50 ஆண்டுகள் கடந்துவிட்டன; அவர் உடலால் வாழ்ந்த காலத்தைவிட, இந்தக் காலகட்டத்தில்,
லட்சியத்தால், கொள்கையால் நிறைந்து, உலகம் முழுவதும் இன்றைக்கு அவருடைய கொள்கைகள் சுற்றுப்பயணம் செய்கின்றன!
‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு!” தொடர் சொற்பொழிவின் முதல் நாளில் தமிழர் தலைவர்
சென்னை, ஜன.5 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன; அவர் உடலால் வாழ்ந்த காலத்தைவிட, இந்தக் காலகட்டத்தில், லட்சியத்தால், கொள்கையால் நிறைந்து, உலகம் முழுவதும் இன்றைக்கு அவருடைய கொள்கை கள் சுற்றுப்பயணம் செய்கின்றன என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு’’ –
காணொலி சிறப்புக் கூட்டம்!
‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு!” தொடர் சொற்பொழிவின் முதல் நாளில் (30.12.2023) நடைபெற்ற காணொலி சிறப்புக் கூட்டத்தில் தொடக்கவுரையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றியதும், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய, எனக்குமுன் தொடக்கவுரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இந்த சிறப்பு ஆய்வுரை நிகழ்வினை உலகின் பல பாகங்களிலும் இருந்தும் கேட்டுக்கொண்டிருக்கக்கூடிய அன்புள்ள அருமைத் தோழர்களே, சான்றோர் பெருமக்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் இன்றைக்கு பெரியாருடைய கொள்கைகள் சுற்றுப்பயணம் செய்கின்றன!
அறிவாசான் அவர்கள் தன்னுடைய தமிழ் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் உடலால் வாழ்ந்த காலத்தைவிட, இந்தக் காலகட்டத்தில், லட்சியத்தால், கொள்கையால் நிறைந்து, உலகம் முழுவதும் இன்றைக்கு அவருடைய கொள்கைகள் சுற்றுப்பயணம் செய்கின்றன!
தனி மனிதருக்குத்தான் ‘இறப்பு’ உண்டு. தத் துவங்களுக்கு, சத்தான கொள்கைகளுக்கு, முத்தான லட்சியங்களுக்கு என்றைக்குமே ‘இறப்பு’ என்பது இல்லை. பிறப்பு உண்டு – அவற்றின் தன்மை, தேவையைப் பொறுத்தது. ஆனால், அவை நிலையாக வாழும்.
அப்படிப்பட்ட ஓர் ஒப்பாரும், மிக்காரும் இல் லாத தலைவராக தந்தை பெரியார் அவர்கள் இருப்பதற்கு என்ன காரணம்? இன்னமும் என்னைப் போன்றவர்கள் பெரியாரின் வாழ்நாள் மாணவர்கள்தான்.
பெரியாரை இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்ற நாம் எல்லோரும், இன்னமும் கற்கவேண்டியவர்களாக இருக்கிறோம்!
எனக்கு இதைப் பேசுவதற்கு உள்ள ‘தகுதி’ என்ன வென்று சொன்னால், இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்து, உங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு உரிய ‘துணிவு’ வந்ததற்குக் காரணம், நான் வாழ்நாள் முழுவதும் பெரியாரின் மாணவன். இன்னமும் பெரியாரைக் ‘கற்றுக்’ கொண்டிருக்கின்றவன். பெரியாரை இன்னமும் மேலும் சுவாசித்துக் கொண்டிருக்கின்ற நாம் எல்லோரும், இன் னமும் மேலும் கற்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.
அதையே ஒரு தனித் தலைப்பாகக்கூட பேசலாம். நாம் எவ்வளவுதான் பெரியாரை அறிந்தவர்களாக நாம் இருந்தாலும், உண்மையாக, முழுமையாக. அறிந்து கொண்டோமா? இத்தகைய ஒரு கேள்வியை, பல ஆண்டுகளுக்குமுன்பு, நம்முடைய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கேட்டு அவருக்கே உரிய அந்தப் பாணியில் சொன்னார்.
தந்தை பெரியாரைப்பற்றி புரட்சிக்கவிஞர்!
கவிதையாகச் சொல்வதற்கும், வசனமாக நாம் உரையாற்றுவதற்கும் இடையில் இருக்கின்ற ஒரு வேறுபாடு – கவிதையில் சில வசதிகள், வாய்ப்புகள் உண்டு. குறுகிய நேரத்தில் ஆழமான கருத்துகளை கவிஞர்கள் சொல்வார்கள். சிற்பி செதுக்குவதைப்போல, செதுக்கிவிடுவார்கள்.
அப்படி தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, புரட்சிக்கவிஞர் அவர்கள்,
‘‘ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி அவள்
அணிந்திராத அணியாவார்- அறிந்திராத அறிவா வார்” என்று இரண்டே வாக்கியங்களில், அந்த சொற் றொடர்களில் எவ்வளவு ஆழமான புதையலைப் புதைத்து வைத்திருக்கிறார்.
‘‘கற்றனைத் தூறும் அறிவு”,
‘‘கற்க கற்க”,
அதனை ‘‘சிந்திக்க, சிந்திக்க” நம்மை வியப்புகள் தாக்குகின்றன!
நம்முடைய அறிவை எந்த அளவிற்கு
நாம் சுதந்திர அறிவாக…
அறிவு என்பது எல்லோருக்கும் இருக்கிறது. ஏன் மிருகங்களுக்குக்கூட அய்ந்தறிவு இருக்கிறது. ஆனால், ஆறாவது அறிவான பகுத்தறிவை நாம் பயன்படுத் துகின்ற நேரத்தில், நாம் எவ்வளவு கெட்டிக்காரர்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆற்றலாளர்களாக இருந்தாலும், நம்முடைய அறிவை எந்த அளவிற்கு நாம் சுதந்திர அறிவாக வைத்திருக்கிறோம் என்பது கேள்விக்குறி.
‘‘அறிந்திராத அறிவு” – அறிந்திராத அறிவை அறிந்துகொள்ள வேண்டும்.
சாக்ரட்டீசு அவர்கள் சொன்னார்கள், ‘‘எனக்குத் தெரிந்தது எல்லாம் என்னுடைய அறியாமை ஒன்றுதான்” என்று.
அறியாமையிலிருந்து
வெளியே வருவதுதான் மிக முக்கியம்!
அதற்குச் சரியான விடை என்னவென்று சிந்திக்கின்ற நேரத்தில், அறியாமையைத் தெரிந்துகொள்வதுதான் அறிவு. அறியாமையைப் புரிந்துகொண்டு, அந்த அறியா மையிலிருந்து வெளியே வருவதுதான் நுண்ணறிவு.
இருட்டில்தான் இருக்கின்றோம் என்று தெரிந்தால் தானே, வெளிச்சம் தேவை என்கின்ற உணர்வு தானே பிறக்கும்.
அடிமையாகத்தான் இருக்கின்றோம் என்று உணர்ந்தால்தான், அந்த விலங்கை உடைக்கவேண்டும்; சுதந்திர மனிதனாக வேண்டும் என்று நம்மை நினைக்க, செயல்பட வைக்கும்.
சிறைச்சாலையையே
நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது!
சிறைச்சாலைக்குள்ளே இருக்கின்ற ஒரு மனிதன், அதையே ஒரு பெரிய உலகமாகக் கருதிக்கொண்டு, ஒப்புக்கொண்டு விட்டால், அவனுக்கு விடுதலை உணர்வே வராது. அதுபோல, மனிதன் அந்தச் சிறைச் சாலையையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
சுதந்திர மனிதன் என்பவன், வானத்தில் சுதந்திரமாகப் பறக்கின்ற பறவைப்போல – கூட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்ற பறவையல்ல.
அப்படிப்பட்ட சிந்தனையை தந்தை பெரியார் அவர்கள் இயல்பாகவே பெற்றார்.
நாங்கள், இதைப் படிக்கின்ற நேரத்தில், மாணவப் பருவத்தில் படிக்கின்ற காலத்திலும் சரி, மாணவப் பருவத்திலிருந்து பட்டதாரிகளாக ஆன பிறகும் சரி, பட்டதாரி காலத்திற்குப் பிறகு, வாழ்க்கை அமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்திலும் சரி, ஒவ்வொரு கட்டத்திலும் தந்தை பெரியாருடைய சிந் தனைகளைத் திரும்பத் திரும்ப படிக்கின்ற நேரத்தில், எப்படி சட்டத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கின்ற பொழுது, புதிய ஞானம் தோன்றுகிறதோ, புதிய வெளிச்சம் நம்மை வழிநடத்துகிறதோ, அதுபோல நாம் பயன்பட்டு இருக்கின்றோம்; இன்னமும் பயன்பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
‘‘பெரியார்: அறிந்திராத அறிவு’’ என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தது ஏன்?
அந்தப் பயனை நாம் மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அதனை மற்றவர் களோடும், தோழர்களோடும், அறிஞர்களோடும், சீரிய சிந்தனையாளர்களோடும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற அவா உற்றேன்.
அதன் காரணமாகத்தான் நண்பர்களே, ‘‘பெரியார்: அறிந்திராத அறிவு” என்கின்ற தலைப்பை நான் தேர்ந் தெடுத்தேன்.
தந்தை பெரியாருக்கும்,
மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு!
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுடைய ஆழமான முன்னுரையில், விளக்கமாக ஒன்றைச் சொன்னார்; புரட்சிக்கவிஞருடைய இன் னொரு கவிதை வரிகளைச் சொன்னார்.
‘‘பெரியாருடைய மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்று சொன்னார்.
இதுதான் தந்தை பெரியாருக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்பது சிறப்பாக சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.
பெரியாருடையது மண்டைச் ‘‘சுரப்பு”. நம்மிடம், பெரிய மனிதர்கள், சராசரி மனிதர்கள், சமூகத்தினுடைய போக்கு ஆற்றொழுக்காக செல்லுகின்ற நேரத்தில், ஆற்றின் பாய்ச்சல், அதனோடு இணைந்து போகக்கூடிய வர்கள் என்ற தன்மை மனிதர்களுக்கெல்லாம், மற்றவர் களுக்கு இருக்கிறது. பல அறிஞர்கள் என்பவர்களுக்கு மண்டை ஈர்ப்பு; மண்டை சுரப்பு என்பது இருக்கிறதா என்பதே கேள்விக் குறி.
‘சுரப்பு’ என்று வருகின்ற நேரத்தில், இந்த சுரப்பைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெளிவாகத் தெரியும். தோண்டத் தோண்ட சுரப்பு வந்துகொண்டே இருக்கும். அந்த சுரப்பு அடங்கிவிடுவது இல்லை.
அறியவேண்டிய,
கற்கவேண்டிய பாடங்களாகும்!
அது தானே வேகமாகப் பீறிட்டுக் கிளம்புகிறது. அந்த சுரப்பு எப்படிப்பட்டது என்பதைப்பற்றி தந்தை பெரியார் அவர்கள் சொல்லுகின்ற நேரத் தில், நீண்ட காலத்திற்கு முன்பே அய்யா அவர்கள் தன்னுடைய நிலையைப்பற்றி தெளி வாகச் சொன்னார்.
இப்படி பல நேரங்களில் அங்கொன்றும் இங் கொன்றுமாக அவர் சொன்னாலும், நாம் அவை யெல்லாம் அறியவேண்டிய, கற்கவேண்டிய பாடங்களாகும்.
‘‘நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக் கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதை யும் தெரிவிக்கின்றேன்.”
அருள்கூர்ந்து நாம் அனைவரும் இந்த வாக்கியங் களை மறுபடியும் உள்வாங்கவேண்டும்.
மனிதத்தை முழுமையாகப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கவேண்டும்!
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், அவரு டைய தன்மையை விளக்குவதன்மூலமாக, பெரியாரு டைய மாணாக்காரர்களாக ஆக்கிக்கொண்ட நம்மைப் போன்றவர்களும், மனிதர்களாக, மனிதத்தை முழுமை யாகப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கவேண் டியவர்களும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள்.
உண்மையான பகுத்தறிவுவாதி – முழுமையான பகுத்தறிவுவாதியாக மனிதன் இருக்கவேண்டுமானால், அவன் சுதந்திர மனிதனாக ஆகவேண்டும். அப்படி சுதந்திர மனிதனாக ஆகக்கூடிய காலகட்டத்திலே, அவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அடை யாளம் சொல்லும்பொழுது, மூன்று அம்சங்களைச் சொல்லுகிறார்.
சுதந்திர நினைப்பு, மனிதன் நினைக்கும்பொழுதே சுதந்திரமாகச் சிந்திக்கவேண்டும். அப்படியாயின் ஓர் அடிமைச் சிந்தனையிலே மாட்டிக் கொண்டிருக்க முடியாது. எனவேதான், சுதந்திர நினைப்பு முதலில்!
இரண்டாவது, வாழ்க்கையில் சில அனுபவங்கள், அதிலிருந்து கற்கக்கூடிய பாடங்கள். அதற்கு சுதந்திர அனுபவங்கள் ஓர் முக்கிய அடிப்படை.
சுதந்திரப் பொருளுக்கு,
செயலுக்கு வடிவம் கொடுக்க முடியும்!
அந்த சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம் இவை இரண்டு மட்டும் இருந்தால் மட்டும் போதாது? ஒரு வேட்கை இருக்கவேண்டும்; ஒரு தாகம் தோன்ற வேண்டும். அப்பொழுதுதான் அந்த சுதந்திரப் பொரு ளுக்கு, செயலுக்கு வடிவம் கொடுக்க முடியும்.
