முதலமைச்சருக்கு உடல்நலம் சரியில்லை என்று கயிறு திரிக்கும் மனநல நோயாளிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

முதலமைச்சருக்கு உடல்நலம் சரியில்லை என்று கயிறு திரிக்கும் மனநல நோயாளிகள்!

featured image

‘திராவிட மாடல்’ ஆட்சியின் அன்றாட நலத்திட்டங்களால் மகிழ்ச்சியில் திளைக்கும் மக்களைப் பார்த்து மகிழ்கிறார் நமது முதலமைச்சர்!
மனநலம் கெட்டுக் கயிறு திரிப்போர் மனநலக் காப்பகத்திற்குச் செல்லட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

நாளும் நடைபெறும் நலத் திட்டங்களால் மக்கள் அடையும் மகிழ்ச்சியைக் கண்டு மனமகிழும் நமது முதலமைச்சர் மகிழ்ச்சியில் திளைக்கிறார். குறை கூற வழியின்றி, கயிறு திரிக்கும் ஏடுகளும், பேர் வழிகளும் மனநலக் காப்பகத்திற்குச் செல்லட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
உழைப்பின் உருவமாகி, தனது சக்திக்கும் மீறி, தான் ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் நலப் பணியை – சற்றும்கூட உற்சாகம் குறையாமல் செய்து, மக்களின் இதயச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் எடுத்துக்காட்டான முதல மைச்சராகத் திகழ்கிறார் மானமிகு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்!

உள்நாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் மட்டுமல்ல – பன்னாட்டவராலும் பாராட்டப்படும்
நமது முதலமைச்சர்!
உள்நாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் மட்டுமல்ல; உலகத்தின் பன்னாட்டவரும், அவரது பண்புமிக்க ஆளுமையைப் போற்றிப் புகழ்கிறார்கள். திராவிட ஆட்சி வரலாற்றில் இது ஒரு புதிய பொன்னாள்!
கடந்த சில நாள்களுக்குமுன் தலைநகர் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் எதிர்பார்த்ததைவிட மேலும் பல மடங்கு குவியத் தொடங்கின!
வந்த விருந்தினர்களும், முதலீட்டு மாநாட்டுப் பேராளர்களும் மகிழ்ச்சியில் திளைத்து, நல்ல நம்பிக்கை யோடும், உற்சாகத்துடனும் வந்து கலந்து, பங்கேற்று மகிழ்ந்து திரும்பியுள்ளனர்!
ஆற்றொழுக்காக, அமைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக அந்தப் பன்னாட்டு பேராளர்கள் வந்து போட்டி போட்டு முதலீடு செய்தனர். அதனால், பல லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்ற மகிழ்வு கலந்த நம்பிக்கை நமது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் கட்டியங் கூறுவதாகவே அமைந்தது.
அதற்கு முக்கிய காரணம், ‘திராவிட மாடல்’ ஆட்சி திறம்பட நடக்கும் இத்தமிழ்நாடே! ஓர் அமைதிப் பூங்காவாகவே வளர்ந்தோங்கி வருவதும், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி ((Stable Government) ) நடைபெறு வதும், அதன் வெளிப்படைத்தன்மை (Transparency) அணுகுமுறையுமே ஆகும்!

