துணைவேந்தர் நியமனங்கள் பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழு பின்வாங்கினார் ஆளுநர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 12, 2024

துணைவேந்தர் நியமனங்கள் பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழு பின்வாங்கினார் ஆளுநர்

சென்னை, ஜன.12- பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியுடன் 3 பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை நியமனம் செய்வ தற்கு தேடுதல் குழு அமைக்கப்படும். அந்த தேடுதல் குழு 3 பேரை தேர்வு செய்து, பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநருக்கு பரிந்துரைக்கும். அவர் அந்த 3 பேரில் ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்து அறிவிப்பார்.
அந்த வகையில் மாநில அரசு, பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை நியமனம் செய் வதற்கான தேடுதல் குழுவுக்கு ஒப்பு தல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி இருந்தது.
அதனை ஏற்காமல், தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் ஒரு பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக் கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

அதன்படி, சென்னை பல் கலைக்கழகம், பாரதியார் பல் கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகி யவற்றுக்கான தேடுதல் குழுவில் பல்கலைக் கழக மானியக்குழு பிரதிநிதி ஒருவரை இடம்பெற செய்து, கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஆளுநர் மாளிகை தரப்பில் அறிவிப்பு வெளியானது.
பொதுவாக தேடுதல் குழு அமைக்கப்பட்டு ஒப்புதல் பெறப் பட்ட பின்னர் மாநில அரசிதழில் அறிவிப்பாக வரும். ஆனால் ஆளுநர் மாளிகை தரப்பில் இந்த தேடுதல் குழு அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு, ஆளுநர் அமைத்த தேடுதல் குழுவை திரும்பப் பெறுவதாக, ஆளுநர் மாளிகை தரப்பில் 9.1.2024 அன்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக கிண்டி ஆளு நர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக் கான துணை வேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக் கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் தேடுதல் குழு பல்கலைக் கழக மானியக்குழுவின் கீழ் அமைக் கப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படாத தேடுதல் குழு தொடர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
மேலும் புதுச்சேரி தொழில் நுட்பப் பல்கலைக்கழக சட்டம் 14 (5) பிரிவின்கீழ் அமைக்கப்பட்ட தேடுதல் குழு மூலம் துணை வேந்தரை நியமனத்தை நிலை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், புதுச் சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை நிர்வகிக்கும் சட்டவிதிகளில், பல்கலைக் கழக மானியக் குழு ஒழுங்கு முறை 2018அய் எந்த தாமதமும் இல்லாமல், திருத்தங் களை செய்ய உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த சட்டத்தின் தெளிவான விளக்கத்தை கருத்தில் கொண்டு, அரசமைப்பு சட்ட உரிமை மற்றும் சட்டப் பூர்வ தன்மைக்கு மதிப்பு அளித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட 3 பல்கலைக் கழகங்களுக் கான தேடுதல் குழுவை திரும்ப பெற்று, பல்கலைக்கழக விதிமுறை களுக்கு இணங்கவும், உச்ச நீதி மன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்பின் படியும் தேடுதல் குழுவை அமைக் கும் என்று பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நம்புகிறார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் விதிகளை பல்கலைக் கழக மானியக்குழு விதி முறைகளுக்கு ஏற்ப கொண்டுவரும் என்றும் நம்பிக்கையுடன் உள் ளார்.
மேற்சொன்னபடி. தமிழ்நாடு அரசு செய்யும் என்று ஆளுநர் நம்புவதால், கடந்த 6.9.2023 அன்று 3 பல்கலைக் கழகங்களுக்கான தேடு தல் குழு தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறுகிறார்.

மாநிலத்தில் உள்ள மாணவர் களின் உயர்கல்வி மற்றும் எதிர் காலம் பாதிக்காத வகையில் தமிழ் நாடு அரசு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து பேசினார். அந்த சந்திப்புக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment