பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்! ஜாதியை ஒழிக்கும் மாதிரி கிராமங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்! ஜாதியை ஒழிக்கும் மாதிரி கிராமங்கள்

featured image

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மிக எளிமையாகச் சொல்வதென்றால் ‘அனைவரும் சமம் எனலாம். ஆனால், தீண்டாமைச் சுவர்களும், தெரு பெயரைச் சொன்னால் ஜாதியைக் கண்டுபிடித்துத் தீண்டாமை நிகழ்த்தத் தயாராகும் சமூகத்தில், ‘அனைவரும் சமம்’ என உச்சரிப்பதே மிகக் கடினமானது. எனில், அதை நடைமுறைப்படுத்தத் துணிய, உண்மையில் ‘எதையும் தாங்கும் இதயம்’ வேண்டும்.
அது 1997. இந்தியச் சுதந்திர நாளின் பொன்விழாக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடந்தேறிக் கொண்டிருந்தன. புனித ஜார்ஜ் கோட்டையின் முகப்பில் உள்ள கொடிக்கம்பத்தில், தான் போராடிப் பெற்ற மாநில உரிமையின் மூலம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்த முத்தமிழறிஞர் கலைஞரின் நெஞ்சில் கனல்விடத் தொடங்கி இருந்தது ஒரு கனவுத் திட்டம்.

சுதந்திரம்… சமத்துவபுரம்… சமூகநீதி…
பொன்விழா ஆண்டில் பொதுமக்களுக்கு நிலையான, பயன்தரக்கூடிய திட்டங் களைச் செயல்படுத்த வேண்டும் என கலைஞர் நினைத்தார். அதுகுறித்து விவாதிக்கவும், திட்டங்களைத் தீட்டவும் உயர்மட்ட செயல்பாட்டுக்குழு ஒன்றை உருவாக்கினார். 4 ஆகஸ்ட், 1997இல் தலைமைச் செயலகத்தில் கூடிய அந்தக் குழுவின் கூட்டத்தில், “ஆதிதிராவிடர் உள்பட அனைத்துச் சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் ஒரே குடியிருப்பில் ஒற்றுமையாக வாழும் வகையில் 300 வீடுகளைக் கொண்ட 50 குடியிருப்புகள் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கிட வேண்டும்” என அறிவித்தார்.
கலைஞரின் அந்தக் கனவுத் திட்டம்தான் ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’. மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் உணவு – உடை – இருப்பிடம் என்பார்கள். இவை அடிப்படையாக இருப்பதாலோ என்னவோ, இந்த மூன்றிலும் ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும், அரசியலும் கலந்திருக்கின்றன. அதிகாரமும் ஆதிக்கமும் பெற்றவர்களே, எளியோரின் உணவு – உடை – இருப்பிடத்தைத் தீர்மானிக்கிறார்கள். அதிலும் உணவும், உடையும் கூட ஒரு வகையில் பணத்தால் வீழ்த்திவிட முடியும்.
ஆனால், இருப்பிடம் அப்படி அல்ல. சேரிகளாகவும், காலனி களாகவும் பிரிக்கப்பட்டுள்ள சமூகத்தில் ‘கூடி வாழ்தல்’ என்பது பெரும் சமூகமாற்றம். இரண்டாயிரம் ஆண்டு கால கட்டமைப்பின் அஸ்திவாரத்தைச் சீர்குலைக்கும் முயற்சி.

இருப்பிடங்களிலும் இடஒதுக்கீடு!
இத்திட்டத்துக்கான செயல்வடிவமாக அந்த ஆண்டு (1997) அக்டோபர் 22-ஆம் தேதி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணையை வெளி யிட்டது கலைஞர் அரசு. அதன்படி, ஒவ்வொரு சமத்துவபுரமும் 8-10 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டு, அதில் ஓர் குடியிருப்புக்கு 5 சென்ட் நிலம் வீதம், குறைந்தது 100 குடியிருப்புகள் கொண்டதாக உருவாக்க வேண்டும் என்ற நெறிமுறைகளுடன் பணிகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு வரும் வீடு கட்டிக்கொள்ள ரூ.35 ஆயிரத்தை அரசின் மானியமாக கலைஞர் வழங்கினார்.
‘சமத்துவபுரம்’ என்பது கிட்டத்தட்ட ஊர்தான். ஆனால், ஊர்களில் நிலவும் ஏற்றத்தாழ்வு மிக்க ஜாதியக் கட்டமைப்புகள் இல்லாத ‘மாதிரி கிராமம்’. சமத்துவபுரத்தில் இருப்பிடங்கள் இடஒதுக்கீட்டின் வாயிலாகத்தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆதி திராவிடர்களுக்கு 40 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவிகிதம், இதர பிரிவினருக்கு 10 சதவிகிதம் என்ற அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும்.

அதிலும் சிறப்பானது, அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள் நிச்சயமாக வெவ்வேறு ஜாதியைச் சார்ந்தவர்களாக்கத்தான் இருப்பார்கள். இதுதான் அங்குக் குடிபுக விரும்புபவர்களுக்கு வைக்கப்படும் முன் நிபந்தனை.
அதேபோல் அனைத்து வகுப்பினர் களிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

எல்லோரும் இந்நாட்டு மன்னர்!
சமத்துவபுரத்தில் இடங்களைத் தேர்வு செய்து ஒதுக்குவதுடன் அரசின் பணி முடிந்துவிடுவதில்லை. மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியுடன் கூடிய குடிநீர் வசதி, தார்ச்சாலைகள், தெரு விளக்குகள், விளை யாட்டு மைதானம், பொழுதுபோக்குப் பூங்கா, பொது விநியோகக் கடை என அத்தியாவசியமான அடிப்படை வசதி களையும் அரசு ஏற்படுத்தித் தருகிறது. இந்தப் பொதுவான அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஜாதி, மத பேதமின்றி உபயோகிக்க வேண்டும்.
சாதாரணமாக ஊரின் எல்லையில் ஒரு மஞ்சள் நிற பெயர்ப் பலகைதான் ஊர் வந்து சேர்ந்ததற்கான அடையாளம். ஆனால், சமத்துவபுரத்தை வந்தடைந்ததை அதன் அலங்கார நுழைவுவாயிலே நினைவூட்டும். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’. இது பேரறிஞர் அண்ணா தன் தம்பிகளுக்கு எழுதிய ஒரு கடிதத்துக்கான தலைப்பு.
அவர் வழியில் சமத்துவபுரங்கள் அனைத்திலும் அலங்கார வளைவுகளை அமைத்து, கலைஞர் எல்லோரையும் இந்நாட்டு மன்னர்களாக்கினார்.

மேலக்கோட்டை முதல் சமத்துவபுரம்
ஜாதிக் கலவரங்கள் அதிகம் நிகழும் தென்தமிழ் நாட்டில் முதல் சமத்துவபுரத்தை அமைக்க கலைஞர் நினைத்தார். அதற்காகத் தேர்வு செய்த இடம் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை.
1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17- ஆம் தேதி மேலக்கோட்டையில், பெரியார் நினைவு சமத்துவபுரத்தை கலைஞர் திறந்து வைத்தார்.
அப்போது “சமத்துவபுரத்திலே குடியேறுகின்ற நீங்கள் காட்டுகின்ற இந்த ஒற்றுமை இந்த மாநிலத்திற்கே, இந்த நாட்டிற்கே வழிகாட்டியாக அமையட்டும். சமத்துவபுரங்கள் வளரட்டும்! வளரட்டும்! தமிழ்நாடே சமத்துவபுரமாக ஆகட்டும்! இந்தியத் திருநாடே சமத்துவபுரமாக ஆகட்டும்!” என்ற கலைஞர், தொடர்ந்து திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருச்சி எனப் பல மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட சமத்துவபுரங்களை நேரில் சென்று திறந்து வைத்தார்.

சுதந்திர நாள் பொன்விழாவையொட்டி 50 என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, 1997-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் ஆட்சியில் மட்டும் 145 சமத்துவபுரங்கள் தமிழ்நாடெங்கும் உருவாக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, 2006-2011ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் புதிதாக 93 சமத்துவபுரங்களை கலைஞர் உருவாக்கினார்.
கலைஞரின் நீட்சியாக, ‘திராவிட மாடல் ஆட்சியை அமைத்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அதேபோல், ரூ.190 கோடியில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களைப் புனரமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் ஒரு வசனம் வரும், “எல்லோரும் சமம்னா யாருதான் ராஜா?”என அதற்குப் பதிலாக “யாரு எல்லோரும் சமம்னு நினைக்கிறார்களோ அவர்கள்தான்” என்று சொல்லப்படும். அதன்படி, அரியணை ஏறி ஆட்சி செய்தாலும், பதவிகளற்று இருந்தாலும், மண்ணை விட்டு மறைந்தாலும் என்றும் சமத்துவபுரம் மூலம் ஏற்றத்தாழ்வுகளை அழித்த கலைஞர், என்றும் ராஜாதான்!

(“இடம், பொருள், கலைஞர்” – நூலிலிருந்து…)

No comments:

Post a Comment