ராமன் கோயில் குட முழுக்கு - பல முனைகளிலும் கடும் எதிர்ப்பு மதத்தையும் அரசியலையும் ஒன்றாகக் குழப்புவதா? சர்ச்சை வெடித்துக் கிளம்புகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 12, 2024

ராமன் கோயில் குட முழுக்கு - பல முனைகளிலும் கடும் எதிர்ப்பு மதத்தையும் அரசியலையும் ஒன்றாகக் குழப்புவதா? சர்ச்சை வெடித்துக் கிளம்புகிறது

சென்னை,ஜன.12- ராமன் கோயில் திறப்பு விழா விவகாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி அந்த விழாவில் பங்கேற் கப்போவதில்லை என்று கூறி இருக்கிறது.
‘மதம் என்பது தனிப்பட்ட விவகாரம். ஆனால் பாஜக அயோத்தி ராமன் கோயிலை தங்களின் அரசியல் புராஜெக்ட் ஆக மாற்றி உள்ளது’ என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
ராமன் கோயில் திறப்பு விழாவுக்காகப் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பிதழ் சில நாள்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டது. அப்படி அனுப்பப்பட்ட அழைப்பிதழில் ஆங்கில எழுத்தில் போடப்பட்ட Invitation என்பதற்குப் பதிலாக Invitaion எனத் தவறாக அச்சிடப் பட்டிருந்தது. அதைப்போல் Extraordinary என்பதற்குப் பதிலாக Extraordinare என்றும் தவறாக அச்சிடப்பட்டிருந்தது.

ஆகவே அந்த அழைப்பிதழை சமூக ஊடகங்களில் பலரும் வெளியிட்டு அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி இருந்தனர். இவ்வளவு அரசு பண செலவில் விழாவின் அழைப்பிதழை இப்படியா தப்பும் தவறுமாக அச்சிடுவது எனக் கண்டித் திருந்தனர்.

கூகுளில்Ramar temple என்று தேடினாலே Ramar temple invitation spelling mistake என்று மூன்றாவது இடத்தில் காட்டுகிறது. அந்தளவுக்கு இந்தப் பிரச்சினை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இப்போது அதன் தொடர்ச்சியாக ராமன் கோயில் திறப்பு விழாவுக்கு வரச் சொல்லி அழைப்பு பெற்ற பல தலைவர்கள் அந்த அழைப்பை நிராகரித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கேவும், சோனியா காந்தியும் தங்களுக்கு வந்த அழைப்பை நிராகரித்து இருக்கின்றனர்.

‘ராமன் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளனர். ராமன் கோயிலை அரசியல் திட்டமாக பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் மாற்றிவிட்டதாகக் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தங்கள் கட்சி பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கப்போவ தில்லை என்றும் அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் கலந்து கொள்ள மாட்டார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி ராமன் கோயில் குடமுழுக்கு விழா நடை பெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா ‘ராமன் கோயில் விழாவின் மூலம் பாஜக வித்தைக் காட்டி வருகிறது. மக்களை மத அடிப் படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்று கூறியுள்ளார்.

இவரைப் போலவே ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட், ‘பாஜக ஸ்பான்சர் செய்யும் நிகழ்வுபோல் உள்ளது’ என்று விமர்சித்துள்ளார்.
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘ராமன் கோயில் குட முழுக்குக்கு செல்லப் போவ தில்லை’ என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரோ, ‘2024 தேர்தலைச் சந்திக்க பாஜகவிற்கு எந்தக் கொள்கை திட்டங்களும் இல்லை. ஆகவேதான் ராமன் கோயில் திறப்பு விழாவை முன் வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப் பார்க்கிறது’ என்று மிகக் காட்டமாகத் தாக்கி பேசி இருக்கிறார். ஆகவே, இவரும் விழா வில் பங்கேற்கப் போவதில்லை என்றே தெரிகிறது.
இவர்கள் அழைத்தால் நாங்கள் போகமாட்டோம்’ என்று கூறியிருக்கிறார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ். இதேபோல் ‘ராமனை பாஜக வேட்பாளராக மட்டும்தான் பாஜக இன்னும் அறிவிக்க வில்லை’ என்று உத்தவ் தாக்ரேவின் சிவசேனா விமர்சித்துள்ளது.
ராமனை பாஜக அரசியல்வாதியாக்கி விட்டதாக’ ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தொடக்கக் காலத்திலிருந்தே ராமன் கோயிலை அயோத்தியில் கட்டுவதை எதிர்த்து வருகிறது. அந்தக் கட்சியின் கொள்கையாக இது நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆகவே, அக்கட்சி பிரதிநிதிகள் யாரும் கட்டாயம் கலந்துகொள்ள மாட்டார்கள்.
ஆனால், அதிமுக அப்படியல்ல; ராமன் கோயில் கட்டுவதற்காக கரசேவை நடைபெற்றபோது தமிழ்நாட்டிலிருந்து செங்கல் அனுப்பியவர் அதிமுகவின் மேனாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

மேலும் அயோத்தியில் ராமன் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார் அவர். இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, தனக்குக் கால்வலி உள்ளதாக வும், வாய்ப்பு இருந்தால் ராமன் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வேன் என்றும் பட்டும் படாமல் பேசியுள்ளார்.
காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயண சாமி, “ராமன் கோயில் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. நான்கில் ஒரு பகுதிதான் வேலைகள் முடிந்துள்ளன. ஆனால், அதற்குள் அவசர அவசரமாகத் திறக்க உள்ளனர்.

அதற்குக் காரணம் என்னவென்றால், 2024 மக்களைவைத் தேர்தலில் இந்து மதத்தினரின் உணர்வுகளை இதன் மூலம் தூண்டிவிட்டு அரசியல் ஆதாரம் பெற நினைக்கிறது பாஜக.
ராமன் கோயிலை இந்து ஆகம விதிப்படி ‘பிரதிஷ்டை’ செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு பிரதமர் மோடி சென்று செய்யக் கூடாது. இதை அரசியலாக்க நினைக்கிறார்கள். எனவே நான் கலந்து கொள்ள மாட்டேன்” என்று பூரி சங்கராச்சாரியாரே சொல்லி இருக்கிறார்.
இது பாஜகவின் சாதனை அல்ல. அப்படிச் சொல்லவதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில் பாஜகவுக்கு மட்டும் ராமன் சொந்தமில்லை. இந்து மதத்தினர் அனைவருக்கும் அவர் சொந்தம்” என்கிறார்

No comments:

Post a Comment