எம்.ஆர்.மனோகர்
தந்தை பெரியார் உலக மயமாகிவிட்டதும் உலகம் பெரியார் மயமாகி விட்டதும் நாம் அறிந்த உண்மை. இந்தியத் திரைப்படங்களிலும் அவருடைய சிந்தனையின் தாக்கம் இருப்பது குறித்து பலர் அந்தக் கோணத்தில் நினைத்துப் பார்ப்பதில்லை. அந்தப் பரிமாணத்தில் பல மொழிப் படங்களில் அவரது சிந்தனை பிரதிபலித்துள்ளதை புரிந்து கொள்ள முடியும். வியப்புக்குரிய அந்தத் தாக்கம் பற்றி பேசுவோமா?
தமிழ்ப் படங்களில் பெரியார் சிந்தனை
யாரைக் கேட்டாலும் சட்டென்று “பராசக்தி”யைக் குறிப்பிடுவார்கள். அது ஒன்று மட்டும்தானா? மேலும் பல திரைப்படங்களைப் பட்டியலிடலாம். ஜோதிடம் என்ற மூடநம்பிக்கையை எள்ளி நகையாடியது “செல்வம்”. “ரத்தக் கண்ணீர்” பல மடமைகளைச் சாடிற்று. கைம்பெண்களின் மறுமணத்தை ஆதரித்தது “தெய்வத்தின் தெய்வம்”. ஜாதிப் பாகுபாடுகள் அழிய வேண்டும் என்பதை “பார் மகளே பார்”, “தண்ணீர் தண்ணீர்”, “பரியேறும் பெருமாள்”, “ஜெய்பீம்” போன்ற பல படங்கள் வலியுறுத்தின. “கார்த்திகை தீபம்” பகுத்தறிவின் அவசியம் பற்றி பேசிற்று. மத மறுப்புத் திருமணம் “அலைகள் ஓய்வதில்லை”, “நீர்ப்பறவை”. “புதுமைப் பெண்”, “மறுபடியும்” போன்ற பல படங்கள் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்தன. “அச்சமில்லை அச்சமில்லை”, “சிறை” போன்ற படங்கள் துணிச்சல்மிக்கப் பெண்களை மய்யமாகக் கொண்டிருந்தன. “மனதில் உறுதி வேண்டும்” அதே வகையைச் சேர்ந்தது. பார்ப்பன ஆணவத்தை “வேதம் புதிது” எதிர்த்தது. அறிவியலின் வளர்ச்சியை “விக்ரம்”, “எந்திரன்” போன்ற பல படங்கள் வெளிப்படுத்தின. ஒன்றா இரண்டா? இப்படி நூற்றுக்கணக்கான படங்கள் உள்ளன. பட்டியல் நீளும். பல ஞாயிறு மலர்கள் தேவைப்படும். ஓய்வு நேரத்தில் வாசகர்கள் விடுபட்ட திரைப்படங்களைப் பட்டியலிட்டுப் பாருங்களேன்.
வேறு பல இந்திய மொழிப் படங்கள்:
கன்னடத்தில் “வம்ச விருக்ஷா”, “சம்ஸ்காரா”, “கடஷ்ரத்தா” பார்ப்பனீயத்தை எதிர்த்த படங்களுள் குறிப்பிடத்தக்கவை.
தெலுங்குப் படங்களுள் சமீபத்தில் வெளிவந்த “ஷ்யாம் சிங்கராய்” ஜாதி, மதவெறி, பெண்ணடிமைத்தனம் மூன்றையும் தாக்கிய திரைப்படமாகும். மலையாளப் படமான “த கிரேட் இண்டியன் கிச்சன்” பெண்களின் சுதந்திரத்தை வலியுறுத்திற்று. “ஏக் தின் பிரதி தின்” வேலைக்குச் செல்லும் பெண்களின் துயரத்தையும், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்களின் அவல நிலையையும் சித்தரித்துள்ளது.
