இம்மாதம் 22ஆம் தேதி அயோத்தியில் ராமன் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் கட்டுவது, திறப்பது என்பதெல்லாம் வழக்கமாக நடைபெறக் கூடியதுதான். ஆனால் இப்பொழுது கட்டப்படும் ராமன் கோயில் என்பது 450 ஆண்டுகால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழிபாட்டிடமான பாபர் மசூதியை இடித்து அதன் மீது ராமன் கோயில் கட்டுவது என்பது அடிப்படையிலேயே நாகரிகத்திற்கும், ஒழுக்கத் திற்கும், பண்பாட்டுக்கும், மனித தத்துவத்திற்கும், அறிவு நேர்மைக்கும் விரோதமான காரியம் ஆகும்.
இதன் மூலமாக ஒன்றை விளங்கிக் கொள்ளலாம். உலகம் முழுதும் ஒரே கடவுளால் படைக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டு, மதவாரியாக கடவுளை உருவாக்கிக் கொண்டு, ஒரு மதத்துக்காரன் இன்னொரு மதத்துக்காரன் கடவுளை நம்பாதது, அழிப்பது, உடைப்பது என்பது எல்லாம் கடவுளால், மதத்தால் ஏற்படும் ஒழுக்கக்கேடாகத் தானே நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரு மதக்காரன் தன் மதமே உயர்ந்தது, தான் நம்பும் கடவுளால்தான் உலகமே படைக்கப்பட்டது என்பதும், இன்னொரு மதக்காரன் என் மதம் தான் சிறந்தது, என் மதக் கடவுளால் தான் உலகம் படைக்கப்பட்டது என்பதும், இதன் அடிப்படையில் மதக்காரர்களுக்குள் சண்டைகளும், சச்சரவுகளும், உயிரிழப்புகளும், ரத்த ஆறு ஓடுவதும் எந்த வகையில் கடவுள் ஏற்கத்தக்கது, மதம் பின்பற்றத்தக்கது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தங்கள் தங்கள் கடவுளைப் பற்றி இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றை வண்ண வண்ணமாக கயிறு திரித்து கற்பனைக்கு எட்டிய வகையில், சற்றும் அறிவுக்குப் பொருந்தாத தன்மையில் எழுதிக் குவித்து இருப்பது கொஞ்சநஞ்சமல்ல. மனிதன் ஆறறிவு படைத்தவன், பகுத்தறிவாளன். சிந்தித்து எதையும் ஏற்பதா தள்ளுவதா என்ற முடிவு பெற வேண்டியவன். எந்த காலத்திலோ மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த சூழ்நிலையில் அச்சம் பேராசை இவற்றின் காரணமாக உண்டாக்கிக் கொண்ட கற்பனைக்குப் பெயர் தான் கடவுள்! கடவுளுக்குப் பிறப்பு இறப்பு கிடையாது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு – கடவுள் அவதாரம் எடுத்தார் என்பதும், கடவுளுக்கு மனைவிமார்கள் உண்டு என்பதும், குழந்தை குட்டிகள் ஏராளம் உண்டு என்பதும் எல்லாம் முன்னுக்குப் பின் முரண்பாடு அல்லவா? இராமாயணத்தைப் பொறுத்தவரையில் அதன் கதாநாயகன் ராமன் மகாவிஷ்ணு அவதாரம் என்று கூறப்படுகிறது. தேவர்கள் வேண்டிக் கொள்ள அதன் அடிப்படையில் இராவணன் என்ற அரக்கனை அழிப்பதற்காகவே மகாவிஷ்ணு ராமனாக அவதரித்தான் என்று கூறப்படுகிறது. ஒருவனை அழிப்பதற்காகவே கடவுள் அவதாரம் எடுக்க வேண்டுமா என்பது நேர்மையான கேள்வியாகும். வரலாற்று ரீதியாக பார்க்கும் பொழுது ஏராளமான பவுத்த கோயில்கள் இடிக்கப்பட்டு இந்து மத கோயிலாக மாற்றப்பட்டுள்ளன என்று தெரிய வருகிறது. ஆகவே கடவுள், மதம் என்பன மனித சமுதாய வளர்ச்சிக்கு மாறாக ரத்தம் குடிக்கும் ஓநாய்களாக இருப்பதும், அவற்றை நம்புவதும் நியாயமானது தானா என்பது முக்கியமான கேள்வி ஆகும். குறிப்பாக பூரி ஜெகநாதர் கோயில் என்பது புத்தர் கோவில் என்று விவேகானந்தர் குறிப்பிடுகின்றார்.
அயோத்தியில் இப்பொழுது திறக்கப்பட இருக்கின்ற ராமன் கோயில் என்பது நமது தலைமுறைகளிலேயே நேரில் கண்ட ஓர் அழிவின் மீது நிறுவப்பட்ட ஒன்றாகும். இதற்கு என்ன பதிலை ராம பக்தர்கள் வைத்திருக்கிறார்கள்? “இராமாயணம் மகாபாரதம் என்பதெல்லாம் அரபியன் நைட் போன்ற பஞ்ச தந்திரக் கதைகள்” என்று ஜவஹர்லால் நேரு போன்ற வரலாறு அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஆரியர் – திராவிடர் போராட்டம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இராமாயணம் என்று வருகின்ற பொழுது தந்தை பெரியார் எழுப்பும் ஒரு கேள்வி மிக முக்கியமானது. இராமாயணம் கிரேதா யுகத்தில் நடந்தது என்று சொல்லுகிறார்கள். கிரேதா யுகத்திற்கு உண்டான ஆண்டுகள் 12 லட்சத்து 96 ஆயிரம் என்று கூறுகிறார்கள். அதில் ராவணன் 50 லட்சம் ஆண்டுகள் ஆண்டான் என்பது எந்த வகையில் அறிவுக்குப் பொருத்தமானது? அடிப்படையே ஆட்டம் காணும் போது அதன் மேல் எழுப்பப்படும் கடவுள் கற்பனை மீது அறிவை செலுத்த வேண்டாமா? பாபர் மசூதியை இடித்தவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த குற்றவாளிகளில் முக்கியமானவர்கள் பலர் ஆட்சி அதிகாரத்தின் முக்கிய பதவிகளில் இருந்தார்கள் – இருக்கின்றார்கள் என்பதை நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
நம் நாட்டின் நீதிமன்றம் எப்படி இருக்கிறது என்பதற்கு ராம ஜென்ம பூமி மீது கொடுக்கப்பட்ட தீர்ப்பே போதுமானது. யார் பாபர் மசூதி இடித்தார்களோ அவர்கள் கைகளிலேயே சம்பந்தப்பட்ட அந்த இடத்தை ஒப்படைப்பதும், அந்த இடத்தில் ராமன் கோயில் கட்டுவதும் கண்ணெதிரே நாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய அதிர்ச்சி யூட்டக்கூடிய அவலமாகும். இந்திய துணை கண்டத்தை பத்து ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மக்கள் நலன் சார்ந்து எந்தவித சாதனைகளையும் செய்ய முடியாத ஒரு கையறு நிலையில், மக்களிடத்தில் மண்டிக் கிடக்கின்ற பாமர பக்தியை, மூடத்தனத்தை நம்பி கொண்டு மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறலாம் என்ற எண்ணத்தின் மீதுதான் இப்பொழுது அவசர அவசரமாக அயோத்தியில் ராமன் கோயிலை கட்டி அதன் திறப்பு விழாவினை நடத்த இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மக்கள் அறிய மாட்டார்களா?
அதுவும் மதச்சார்பற்ற தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு ஆட்சியில் அமர்ந்தவர்கள் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கோயிலைக் கட்டுவது என்பது அரசமைப்புச் சட்டத் தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு முற்றிலும் விரோதம் அல்லவா? இதைத் தேர்தல் பிரச்சாரமாக மேற்கொண்டால் வெற்றி பெற்றாலும், அந்த தேர்தல் செல்லாது என்று ஏற்கெ னவே உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கவே செய்கின்றன. இந்த நிலையில் ராமன் கோவில் கட்டியதை முதன்மைப்படுத்தி யார் தேர்தல் பிரச்சாரம் செய்தாலும் அது சட்டப்படி தவறானதாகும். நீதிமன்றம் சென்றால் அவர்களின் வெற்றி செல்லுபடி அற்றதாகிவிடும் என்பது நினைவில் இருக்கட்டும்!
No comments:
Post a Comment