15 மாநிலங்கள் - 66 நாட்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 5, 2024

15 மாநிலங்கள் - 66 நாட்கள்!

featured image

புத்தெழுச்சியை ஏற்படுத்தும் ராகுல்காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமைக்கான இரண்டாவது பயணம்!
புதுடில்லி, ஜன.5 காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை மேற்கொள்ள இருக்கும் ‘பாரத் நியாய யாத்திரை’ எனும் இந்தியாவின் நீதிக்கான பயணம் செல்லும் பாதையின் வரைபடம் மற்றும் அட்ட வணையை காங்கிரஸ் கட்சி வெளி யிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 20 மாவட்டங்கள் வழியாக சுமார் 11 நாட்கள் பயணம் செய்யும் வகையில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் 7 செப்டம்பர் 2022 முதல் 31 ஜனவரி 2023 வரை நடைபெற்ற ‘இந்திய ஒற்றுமைக்கான வெற்றிகரமான நடைப்பயணத்தை அடுத்து, இரண்டாம் கட்டமாக தற்போது ‘இந்தியாவின் நீதிக்கான பயணம்’ மேற் கொள்ளப்படுகிறது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி தொடங்க உள்ள இந்தப் பயணம் 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் வழியாக 66 நாட்களில் 6,700 கி.மீ. தூரம் பயணித்து மகா ராட்டிரா மாநிலம் மும்பையில் நிறை வடையும்.

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ராகுல் காந்தியின் இந்தப் பயணம் பேருந்து மற்றும் நடைப்பயணம் இரண்டும் சேர்ந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பி. மாநிலத்தில் 11 நாட்கள் பயணம் செய்யும் ராகுல் காந்தி அம்மாநிலத்தின் சந்தெவுலி, வாரணாசி, பதோஹி, அலகாபாத், பிரதாப்கர், அமேதி, ரேபரேலி, லக்னோ, சீதாபூர், லக்கிம்பூர், ஷாஜஹான்பூர், பரேலி, ராம்பூர், மொரா தாபாத், மீரட், அலிகார், மதுரா, ஆக்ரா, காஸ்கஞ்ச் ஆகிய இடங்கள் வழியாக 1,074 கி.மீ. பயணிக்க உள்ளார்.
உ.பி தவிர, மணிப்பூர், நாகாலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம், மேகா லயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராட்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக இந்தப் பயணம் செல்லும்.
இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய இந்தப் பயணம், ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment