ராமன் கோயிலும் - அரசியலும் (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 4, 2024

ராமன் கோயிலும் - அரசியலும் (2)

இராமாயணம் என்பது வர்ணாசிரமத்தை காப்பாற்றத் தான் என்பதற்கு பெரிய ஆய்வுகள் தேவையில்லை. ‘தினமலர்’ போன்ற ஏடுகளில் வெளிவந்துள்ள செய்திகளே போதுமானவை ஆகும்.

“ஜனவரி 18ஆம் தேதி கணபதி பூஜை, அம்பிகா பூஜை, வருண பூஜை, மாந்திரீக பூஜை, பிராமண வரன் வாஸ்து பூஜை போன்றவற்றுடன் முறையான சடங்குகள் துவங்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வர்ண பூஜையாம்…. இவற்றுக்கு விளக்கம் வேண்டுமோ? வர்ண பூஜை என்று வருகின்ற பொழுது பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற பிறப்பின் அடிப் படையான கோட்பாடுகள் நிலை நிறுத்தப்படுவதை கவனிக்கத் தவறக் கூடாது. “பிராமண வரன்” என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த 2024ஆம் ஆண்டிலும் பிறப்பின் அடிப்படையிலான நான்கு வர்ணத்தை நிலை நிறுத்துவதற்காகத் தான் இந்த ராமன் கோயில் திறப்பு விழா என்பதை மறந்து விடக்கூடாது. ஒரு அரசாங்கத்தினுடைய கடமை என்பது மக்களுடைய அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வது – உண்ண உணவு, உடுக்க உடை, இருப்பிடம் ஆகிய இன்றி யமையாத தேவைகளை நிறைவேற்றுவது தான். அவற்றை நிறைவேற்ற சக்தி இல்லாத, திறமை இல்லாத, ஆட்சியாளர்தான் மக்களின் அறியாமையை மூலதன மாகக் கொண்டு இது போன்ற மத போதை மாத் திரைகளை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். மதமாக இருக்கட்டும், கடவுளாக இருக்கட்டும் – அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையாக இருக்கட்டும், பூஜை அறை யில் இருக்கட்டும். அதை அரசியலுக்குக் கொண்டு வந்து ஆதாயம் தேட முற்படுவது மக்களின்

அறியாமையை மேலும் வளர்க்கவும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கவுமான ஒரு மோசமான வழி முறையாகும்.

‘தினமலர்’ ஏட்டில் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. “ராம பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் உத்தவ் புகாருக்கு தலைமை பூசாரி பதில்” என்பதுதான் அந்தச் செய்தி. “அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழ், வரவில்லை” என்று கூறிய மகாராட்டிர மாநில மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு “கடவுள் ராமரின் பக்தர்களுக்கு மட்டுமே அழைப்புகள் அனுப்பப் பட்டுள்ளன” என்று ராமன் கோவிலின் தலைமைப் பூசாரி ஆச்சாரியா சத்தியந்திர தாஸ் விளக்கம் அளித்துள்ளார் என்ற செய்தி வெளி வந்துள்ளது. இது எதை காட்டுகிறது? சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே சங்பரிவார் கூட்டத்தில் நகையும் சதையுமாக இருந்தவர். அரசியல் சூழ்நிலையில் பிஜேபிக்கு எதிராக இருக்கும் நிலையில் அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது ராமன் கோயில் திறப்பு விழா என்பது பச்சையான அரசியல் காரணத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது புரியவில்லையா?
ராம பக்தர்களுக்கு ஒன்றை நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவசியம் ஆகும். 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ராமனை முன்னிறுத்தித் தான் ராஜகோபாலாச் சாரியார் தலைமை வகித்த கூட்டணி மிகப்பெரிய பிரச்சாரத்தில் ஈடுபட்டது. முடிவு என்னவாயிற்று? அந்த கூட்டணி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதுவரை யாரும் பெறாத 184 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது என்பதை நினைவூட்டுகின்றோம்.

பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த எந்த திட் டத்தையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்றாரே அதை செய்தாரா? அதை சுட்டிக் காட்டினால் அதெல்லாம் ஜும்லா என்று கூறுகிறார்கள் என்றால் இந்த ராம பக்தர்களை எந்த கண்கொண்டு பார்க்க வேண்டும் என்பது பக்தர்களுக்குக்கூடத் தெரியாமல் போகுமா? ராம பக்தர்கள் ஒரு கட்சிக்குள் மட்டும் தான் இருக்கிறார்கள், என்பதும் கூட கற்பனை தான் – நம்புபவர்கள் இருக்கிறார்கள், நம்பாதவர்களும் இருக்கிறார்கள், அடிப்படையிலேயே மாறுபாடு கொண்ட வேறு மதத்தினரும் இருக்கிறார்கள். அவர்கள் வாக்குகள் எல்லாம் பிஜேபி சங்பரிவார் கூட்டத்துக்கு மட்டும்தான் கிடைக்கும் என்று எண்ணி, இது போன்ற பக்தி வேடங்களைக் கட்டி ஆடுவது அசல் சிறு பிள்ளைத்தனமாகும். கடந்த கால வரலாறு அதை எடுத்துக்காட்டும்.

No comments:

Post a Comment