2023ஆம் ஆண்டு விடைபெற்று 2024 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது.
2023ஆம் ஆண்டில் நல்லது நடந்ததைவிட இருள் கவ்வும் தீமைகள் தான் அதிகம் தலை தூக்கின.
இதற்கு முக்கிய காரணம் ஒன்றியத்தை ஆளும் மோடி பிரதமராக இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சியே!
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கும் முன்னே – நாடாளுமன்ற படிக்கட்டுகளை விழுந்து கும்பிட்டு நாடாளுமன்றமே நான் வணங்கும் கோயில் என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் மோடி.
ஆனால் நடந்தது என்ன? டில்லியில் இருந்து கொண்டே நாடாளுமன்றம் நடக்கும் போதே அவைக்கு வரவே மாட்டார். உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது ஒரு கெட்ட பழக்கம் என்பது அவரின் நினைப்பு! மணிப்பூரில் மாதக் கணக்கில் நடந்த உள்நாட்டுக் கலவரம்பற்றி உலகமே மிரண்டு பார்த்த நிலையில் நமது பிரதமரோ அப்படி ஒரு கலவரம் நடந்ததாகவே உதட்டை அசைக்கவில்லையே! (வாழ்க மக்கள் நலம்!)
இடியே விழுந்தாலும் அங்கு என்ன புகை என்று கேட்பார். நாடாளுமன்றம் தாக்கப்பட்டது இரண்டு முறை – அந்த இரண்டும் பிஜேபி ஆட்சியில்தான் நடந்தது.
கடைசியாக நாடாளுமன்றத்துக்குள் வண்ணப் புகைக் குண்டு வீச்சு நடந்தது. அப்பொழுது பிரதமரோ உள்துறை அமைச்சரோ அவையில் இல்லை என்றாலும், அந்தச் செய்தி நடந்தவுடன், விரைந்து நாடாளுமன்றத்திற்கு வந்து, பொறுப்பான வகையில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற அக்கறை எள் மூக்கு முனை அளவுகூட இல்லை என்பது ஒருவகையான எதேச்சதிகார இட்லரிசமே!
‘மன்கிபாத்’ என்று மாதந்தோறும் வானொலியில் பேசுவாரே தவிர, பிரதமர் செய்தியாளரைச் சந்திப்பது என்பதையும் கெட்ட பழக்கமாகவே கருதியதை என்ன சொல்ல!
பெரும்பாலும் உலகம் சுற்றும் வாலிபராகவே காட்சி அளிப்பார்; தான் அணியும் உடையின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் என்று பெருமையாகக் கூறிக் கொள்வார் – இன்னொரு பக்கத்தில் ஓர் ஏழையின் மகன் என்பார் – டீ விற்றவன் என்பார் – கழிப்பறையைச் சுத்தம் செய்ததாகவே படம் காண்பிப்பார்.
விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் ஊடகங்களின் கழுத்தை நெரிப்பார்.
வளர்ச்சித் திட்டம் என்பது பிஜேபியின் அகராதியில் வீழ்ச்சியின் அளவீடு என்று பொருள்.
“ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடப்படும் என்று சொன்னீர்களே, அது என்னாச்சு?” என்று ஞாபக சக்தியோடு மக்கள் கேள்வி எழுப்பினால், அது ஒரு ‘ஜும்லா’ என்று சொல்லும் அளவுக்கு வாக்களித்த மக்களைக் கேலி செய்யும், எள்ளி நகையாடும் எள்ளல் தன்மை.
இப்பொழுது வெளி வந்துள்ள உண்மை என்னவென்றால், உலகளவில் அதிக அளவு தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததில் முதலிடம் அமெரிக்கா என்றால் இரண்டாவது இடம் இந்தியா என்ற பரிசைத் தட்டிச் சென்றுள்ளார் ‘பாரதப் பிரதமர்’ நரேந்திர மோடிஜி’ (விழுக்காடு கணக்கில் 9 புள்ளி ஒன்று).
ரிசர்வ் வங்கி ஆளுநருக்கே தெரியாமல்கூட ஒரு இராத்திரியில் ரூபாய் மதிப்புக் குறைப்பை அறிவித்து சிறு, குறு நடுத்தர தொழில்களை நடுரோட்டில் நிற்க வைத்தார்.
மாநிலங்களுக்கான சுயாட்சி என்ற சொல்லைக் கேட்டாலே பிரதமரின் கண்கள் கோவைப் பழமாகி விடும்.
ஜம்மு – காஷ்மீர் மாநில உரிமை பறிக்கப்பட்டு யூனியன் பிரதேச மாக்கிய மத வெறுப்பை என்னவென்று சொல்லுவது!
குடியுரிமை சட்டம் என்பது என்ன? சிறுபான்மையினர் மீதான கொடும் பாய்ச்சல்தானே.
நாடாளுமன்றம் நடக்கும் பொழுதே, ஒரு பிஜேபி எம்.பி., மற்றொரு முஸ்லிம் எம்.பி.யை தரக்குறைவாக – கீழ்த்தரமாகப் பேசிய ஆபாசத்தை அநாகரிகத்தை மக்களவைத் தலைவர் தான் கண்டு கொண்டாரா? ஒரே ஒரு கண்டன வார்த்தையைத் தான் உதிர்த்தனரா உள்துறை அமைச்சரும், பிரதமரும்?
பெட்ரோல் விலை விண்ணை முட்டியது – எந்த ஆட்சியில்? பெட்ரோல் விலை உயர்ந்தால் நாட்டின் அனைத்துப் பொருள்களும், அதன் அடிப்படையில் கிட்டே நெருங்க முடியாத அளவுக்குக் கிடுகிடு என்று விலை ஏற்றம் நடக்காதா?
நடுத்தர மக்களும் எரிவாயுவைப் பயன்படுத்தும் ஒரு கால கட்டத்தில், எத்தனை மடங்கு விலையேற்றம்!
மறுபடியும் வரட்டி, விறகு, ஊது குழல் பக்கம் மக்களை விரட்டி அடிக்கப் போகிறார்களா?
நாட்டையே அதானி – அம்பானி குடும்பங்களுக்கு அடகு வைக்கும் அக்கிரமத்தை என்ன சொல்ல! கார்ப்பரேட்டு கம்பெனி களுக்குக் கடன் தள்ளுபடி அசாதாரணமானது. ஆனால் ஏழை எளிய மக்கள் வங்கிகளில் கடன் வாங்கினால், அவர்களின் ஆடு, மாடுகள் கூட ஏலம்!
2014ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 9 ஆண்டுகளில் வங்கி களில் ரூ.25 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், பொதுத் துறை வங்கிக் கடன் தள்ளுபடி ரூ.10.41 லட்சம் கோடி மற்றும் ஷெட்யூல்டு வங்கி கடன்கள் சுமார் ரூ.14.53 லட்சம் கோடி அடங்கும்.
2023இல் ஒரு நல்ல காரியம் நடந்திருக்கிறது. 28 எதிர்க்கட்சிகள் ‘இண்டியா’ என்ற பெயரில் உருவான கூட்டமைப்புதான். இந்த அணி அகம் சுத்தமாக, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு செயல்பட்டால் நாட்டைப் பீடித்த 10 ஆண்டு கொடும் நோயை ஒழித்துக் கட்ட முடியும்.
யார் ஆள வேண்டும் என்பதைவிட, யார் ஆளக் கூடாது என்பதுதான் மிக மிக முக்கியம் என்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் அழுத்தமான கருத்து – ஆழமானதாகும்.
இளந் தலைவர் இராகுல் காந்தியின் நடைப் பயணம் என்பது மதவாத சக்திகளுக்கான இறுதிப் பயணமாக அமையட்டும்!
தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் பிஜேபி மதவாத ஜனநாயக விரோத ஆட்சியை – சக்தியை வீழ்த்துவதில் பெரும் சக்தியாக இருப்பது – 140 கோடி இந்திய மக்களின் நன்னம்பிக்கையாக இருக்கிறது.
‘கரணம் தப்பினால் மரணம்’ – இந்திய வாக்காளப் பெரு மக்களே உஷார்! உஷார்!!
2023ஆம் ஆண்டை வழியனுப்பி, ஜனநாயக – சமத்துவ – சமதர்ம சமூக நீதி ஆட்சி மலர 2024ஆம் ஆண்டை பூச்செண்டு கொடுத்து வரவேற்போம்! வரவேற்போம்!!
No comments:
Post a Comment