நேர்காணல்: வி.சி. வில்வம்
கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஈடுபாடு இருந்தால் “குழந்தை தெரசா” எனப் பெயர் வைத்திருப்பார்கள். ஞாயிறன்று எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தேவாலயம் செல்லாமல் இருக்க மாட்டார்கள்! ஏசுவை வழிபட்டால் அமைதி, அன்பு, நம்பிக்கை கிடைக்கும் என்பார்கள். ஆனால் மேற்சொன்ன அனைத்தும் எனக்குத் திராவிடர் கழகத்தில் தான் கிடைக்கிறது என்கிறார் நம் தோழர் குழந்தை தெரசா! வாருங்கள் இந்த வாரம் இலால்குடி செல்வோம்!
சுய அறிமுகம்!
வணக்கம்! என் பெயர் குழந்தை தெரசா. திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு என்பது என் கிராமம். வயது 64 ஆகிறது. இலால்குடி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வால்டேர் அவர்கள் என் வாழ்விணையர் ஆவார்! எங்களுக்கு 1980 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நான் வெள்ளோடு கிராமத்தில் இருந்த வரை பெரியார் கொள்கைகள் எனக்கு அறிமுகம் இல்லை. திருமணத்திற்குப் பிறகு இணையரின் ஊரான இடையாற்றுமங்கலத்திற்கு வந்தேன். மாமனார் தேவசகாயம் அவர்கள் கொள்கையில் மிகத் தீவிர செயல்பட்டு வந்தார்கள்!
குடும்பம் வேறு; கொள்கை வேறு கிடையாது என ஆசிரியர் தமிழர் தலைவர் கூறுவார்கள். குருதி உறவுகளை விட, கொள்கை உறவுகளே முக்கியம் என்றும் கூறுவார்கள். திருமண வாழ்க்கைக்குப் பிறகு நூறு விழுக்காடு எனக்கு இது பொருந்தியது. ஆம்! இன்று வரை “இயக்கக் குடும்ப மாகவே” தொடர்கிறது!
ஒரு மரக்கா, இரண்டு மரக்கா நெல் வாங்கி…
இடையாற்றுமங்கலம் கிராமத்தில் “திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்” என்கிற பெயரில் ஒரு கட்டடம் இருந்தது.
அதுதவிர மூன்று தென்னந்தோப்புகளும் இருந்தன. இவையனைத்தும் கிராம மக்களிடம் நன்கொடை பெற்று உருவாக்கப்பட்டவை! வயல்வெளிக்கே சென்று பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் சொல்லி, அதன் தேவைகளை வலியுறுத்தி ஒரு மரக்கா, இரண்டு மரக்கா என நெல் வாங்கி, அதை விற்பனை செய்து நன்கொடையாக மாற்றியவர் மாமா தேவசகாயம் அவர்கள்! எங்கள் கிராமத்தில் நெல், கரும்பு, வாழை போன்றவை பயிரிடுவதே முக்கிய விவசாய மாக இருந்தது.
என் மாமனார் இருந்த அந்தத் தெரு அக்ரஹாரம் என அழைக்கப்பட்டது. பார்ப்பனர்களும் அங்கு வசித்து வந்தனர். அந்தத் தெருவில் தான் திராவிட தொழிலாளர் சங்கக் கட்டடம் இருந்தது. அந்தக் கட்டடத்தின் மீது ஒலிபெருக்கி குழாய் கட்டி இருக்கும். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து மாமனார் சென்றுவிடுவார். பாடல்கள் இசைக்க செய்வது, பெரியார் கருத்துகளைப் பேசுவது, விடுதலையில் வரக்கூடிய செய்திகளைப் படிப்பது என இயக்க வேலைகளைத் தொடங்கிவிடுவார். இது காலை, மாலை இரண்டு வேளையும் நடைபெறும்! மாலை நேரங் களில் அவரின் வயதையொத்த பெரியாரின் தொண்டர்களும் இருப்பார்கள்.
“பாருங்க இந்தக் கிழடுங்க… தினமும் இப்படி பேசிக் கிட்டே இருக்காங்க”, எனச் சிலர் குறை சொல்வார்கள். உங்கள் மாமா பேசும் கருத்து நன்றாகத் தான் இருக்கிறது என்றும் சிலர் கூறுவார்கள். சில பார்ப்பன பெண்மணிகள் கூட பாராட்டியதுண்டு!
நடேச அய்யருக்கு நடந்த விபரீதம்!
கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக அன்றைய காலக் கட்டத்தில் மாமா தேவசகாயம் சொல்பவர் தான் இருப் பார்கள். ஊர் மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு ஜாதிக்கு வாய்ப்புக் கொடுப்பார்கள்! இப்படி இயக்க கொள்கைகள் மட்டுமின்றி, பொதுக் காரியத்திலும் நல்ல முறையில் செயல்பட்டு வந்தார்கள்!
பெரியார் பெருந்தொண்டர் முத்துச்செழியன் அவர் களின் அப்பா பெயர் முத்துசாமி. அவரும் இடையாற்று மங்கலத்தில் தான் வசித்து வந்தார். எங்கள் வீட்டிற்கு அருகே தான் அவர்கள் வீடு. ஒருமுறை அதே கிராமத்தில் வசித்த நடேச அய்யர் என்பவர், முத்துச்சாமி அவர்களைக் குச்சியால் அடித்துவிட்டார். காரணம், முத்துச்சாமி வேட் டியை மடித்துக் கொண்டும், தலையில் துண்டு கட்டியும், காலில் செருப்பு மாட்டியும் நின்றார் எனக் கூறினார்.
இதன் பிறகு எனது மாமனார் தேவசகாயமும், முத்துச் செழியன் இருவரும் சேர்ந்து, நடேச அய்யரின் குடும்பியைக் கத்தரித்து, செருப்பால் அடித்துவிட்டனர். இது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியது. உடனே கிராமக் கூட்டம் போட்டு, எங்கள் மாமனார் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். சிறிது காலம் பெரியவர்சீலி எனும் கிராமத்தில் இருந்து, பின்னர் இடையாற்று மங்கலம் திரும்பியுள்ளனர்.
அமெரிக்கா செல்லும் வாய்ப்பு!
நாளும், பொழுதும் நடைபெறும் இப்படியான இயக்கச் செயல்பாடுகளை நான் பார்த்துக் கொண்டே வந்தேன். அதேநேரம் என் வாழ்விணையர், முதன்முதலில் என்னைப் பெண் பார்க்க வரும்போதே, “எனக்குக் கடவுள் நம்பிக்கைக் கிடையாது, கருப்புச் சட்டைதான் அணிவேன்”, என வெளிப்படையாகக் கூறியே பெண் கேட்டார்.
தொடக்கத்தில் எனது வாழ்விணையர், அவர் அப்பா விற்குத் தெரியாமல் என்னைத் தேவாலயம் அழைத்துச் செல்வார். பிற்பாடு நானே புரிந்துக் கொண்டு போவதை நிறுத்திவிட்டேன். பின்னாட்களில் இயக்க நிகழ்ச்சிகள், மாநாடுகள் என அனைத்து இடங்களுக்கும் செல்ல தொடங்கினேன். மாமா தேவசகாயம் அவர்கள், சொந்தமாக வாகனம் ஏற்பாடு செய்து, கிராமத்தில் உள்ளவர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வருவார்கள்.
இப்படியான தொடர்ச்சியான இயக்கச் செயல்பாட்டில், 2019ஆம் ஆண்டு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது! ஆசிரியர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அங்கு கொடுத்தார்கள்! அந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று!
கடவுள் இல்லை என்பவர்களின் வாழ்க்கை!
பொதுவாக நான் யோசித்துப் பார்ப்பதுண்டு! உறவினர் கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் எனப் பலருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நான் திருமணத்திற்குப் பிற்பாடுதான் மாறினேன். எனினும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நாம் எப்படி இருக்கிறோம்? எனச் சிந்திப்பதுண்டு. பொருளாதார நிலைகளில் சில வேறு பாடுகள் இருக்கும். அதைத் தள்ளி வைத்துப் பார்த்தால், பெரும்பாலான நம்பிக்கையாளர்கள் கஷ்டப்பட்டும், நஷ்டப்பட்டுமே வாழ்கிறார்கள்!
என்னை பொறுத்தவரை நான் மனக்குழப்பம் இல்லாமல் இருக்கிறேன்! மிகத் திருப்தியாக வாழ்கிறேன்! எந்தத் தடுமாற்றமும் என்னிடம் இல்லை! தினமும் விடுதலை வாசிப்பதை மிகச் சிறந்த அனுபவமாகக் கருதுகிறேன். யாருக்கும் அடிமை இல்லாமல் உணர்கிறேன்! சேமிப்பது எப்படி, நியாயமாகச் செலவு செய்வது எப்படி, பிறருடன் பழகும் தன்மை, நம்மை நாமே சிறந்த மனிதராக முன் னேற்றிக் கொள்வது போன்ற விசயங்களில் எனக்குள் ஒரு கருத்தாக்கம் உருவாகி இருக்கிறது!
பெரியார் பெயர் வைக்காவிட்டால்…
இன்றைக்கும் தொழில் சார்பாக இடம் வாங்கினாலோ, கட்டடம் கட்டினாலோ பூமி பூஜை என்பது இல்லவே இல்லை.
இலால்குடி பேருந்து நிலையம் அருகில் சொந்தமாக மண்டபம் இருக்கிறது. எங்கள் உழைப்பினால் 1995 ஆம் ஆண்டு அதை உருவாக்கினோம்! மாமா, அத்தைக்கு மரியாதை செய்யும் பொருட்டு தேவசகாயம் – மணியம்மாள் எனப் பெயர் வைத்தோம். ஆனால் மாமனார் அவர்கள் பெரியார் பெயர் தான் வைக்க வேண்டும், இல்லாவிட்டால் நான் வாழ்ந்து பயனென்ன? என்கிற அளவிற்குப் பேசினார். பிறகு தான் பெரியார் திருமண மாளிகை எனப் பெயர் வைத்தோம்!
இன்னொரு செய்தியையும் இங்கே குறிப்பிட வேண்டும். கிறிஸ்தவர் என்பதால் எனது மாமனாருக்கு தேவசகாயம் எனப் பெயர் வைத்தார்கள். அதை இராவணன் என அவர் மாற்றிக் கொண்டார். அத்தை பெயர் சவரியம்மாள். அதை மணியம்மாள் என மாற்றிவிட்டார்.
பெரியார் பெயர் வைத்தால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்ய யாரும் வரமாட்டார்கள் எனச் சிலர் பயமுறுத்தினர். நாங்கள் அஞ்சவில்லை. அதேநேரம் எங் களின் அணுகுமுறை, மனிதநேயம், நேர்மை ஆகியவற்றைப் பார்த்து எண்ணற்றோர் வருகை தருகிறார்கள்!
கொள்கையின் தாக்கம்!
தவிர மாமா தேவசகாயம் அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும், நிறைய நலத்திட்டங்கள் செய்து வருகி றோம். “நான் இருந்த போது, எப்படி கொள்கைப் பிரச்சாரம் நடந்ததோ, அதேபோல நான் மறைந்த பிறகும் என் பெயரால் நடைபெற வேண்டும்,” என்பது அவர்களின் ஆவல்! அதைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்குக் கூட, எடைக்கு எடை நாணயம் கொடுத்தோம். எங்கள் சொந்த செலவில் அது வழங்கப்பட்டது!
வாய்ப்பற்ற குடும்பங்களுக்கு உதவிகள் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தோம்! இடையாற்றுமங்கலத்தில் நம் இயக்கக் குழந்தைகள் 10 பேருக்கு, கல்வி உதவியாக மாதா மாதம் ரூபாய் 1000 கொடுத்து வருகிறோம். அதேபோல அக்கிராமத்தில் வசிக்கும் வயதானவர்களுக்கு மாதம் ரூபாய் 300 கொடுத்து வருகிறோம். சட்டத்தைக் கொளுத்தி சிறை சென்ற 8 பேருக்கு மாதந்தோறும் ரூபாய் 300, ஒரு பிஸ்கட் பாக்கெட் வழங்குகிறோம். ஆசிரியர் பிறந்த நாளன்று அவர்களுக்கு ரூபாய் 1000 வழங்கி வருகிறோம். இதற்கு முன் 36 பேருக்கு வழங்கி, இப்போது 8 பேர் ஆகியுள்ளது. மற்றவர்கள் மறைத்துவிட்டார்கள்!
பரமசிவபுரம் என்னும் கிராமத்தில் மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளுக்கு ஒரு அமைப்பு இருக்கிறது. அங்குள்ள 15 பிள்ளைகளுக்குத் தலா 1000 வீதம் மாதந்தோறும் வழங்குகி றோம்! ஆண்டுக்கு ஒருமுறை அந்தக் குழந்தைகளுக்கு நம் மண்டபத்தில் வைத்து கலை நிகழ்ச்சிகள் செய்வார்கள். அதற்கு எந்தக் கட்டணமும் நாம் பெறுவதில்லை. இவை அனைத்துமே பெரியார் சிந்தனையின் தாக்கம் தான்!
என்றும் இயக்க வழியில்!
எனது மாமனார் – மாமியார் இருவரின் உடல்களுமே கொடையாக வழங்கப்பட்டன. நானும், இணையரும் கூட உடற்கொடைக்குப் பதிவு செய்திருக்கிறோம். பெரியார் கருத்துகளையும், ஆசிரியரின் உரைகளையும் கேட்டால் சிறப்பாக வாழலாம் என்பதே நான் புரிந்து கொண்ட செய்தி!
எங்களுக்கு இரண்டு குழந்தைகள். பெரியார் பிறை என்கிற பையன், நாத்திகம் என்கிற மகள். பேரன், பேத்திகளோடு எங்களின் இயக்கத் தொடர்ச்சி முன்னேற்றப் பாதையிலே செல்கிறது! அனைவருக்கும் நன்றி!
No comments:
Post a Comment