ஒன்றிய அரசுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்!
வடமாநிலங்களில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு:
2000 பங்க்குகள் மூடல்; பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
மும்பை, ஜன.3- ஒன்றிய அரசு அமல்படுத்த உள்ள புதிய தண்டனை சட்டத்தில் (பாரதிய நியாய சன்ஹிதா) உள்ள கடுமையான ஷரத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் லாரி, பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளதால் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக 3 புதிய குற்றவியல் நடை முறைச் சட்டங்களை ஒன்றிய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ளது. இதில், ‘பாரதிய நியாய சன்ஹிதா’ சட்டத்தின்படி, சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, தெரிவிக்காமல் தப்பியோடும் கனரக வாகன ஓட்டுநருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 7 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
புதிய தண்டனை சட்டத்தில் வாகன விபத்திற்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடால் மக்கள் தவிக்கின்றனர்.
இந்திய தண்டனை சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா எனும் புதிய சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. அடுத்த ஓரிரு ஆண்டில் அமலுக்கு வர உள்ள இந்த சட்டத்தில், கவனக் குறைவாக அல்லது அதி வேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விட்டு, காவல்துறையினருக்கோ அல்லது அதிகாரி களுக்கோ தகவல் தெரிவிக்காமல் ஓடிவிடும் வாகன ஓட்டிகளுக்கு 10 ஆண்டு வரை சிறை மற்றும் ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள கடுமையான தண்ட னைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி ஓட்டுநர்கள் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர்.
புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் இப்போராட்டத்தால் நேற்று முன்தினம் பெரிய அளவில் பாதிப்பு தெரியவில்லை. இந்நிலையில், போராட்டத்தின் 2 ஆம் நாளான நேற்று பல மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத் துள்ளது.
மகாராட்டிராவில் மும்பை, நாக்பூரில் பல பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தீர்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பெட்ரோல் கிடைக்கும் சில பங்குகளிலும் மக்கள் எரிபொருள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் சுமார் 5 லட்சம் வாகனங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளை இயக்க முடியாமல் அம்மாநில அரசு பேருந்துகள் திணறுகின்றன. பல பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக் களும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, சண்டிகரில் பல பெட்ரோல் பங்குகளில் விரைவில் பெட்ரோல் தீரும் நிலையில் இருப்பதாக பங்க் உரிமையாளர்கள் கூறி யுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் காஸ் சிலிண்டர் விநியோகமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 90 சதவீத பங்குகளில் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக பங்க் உரிமையாளர் கள் கூறி உள்ளனர்.
இமாச்சலில் தர்மசாலா, குலு-மணாலி, பிலாஸ் பூர், ஹமிர்பூர், மற்றும் சிம்லாவில் உள்ள பெரும் பாலான பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தீர்ந்து வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்ட னர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள் ளாகி உள்ளனர். பெட்ரோல் கிடைக்காது என்கிற பயத்தில், பலர் அதிக பெட்ரோல் வாங்கி இருப்பு வைக்கவும் முயற்சிக்கின்றனர். இந்த 3 நாள் போராட்டம் நீடித்தாலோ அல்லது நாடு முழுவதும் விரிவடைந்தாலோ காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் களின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கும் நிலை நிலவுகிறது.
இப்போராட்டம் தென் மாநிலங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வில்லை. அய்தராபாத்தில் மட்டும் லாரி சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள் ளது. ஆனால், வடமாநிலங்களில் 2,000 பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் தீர்ந்ததால் மூடப்பட்டுள்ளன. எஞ் சியுள்ள சில பெட்ரோல் பங்குகளிலும் நூற்றுக்கணக்கில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் பெரும் சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் கார ணமாக வடமாநிலங்களில் தமிழ்நாட் டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான லாரிகள் வரமுடியாமல் சிக்கி உள்ளன.
விபத்து பற்றி தகவல் கூறினால் கடுமையான விதி பொருந்தாது
பாரதிய நியாய சன்ஹிதாவில், ‘கவனக்குறைவாகவும், வேகமாகவும் வாகனம் ஓட்டி ஒரு நபரின் மரணத்தை ஏற்படுத்துபவர், சம்பவம் நடந்த உடன் காவல்துறை அதிகாரி அல்லது மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரி விக்காமல் தப்பித்தால் அவருக்கு 10 ஆண்டு வரை நீட்டிக்கக் கூடிய சிறைத் தண்டனை மற்றும் ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்படும்’ என கூறப் பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த சட்டம், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க நினைப் பவர்கள் மீது மட்டுமே பாயும். மாறாக, விபத்து நடந்தது குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் மீது இந்த கடுமையான சட்ட விதி பொருந்தாது.