நிலையான ஆட்சி மட்டுமல்ல –
திறமையான ஆட்சி தமிழ்நாட்டில்!
நிலையான ஆட்சி மட்டுமல்ல; திறமையான ஆட்சி (Not Only Stable but also able Government) யாக அது நடந்து வருவதால்தான், புவி ஈர்ப்புபோல தொழில் முதலீடுகளை காந்தச் சக்திபோல் அது கவர்ந்திழுக்கிறது!
நமது இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, புதுப்புதுப் புதிய கதவு திறப்புகள், நம் இளைஞர்களி டையே மறைந்துள்ள ஆற்றலை, அறிவின் ஆழத்தை அளந்து காட்டுவது நிச்சயம்!
வாய்ப்பு தந்தால்தான் அவரவர்களுக்கு உள்ள ஆற்றல் வெளியே தெரியும்.
எந்த ஆத்திரமூட்டக்கூடிய நிலையிலும் சற்றும் பொறுமை இழக்காமல், பதற்றமடையாமல், அமைதி யுடனும், ஆழ்ந்த சிந்தனை, அறிவார்ந்த செயல்முறை இவற்றின் மொத்த உருவமாகத் திகழ்கிறார் எடுத்துக் காட்டான நம்முடைய முதலமைச்சர்!
அவர் உழைப்பதோடு, சக அமைச்சர்களையும், அவரவர் பணிகளை ஆய்வு செய்து, அவர்களையும் அன்பு ஆணைகள்மூலம் செயல்பட்டுக் கொண்டே இருக்கவும் செய்கிறார்!
இப்படிப்பட்ட உலகப் புகழ் வருவதை ஆரியம் சகிக்குமா?
எனவேதான், ஆரியம், அவர்மீது அவதூறு சேற்றை வாரி இறைப்பதோடு, புளுகு மூட்டைகளை அன்றாடம் அவிழ்த்துவிடும் யோக்கியப் பொறுப்பற்ற, அறிவு நாணயமற்ற அவலங்களைப் பரப்பி ‘அற்ப சந்தோஷங் களை’ அனுபவிக்கின்றது!

நாள்தோறும் பொய்மூட்டைகளை
அவிழ்த்துக் கொட்டும் பார்ப்பன ஏடு!
ஒரு பார்ப்பன நாளேடு தினம் தினம் இப்படி பொய் களையே பரப்பி, அதற்குக் காவிகளின் பலன் பெறுவதும் அன்றாட கேவலப் பணியாக உள்ளது!
நமது முதலமைச்சர் இதுபற்றி ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘எனக்கு உடல்நிலை சரியில்லையா?” என்ற தலைப்பில் இப்படிப் பேசி, பொய்த் திரையைக் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார்!
‘‘எனக்கு உடல்நலம் சரியில்லை… உற்சாகமாக இல்லை… என ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதைப் படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. எனக்கு என்ன குறை?
தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சி யாக இருக்கின்றபோது, அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?

மக்களின் மகிழ்ச்சி கண்டு
மகிழும் நமது முதலமைச்சர்!
சென்னையைச் சேர்ந்த ஒரு சகோதரி வெளியிட்ட வீடியோவைப் பார்த்தேன். அதில், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. அரிசி, சர்க்கரை, கரும்பு வந்துவிட்டது. வெள்ள நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. ஒரே மாதத்தில் முதல மைச்சரே 8 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டார். பொங்கலுக்கு, யாரையும் எதிர்பார்க்கத் தேவை யில்லை’ எனப் பேட்டி கொடுத்திருந்தார்.
அந்த சகோதரியின் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாகமான மருந்து!
எனக்கு எப்போதும் மக்களைப் பற்றித்தான் நினைப்பே தவிர, என்னைப்பற்றி இருந்தது இல்லை. எந்தச் சூழலிலும் மக்களோடு இருப்பவன் நான். என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இதுமாதிரியான செய்திகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, உழைத்துக்கொண்டே இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கயிறு திரிக்கும் மனநிலை சரியற்றோர் மனநலக் காப்பகத்திற்குச் செல்லட்டும்!
மனிதர்கள் எவருக்கும் உடல்நலம் குன்றும்; பிறகு அது சரியாகிவிடும். அது இயற்கை – மறைப்பதற்கு ஒன்றுமில்லை இதில்.
ஆனால், இல்லாததை இப்படி எழுதுவது மனித நேயமும் இல்லை; நாகரிகமுமில்லை – ‘பத்திரிகா தர்மமும்’ இல்லை.
இந்த ஈனத்தனத்தில் ஈடுபட்டு, மூக்குடைபட்டு, இப்படி கற்பனைக் கயிறு திரிப்பவர்களுக்கு மனநிலை சரியில்லை – உடனடியாக மனநலக் காப்பகத்திற்கு இந்தக் காவி ஏஜெண்டுகளும், கூலிகளும் செல்லட்டும் – அதுதான் அவர்களுக்கு நல்லது!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
13.1.2024

No comments:

Post a Comment