்பொழுது அழகாகும் என்றால், ‘மானமும், அறிவும்’ இணை யும்பொழுதுதான் ஒப்பற்ற அழகாக அது திகழும் என்றார்.
ஆகவே, மனிதனுக்கு அந்த வாய்ப்பை உரு வாக்கிய பெருமை தந்தை பெரியாருக்கு உண்டு.

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார்!

அந்த அடிப்படையில்தான், பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று இருந்த இயக்கத்தை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார்.
பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்று ஏன் எதிர் மறையாகச் சொல்லவேண்டும். நாம் திராவிடர்கள் – திராவிடர்களுக்கு ஒரு பண்பாட்டுப் புரிதல் இருக்கிறது. அந்தத் திராவிடப் பண்பாடு, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” – எல்லோரும் சமம் என்பது திராவிடப் பண்பாடு.
ஜாதி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல.

அதேபோன்று, குலம் வேறு; ஜாதி வேறு.

திருவள்ளுவர் குலம் என்ற வார்த்தையை நல்ல பொருளில் பயன்படுத்துகிறார். ஜாதி என்ற சொல்லுக்கு இடமே கிடையாது.
இன்னுங்கேட்டால், அதைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு சமத்துவம்வேண்டும் என்றார்.

அதனால்தான் இன்றைக்கு அந்த சமத்துவத்திற்குப் போராடவேண்டிய அளவிற்கு இருக்கிறது.
இங்கே நம்முடைய பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் சொன்னார், ‘‘திரித்துவிட்டார்கள், திரித்து விட்டார்கள்” என்று. யார் திரித்தார்கள் என்பதையும் சொன்னார்.

மக்கள் வெறுப்பதுபோன்று, ஒரு கெட்ட பெயரை உண்டாக்கினார்கள்!

ஆமாம்! குடிக்காதவர்களை எல்லாம் அசுரன், அசுரன் என்று சொல்லி, மக்கள் வெறுப்பதுபோன்று, ஒரு கெட்ட பெயரை உண்டாக்கினார்கள். அதற்கு இன்னொரு உதாரணத்தை தமிழ்ச் சொல்லில் சொல் லலாம்; ‘‘எவ்வளவு நாற்றமாக இருக்கிறது பாருங்கள்” என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு நம்மாள் சொல் கிறான்.
அகராதியை எடுத்துப் பாருங்கள், ‘‘நாற்றம்” என்ற சொல்லுக்கு ‘‘வாசனை” என்று பொருள்.
ஆனால், இன்றைக்கு மூக்கைப் பிடித்துக்கொண்டு, முகத்திலேயே அதைக் காட்டிவிடுகிறார்கள். நாற்றமாக இருக்கிறது என்று தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.
அப்படி தலைகீழாக பல விஷயங்களை மாற்றியதில், இதுவும் ஒன்று.

‘‘அசல் மனுதர்மம்’’ என்ன சொல்லுகிறது?
இதோ என்னுடைய கைகளில் இருப்பது ‘‘அசல் மனுதர்மம்” புத்தகம். இந்த அசல் மனுதர்ம புத்தகத்தில், நிலத்தை எப்படி பிரித்தார்கள்? மண்ணை எப்படிப் பிரித்தார்கள்? என்று பாருங்கள்.

திருவள்ளுவருக்குக் காவிச் சட்டை அணிவித்து விட்டு, ஸநாதனத்தினுடைய பாரம்பரியத்திலிருந்து வந்தவர் என்று சொல்கிறார்.
திருவள்ளுவருடைய கருத்து என்னவென்பதை, சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் சொல்லியிருக் கிறார்கள். வருணாசிரம தர்மத்தை எதிர்த்ததுதான் திருக்குறள்.

எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று சொல்வதுதான் திருக்குறள். அந்தத் திருக்குறள் எந்த மத்ததையும் சார்ந்ததல்ல.
பெரியாருடைய புத்தகங்கள் புத்தகக் காட்சியில் இருக்கிறது. அங்கே ‘‘பெரியார் களஞ்சியம்” என்ற தலைப்பில் இருக்கிறது. திருவள்ளுவரைப்பற்றியும், திருக்குறளைப்பற்றியும் தந்தை பெரியார் அவர்களு டைய ஆய்வுகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறோம்.