விபத்து நடந்த இடத்தில் இருந்தால் தாக்கப் படலாம் என்பதற்காக சில ஓட்டுநர்கள் தப்பிச் செல்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் செல்லலாம், அல்லது அவசர உதவி எண் 108 இல் காவல்துறை யினரை அழைக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங் களில் வாகனத்தின் எண், தொடர்பு விவரங்கள் ஆகியவற்றை ஓட்டுநர் தெரிவித்தால் போதும். விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக ஒப்புக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் சட்டத் தின் கடுமையான விதி பொருந்தாது. அதேபோல, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அடுத் தடுத்த விபத்துகள் போன்றவற்றில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்’’ என்றனர்.
காவல்துறையினர் மூவர் காயம்
வேலை நிறுத்தம் நடத்தியதோடு பல இடங் களிலும் லாரி ஓட்டுநர்கள் நேற்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். ராஜஸ்தானின் கெக்ரி மாவட்டத்தில் புதிய சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் ஒரு கும்பல் காவல்துறையினரின் வாகனத்தை எரித்ததால் பதற்றம் நிலவியது. மேலும் அவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் 3 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
காங்கிரஸ் ஆதரவு
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘மோடி அரசு 3 உத்தியை கொண்டுள்ளது. 1. ஏழைகளுக்கு அபராதம் விதித்து, அவர்களை கொள்ளையடித்துக் கொண்டே இருத்தல், 2. பொதுச் சொத்துக்களை விற்பது, உள்கட்டமைப்பு மேம்பாட்டு முதலீட்டை நிறுத்துவது, 3. மக்களுக்கு எதையுமே வழங்காமல், சுய விளம்பரப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது ஆகியவை ஆகும்’’ என்றார்.
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டரில், ‘‘150 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து விட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஓட்டுநர்களுக்கு எதிரான மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இந்திய பொரு ளாதாரத்தின் முதுகெலும்பு அவர்கள். எனவே இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தக் கடின உழைப்பாளி வர்க்கத்தைக் கடுமையான சட்ட அமைப்பிற்குள் தள்ளுவது அவர்களின் வாழ்க்ககையை மோசமாக பாதிக்கும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் மிரட்டி பணம் பறிக்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும். பாஜவின் ‘நல்ல நாள்’ முதல் ‘அமிர்த காலம்’ வரை எல்லா அறிவிப்புகளும் இந்தியாவின் முன்னேற் றத்தை தடுப்பதையும், கற்பனையான மைல்கற் களையும் மட்டுமே கொண்டுள்ளன’’ என்றார்.
ஒன்றிய அரசுடன் பேச்சு
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர லாரி ஓட்டுநர்களுடன் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா டில்லியில் நேற்று இரவு பேச்சு வார்த்தை நடத்தினார். இது குறித்து லாரி உரிமை யாளர்கள் சங்கமான அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘எங்கள் அமைப்பு தேசிய அளவிலான லாரி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நிச்சயமாக அழைப்பு விடுக்கவில்லை. தற்போது அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என்றார். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த பேட்டியில், குற்றவியல் சட்டங்கள் இன்னும் நடைமுறைபடுத்தப்பட வில்லை என்று ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
வாட்ஸ்அப் மூலம் நடக்கும்
வேலை நிறுத்தம்
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இதுபோன்ற எந்தப் போராட்டத்திற்கும் எந்தஒரு தொழிற்சங்கமும் அழைப்பு விடவில்லை. சில ஓட்டுநர்கள் அவர்களாகவே வாட்ஸ்அப் குழுக் கள் மூலம் இப்போராட்டத்தை நடத்துகின்றனர்’’ என்றனர்.
ரூ.200-க்கு மேல் பெட்ரோல் இல்லை
சண்டிகர் அரசு நிர்வாகம் விடுத்த அறிவிப்பில், ‘‘பெட்ரோல் பங்குகளில் இரு சக்கர வாகனங் களுக்கு அதிகபட்சம் ரூ.200-க்கும், நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.500-க்கும் மட்டுமே பெட்ரோல், டீசல் போட வேண்டும். இந்த கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது’’ என உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment