சென்னை - வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் ராதா மன்றத்தில் 28.2.1968 வெள்ளி மாலை 5.30 மணி அளவில் மலேயா சென்று மீண்ட 'விடுதலை' ஆசிரியர் திரு.கி.வீரமணி எம்.ஏ.,பி.எல்., அவர்களுக்கு 'விடுதலை' அலுவலகப் பணியா ளர்கள் சார்பில், தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் வரவேற்பும், தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது,
கம்போசிங் செக்ஷன்இராதா அனைவரையும் வர வேற்றுப் பேசி தந்தை பெரியாரவர்களை தலைமை ஏற்கும்படி வேண்டிக் கொண்டார். துரைராஜ் (உதவி ஆசிரியர்) வழிமொழிந்து பேசினார்.
தந்தை பெரியார் அவர்கள் தமது தலைமை உரையில் குறிப்பிட்டதாவது;
பேரன்புமிக்க தாய்மார்களே! தோழர்களே! ஆசிரியர் வீரமணி அவர்களே! அவரது துணைவியார் மோகனா அவர்களே!
நமது 'விடுதலை' ஆசிரியர் அவர்கள் மலாயா நாடு சென்று சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள மக்களால் நல்ல வண்ணம் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக உடல் நலத்தோடு திரும்பி வந்ததை முன்னிட்டு, நமது 'விடுதலை' அலுவலகத்தில் பணியாற்றக் கூடியவர்கள் இந்த வரவேற்பினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிக்க மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். இந்த வரவேற்பு விழாவானது 'விடுதலை' அலுவலகத்திலுள் ளவர்களால் நடத்தப்படுகிற விழாவானதால், இந்த விழாவில் நானும் - மணியம்மையும் பங்கேற்றுக் கொள்கிறோம்.
ஆசிரியர் அவர்கள், மலாயா நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லும் போது; அவரை வழி அனுப்ப முடியாது பெரிதும் ஏமாற்றமடைந்தேன். அதுபோலவே அவர் திரும்பி வரும் போதும் அவரை வரவேற்க நான் இருக்க முடியாமல் போய் விட்டது. அம்மா தான் இருந்தார்கள். நான் ஏன் இருக்க முடியா மல் போனதென்றால் முன்கூட்டியே ஏற்பாடு செய்த நிகழ்ச்சி களுக்குப் போக வேண்டியவனாகி விட்டேன். என்னைப் பொறுத்தவரை நான் ஏற்றுக்கொண்ட காரியங்களுக்குத் தவறாமல் போவது என்று பொது வாழ்வில் ஈடுபட்ட அன்று முதல் எனது பழக்கமாக கடமையாகக் கொண்டிருக்கின்றேன். ஆதலால், என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இது எனக்குக் குறையாகவே இருந்தது. ஆசிரியர் அவர்கள் கடிதப்படி 4ஆம் தேதி எதிர்பார்த்தோம். ஆனால், என்ன காரணத்தாலோ 4ஆம் தேதி வரமுடியாமல் 5ஆம் தேதியே வரவேண்டியதாயிற்று. நான் 5ஆம் தேதிக்கு தர்மபுரியில் எனது தலைமையில் நடைபெற இருந்த நமது நண்பர் ஒருவரின் தங்கை திருமணத்திற்குச் செல்ல வேண்டியவன் ஆனேன். அதனால் முதல் நாள்வரை இருந்தவன் மறுநாள் தங்கியிருந்து ஆசிரியரை வரவேற்க முடியாமலே போய் விட்டது. 4ஆம் தேதியாக இருந்தால் கண்டிப்பாக நானும் சென்றிருப்பேன்.
கடல் கடந்து சென்றும் இயக்கப் பிரச்சாரம்!
மலாயா போயும் அங்கு எல்லா இடங்களிலும் நமது இயக்கப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள். அவருடன் அவர் மனைவியாரும். குழந்தைகளும் சென்றிருந்தார்கள். அவர் ஆசிரியராயிருந்து நடத்தும் 'விடுதலை'யில் தொண் டாற்றும் தோழர்கள் அனைவரும் அவரை வரவேற்பதன் மூலம் தங்கள் அன்பைக் காட்டிக் கொள்கிறார்கள். இது மகிழ்ச் சிக்குரியதாகும்.
அலுவலர் கடமை
என்னைப் பொறுத்தவரை எந்த ஸ்தாபனமானாலும் பணி யாற்றுபவர்கள் அன்பிற்குரியவர்களாகவும் அதிருப்தியற்றவர் களாகவும் பதவியிலிருப்பவர்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும். நமது 'விடுதலை'யில் பணியாற்றக் கூடியவர்கள் பாராட்டுக்குரிய வகையில் அன்போடும் பணியில் கஷ்டமிருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் தங்கள் வீட்டு வேலை போல் பொறுப்போடு செய்ய வேண்டும்.
நிர்வாகிகள் கடமை
நிர்வாகப் பதவியிலிருப்பவர்கள் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். பணி செய்பவர்களும் தங்கள் வீட்டில் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதுபோல தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் நடந்து கொள்வது போல நடந்து கொள்ள வேண்டும். அதுபோல்தான் நடந்து கொண்டு வருகிறார்கள். மற்ற அலுவலகங்களில் நடப்பதுபோல நம் அலுவலகத்தில் எந்தவிதமான தகராறுக்கும் இடமில்லாமல் நடந்து கொள்கிறார்கள்!
நமது ஆசிரியர் வந்து 6 வருஷமாகிறது. ஆனால், நமது ஆபீஸானது ஆரம்பித்து 20 வருடங்களுக்கு மேலாகவே நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
ஆசிரியர் பொறுப்பிலிருந்தவர்கள் ஏதோ சொந்த காரணங்களுக்காக விலகிச் சென்றார்களே தவிர, மற்றபடி இங்குப் பணியிலிருந்தவர்கள் வயதான காரணத்தாலும், உடல் நலம் குன்றி வேலை செய்ய முடியாத நிலையில் போயிருக் கிறார்கள், மேலான வாழ்வு கிடைத்து போயிருக்கிறார்களே தவிர, மற்றபடி நாம் யாரையும் போகச் சொல்லியோ அல்லது பிடிக்காமலோ போனவர்கள் கிடையாது.
40 ஆண்டு சர்வீஸ்காரர்!
ஈரோட்டில் முஸ்தபா என்பவர் 40 வருடமாக இருந்து வருகிறார். சண்முகம் பிள்ளை சாகும் வரை குமாஸ்தாவாக இருந்தார். இங்கும் துரைராஜ் வந்து 20 வருடமாக பணியாற் றுகிறார். இராதா சிறு பையனாக இருந்தபோதே இங்கு வந்தவர். இப்படி நம்மிடம் வருபவர்கள் எல்லாம் குறைவாக இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் தங்கள் காரியமாக நினைத்தே உழைத்து வருகின்றார்கள். ஒருவருக் கொருவர் உணர்ந்து வேலை செய்து வருகின்றார்கள்.
ஒற்றுமையுடன் உழைத்தல் அவசியம்
இந்த சமயத்தில் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் நீங்கள் வரவேற்பு அன்பு செலுத்துவதோடு பொறுப் போடு ஒற்றுமை யாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
கண்காணிப்பாளர் கடமை
மேலே இருக்கிறவர்களும் தங்கள் வீட்டு அங்கத்தினர்க ளிடம் நடந்து கொள்வது போல அன்போடு நடந்து கொள்ள வேண்டும். சிறு குற்றங்கள் செய்தாலும் அதை மன்னித்து அவர்கள் திருந்தச் செய்யவேண்டும்.
இது பெருமைக்காக மட்டுமல்ல, அலுவலகத்தில் நல்ல வண்ணம் வேலை நடக்கவும் சுமுகமாக ஒருவருக்கொருவர் அன்போடு இருக்கவுமாகும்.
சுபாவம் அறிந்து நடக்க வேண்டும்
நிர்வாகத்திலிருக்கும்போது, பணியிலிருக்கும் போது சில குறைகள் ஏற்படலாம். துணைவர்களிடமே உயிருக்குயிரானவர் களிடமே குறை ஏற்படுகிறது. அண்ணன் தம்பிகளிடம் தந்தை மகனிடம் கூட சில குறைகள் ஏற்படத்தான் செய்கின்றன. இது இயற்கை. இதை பெரிதுபடுத்தக் கூடாது. சிலரது சுபாவம் ஒரு மாதிரியாக இருக்கலாம். பொதுவாகவே ஒவ் வொருவருக்கொரு சுபாவம் இருக்கும். அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண் டும். அவர் கோபக்காரர்; அந்த கோபம் போனால் நன்றாக நடப்பார் என்கிற தன்மையை உணர்ந்து கொள்ளக் கூடியவர் களாக இருக்க வேண்டும்.
சிலருக்கு தேவை இல்லாமலே பொய் சொல்கிற வழக்கம், சிலர் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு முகம் கடுகடு என்று, எப்போதும் கோபக்காரராகத் தோன்றும்படி இருக்கும். அது அவரவர்கள் சுபாவம். இந்த மனிதச் சுபாவங் களை உணர்ந்து நமது அலுவலகத்திலுள்ளவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
திருச்சியில் அரசாங்கத்தில் பணியாற்றும் நிர்வாகஸ் தர்கள், குமாஸ்தாக்கள், சிப்பந்திகள் எல்லோரும் சேர்ந்து எனக்கு ஒரு வரவேற்புக் கொடுத்தார்கள். அதிலேயும் இதைத்தான் சொன் னேன். நீங்களெல்லாம் அன்போடு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துக் கொள்ளவேண்டும். ஒருவரையும் காட்டிக் கொடுக் கக் கூடாது. உங்களின் ஒற்றுமையை முக்கியமாகக் கருத வேண்டும். மேலே இருப்பவர்களுக்கு அடங்கி நன்றியோடு நடந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம்விட நாமெல்லாம் ஓர் இனத்தவர்களாக இருக்கிறோம். அதுவும் மானம் ஈனமற்ற இழிவான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும் என்றுதான் சொன்னேன். அதைத்தான் உங்களுக்கும் நான் சொல்கிறேன்.
நீங்களெல்லாம் ஒற்றுமையாக இருந்து காரியம் செய்யவேண்டும்
இந்த நிறுவனம் லாபகரமான தொழிலல்ல. பொதுத் தொண் டில் இது ஒரு பகுதி என்பதைத்தவிர இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.3000த்துக்குக் குறையாமல் நஷ்ட மாகிறது என்பது உங்க ளுக்கும் தெரியும். தாயை ஒளித்த சூல் இல்லை என்பது போல உங்களிடம் நான் மறைக்க வேண்டியதில்லை.
'விடுதலை' அலுவலகப் பணியும்
பொதுத் தொண்டே!
இது ஒரு பொதுத் தொண்டு செய்யவேண்டிய தொண்டு என்பதால் செய்கிறோம். இதில் ஆசிரியராக இருக்கிறவருக்கு சம்பளமில்லை. மற்றபடி எந்த வசதியும் அவருக்கில்லை. வேறு இடமாக இருந்தால் எவ்வளவோ வசதிகள் இருக்கும்.
ஆசிரியரின் தியாகம்!
நல்ல கல்வி அறிவுள்ளவர்; தொழில் ஆற்றலுள் ளவர்; பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந் தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய் திருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பார். இதை யெல்லாம் விட்டு பொதுத் தொண்டு செய்யவேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக் காகவே இருக்கக் கூடாது. பொதுமக்களுக்கு ஏதாவது தொண்டு செய்யவேண்டுமென்கிற தன்னல மற்றத் தன்மைக்காகவும் நிறைய பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.
அவர் மலாயா சென்றது தொண்டை முக்கியமாகக் கொண்டு, மற்ற நிலைமையும் தெரிந்து கொண்டு வரவேயாகும். அவருக்கு நீங்களெல்லாம் வரவேற் பளிப்பது மிகவும் பொருத் தமும் கடமையும் ஆகும் என்று சொல்லி பாராட்டுகிறேன். இந்த உணர்ச்சி கடைசி வரை உங்களிடத்திலே இருக்க வேண்டும். நம்மிடத்திலே இது ஒன்றும் சம்பிரதாய முறையல்ல; கிட்டத்தட்ட நமது மானேஜர் அவர்களும் இந்தக் கருத்துக்காகத் தான் இருந்து கொண்டிருக்கிறார். மற்றபடி எந்த லாபமும் கிடையாது. இதில் எனக்கு தலைமை வகிக்கும் பணியைக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்கிற தன்மை வேண் டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிற தன்மை வேண் டும். நான் இரண்டு முறை மலாயா சென்றிருந்த போதும் அங்கிருக்கிற நண்பர்கள் நமக்கு உதவியாக இருந்தார்கள். துரைராஜ் குறிப்பிட்டதுபோல தமிழ்முரசு உரிமையாளர் தமிழவேள்சாரங்கபாணி" அவர்கள் மிக உதவியாக இருந்தார் கள். நானும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் இரண்டு முறை போயிருந்தபோதும் திரு.சாரங்கபாணி அவர் கள் என்னோடு மிக உதவியாக இருந்தார்கள்.
"தமிழ்முரசு"வின் சமுதாயத் தொண்டு!
சிங்கப்பூரில் நான் போயிருந்தபோதுதான் பத்திரிகையை ஆரம்பித்து வைத்தேன். அவரால் நடத்தப்படுகிற "தமிழ்முரசு" நமது கொள்கைகளை எல்லாம் அங்கு நல்லவண்ணம் எடுத்து மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது. நமது "குடிஅரசு"க்கு ஆதரவளித்தவர்களும் அவர்கள்தான். தமிழ்நாட்டில் விற்பனையான அளவுக்கு அங்கும் விற்பனையானது. நிறையப் பணமும் வந்தது. நம்முடைய கொள்கைகள் தமிழகத்தை விட அதிகம் பரவியதற்குக் காரணமே 'தமிழ்முரசு' பத்திரிகை யேயாகும். ஒன்று சொல்கிறேன். நீங்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கவேண்டும். வாழ்க்கையையே முக்கியமா கக் கருதியல்ல. பொதுத் தொண்டுக்காக இருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
வெளிச்சம் கொடுக்குது வெளிச்சத்திற்கு எண்ணெய் தேவை வெளிச்சத்திற்கு யாரும் நன்றி செலுத்த மாட்டார்கள். நீங்களெல்லாம் வெளிச்சம் கொடுப்பவர்கள். உங்களுக்கு எல்லாம் என்ன வேண்டும்? எண்ணெய், அதைத்தான் கொடுக்கிறோம். உங்களுக்கெல்லாம் இது போதாது தான்; அது தெரியும். ஆனால், அவ்வளவுதான் முடிகிறது.
இன்னும் நல்ல வாய்ப்பு வந்து வளரும் படியான காலம் வரலாம். அப்படி ஏற்பட்டால் நிறையச் செய்வதற்கு வசதி ஏற்படும். நீங்கள் எல்லாம் பற்றுதலோடு ஒற்றுமையாக இருந்து தொண்டாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு எனது மனப்பூர்த்தியான நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கி றேன்" என்று கூறி முடித்தார்கள்.
டி.எம்.சண்முகம்
சென்னை மாவட்ட திக. தலைவர் திரு. டிஎம்.சண்முகம் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது; மலாயா நாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கிற 'விடுதலை' ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு, அலுவலகத்தில் பணி புரிகிற நீங்கள், வரவேற்புக் கொடுப்பது மகிழ்ச்சிக்குரியதுடன் பொருத் தமுமாகும். ஆசிரியராக மட்டுமல்லாது கழகப் பிரச்சாரகராக வுமிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இன்றைய 'விடுதலை' அலுவலகத்தில் உள்ள நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்தக் காரியம் செய்ய ஈடு பட்டிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைவதோடு. எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்கள்.
சாரங்கபாணி
உதவி ஆசிரியர் சாரங்கபாணி அவர்கள் தனது - உரையில், நாம் இந்தப் பணிமனையில் பல கஷ்டங்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால், நம் மக்களுக்கு அறிவைக் கொடுக்க வேண்டுமென்று பாடுபட்டுக் கொண்டு வருகிற தந்தை பெரியாரவர்களின் கருத்துகளைப் பரப்புவதற் காகவேயாகும். 2000 ஆண்டுகளுக்கு முன் புத்தர் எப்படி அறிவைப் 'பரப்பினாரோ அதுபோல் இன்று தந்தை பெரியாரவர்கள் பரப்பி வருகிறார்கள்; புத்தரைப் பின்பற்று பவர்கள் பிசாசுகள் என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் உலகெங்கும் சென்று கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து புத்தக் கொள்கையை உலகமெல்லாம் பரப்பி இருக்கிறார்கள். அதுபோல்தான், நம் ஆசிரியர் வீரமணி அவர்களும் ஏதோ பயணமாகச் சென்றாலும் அய்யா அவர்களின் கருத்து களை மலாயாவில் ஒவ்வொரு நாளும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். தந்தை பெரியாரவர்கள் இந்நிகழ்ச்சிக்கு மனமுவந்து தலைமையேற்றதற்கும், அம்மா அவர்கள் வருகை தந்ததற்கும் நமது மகிழ்ச்சியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்கள்.
நாகேஸ்வரன்
நாகேஸ்வரன் (கம்போசிங் பிரிவு அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது: நாம் இங்கே நம் ஆசிரியர் அவர்களை வரவேற்பதற்காகக் கூடி இருக்கின்றோம். தந்தை பெரியார வர்களின் கருத்துகளை எல்லாம் நம் பத்திரிகையின் வாயிலாகப் பரப்பும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறோம். நான் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றேன். என் தந்தை பெரியாரவர்களின் கொள்கையின் மீதுள்ள பற்றினால்தான் ஆகும். நான் வெளியே சென்றால் அதிகச் சம்பளம் கிடைக் கலாம். ஆனால், நாம் மான உணர்ச்சிக்காகத்தான் கொள்கைக் காகத்தான், பணியாற்றி வருகிறோம். இதை உணர்ந்து எல்லோரும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
கி.வீரமணி எம்.ஏ.,பி.எல்.,
கி.வீரமணி எம்.ஏ.பி.எல், (ஆசிரியர், 'விடுதலை') அவர்கள், தமக்களிப்பட்ட வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் குறிப்பிட்டதாவது: இந்த நிகழ்ச்சி, என்னைப் பெரிதும் வெட்கத்தில் ஆழ்த்துகிறது. மலேசியா போய்விட்டுத் திரும்பு வது ஒன்றும் பெரிய காரியமல்ல. இன்று விஞ்ஞான வளர்ச்சி யின் காரணமாக மனிதன் சந்திரமண்டலத்திற்கே சென்று திரும்புகின்றான். இன்று மதியம் உணவை முடித்துக் கொண்டு ஏறினால் இரவு உணவுக்கு முன்னாலேயே மலாயா போய் சேர்ந்துவிடக் கூடிய வாய்ப்பு இன்று விஞ்ஞானத்தின் மூலம் ஏற்பட்டு விட்டது. இதை ஒரு பெரிய சாதனையாகக் கருதி எனக்கு இந்த வரவேற்பளிக்கிறார்கள் என்று கருதவில்லை. என்மேலுள்ள அன்பைக் காட்டிக் கொள்ளவும். நான் தந்தை பெரியாரவர்களின் கொள்கைகளை அங்கெல்லாம் எடுத்துச் சொன்னேன் என்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்ளவுமே இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று கருதி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். .தந்தை பெரியார் கொள்கை உலகில் பலரையும் கவர்ந்துள்ளது தந்தை பெரியாரவர்களின் கொள்கை யானது. உலகமெல்லாம் பரவி இருக்கிறது.
நான் சென்ற இடமெல்லாம் எனக்கு மலாயாவில் இருக்கிற தமிழர்கள் மிகச் சிறப்பாக வரவேற்புக் கொடுத்து தந்தை பெரியாரவர்களின் உடல் நலம் பற்றி மிகக் கவலையோடு விசாரித்தார்கள். நமது நாட்டை விட்டு, நமது கொள்கைகள் அங்கு நிறையப் பரவி இருப்பது எனக்கும் மகிழ்ச்சியை ஊட்டியது.
நான் பெரியார் தொண்டனே!
எனக்களிக்கப்பட்ட வரவேற்பிற்கெல்லாம் காரணம் நான் தந்தை பெரியாரவர்களின் கொள்கைகளைப் பரப்புகின்ற தொண்டன் என்கின்ற முறையில் தானே தவிர, மற்றபடி வேறு காரணத்தால் அல்ல. என்னை வழி அனுப்பும் போதும், திரும்ப நான் வரும்போதும் அய்யா அவர்கள் இல்லாமல் போனது எனக்குக் குறையாகத் தோன்றி இருக்கும் என்று அய்யா அவர்கள் குறிப்பிட்டார்கள். நான் அம்மா. அய்யா இருவரையும் ஒன்றாகவே கருதுகின்றேன். அய்யா அவர்கள் வர இயலா விட்டாலும், அம்மா அவர்கள் நான் செல்லும் போதும் திரும்ப வரும்போதும் வந்திருந்தார்கள். அது எனக்கு பெரும் பெருமையேயாகும். அய்யா அவர்கள் குறிப்பிட்டது போல் நான் இங்கு தொண்டாற்றுவதால் இழப்பு ஒன்றுமில்லை. இலாபத்தைத்தான் அடைந்திருக்கின்றேன். இங்கு நான் பணத்தைக் கூறவில்லை. பணம் வருவது பெரிய இலாபம் என்று நான் கருதவில்லை.
நீங்கள் உங்களிடத்திலிருக்கிற அன்பை இதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். தந்தை பெரியாரவர்களும் என்மேல் உள்ள அன்பையும் பற்றையும் காட்டிக் கொண்டார் கள். மிக்க நன்றியுடையவனாக என்றுமிருப்பேன்.
நான் ஒரு மாதம் சென்றிருந்தபோதும், நீங்களெல்லாம் கடமை உணர்ச்சியோடு எப்போதும் போல எவ்விதக் குறைவு மின்றி, பத்திரிகையை நடத்தித் தந்தமைக்கு எனது பாராட்டு தலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தனிப்பணியல்ல பொதுப்பணி என்பதை உணர்ந்து ஒவ்வொரு துறையில் உள்ள வர்களும் தங்கள் துறை வேறு என்று கருதாமல், இணைந்து செயலாற்றுவதோடு கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடப்பவர்களாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மலேசியா மக்களின் சிறந்த பண்பாடுகள்
மலேசியா மக்கள் அய்யா அவர்களின் வருகையை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அங்குள்ள மக்களின் நினைவாக ஒழுங்கு, பணியாற்றும் திறன் கட்டுப்பாடு. அன்புடைமை முதலியவை குறித்தும் குறிப்பிட்ட தோடு, சிங்கப்பூர் தமிழ்முரசு ஆசிரியர் தமிழவேள் சாரங்க பாணி தன்னுடைய சுற்றுப் பயணங்களில் ஒத்துழைப்புகளை எல்லாம் 'விடுதலை' பத்திரிகையைப் போல வெளியிட்டதோடு நமது கொள்கைகளைப் பரப்பிக் கொண் டிருந்ததாகவும் குறிப்பிட்டு சாரங்கபாணி அவர்களுக்கும் மற்ற மலாயா தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்து தனது உரையினை முடித்துக் கொண்டார். துரைராஜ் (துணை ஆசிரியர்) நன்றி கூறினார்.
- விடுதலை, 25.2.1968
நல்ல கல்வி அறிவுள்ளவர்; தொழில் ஆற்றலுள்ளவர்; பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய்திருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பார். இதையெல்லாம் விட்டு பொதுத் தொண்டு செய்யவேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக் கூடாது. பொதுமக்களுக்கு ஏதாவது தொண்டு செய்யவேண்டுமென்கிற தன்னலமற்ற தன்மைக்காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
- தந்தை பெரியார்
No comments:
Post a Comment