‘‘ஒன்றிய பி.ஜே.பி. அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ‘திராவிட மாடல்’ அரசு ஒருபோதும் ஏற்காது!” என்பது வரவேற்கத்தக்க பிரகடனம்!
2035 ஆம் ஆண்டுக்குள் 50% தேசிய மேல்நிலைக் கல்வியை 2019-2020 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு எட்டிவிட்டதே!
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமேயில்லை; ஆச்சாரியாரே தோற்றுப் போன ஒன்றை கையில் எடுத்து மூக்குடைபட வேண்டாம்!
பி.ஜே.பி. ‘‘அண்ணாமலைகள்” தங்கள் புளுகுகளை நிறுத்தி, அறிவு நாணயத்தைப் பின்பற்றினால் கரை ஏறலாம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
ஒன்றிய பி.ஜே.பி. அரசு கூறும் தேசிய கல்விக் கொள்கையின் இலக்குகளை ஏற்கெனவே தமிழ்நாடு தாண்டிவிட்டது. மும்மொழிகளுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பது சட்டமாகவே நிறை வேற்றுப்பட்டுவிட்ட நிலையில், பி.ஜே.பி. ‘‘அண்ணா மலைகள்” என்ன முயற்சி செய்தாலும் நடைபெறப் போவதில்லை. ஆச்சாரியாரே முயற்சித்துத் தோற்ற இடம் இது – பொய் மூட்டைகளை அள்ளி விடுவதை நிறுத்திவிட்டு, அறிவு நாணயத்தோடு கரையேற பி.ஜே.பி. முயற்சிக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு என்ற கான்கிரீட் தளத்தில், பா.ஜ.க. என்ற சொத்தை விதைகளை நட்டுவிட்டு, அதை அடிக்கொரு முறை வளர்ந்துவிட்டதா? வளர்ந்துவிட்டதா? என்று தோண்டிப் பார்த்து, தனது அவதூறு பிரச்சாரம் என்ற அரைவேக்காட்டு எருவை அதன்மீது போடுபவர் – அதன் இன்றையத் தலைவர் அறியாப் பிள்ளை அரசியல் நடத்தும் அன்பர் அண்ணாமலை அவர்கள், தவணை முறையில் நடத்தும் பிரச்சார பயணத்தில் எதிர்பார்த்த தாக்கமோ, மக்களின் ஊக்கமோ, தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து புதுப்புது ‘ரீல்’களை, ‘டிரைலர்’களையெல்லாம் நாளொரு மேனியும், பொழு தொரு வண்ணமும் விட்டுக் கொண்டிருக்கிறார்!
‘மின் மினி பூச்சு’களால் ஒருபோதும் மின்சாரத்துடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட முடியாது!
வழியில் பொய் மூட்டைகளை
அவிழ்த்துக் கொட்டுவதா?
குறுக்கு வழியில் விளம்பர வெளிச்சம் தேடிட, புதுப்புது ‘ரீலிஸ்’ பட்டியல்களால் தமிழ் மக்கள் வயப்பட வில்லை என்பதை அறிந்து, ஒரு புது வழிமுறைக்குத் திரும்பி, தமிழ்நாடு தி.மு.க. அரசின் கொள்கை முடிவுகளைப்பற்றி ஆரூடம் கணித்து – அன்றாட ஆரோகணம், அவரோகணம் பாடுகிறார்!
தமிழ்நாடு தி.மு.க. அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை இனி ஏற்றுக் கொள்ளுமாம்! தனது நிலைப்பாட்டை இனி மாற்றிக் கொள்ளுமாம்!
மும்மொழித் திட்டம் என்ற மூலையில் முக்காடு போட்டுப் பதுங்கும் மூளியை மீண்டும் பொது அரங்கிற்குக் கொண்டு வருவார்களாம்!
2026 இல் தமிழ்நாட்டில் தனது பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்ற அடிப்படையில்லா ஆசையைப் போன்றதே இதுவும்!
புதிய கல்விக் கொள்கைக்கு விரோதமானது – ‘திராவிட மாடல்’ அரசின் கல்விக் கொள்கை!
இந்தியாவின் எடுத்துக்காட்டான ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு, திட்டவட்டமான மறுப்பினை, இந்தப் பொய்யால் பெருக்க வைத்த பலூனை – 13.1.2024 இல் விரிவான மறுப்பறிக்கை என்ற குண்டூசிமூலம் வெடித்த பலூனாக்கிக் காட்டிவிட்டது!
அவ்வறிக்கை, அவரது பொய்யுரைகளில் மெய்களை குண்டுமணி அளவுகூட கண்டுபிடிக்க முடியாதபடி ஆதாரத்தோடு மறுத்து, பெரியார் வழியில் பீடுநடை போடும் பேராற்றல் அரசு தனது ‘திராவிட மாடல்’ அரசு என்று பாரும் ஊரும் அறிய பறைசாற்றிவிட்டது – மிகவும் பாராட்டி வரவேற்கவேண்டிய சரியான பதிலடிச் செயலாகும்!
புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது – மனுதர்மத்தை, பழைய விஷத்தை, ஜொலிக்கும் புதிய கோப்பையில் ஊற்றித் தருவது என்பதே! அதைக் கருவில் உருவாக்கி மாற்றத்தோடு பிரசவித்தபோது, தமிழ்நாடு முழுவதும் அதனைத் தோலுரித்துக் காட்டியது தி.மு.க. மட்டுமல்ல (அப்போது அது எதிர்க்கட்சி) – அதன் தோழமைகளான முற்போக்குக் கட்சிகள் கொண்ட கூட்டணியும்கூட!
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை வேத குருகுல முறை – அதனைத் தமிழ்நாடு ஏற்காது – ஒருபோதும் ஏற்காது!
எதிர்கால கணினி வளர்ச்சியின் உச்சகட்டமான செயற்கை நுண்ணறிவு Artificial Intelligence (AI) என்பதைக் கற்றுக் கொள்வதில் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் பின்தங்கி விடக்கூடாது – பாய்ச்சல் வேகத்தில் பயிற்சி பெற்று வளரவேண்டும் என்பதற்காக, பிரபல மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துடன் (TEALS) திட்டத்தின்கீழ் ஓர் ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை – சமூகநீதி – மகளிர் வாய்ப்புகளுக்கு எதிராகவும், பழைய வேத குருகுல முறையினைப் புதுப்பிக்கும் அத்திட்டத்தை இந்த அரசு ஏற்க முடியுமா?
வேறு பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அறிக்கையில் இந்தக் கல்விக் கொள்கைத் திட்டத்தை தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ அரசு ஏற்க இயலாத அளவுக்கு – மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு பளிச்சிடுவதை – பாமரருக்கும் புரியும் வண்ணம் தமிழ்நாடு அரசின் – அண்ணாமலை அரை வேக்காட்டுத்தனத்திற்கு மறுப்பை – புள்ளி விவரங் களோடு வெளியிட்டது மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் இலக்கினை ஏற்கெனவே தமிழ்நாடு அரசு எட்டிவிட்டதே!
‘‘தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அதில் மாநிலங்கள் அடையவேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டி ருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கெனவே அடைந்து விட்டது. எடுத்துக்காட்டாக, தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவிகிதம் ஆக்கவேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது! ஆனால், அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின்படி (All India Survey of Higher Education – AISHE) தமிழ்நாட்டின் சேர்க்கை விகிதம் 51 சதவிகிதத்தை 2019-2020 கல்வியாண்டிலேயே எட்டி விட்டது!
2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதத்தினை எட்டவேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்திருக்கிறது தேசியக் கல்விக் கொள்கை.
ஆனால், தமிழ்நாடு 100 சதவிகிதத்தினை 2030 ஆம் ஆண்டிலேயே எட்டிடும்” என்று தெளிவாகக் கூறியுள்ளது.
அதுமட்டுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி என்ற
பேச்சுக்கே இடமில்லை!
‘‘திராவிடத்தில் மும்மொழித் திட்டம் இல்லை” என்ற கொள்கை முடிவு – 23.1.1968 இல் சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த தீர்மானம், ஒருமனதாக சட்டமாக்கப்பட்டு விட்டதோடு இன்றும் தொடருகிறது!
56 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இது ஒரு வரலாற்றுச் சாதனை!
மற்ற மாநிலங்களில் (நடைமுறையில்) இருமொழிகள் – உண்மையாகவே – போதிக்கப்படுகின்றன. மும்மொழி முக்காடு போட்டிருப்பினும்கூட!
விரும்புவோர், பிற மொழிகளை – ஹிந்தி, சமஸ்கிருதம் உள்பட கற்கவே கூடாது என்பதல்ல அச்சட்டத்தின் நோக்கம்.
ஹிந்தி கட்டாயமாக்கப்படக் கூடாது; காரணம், அது மொழித் திணிப்பு என்பதையும் தாண்டிய ஒரு பண்பாட்டுத் திணிப்பு, நம் உரிமை பறிப்பு!
விருப்பப்பட்டவர்கள் ஹிந்தி உள்பட வேற்று மொழிகளைப் படிப்பதை தடை ஏதும் செய்யவில்லை – இந்த இருமொழிக் கொள்கைத் தீர்மானம்.
எனவே, அண்ணாமலையார்களே! ‘அரைவேக் காட்டு அறிஞர்களே!’ உங்களது பம்மாத்தும், பல குரலிசையும் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது! புரிந்துகொண்டு புது வேடத்தைப்பற்றி யோசியுங்கள்!
ஹிந்தியைத் திணித்த ஆச்சாரியாரே – தன் முடிவில் மாற்றம் கண்டார் என்பதை அண்ணாமலைகள் உணரட்டும்!
ஹிந்தியைத் திணிப்பதற்கு மூலகர்த்தாவான சி.ராஜகோபாலாச்சாரியாரையே மாற்றிய இயக்கம் எமது திராவிடர் இயக்கம்.
ஆச்சாரியாரே யு-டர்ன்(U-Turn) போட்டார்; நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்?
எதிர்த்தவர்களான அவர் போன்றோரின் அறிவு நாணயத்தை நீங்களும் பின்பற்றினால், நீங்களும் கரை சேரலாம் – உணருங்கள்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.1.2024
No comments:
Post a Comment