31 ஆண்டுகளுக்குப் பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கருநாடகாவில் கரசேவகர் கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 4, 2024

31 ஆண்டுகளுக்குப் பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கருநாடகாவில் கரசேவகர் கைது!

பெங்களூரு, ஜன.4 கடந்த 1992ஆ-ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. கரு நாடக மாநிலம் ஹுப்ளியில் ஏற்பட்ட வன்முறையில் ஏராள மான பொது சொத்துகள் சேதமடைந்தன.
இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் கட்டப் படும் ராமர் கோயில் வரும் 22-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவத் தில் ஈடுபட்டதாக சிறீகாந்த் பூஜாரி (56) என்பவரை கருநா டக காவல்துறையினர் நேற்று முன்தினம் (2.1.2024) ஹுப்ளி யில் கைது செய்தனர். இவர் அயோத்தியில் மசூதி இடிப்பு சம்பவத்தில் பங்கேற்றதுடன், ஹுப்ளியில் நடந்த கலவரத் திலும் பங்கேற்றதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். ராமர் கோயில் திறக்கப்பட இருக்கும் நிலையில், இந்த கைது நடவடிக்கை கருநாடகாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிறீகாந்த் பூஜாரியின் கைதை கண்டித்து பெங்களூருவில் நேற்று (3.1.2024) பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது கருநாடக எதிர்க் கட்சித் தலைவர் அசோகா பேசுகையில், ‘‘31 ஆண்டுகளுக்கு பின் பாஜகவை சேர்ந்தவரை கைது செய்ததன் மூலம் காங் கிரஸ் அரசு பாஜகவினரை பயங்கரவாதியாக காட்ட முயற்சிக்கிறது. பாபர் மசூதி இடிப்பின்போது நானும் எடியூ ரப்பாவும் கூட அயோத்தியில் பங்கேற்றோம். எங்களை கைது செய்வதற்கு சித்தராமையாவுக்கு துணிச்சல் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முதலமைச்சர் சித் தராமையா, ‘‘பாஜகவினருக்கு சட்டம்தெரியாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் குற்றம் குற்றம்தான். பழைய வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளதை அரசியலாக்கி வரும் பாஜகவினரை மக்களும் ஊடகங்களும் புறக்கணிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment