சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாசிப்பு நிகழ்ச்சி நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாசிப்பு நிகழ்ச்சி நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

featured image

சென்னை, ஜன. 13- சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற நூல் வாசிப்பு நிகழ்வில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 47ஆவது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் கடந்த ஜன.3ஆம் தேதி தொடங்கியது. கண்காட்சியின் ஒருபகுதியாக புத்தகவெளியீட்டு விழாக்கள், மாலை நேர சிறப்பு அமர்வுகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்கான ‘சென்னை வாசிக்கிறது’ எனும் நிகழ்வு கண்காட்சி வளாகத்தில் நேற்று (12.1.2024) நடத்தப்பட்டது.
இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, திரைக்கலைஞர் ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சத்தமிட்டு நூல்களை படித்தனர். அலைபேசி உட்பட டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாவதன் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகமும் பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டது.
மாணவர்களிடையே மேயர் ஆர்.பிரியா பேசும்போது, ‘‘புத்தக வாசிப்புதான் சிறந்த சமூகத்தை உருவாக்கும். எனவே, அனைவரும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானது. புத்தகங்களை படித்து அதிலுள்ள கருத்துகளை அறிந்து கொள்வது நல்ல அனுபவமாக அமையும்’’ என்றார்.

இந்தியாவில் ஒரே நாளில் 609 பேருக்கு கரோனா
புதுடில்லி, ஜன.13- ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று (12.1.2024) காலை வெளியிட்ட புள்ளிவிவரம்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 609 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,368 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் ஒருவர், கேரளாவில் இருவர், மேற்கு வங்கத்தில் மூவர் என 6 பேர் உயிரிழந்தனர். இதனால் நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,33,412 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,44,84,162 பேர் குணம் அடைந்துள்ளனர். குணடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி பணியில் இதுவரை 220.67 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் ….
தமிழ்நாட்டில் நேற்று (12.1.2024) 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நேற்று கரோனா பாதிப்பில் இருந்து 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் களின் எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது. இதே போல, நேற்று தமிழ்நாட்டில் கரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பொங்கல் விழா
சென்னை, ஜனவரி 13- சென்னை, இராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவிகள் பாரம்பரிய முறையில் மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
இந்தக் கொண்டாட்டத்திற்காகவே சிறப்பாக உருவாக் கப்பட்டிருந்த கிராமப்புற சூழல் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. பல்வேறு பொருள் களை விற்பதற்கென்று மாணவிகளே அமைத்து நிர்வகித்த அங்காடிகளில் வளையல்களும், பாரம்பரிய உணவு வகைகளும், கேழ்வரகுக் கூழ், கரும்புச் சாறு, மோர், இளநீர், பஞ்சு மிட்டாய் போன்ற பல்வேறு – நாவிற்கு சுவையூட்டும் உணவுப் பொருள்களும் விற்கப்பட்டன.
மேலும் மாணவிகள் நிகழ்த்திய கும்மியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், பொம்மலாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்தன. பெரிய பானையில் பொங்கல் பொங்கி வருவதைக் கண்ட மாணவியர் அனைவரும் சேர்ந்து ”பொங்கலோ பொங்கல்” என்று உற்சாக ஒலி எழுப்பினர்.
அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு இவ் வாறான விழாக்கள் பெரிதும் உதவும். இந்த நோக்கத்தை முன்னிறுத்தி நம்முடைய கலாச்சாரத்திற்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு விழாக்களை தொடர்ந்து நடத்தி வருவதில் எங்கள் கல்லூரி பெருமை கொள்கிறது” என்று டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் முனைவர். குமார் ராஜேந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment