திருவள்ளுவருக்கு காவியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

திருவள்ளுவருக்கு காவியா?

தமிழ்நாட்டிற்கு ஆளுநராக ‘அவதரித்த’ ஆர்.என். ரவி அன்றாடம் எதையாவது பேசி வாங்கிக் கட்டிக் கொள்வது என்ற முடிவில் திட்டவட்டமாக தெளிவாக இருப்பது போல் தெரிகிறது.
அமைச்சரவையினுடைய ஆலோசனையை ஏற்று நடந்து தீர வேண்டிய ஆளுநர் எல்லா அதிகாரங்களும் ‘எனக்கே எனக்கே’ என்று ஆணவம் தலைக்கேற பேசுவது – பதவிக்கு தகுதியானது தானா என்பதை அவாள் வட்டாரங்களாவது சொல்ல வேண்டாமா?
ஒரு வழியில் நல்லது தான் என்று. தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல – ஆளுநர் அன்றாடம் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டிருப்பதும் நமக்கு சாதகமாகத் தான் இருக்கும். அதனை வரவேற்கிறோம் என்று அவர் சொன்னது நாகரிகமானது – தொலைநோக்கானதும்கூட! இப்பொழுது திருவள்ளுவரை பிஜேபியைச் சேர்ந்தவராக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

திருவள்ளுவர் நாளில் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுகின்றார். பிஜேபியைச் சேர்ந்த தருண் விஜய் என்பவர் திருவள்ளுவரை உத்தரகாண்டிற்கு எடுத்துச் சென்று நிலைநாட்டப் போவதாக கூறினாரே – அது என்ன ஆயிற்று? அங்குள்ள சாமியார்கள் ஏற்றுக் கொண்டார்களா? திருவள்ளுவர் சிலை எந்தக் குப்பை மேட்டில் கிடக்கிறது – பதில் சொல்லட்டும் காவி பாசிஸ்டுகள்!
திருவள்ளுவர் என்றாலே பார்ப்பனர்களுக்கும் சங்கராச்சாரியார்களுக்கும் பதற்றம் தான் ஏற்படும். கீதையையெல்லாம் கிழித்துத் தள்ளி உலகம் போற்றும் உலக சிந்தனையாளராக திருவள்ளுவர் ஒளிவீசினால் பார்ப்பனர்களுக்கு பொறுக்குமா? அதற்குத்தான் இப்பொழுது காவிச் சாயம் பூசியாவது தங்கள் வயப்படுத்தலாம் என்ற சூழ்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ‘தீக்குறளை சென்றோதோம்’ என்ற ஆண்டாளின் பாட்டுக்கு தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று உளறவில்லையா? குறளை என்றால் குள்ளம், கோள் சொல்லுதல் என்ற பொருள்கள் எல்லாம் உண்டு என்பது இந்த சாம்பிராணிகளுக்குத் தெரியுமா?
அடுத்து “சங்கராச்சாரியாராக வந்த ஜெயேந்திர சரஸ்வதி ஒரு நிகழ்ச்சியில் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமே ஆகும் என்று கூறினாரே?”
ஆதாரம்: ‘தினத்தந்தி’ 15.4.2004
பிறப்பில் பேதம் பேசும் கீதை எங்கே? ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்லும் உயர் எண் ணங்கள் மலரும் சோலையாம் திருக்குறள் எங்கே? உளறுவதற்கும் ஓர் எல்லை வேண்டாமா? ஜெயேந்திர சரஸ்வதி கூறியதைக் கண்டித்து 2.4.1982 அன்று ஈரோட்டில் திருக்குறள் முனுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை நான்காம் ஆண்டு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதோ:
“திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை அதிலும் முதலில் பத்து குறட்பாக்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு பொருட்பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காஞ்சி மடத் தலைவரான ஜெயேந்திர சரஸ்வதி திருக்குறளைப் பற்றி விரிவான முறையில் தம் கருத்தை கூறியிருப்பது அதிர்ச்சியையும் புதுஅர்த்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளைப் பற்றி புறங்கூறி வருவதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் அக்கருத்துகளை திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருக்குறளில் உள்ள காமத்துப் பாலை இந்தக் காலத்து சினிமாக்களே சொல்லிக் கொடுத்து விடுகின்றன என்கிற அளவிற்கு திருக்குறளை கொச்சைப்படுத்திய வரும் இதே ஆசாமி தான்.
ஆதாரம்: ‘தினமணி’ 16.3.1982
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் என்ற பார்ப் பனரும் தன்னுடைய ஆலகால விஷத்தை கக்கியுள்ளார் – என்ன சொல்லுகிறார் பரிமேலழகர்? திருக்குறளில் அறம் ஆவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்வதும், விலக்கியன விடுதலும் ஆகும். அது ஒழுக்கம் – வழக்கு – தண்டம் என மூவகைப்படும் என்று எழுதுகிறாரே?
‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ சொல்லும் மனுதர்ம சாஸ்திரம் எங்கே? ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கின்ற திருவள்ளுவரின் சீலம் எங்கே? ஆக பரிமேலழகர் முதல் ஆளுநர் ஆர்.என். ரவி வரை ஒரு கோடு அவர்களை இணைக்கிறது! இதனை நம் இன மக்கள் புரிந்து கொண்டு எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதில் தெளிவு பெற வேண்டும்.

No comments:

Post a Comment