அப்படி வடிவம் கொடுக்கின்ற நேரத்தில் நண்பர் களே, சுதந்திர உணர்ச்சி என்பது மூன்றாவதாகும்.
எனவே, ‘‘எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்” என்கிறார். எவ்வளவு எளிமை யாக நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.
சொல்ல எனக்கு உரிமை உண்டு –
அதைத் தள்ள உங்களுக்கு
உரிமை உண்டு!
எனக்கு இருக்கிறது, அதன் காரணமாகத்தான் இந்தக் கருத்துகள். அது எவ்வளவுக்கு மற்றவர் களால் புரட்சிகரமான கருத்தாகக் கருதப்பட்டாலும், எவ்வளவுக்கு மற்றவர்களால் செரிமானம் செய்து கொள்ள முடியாத கருத்தாக இருந்தாலும், எளிதில் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அவர்களுக்குத் தோன்றினாலும்கூட, அது எப்படி இருக்கிறது என்பதை அழகாக எடுத்துச் சொல்லு கிறபொழுது, ‘‘உங்கள்முன் சமர்ப்பிக்கிறேன், அவ் வளவுதான். நீங்கள் ஏற்கவேண் டும் என்பது அவசியமில்லை, கட்டாயமில்லை. எனவேதான் சொல்ல எனக்கு உரிமை உண்டு” என்கிறார்!
ஆனால், அதைவிட அதைச் சொல்ல உரிமை எனக்கு இருக்கிறது என்று சொல்வதற்கு முன்பு, ‘‘நான் ஒன்றை நிபந்தனையாக வைக்கிறேன், அதைத் தள்ள உங்களுக்கு உரிமை இருக்கிறது” என்று குறிப்பிடுகிறார். சுதந்திர உரிமை என்பது இருதரப்புக்கும் உள்ளது!
தந்தை பெரியாரைப்போல் சுயமரியாதை முழக்கமிட்டவர்கள் கிடையாது!
அவர் வாழ்நாள் தொடங்கி, அவரைப் போல மேடை களில் நீண்ட காலம் பேசிய தலைவர்கள் கிடையாது. அவரைப் போல எழுதுகோலைப் பயன்படுத்தி, ஏடு களில் எழுதிய சிந்தனையாளர்கள் கிடையாது. அவரைப் போல சுயமரியாதை முழக்கமிட்டவர்கள் கிடையாது.
ஆனால், எல்லாமே ஒரு நிபந்தனைக்கு உட்பட்டது.
என்ன அந்த நிபந்தனை?
அவருடைய அறிவு என்பது இருக்கிறதே, அது சுதந்திர அறிவு. ஆனால், அந்த சுதந்திர அறிவு, தனக்கு மட்டுமல்ல, தரணிக்கே இருக்கவேண்டும். மற்றவருக்கு இருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும் என்கிற கருத்துடையவர்.
சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம்,
சுதந்திர உணர்ச்சி ஆகியவற்றால்….
எனவேதான், நாம் ஏக போக உரிமை உடையவர்கள் அல்ல. ‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்பதைப் போல, மற்றவரை மதிக்கின்றோம் என்று சொல்லு கின்றபொழுது, என்னைப் போலவே, உங்களுக்குரிய சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி ஆகியவற்றால் எதையும் பரிசீலனை செய்யுங்கள் என்கிறார்.
வெறுமனே பரிசீலனை செய்யக்கூடாது. ஏற்கெனவே உங்களுக்கு இருக்கின்ற விலங்குப் பூட்டப்பட்ட மனப் பாங்குடன் இருக்கிறதே, அந்த மனப்பாங்கோடு நீங்கள் அதை அணுகினால், சரியான தோற்றம் கிடைக்காது.
ஆகவேதான், நீங்கள், என்னைப்போலவே, சுதந்திர நினைப்பிலே தொடங்கி, சுதந்திர அனுபவத்திலே ஈடு படுத்திக் கொண்டு, சுதந்திர உணர்ச்சியோடு பரிசீலனை செய்து, ஒப்பக் கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடிய வற்றைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரில்தான் எதையும் நான் சொல்லு கிறேன் என்ற அந்த அறிமுகம் இருக்கிறதே, அந்த அறிமுகத்தை உலகத்தில் எத்தனை தலைவர்கள் இதுவரையில் கடைப்பிடித் திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
(தொடரும்)
No comments:
Post a Comment