தமிழ்நாட்டில் ராமனை மதிப்பவர்கள் கூட மோடி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை ஏற்க மாட்டார்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 23, 2024

தமிழ்நாட்டில் ராமனை மதிப்பவர்கள் கூட மோடி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை ஏற்க மாட்டார்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

featured image

சென்னை, ஜன. 23- ராமருக்கு இந்துக்கள் மதிப்பு கொடுப்பார்கள். பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ், பாஜகவை ஏற்கமாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் நடைப் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தியை பின்தொடர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அங்குள்ள கோயிலில் வழிபட அம்மாநில பா.ஜ.க. அரசு அனுமதி மறுத்ததை கண்டித்தும், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று (22.1.2024) ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு மாநிலங்களில் ராகுல் காந்தியின் நடைப் பயணத்துக்கு மக்கள் அளித்து வரும் பேராதரவை சகித்துக் கொள்ள முடியாத, அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தூண்டுதலின்பேரில் ராகுல் காந்தியுடன் வந்த வாகனங்கள் மீது பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குள்ள சங்கர்தேவ் ஜன்மஸ், தான் கோயிலுக்கு செல்லவும் மாநில பாஜக அரசு அனுமதிக்க வில்லை.

பாஜக ஆட்சியின் இந்த சர்வாதிகாரப் போக்கு இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்துக்கு எதிரானது. ராமரை பிரதிஷ்டை செய்ய சைவர், வைணவர், மத குருமார்கள், சங்கராச்சாரியார், ஆதீனங்களை அழைப்பது வரவேற்கக்கூடியது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தலைவர்களைத்தான் அழைக்கின்றனர். அந்த விழாவை ராமருக்காக செய்யவில்லை. அதை சொல்லி ஓட்டு வாங்கத்தான் செய்கிறார்கள்.

500 ஆண்டுகால அவமானம் நீங்கியதாக கூறுகிறார்கள். 300 ஆண்டு முகலாயர் ஆட்சிக்கு பிறகும், 250 ஆண்டு கால அய்ரோப்பியர் ஆட்சிக்குப் பிறகும் இந்தியாவில் இந்துக்கள்தான் அதிகமாக இருந்து வருகின்றனர். அவர் களால் இந்துக்களை மதமாற்றம் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் அணித் தலைவர் சந்திரமோகன், இலக்கிய அணித் தலைவர் புத்தன், மகளிரணி தலைவர் சுதா ராமகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment