சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தமிழ்நாடு அரசால் மிகச் சிறப்பாக – மக்கள் நலன்கருதி கட்டப் பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில் கோவில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது – அதிர்ச்சியை அளிக்கக் கூடியதும் – அரசு ஆணை மீறலுமாகும்.
அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில், அரசு அலுவலகங்களிலோ, வளாகத்திலோ எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டது. நீதிமன்றங்களும், அரசு வளாகத்திற்குள் எந்த மதத் தொடர்பான கோவிலையும் கட்டக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளன.
இந்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ‘திராவிட மாடல்’ அரசுக்குச் சொந்தமான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதனை உடனே அகற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இன்றேல், நீதிமன்றம் வாயிலாகப் பரிகாரம் காண நேரிடும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடக் கூடாது; இவ்வாட்சியின் காவலர்கள் நாங்கள்!
– பகுத்தறிவாளர் கழகம்
No comments:
Post a Comment