ஹிந்தித் திரைப்படங்களில் பெரியார் சிந்தனையின் தாக்கம்
“கைட்” பெண் விடுதலைக்கு குரல் கொடுத்த மிகச் சிறந்த படம். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஆண்கள் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மூடநம்பிக்கைகளை கண்டித்த படங்கள் “லாட் சாஹேப்”, “சீமா”, “அன்கஹீ” போன்றவை. சுயமரியாதையின் அவசியத்தை உணர்த்திய படங்கள் “சத்யகாம்”, “காகஸ் கேஃபூல்”, “ப்யாஸா” போன்ற பல படங்கள். தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தது பிமல் ராயின் “சுஜாதா”. மதச் சார்பின்மையை வலியுறுத்திய படம் “கரம் ஹவா.
உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவாக விளங்கிய படம் ரிஷிகேஷ் முகர்ஜியின் “நமக் ஹாரம்”, பத்திரிகை சுதந்திரம் சார்ந்த படங்கள் “ஆரோப்”, “நயா ஜமானா”, “நியூ டில்லி மைம்ஸ்”. பொதுஉடைமை, சுரண்டல் சமுதாய அமைப்புக்கு எதிராக குரலெழுப்பியது “சமாஜ் கோ பதல் டாலோ.” தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் துயரங்கள் பற்றிய படங்கள் “ஆக்ரோஷ், ஷ்யாம் பெனகலின் “அங்குர்”, “நிஷாந்த்” போன்றவை.
ஆணாதிக்கத்தை எதிர்த்த படங்களில் முக்கியமான திரைப்படம் ஷ்யாம் பெனகலின் “பூமிகா”. மதவெறியைக் கண்டித்து சகோதரத்துவத்தை ஆதரித்து குரல் கொடுத்த மற்றொரு படம் “தஸ்தக்”. பார்ப்பனியத்தை எதிர்த்து, சுயமரியாதைக்கு குரல் கொடுத்து, பெண் விடுதலைக்கும் ஆதரவளித்த சிறந்த படம் ரிஷிகேஷ் முகர்ஜியின் “சத்யகாம்.”
மறுமணங்களை ஆதரித்த படம் பாசு சட்டர்ஜியின் “கட்டா மீடா.” பெண் விடுதலையை ஆதரித்த இன்னொரு படம் “அர்த்”. பீம் சென்னின் “கரோந்தா”வும் சுயமரியாதையை கவுரவித்த படம். ரிஷிகேஷ் முகர்ஜியின் “அனுபமா”வும் அதே போன்றது. அந்தப் படம் பெண்களின் சுதந்திரத்திற்கும் ஆதரவளித்தது. அரசியல் உலகின் ஊழல் பேர்வழிகளை படம் பிடித்துக் காட்டியது. “அர்த் சத்ய” ஷ்யாம் பெனகலின் “மண்டி”யும் பெண் விடுதலை பற்றியது. சினிமா மோகத்தை கேலி செய்த பல படங்களுள் ரிஷிகேஷ் முகர்ஜியின் “குட்டி” குறிப்பிடத்தக்கது. “சலா முராரி ஹீரோ பன்னே”வும் அந்த வகைப் படமே. பகுத்தறிவு அவசியம் என்று வலியுறுத்தியது ஆமீர் கானின் “பி.கே.”.
அறிவியல் கண்ணோட்டம், சிக்கனமான வாழ்க்கை, எளிமையான திருமணங்கள், மகளிர் கல்வி, ஆணாதிக்க ஒழிப்பு – இவை சார்ந்த திரைப்படங்களும் பல உள்ளன ஹிந்தியில். நீண்ட பட்டியலுக்கு இடமில்லை. இனியொரு மலரில் அவற்றைப் பற்றி பேசுவோம். சினிமா என்ற பிரபலமான ஊடகத்திலும் எப்படியெல்லாம் தந்தை பெரியாரின் சிந்தனைத் தாக்கம் இருந்துள்ளது; இருந்தும் வருகிறது என்பதை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்,.
No comments:
Post a Comment