கடந்த 2023 ஆம் ஆண்டில் கழகத் தோழர்களின் பாராட்டத்தக்க கழகக் களப் பணிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 2, 2024

கடந்த 2023 ஆம் ஆண்டில் கழகத் தோழர்களின் பாராட்டத்தக்க கழகக் களப் பணிகள்!

featured image
தமிழர் தலைவர்  ஆசிரியரின் பாராட்டு அறிக்கை
கடந்த 2023 ஆம் ஆண்டில் கழகத் தோழர்களின் பாராட்டத்தக்க களப் பணிகள் குறித்தும், மழை, வெள்ள நிவாரணப்  பணிகள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள பாராட்டு அறிக்கை வருமாறு:
இந்தப் புத்தாண்டு (2024) தொடக்கத்தில், நாம் நினைவு கூரும் வகையில், சென்ற ஆண்டில் (2023) திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களும் ஆற்றிய பணிகள் மிகவும் பாராட்டத்தக்க அளவில் சிறப்பானவையாக அமைந் துள்ளன.
நமது உறுதி முழக்கம்!
சென்ற ஆண்டின் இறுதியில் நம் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் முடிவெய்தி 50 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், அய்யாவின்  தலைமைக்குப் பிறகு, அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தலைமை யிலும், பிறகு கழகத் தோழர்களின் கூட்டுப் பொறுப்பில் என்னை முன்னிறுத்திப் பணிகள் தொடர்ந்த நிலை யிலும், எத்தனையோ சோதனைகளும், சாதனைகளும் நிகழ்ந்து, புடம்போட்ட சொக்கத்தங்கமாய் நமது இயக்கம் தகத்தகாய ஒளியுடன் ஜொலித்தது எப்படி என்ற அரிமா நோக்குடன் ஆய்வு செய்யும் வகையில், அமைப்பு ரீதியாகவும், களப் பயிற்சிப் பரிசோதனை யாகவும் 50 ஆண்டு வரலாறும்,  அதற்கடுத்து நம்முன் உள்ள எதிர்காலப் பணிகள், போராட்டக் களங்கள் பற்றிய விளக்கமும் மக்கள் மத்தியில் சென்றடையும் நோக்கத்தோடு, டிசம்பர் 19 ஆம் தேதிமுதல் 30 ஆம் தேதிவரை பல ஊர்களிலும் கழக மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்திட, நாம் வேண்டுகோள் அறிக்கை விடுத்தோம்.
உடனடியாக கழகத்தின் 65 மாவட்டங்களில் (மாவட்டத்திற்குக் குறைந்தது 2 கூட்டங்கள் என்ற விகிதத்தில்) சுமார் 120 கூட்டங்களுக்கு உடனடியாக ஏற்பாடு செய்து, மக்கள் மன்றத்தில் பிரச்சார மழை பொழிய வைத்த கழக நிர்வாகிகள், கலந்துகொண்ட பேச்சாளர்கள், ஏற்பாடு செய்த கழகப் பொறுப்பாளர் களும் நமது பாராட்டுக்குரியவர்கள்!
1573 சுயமரியாதைத் திருமணங்கள்!
அதுபோலவே, பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில்  மிகச் சிறப்புடன் பணியாற்றி வரும் அதன் இயக்குநர் தோழர் பசும் பொன் அவர்கள் மூலம் எல்லா நாள்களிலும் அன்னை நாகம்மையார் மன்ற அரங்கத்தில் இயங்கும் அதன் புதிய அலுவலகத்தில் சுயமரியாதைத் திருமணங்கள் எளிய முறையில் நடைபெற்று வருகின்றன. அதன் செயற்பாடுகள் பெருமைக்குரியவை ஆகும்!
சென்ற ஆண்டு (2023) 1573 சுயமரியாதைத் திருமணங்கள் அங்கே நடைபெற்றுள்ளன. அதன் விவரங்கள் அனைவரையும் வியப்படையச் செய் கின்றன – சாதனைகளாக உள்ளன. (அதன் முழு விவரம் அருகே காண்க).
பாராட்டத்தக்க பகுத்தறிவாளர் கழகம்!
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மானமிகு இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் ஆசிரியர் வி.மோகன், ஆ.வெங்கடேசன் ஆகியோர் மாநிலம் தழுவிய பொறுப்பாளர்களுடன், அனைத்திந்திய அள விலான பகுத்தறிவாளர் கூட்டமைப்புக் கூட்டங்களிலும் கலந்து பல்வேறு ஆக்கப் பணிகளையும், பிரச்சார மற்றும் களப் பணி, அமைப்புப் பணிகளையும் அலுப்பு சலிப்பின்றி சிறப்பாக செய்து தொடர்ந்து அயர்வின்றி உழைத்து வருகின்றனர். மிகவும் பாராட்டி வரவேற்க வேண்டிய நல்ல வெற்றிப் பணி!
அதுபோலவே ஈரோட்டில் கழகம் எடுத்த செயல் திட்ட சீரமைப்புக்கான பொறுப்பேற்ற நமது தலைமைக் கழக அமைப்பாளர்களும், தோழர்களை ஒருங் கிணைத்து கழகப் பணிகளை செம்மையாக – சோர்வின்றி நடத்தி வருவதும் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைவையும் அளிக்கக்கூடியதாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது!
கழகத் தோழர்களின் நிவாரணப் பணிகள்
பெருமழை, வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட சென்னை தோழர்கள்
பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் வழக்குரைஞர்கள் தமிழன் பிரசன்னா, தளபதி பாண்டியன், துரை அருண், பசும்பொன், மு. பவானி, த.மரகதமணி, பொறியாளர் ச.இன்பக்கனி, வழக் குரைஞர் பா.மணியம்மை, உடுமலை வடிவேல், தமிழ் கா.அமுதரசன், புரசை அன்புச்செல்வன், தாம்பரம் முத்தையன், மோகன்ராஜ், கோ,நாத்திகன், குண சேகரன், பழனிச்சாமி, கெய்சர் பாண்டியன் ஊடக வியலாளர்கள் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, அதிஷா, பொன்ராஜ் கணேசன், பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், தோழர்கள் நா. பார்த்திபன், பா.பார்த்திபன், சி. காமராஜ், தே.செ.கோபால், கொடுங் கையூர் அன்பு, தமிழ்ச்செல்வன், கலைச்செல்வன், இறைவி, இரா.சு.உத்ரா, பூவை க.தமிழ்செல்வன், அரும்பாக்கம் தாமோதரன், மாடம் பாக்கம் அ.கருப் பைய்யா, எஸ்.ஆர்.வெங்கடேஷ், வெ.விஜயகலா, எழிலரசி, பல்லாவரம் ச.அழகிரி (எ) நரேஷ், பழனிச்சாமி, வைத்தியலிங்கம், முருகன், செல்வம், தோழர் வினோத், புகழேந்தி, கி.ராமலிங்கம், சோ. சுரேஷ், க. கலைமணி, ஆவடி முருகேசன், யுகேஷ், கமலேஷ், சதீஷ், அண்ணா மாதவன், வீரப்பார் சுரேஷ், பேராசிரியர் தீபிகா, எழுத்தாளர் இனியன், திராவிட வல்லுநர் மன்றம் இராமச்சந்திரன், எம்.கே.பி.நகர் வழக்குரைஞர்கள் இராமச்சந்திரன், பொள்ளாச்சி சித்திக், பிரசாந்த், திவாகரன், கென்னத், சரவணன், தோழர்கள் முத்துப்பிரியா, சாய்கணேஷ், உதய்பிரகாஷ், கண்ணதாசன் நகர் துரை, தனசேகரன், பெரம்பூர் ஜெய்சங்கர் மற்றும் அமைந்தகரை, தாம்பரம், வடசென்னை மாவட்டத் தோழர்கள்.
பெரியார் மருத்துவக் குழுமத்தின் செயலாளர் ச.மீனாம்பாள் தலைமையில் மருத்துவர் காந்திமதி, திட்டக்குடி மருத்துவர் செந்தில், மருத்துவர் யுவேதா, இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவரும் குழந்தைகள் நல மருத்துவருமான காசி, கதிர் மெமோரியல் மருத்துவர் நந்தகுமார், மருத்துவர் தினேஷ் சுந்தர ராஜன், மருத்துவர் அருண் சங்கர் மற்றும் பேராசிரியர் பெரியார் செல்வி, எம்.எம்.சி. முதுநிலை மாணவர் சகீலா பேகம், ரேடியோ தெரபிஸ்ட் ஜான்கிசோர், உதயகுமார், உதயபிரகாஷ், அன்னை அருள் மருத்துவமனை செவிலியர் சுதாகர், செவிலியர்கள் அபி, அபிஷா, ரூபினி, சகிலா, முருகம்மா, சபானா, உமாலூசி நற்சோணை, ஏக்னஸ் உள்ளிட்டோர்.
அடைமழைப் பிரச்சாரம்!
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – பயிற்சி வகுப்புகள் அடை மழைபோல, பருவம் பாராது நமது மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர் களது கடும் உழைப்பால் ஏராளம் நடைபெற்று வருகின்றன (பட்டியல் தனியே காண்க).
மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்களும், மகளிர் தோழர்களும் தொய்வின்றித் தொடர்ந்து தொண்டாற்றி வருகின்றனர்.
தொய்வற்ற தொண்டறம்!
சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழையும், வெள்ளமும் ஏற்பட்டு, மக்கள் அல்லல்பட்ட நேரத்தில், தமிழ்நாடு அரசு சிறப்பான நிவாரண உதவிகளைச் செய்தபோதிலும்கூட, அது அடையாத இடங்களுக்கும்கூட நமது கழகத்தினர் ‘பெரியார் தொண்டறம்’ என்ற குழுவினர் மிகச் சிறப்பாக நிவாரணப் பணிகளைச் செய்தனர். இப்பணிகளை ஒருங்கிணைத்த நமது கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொதுச்செயலாளர் கோ.ஒளிவண்ணன் மற்றும் தோழர்கள் பாராட்டுக் குரியவர்கள் (பட்டியல் தனியே காண்க).
அதுபோலவே, தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் பகுதிகளில் 150 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு அடைமழை, வெள்ளத்தில் தவித்த அம்மாவட்ட மக்களுக்குத் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களான தென்காசி மாவட்டத் தலைவர் த.வீரன், காப்பாளர் காசி, மாவட்டத் தலைவர் முனியசாமி, மாநில ப.க. அமைப்பாளர் ஆலடி எழில்வாணன், நெல்லை மாவட்டத் தலைவர் இராஜேந்திரன், செயலாளர் வேல்முருகன், சீ.டேவிட் செல்லதுரை, செல்வராஜ், போஸ், நெல்லை மண்டல இளைஞரணி செயலாளர் கார்த்தி, மாணவர் கழகம் கார்த்தி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள்,  ஊடக வியலாளர்கள் முரளிகிருஷ்ணன், கப்பிக்குளம் பிர பாகரன், கிஷோர் உள்ளிட்ட பெரியார் தொண்டறக் குழுவினர் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி போன்றவற்றில் விளம்பரமில்லாது கடமை உணர்வால் உந்தப்பட்டு, தொண்டறப் பணியைச் செய்த தோழர் களுக்குப் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் அவர்கள் ஆங்காங்கு சென்று, கழகப் பொறுப்பாளர்களையும், தோழர்களையும் உற்சாகப் படுத்தி, ஒருங்கிணைத்து புதிய உற்சாகத்தினை அளித்து வருகிறார்.
24.6.2023 அன்று செந்துறையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கழகப் பொறுப்பாளர்கள், பங்கேற்ற மாணவர்கள்
தோழர்களின் உற்சாகமிக்க பணிகள்!
அதுபோலவே, மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், கழகத் தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், மருத்துவரணி டாக்டர் கவுதமன், வழக்குரைஞரணி மாநில தலைவர் த.வீரசேகரன்,  கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி மற்றும் கழகப் பொறுப்பாளர்களின் பணிகள் உற்சாகம் தருவதாக உள்ளது!
கழகப் பிரச்சார ஏடுகளாகச் சிறப்புடன் செயல்பட்டுவரும் ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆகியவற்றிலும், பதிப்பகப் பணிகளிலும் ஊக்கத்துடன் ஈடுபட்டுவரும் பொறுப்பாளர்கள், சமூக ஊடகங்களில் வீச்சுடன் செயலாற்றும் பெரியார் வலைக்காட்சித் தோழர்கள் அனைவரின் உழைப்பும் பாராட்டத்தக்கதாகும்.
இது மேலும் வளர, ஆரோக்கிய போட்டியுடன் செயல்படுக!
வெற்றி நமதே!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.1.2024

No comments:

Post a Comment