திராவிடர் கழகத்தின் அவைத் தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு முடிவெய்திவிட்டார். அவர் இரண்டாம் தலைமுறை திராவிட இயக்கத்துக்காரர். அவருடைய தகப்பனார் பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கத்தில் இயங்கியவர்.
தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னைப்பற்றி யாரும் கவலைப்படவேண்டாம் என்றும் முகநூலில் தோழர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன் பதில் எழுதியிருந்தார். நேற்று நடந்த திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அய்யா அறிவுக்கரசு எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கியிருந்தார். அந்த படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் அறிவுக்கரசு அய்யா. அடுத்த ஒரு சில மணிநேரத்தில் முடிவெய்திவிட்டார். ஒருவகையில் மனத்திருப்தியுடன் முடிவெய்தினார் என்று எடுத்துக்கொள்ளலாம்.
அரசுப்பணியில் இருந்தபோது தன்னுடைய பெரும்பாலான பணிக்காலத்தை எங்களுடைய புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து அங்கேயே ஓய்வுபெற்றார். புதுக்கோட்டையில் அவருடைய பணிநிறைவு விழாவில் ஆசிரியர் வீரமணி கலந்துகொண்டார். மேடையில் அறிவுக்கரசு அய்யாவுக்கு கருப்புச்சட்டை வழங்கப்பட்டது. இன்று அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெறும் நான் இனி முழுநேர திராவிடர் கழக ஊழியனாக பணிபுரிவேன் என்று அந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அதன்படியே பணிநிறைவு விழா முடிந்த அடுத்த அரைமணி நேரத்தில் அவருடைய முயற்சியில் உருவான பெரியார் படிப்பகத்தினை ஆசிரியர் வீரமணி திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் கருப்புச் சட்டையில் கலந்துக்கொண்டார். அப்போது 12ஆம் வகுப்பு மாணவனாக இருந்த நான் அந்த இரண்டு நிகழ்ச்சியிலும் பார்வையாளனாக கலந்துக்கொண்டது 24 ஆண்டுகள் கழித்தும் இப்போதும் அப்படியே நினைவில் இருக்கிறது.
ஒரு சுதந்திரமான சிந்தனையாளர்.
திராவிட இயக்க வரலாறு மட்டுமல்ல, இந்திய சமூக அரசியல் வரலாற்றை பற்றிய ஆழமான அறிவைப் பெற்றிருந்தார். உதாரணத்திற்கு ஜின்னா பற்றிய அவருடைய உரை யூடியுபில் இருக்கிறது பார்க்கவும்.
– பிரபாகரன் அழகர்சாமி – சமூக வலைதளம்
No comments:
Post a Comment