பெரியாரின் சிந்தனையை செயலாக்கும் திராவிட மாடல் ஆட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 14, 2024

பெரியாரின் சிந்தனையை செயலாக்கும் திராவிட மாடல் ஆட்சி!

featured image

சமீபத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் அடிப்படை புரிந்துணர்வில் ரூ.6.4 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதனை அடுத்து உலகின் தலைசிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Microsoft  நிறுவனத்தின், செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சியைத் தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கும் திட்டத்தின் சோதனை முயற்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 11′ சனவரி 2024 அன்று “TEALS – Technology Education And Learning Support” வழியாக செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி 100 பள்ளிகளில் வெற்றி கரமாக ஆரம்பிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவுத் திறனை அரசு பள்ளி களுக்கு அறிமுகம் செய்யும் இந்த சாதனைச் செயலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துரையில், “Microsoft TEALS” போன்ற முன்னெடுப்புகள் மூலம் நாம் டிஜிட்டல் இடைவெளிகளைக் குறைத்து வருகிறோம். உலகம் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் இது போன்ற முயற்சிகள் பலமான அடித்தளத்தை நமது மாணவர்களுக்கு உருவாக்கித் தருகின்றன. அரசும், தொழில்துறையும் இணைந்து செயல்படும்போது எப்படிப்பட்ட அதிசயங்கள் உருவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தத் திட்டம் திகழ்கிறது. ‘TEALS’ முன்னெடுப்பு வெற்றி பெறவும், மாணவர்களின் மேன்மைக்குத் துணை நிற்கவும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அனைவரையும் சிறப்பாக வாழ்த்தினார். அறிவியல் பயின்றாலும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என அவர் நகைச்சுவையாகப் பேசியதை மாணவர்கள் கைதட்டி ஆமோதித்தனர்.

விழாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்புக் காணொலி வெளியிடப்பட்டது. இந்தக் காணொலியின் ஆரம்பத்தில் சில நொடிகள் பெரியார் இடம்பெற்றார். “செயற்கை நுண்ணறிவு காணொலியில் பெரியார் எதற்கு?” என சில புருவங்கள் உயரலாம். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது இதற்குத் தெளிவு அளிப்பதாக இருந்தது.
“அறிவியலால் சமுதாயத்தில் மாற்றம், முன்னேற்றம் ஏற்பட்டு சமுதாயம் சமநிலை அடையும் என்பதைத் தந்தை பெரியார் ஆழமாக வலியுறுத்தினார். 1963, தென் இந்தியாவில் இன்றைய கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முதல் முறையாகக் கணினி நிறுவப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட பெரியார், “அது என்ன கருவி, அது எப்படி இருக்கும், அதன் பயன்பாடு என்ன?” என அறிய அன்றைய கிண்டி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு வந்துள்ளார். கணினி முதல் தளத்தில் உள்ளது, பெரியாரால் படியில் ஏற இயலாத சூழலில் நாற்காலியோடு அவரை முதல் தளத்திற்கு உயர்த்திச் சென்றனர். கணினியைப் பார்த்து அதைப் பற்றிய அடிப்படையைக் கேட்டறிந்தார். அங்கிருந்து விடைபெறும்போது “நம்ம பிள்ளைங்க எல்லாரும் கணினி கற்க வேண்டும்” என வலியுறுத்தினார். இந்த வரலாற்று நிகழ்வை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எடுத்துரைத்தபோது பெரியார் பற்றாளரான எனக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது. சிலிர்ப்பு அடங்கும் வேளையில் அரங்கத்தில் கைதட்டல் ஒலியின் அதிர்வலைகள் பெரியாரின் தாக்கத்தைப் பிரதிபலித்தது.
பெரியார் என்றால் நாத்திகம், பெண் உரிமை, சமூகநீதி மற்றும் சுயமரியாதை என்றே நினைப்போம். இவைகளுக்கு நிகராக அறிவியலை, அறிவியல் கல்வியை உயர்த்திப் பிடித்தவர் தந்தை பெரியார். 1961இல் பெரியார் எழுதிய “இனி வரும் உலகம்” நூலே இதற்குச் சான்று. இன்று மனித உடலின் அங்கமாக உருமாறும் கைப்பேசி பற்றி 1961-லேயே சொல்லியிருப்பார் தந்தை பெரியார்.

Microsoft Data & AI, மற்றும் TEALS  இயக்குநர் சிசில் வி.சுந்தர் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் துவங்க முக்கியக் காரணமாக இருக்கிறார். அவருக்குத் துணையாக நிமீணீளீவிவீஸீபீs அமெரிக்க நிறுவனத்தின் கணேஷ் கோபாலகிருஷ்ணன் உறுதுணையாக இருந்தார்.

Microsoft நிறுவனம் வழியாக பள்ளி மாணவர்களுக்கு “செயற்கை நுண்ணறிவு பயிற்சி” வழங்கும் நிகழ்ச்சியின் துவக்க விழா சென்னை ITC Grand Chola வில் நடந்தது. அய்ந்து நட்சத்திர விடுதியில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், Microsoft நிர்வாகிகள், கல்வியாளர்கள் உடன் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு பற்றிய ‘மைம்’ நாடகம் நடத்தி அசத்தினர்.
திராவிட மாடல் ஆட்சியில் பகுத்தறிவோடு செயற்கை நுண்ணறிவைக் கற்பிப்பதிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

– ஆவடி எழில்வாணன்

No comments:

Post a Comment