சென்னையில் ‘‘திருக்குறள் மாநாடு!’’

அதில், சோமசுந்தர பாரதியார் அவர்கள், தொ.பொ.மீ. போன்றவர்கள், திரு.வி.க. போன்றவர்களை அழைத்து 78 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் ‘‘திருக்குறள் மாநாடு” நடத்தி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, வீட்டுக்கு வீடு திருக்குறள் இருக்கவேண்டும் என்று எடுத்துச் சொன்ன பெருமை – வள்ளுவர் வகுத்தது வாழ்வு நெறி என்று சொன்ன பெருமை தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சியில் உண்டு.
அப்படிப்பட்ட ஓர் அரிய பெரிய முயற்சி அவர்கள் செய்த நேரத்தில், அவர் பேசிய கருத்துகள் அத்தனை யையும் தொகுத்து அந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அவற்றில் மிகத் தெளிவான ஒரு கருத்தைச் சொல்லுகிறார். ‘‘மனிதர்கள் ஒன்றுபடவேண்டும்” என்று.

உலகத்திற்கே திருக்குறள் வழிகாட்டி!

நம்முடைய தத்துவம் என்ன? பெரிய பெருமை என்ன? இன்னுங்கேட்டால் உலகப் பார்வை – உலகப் பொதுமறை என்று சொல்வதுபோன்று, உலகத்திற்கே திருக்குறள் வழிகாட்டி என்று சொல்லக்கூடிய அளவிற்கு உலகப் பார்வை, உலகப் பொதுமறை என்று திருக்குறளை சொல்கிறோம்.
அப்படிப்பட்ட ஒன்றைக் கொண்டு வந்து, அதற்கு ஒரு வர்ணம் தீட்டி, அதை ஒரு குமிழுக்குள் அடைக்கிறார்கள்.

இன்றைக்குப் பெரியார்மீது மேலெழுந்தவாரியாக என்ன குற்றம் சொல்கிறார்கள்? திராவிடர் இயக்கத்தவர் மீது என்ன குற்றம் சொல்கிறார்கள்?
இவர்கள் எல்லாம் பார்ப்பன துவேஷி என்று சொல்கிறார்கள்.

தந்தை பெரியாரின் எளிமையான எடுத்துக்காட்டு!

பெரியார் அந்தக் காலத்திலேயே கேட்டார், ‘‘ஏம்பா, கொசு கடிக்கின்றது என்பதற்காக, கொசுவலை கட்டு கிறோம்; அதற்காக நான் கொசு துவேஷி ஆகிவிடு வேனா?” என்று மிக எளிமையாக, மக்களுக்குப் புரியும்படி கேட்டார்.
முதன்முதலில் மக்களைப் பிரித்தது யார்?

அன்றைக்குத் தொடங்கி, இன்றுவரையில் மக்கள் சமூகம் ஒன்று என்று சொன்னவர் தந்தை பெரியார். இந்த நாட்டுக்காரர்கள் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எந்த நாட்டுக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் நம்முடைய உறவினர் என்று சொன்ன தத்துவம் திராவிடத் தத்துவம் – ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்.”
அதேநேரத்தில், இதற்கு நேர் விரோதமான தத்துவம் எது?

மனுதர்மத் தத்துவம்.

ஒன்றாக இருந்தவர்களைப் பிரித்தது ஆரியம்; பிரிந்தவர்களை ஒன்று சேர்த்தது திராவிடம்!
முதன்முதலில் மனிதர்களை மேல் – கீழ் என்று பிரித்ததே இவர்கள். ஒன்றாக இருந்தவர்களைப் பிரித்தது ஆரியம். பிரிந்தவர்களை ஒன்று சேர்த்தது திராவிடம்.
எப்படி அசுரன் என்றால், மிகவும் வெறுக்கத் தகுந்த வர்கள் என்று ஆக்கினார்களோ, அதேபோன்று, ஒன்று சேர்க்கக் கூடிய முயற்சிகளை எடுத்தவர் களையெல்லாம்

‘‘பிரிவினைவாதிகள்” என்று சொன் னார்கள் அவர்கள்.
நாம் பிரிவினைவாதிகள் அல்ல- நாம்தான் ஒன்று சேர்க்கக் கூடியவர்கள். இந்தியாவையே ஒன்று சேர்க்கக் கூடிய அளவில், இன்றைக்கு வழிகாட்டக் கூடியவையாக நம்முடைய தத்துவங்கள் இருக்கின்றன.

ஏனென்றால், இது மனிதத்தை அடிப்படையாகக் கொண்டது; இது வெறுப்பை அடிப்படையாகக் கொண் டதல்ல. தந்தை பெரியாரின் தத்துவம் உலகப் பார்வை கொண்ட ஒரு தத்துவம்!

அதனால்தான் பெரியார் சொன்னார், எனக்கு எந்தப் பற்றும் இல்லை. மானிடப் பற்று – மனிதப் பற்று – மனிதர்கள் எல்லாம் ஒன்று சேரவேண்டும்; உலகம் ஒரு குலமாக இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உலகப் பார்வை கொண்ட ஒரு தத்துவம். அந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் இன்றைக்கு அறிவை உண்டாக்குகின்றோம்.

ஒவ்வொரு நாட்டிற்கும் எல்லையை வகுத்துக் கொண்டு, இந்த எல்லையை தாண்டினார், அந்த எல்லையைத் தாண்டினார் என்று சண்டை நடக்கிறது. ஆனால், மின்னஞ்சல், வாட்ஸ் அப் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்ததினால், அதன் துணை கொண்டு, எங்கோ ஒரு மூலையில் இருப்பவர், இன்னொரு நாட் டில் மூலையில் இருப்பவரோடு தொடர்புகொள்கிறார். உலகத்தை இணைக்கிறது அறிவியல் கண்டுபிடிப்புகள்.

பெண்ணின் குனிந்த தலையை நிமிர்த்தியது இரண்டே பேர்தான்!

அந்தக் காலத்தில், பெண்ணுக்குத் திருமணம் என்றால், அந்த மணமகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே டிரெயினிங் கொடுப்பார்கள். ‘‘மணமேடையில் நிமிர்ந்து உட்காரக்கூடாது; அப்படி உட்கார்ந்தால், உன்னை திமிர் பிடித்த பெண் என்று நினைத்துக் கொள்வார்கள்; ஆகவே, நீ தலையை குனிந்துகொண்டே இருக்க வேண்டும்” என்று.

பெண்ணின் குனிந்த தலையை நிமிர்த்தியது இரண்டே பேர்தான். ஒருவர் தந்தை பெரியார், இன்னொருவர் போட்டோ கிராபர்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு மனித சமுதாயத்தை நிமிரச் செய்திருக்கின்றோம். சமத் துவத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, ‘‘தலைகுனியாதே, காலில் விழாதே! அது உன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு” என்று சொல்லக்கூடிய அளவிற்கு பழைய நிலையை மாற்றியுள்ளோம்.

நாகசுர வித்வான் மதுரை சிவக்கொழுந்து!

அந்தக் காலத்தில், பிரபலமான நாகசுர வித்வான் மதுரை சிவக்கொழுந்து ஆவார். செட்டிநாட்டில் ஊர்வலம் நடத்தினால், அதற்கு முன்பாக வித்வான் சிவக்கொழுந்து, நாகசுரம் வாசித்துக்கொண்டு வருவார். பணக்காரர்கள் என்றால், மதுரை சிவக்கொழுந்து நாகசுரம் வைப்பதுதான் அவர்களுக்குக் கவுரவம்.
அப்படி செட்டிநாட்டுப் பகுதியில், பிரபலமான ஒருவரின் பணக்காரர் வீட்டின் திருமணம். அந்தத் திருமணத்திற்கு மதுரை சிவக்கொழுந்து நாகசுரத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி

அங்கே தந்தை பெரியாரும், அஞ்சாநெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரியும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற் காகச் செல்கிறார்கள். அப்படி போகும்பொழுது, மதுரை சிவக்கொழுந்து நாகசுர நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிக்கு நாகசுரம் என்றால், பெரிய ஈர்ப்பு. உடனே இவர், தந்தை பெரியாரைப் பார்த்து, ‘‘அய்யா, நீங்கள் உள்ளே போங்கள்; நான் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, இறங்கிக் கொள்கிறார்.
அந்த மண ஊர்வலத்தில், மதுரை சிவக்கொழுந்து, சட்டை அணியாமல்தான் வாசிக்கவேண்டும். அப்படி வாசிக்கும்பொழுது வியர்த்துக் கொட்டும்; அதற்காக ஒரு சிறிய துண்டை தோளின்மீது போட்டு, அந்தத் துண்டினால் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வருகிறார்.
அங்கே இருக்கின்ற பிரபலமான பெரிய மனிதர்கள், பணக்காரர்கள், அந்த ஜாதிக்காரர்கள் எல்லாம் சேர்ந்து, ‘‘எங்கள் முன் தோளில் துண்டு போடக்கூடாது; எடுத்து விட்டுத்தான் வாசிக்கவேண்டும்” என்று சொல்கிறார்கள்.
மதுரை சிவக்கொழுந்து அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை; ‘‘அய்யா நான் தோளில் துண்டு போட வில்லை; வியர்வையைத் துடைப்பதற்காக கைக்குட்டை போன்று வைத்திருக்கிறேன்” என்று சொன்னார்.

‘‘இல்லை, இல்லை; அந்தத் துண்டை நீ தோளில் போட்டு வரக்கூடாது” என்று சொன்னார்கள்.

‘‘சிவக்கொழுந்து, மேலே போட்டிருக்கின்ற துண்டை எடுக்காதே! தொடர்ந்து வாசி!’’

அப்பொழுது, அதை வேடிக்கைப் பார்த்துக் கொண் டிருந்த ஒருவரிடமிருந்து குரல் எழுந்தது ‘‘சிவக்கொழுந்து, மேலே போட்டிருக்கின்ற துண்டை எடுக்காதே! தொடர்ந்து வாசி!” என்று.

யார் என்று திரும்பிப் பார்த்தால், பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் குரல்தான் அது.
அப்பொழுது, பெரியார் வரையில் அந்தப் பஞ்சாயத்துப் போகிறது.
மதுரை சிவக்கொழுந்து சொல்கிறார், ‘‘அய்யா நான் துண்டு போடவில்லை; வியர்வையைத் துடைப்பதற் காகத்தான் அந்தத் துணியை வைத்திருக்கிறேன்” என்றார்.
‘‘அவர் அந்தத் துண்டைப் போட்டுக்கொண்டுதான் வாசிப்பார்” என்று பட்டுக்கோட்டை அழகிரிசாமி சொல் கிறார்.
துண்டை எடு என்று சொல்லுகின்ற ஒரு கூட்டம் சேர்ந்தது; துண்டை எடுக்காதே என்று இன்னொரு கூட்டம் அங்கே சேர்ந்தது.
ஆனால், இன்றைக்கு நாகசுர வித்வான்கள் எங்கே அமர்ந்து வாசிக்கிறார்கள் என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள். சட்டையும் அணிந்து, சமமாக அமர்ந்து மண விழாக்களிலோ, மற்ற நிகழ்வுகளிலோ வாசிக்கிறார்கள்.

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்!

இன்னுங்கேட்டால், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை பெரியார் திடலில் நடத்தினோம். நாம கிரிப்பேட்டை கிருஷ்ணன் – அவர்தான் அன்றைக்கு மிகப் பிரபலமானவர். அவர் நாகசுரம் வாசித்தார்; அதனை பெரியார் ரசித்தார்.

அந்நிகழ்ச்சி முடிந்தவுடன், ராஜா சர் முத்தையா செட்டியார் திடலுக்கு வந்தார். அய்யா அவர்கள் கட்டிலில் அமர்ந்திருந்தார். ஒரு பக்கத்தில் நாமகிரிப் பேட்டை கிருஷ்ணனை அமர வைத்தார்; இன்னொரு பக்கத்தில் ராஜா சர் முத்தையா செட்டியாரை அமர வைத்தார்.
நாமகிரிப் பேட்டை தோட்டம் கிருஷ்ணன் நெளி கிறார்; பெரியாருக்கு இரு பக்கத்திலும் அவர்கள் அமர்ந்திருந்த அந்தக் காட்சியைப் படமாக எடுத்து ‘விடுதலை’யில் வெளியிட்டோம்.

சுயமரியாதை இயக்கத்தினுடைய வெற்றி என்பது வெறும் பேச்சல்ல!

பெரியார் மறையும்பொழுது, சுயமரியாதை இயக்கத் தினுடைய வெற்றி என்பது வெறும் பேச்சல்ல நண்பர் களே! ஒரு மனிதர், சமத்துவத்திற்காக, சுதந்திரத்திற்காக, சகோதரத்துவத்திற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். மற்றவர்கள் எல்லாம் பேசினார்கள், சிலர் பாடினார்கள்; இன்னும் சிலர் கவிதை எழுதினார்கள். அதோடு அவர்கள் முடித்துக்கொண்டார்கள்.

94 வயதுவரை வரையில்…

ஆனால், தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதைக் கொள்கையை உருவாக்கி, அதை மக்களிடையே பிரச்சாரம் செய்து, மிகப்பெரிய அளவிற்குப் போராட்டக் களத்தில் நின்றார்.
எது வரையில்?
94 வயதுவரை இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று போராட்டக் களத்தில் நின்றார்.
‘அர்ச்சகர் சீட் கிடைத்தால் புண்ணியம் – மோட்சத்தில் முன் சீட் கிடைக்கும்’ என்பதற்காக அல்ல.
ஜாதி – தீண்டாமை ஒழியவேண்டும்; சமத்துவம் மலரவேண்டும் என்பதற்காகத்தான்.
நாட்டுக்கு நாடு பிரச்சினைகள் வேறுபடும் – தத்துவம் ஒன்றுதான்!
ஆகவேதான், மனிதத்தை முன்னிறுத்தி வலியுறுத்தக் கூடிய தலைவர்தான் தந்தை பெரியார்.
வீட்டிற்கு வீடு எப்படி பிரச்சினைகள் வேறுபடு கின்றனவோ, அதுபோல, நாட்டுக்கு நாடு பிரச்சினைகள் வேறுபடும்.
தத்துவம் ஒன்றுதான்.
ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டதினால்தானே, விஞ்ஞானம்.
அய்சக் நியூட்டன் சிறுவனாக இருக்கும்பொழுது ஓரிடத்தில் அமர்ந்து ஆப்பிளை சாப்பிடும்பொழுது, அதைத் தூக்கிப் போட்டு, மேலே போட்ட ஆப்பிள், கீழே வருகிறது? ஏன் மேலே போகவில்லை என்று சிந்தித்ததின் விளைவுதானே ‘‘புவிஈர்ப்பு விசை” – அதுதானே விஞ்ஞானத்திற்கு அடிப்படை.
சுதந்திர சிந்தனை, பகுத்தறிவு,
அறிவியல் நோக்கு, அறிவியல் பார்வை!
ஆகவேதான், சுதந்திர சிந்தனை, பகுத்தறிவு, அறிவியல் நோக்கு, அறிவியல் பார்வை – இவற்றை யெல்லாம் உருவாக்கினாலும், மனித சமத்துவம் என்பது இருக்கிறதே, அது மனித குலத்தை ஒன்றுபடுத்தும்.

யார்மீதும் நமக்கு வெறுப்பு இல்லையே!

திராவிடம் என்று சொல்லும்பொழுதுகூட நண்பர் களே, நாட்டைப் பிரித்தது நாம் அல்ல; ஒன்றாகவேண்டும் என்று நாம் சொல்கிறோம்.
பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்று சொன்ன நேரத்தில், ‘‘எல்லோரும் படிக்கவேண்டும்; அனைவருக் கும் அனைத்தும்” என்று சொன்னார் தந்தை பெரியார்.

‘‘நாடே சமத்துவபுரம் ஆகவேண்டும்‘’ என்றார் கலைஞர்!

கலைஞர் அவர்கள் ‘‘பெரியார் நினைவு சமத்துவ புரம்” தொடங்கிய நேரத்தில் சொன்னார், ‘‘நாடே சமத்துவபுரம் ஆகவேண்டும்” என்றார்.
ஒரு சில நாடுகளில் நிறத்தினால் மனிதர்களைப் பிரிக்கிறார்கள்; இன்னமும் வளர்ந்த நாடுகளில் கருப்பர்கள் வேறு; வெள்ளையர்கள் வேறு என்று. அதுவும் பேதம்தான். எந்த வகையில் பேதம் இருந்தாலும், பேதம், பேதம்தான்.

பெரியாருடைய தத்துவங்கள். பெரியாரை பெருமைப்படுத்துவதற்காக அல்ல!

முகத்தில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடை யில் பிறந்தவன், காலில் பிறந்தவன், அதற்கும் கீழே பிறந்தவர்கள் எல்லா பெண்களும் என்று சொல்லி, பேதத்தை, ஒடுக்குமுறையாக, அடுக்குமுறை ஜாதியாக எப்படி ஆக்கினார்களோ, அதனை ஒழித்து மனித குலம் ஒன்றாகவேண்டும். மனித சமுதாயம் ஒற்றுமையோடு இருக்கவேண்டும் என்பதற்குத்தான் தந்தை பெரியாரு டைய தத்துவங்கள். பெரியாரை பெருமைப்படுத்துவ தற்காக அல்ல.
திராவிடம் என்றால் என்ன?
திருவள்ளுவர் என்றால் என்ன?
திருவள்ளுவர், பழைமையை ஏற்றுக்கொள்ள வில்லை.
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” என்று சொன்னார்.
வேற்றுமை என்ற வார்த்தையை அந்தக் காலத்தி லேயே அவர்கள் உண்டாக்கி வைத்திருந்தார்கள். அந்த வேற்றுமையைப் போக்குவதற்காகத்தான் பாடுபட்டார்.

அசல் மனுதர்மம் என்ன சொல்லுகிறது!

இதோ பாருங்கள், மனுதர்மம் 10 ஆவது அத்தியாயம்; 44 ஆவது சுலோகத்தில்,
‘‘பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போஜம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், சிராதம், தரதம், கசம் இந்த தேசங்களையாண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரராய் விட்டார்கள்.”
இத்தனையும் தனித்தனி தேசம்; திராவிட தேசம் வேறு; பாரத தேசம் வேறு. இதை நாங்கள் சொல்லவில்லை; எல்லாம் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.
இதை சொன்னது மனுதர்மம்.
யாரைச் சொல்கிறார்கள் என்றால், ஒன்றாக இருக்கவேண்டும் என்று சொல்கிறவர்களைப் பார்த்து, ‘‘பிரிவினைவாதிகள்” என்கிறார்கள்.
பிரிப்பவர்களைப் பார்த்து, ஓகோ, என்று சொல் கிறார்கள்.
பெரியார் அவர்களைப் பற்றி உண்மையான பார்வை, சரியான பார்வை இருக்கவேண்டும்.
காமாலைக் கண்ணர்கள் பார்த்தால், எல்லாமும் மஞ்சளாகத்தான் தெரியும். ஜாதி – தீண்டாமை என்பதுதானே அந்தக் காமாலை.
மனுதர்மம், கால்டுவெல் காலத்திற்கு முன்பா, பின்பா?

அதேபோன்று நிலத்தை எடுத்துக்கொண்டாலும், கால்டுவெல் அப்படி எழுதியிருக்கிறார் – இப்படி எழுதியிருக்கிறார் என்றெல்லாம் சில அறிவாளிகள் இன்றைக்குப் பேசுகிறார்களே, அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்; மனுதர்மம், கால்டுவெல் காலத்திற்கு முன்பா, பின்பா? என்பதை நன்றாக எண்ணிப் பாருங்கள்.
மனிதர்களைப் பிரித்தீர்கள், முகத்தில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்பதைப் போன்று. நாட்டையும் பிரித்து – எத்தனை தேசங்கள் என்பதற்கு மனுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறான் என்பதையும் பார்க்கவேண்டும்.
அசல் மனுதர்மம் அத்தியாயம் 10; 43 ஆவது சுலோகம்

‘பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயனம் முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள்..”
கீழிறக்கம் செய்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

மனிதகுலத்தினுடைய வாய்ப்புகளை உயர்த்துவதுதான் தந்தை பெரியாருடைய தத்துவம்!

‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்ற தத்துவத் தில் பார்த்தீர்களேயானால், எந்த ஜாதிக்காரனுக்கும் இடம் உண்டு. அவரவர் பங்கு அவரவருக்குக் கொடுக்கவேண்டும். சிறுபான்மையோருடைய பங்கு சிறுபான்மையருக்கு. பெரும்பான்மையோரு டைய பங்கு பெரும்பான்மையோருக்கு. அதுதான் ‘‘எல்லாருக்கும் எல்லாமும்” – ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பது. இவைதான் மனித குலம் உய்வதற்கு – மனித குலத்தினுடைய வாய்ப்புகள் பெருகுவதற்கு உரிய வழி. மனித குலத்தினுடைய வாய்ப்புகளை உயர்த்துவதுதான் தந்தை பெரியாருடைய தத்துவமாகும்.

இயற்கையையொட்டி நிலத்தைப் பிரித்தோம்!

அவர்கள் தேசத்தைப் பிரித்தார்கள்; ஆனால், பொங்கல் கொண்டாடுகின்ற நம்முடைய முன்னோர் தமிழ் பண்பாட்டைப் பொறுத்தவரையில், நிலத்தை மருதம், குறிஞ்சி முல்லை, நெய்தல், பாலை என்று பிரித்தார்கள். இந்த அய்ந்தும் இயற்கையையொட்டியது.
அவர்கள் பிரித்ததுபோன்று செயற்கையாகக் கிடை யாது. ஆகவே, மண்ணைப் பகுத்தாலும், மக்களைப் பிரிவுபடுத்தினாலும், அறிவியல் பூர்வமாக நடந்து கொண்ட இனம்தான் திராவிடர் இனம். அதுதான் பகுத்தறிவாளர்கள்.

சமூகநீதிக் கொடி ஏற்றப்படவேண்டும்!

எனவேதான், நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும்; ஜாதியால், மதங்களால், கட்சிகளால் வேறுபடுவதைவிட, சமூகத்தை உயர்த்துவோம் – ‘‘அனைவருக்கும் அனைத் தும்” கொடுப்போம். சமூகநீதிக் கொடி ஏற்றப்பட வேண்டும்.
யாரும் தலைதாழ வேண்டிய அவசியமில்லை; யாரும் தாழ்ந்து போகவேண்டிய அவசியமில்லை. சமூ கத்தில் யாரும் ஒடுக்கப்பட்டவர்களாகவும், ஒதுக்கப்பட்ட வர்களாகவும் இருக்கவேண்டிய அவசியமில்லை.

பெரியார் உலகமயமாகவேண்டும்; உலகம் பெரியார் மயமாகவேண்டும்!

‘‘எல்லோரும் ஒரு குலம்; எல்லோரும் மனிதர் கள். மனிதர்கள் மனிதத்தன்மை உள்ளவர்களாக வேண்டும்” என்ற பெரியார் உலகமயமாகவேண்டும்; உலகம் பெரியார் மயமாகவேண்டும். அதற்கு ஒத்துழைப்பதுதான் சரியான முறை.
மருந்து சாப்பிடுகிறீர்களே, அது யாருக்காக? மருந்தைக் கண்டுபிடித்தவருக்காக அல்ல; மருந்தை விற்பனை செய்பவருக்காகவோ அல்ல; மருந்து வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும் என்பதற்காகவோ அல்ல; மருந்து வியாபாரிகள் வருத்தப்படுவார்கள் என்பதற்காகவோ அல்ல; டாக்டர் எழுதி கொடுத்துவிட்டாரே, வேறு வழி யில்லை என்பதற்காகவோ அல்ல – உங்கள் நோய் தீருவதற்காகத்தான்.
அதுபோல், பெரியார் தேவைப்படுகிறார்.

பெரியார் ஒரு மாமருந்து!

பெரியார் ஒரு மாமருந்து. அதுதான் மிகப்பெரிய வாய்ப்பு என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி, இங்கே உரையாற்றிய தோழர்களுக்கு நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment