தன்சாரி அனசுயா பொதுவாக சீதக்கா என்று அழைக்கப்படும் இவர் தற்போது தெலங்கானாவில் பழங்குடி சமூகத்தின் முகமாக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் – இவர் தெலங்கானா சட்டமன்றத்திற்கு முலுக் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் 2009ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கும், 2018 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தெலங்கானா சட்டமன்றத்திற்கும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சூன் 2018இல் அகில இந்திய மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் ஆகஸ்ட் 2019இல் சத்தீஸ்கர் மகளிர் காங்கிரசின் மாநிலப் பொறுப்பாளராக ஆனார்.
இவர் ‘தெலங்கானாவின் இரும்புப் பெண்மணி’ என்று குறிப்பிடப்படுகிறார்.சீதக்கா ஜக்கனகுடெம் கிராமத்தில் ஆதிவாசி கோயா பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு அனசுயா நக்சலைட் ஆனார். 1987ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் ஜனசக்தி நக்சல் குழுவில் சேர்ந்தார்.
இவர் நக்சலைட் ஆக இருந்த காலத்தில் தேர்தல் பாதை திருடர் பாதை என்ற கருத்தில் தீவிரமாக இருந்தார். அதே நேரத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமெடுக்கத் தயங்கவில்லை. ஆனால், அவர் இயக்கத்தில் தீவிரமாக இருந்தாலும் மக்கள் பணிகளில் அவரால் ஈடுபட முடியவில்லை. காரணம் அவர் தேடப்படும் குற்றவாளி என்ற காரணத்தால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொதுமன்னிப்பு திட்டம் கொண்டுவந்து திருந்திவாழும் நக்சலைட்டுகளுக்கு அரசு முன்வந்து உதவிகள் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. மக்களுக்கு சேவை செய்யவேண்டுமென்றால் அரசியல் அதிகாரம் பெறவேண்டும், அண்ணல் அம்பேத்கரின் அரசியல் சாசனம் அந்த உரிமையைக் கொடுத்துள்ளது என்று கூறி அவர் 1997ஆம் ஆண்டு பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் காவல்துறையில் சரணடைந்தார். தனியார் வகுப்புகளில் படித்து உயர்கல்வி முடித்து பின்னர் சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.
அண்ணல் அம்பேத்கர், பிர்சா முண்டா, மகாத்மா ஜோதிராவ் புலே, உள்ளிட்ட சமூகநீதித் தலைவர்களை பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து ஒருங்கிணைந்த ஆந்திரா உயர்நீதிமன்ற வழக்குரைஞராக பதிவு செய்தார். அதன் பிறகு இந்தியாவில் சமூகநீதித் தலைவர்களின் அரசியல் பாதை குறித்து ஏற்கெனவே தான் செய்த ஆய்வை தொடர்ந்து செய்து 2022இல், முனைவர் பட்ட ஆய்வை உசுமானியா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.
2004ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து முலுக் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தபோது, முதலில் அரசியலில் நுழைந்த அனசுயா, 2009இல் மீண்டும் முலுக் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, காங்கிரசு வேட்பாளர் போடம் வீரையாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் 2014 தேர்தலில் பாரத் இராட்டிர சமிதி வேட்பாளர் அசுமீரா சந்துலாலிடம் தோல்வியடைந்தார்.
ஆனால் ரெவந்த் ரெட்டியைப் போலவே இவரையும் அரசியலில் வளரவிடாமல் முட்டுக்கட்டை போடப்படுவதை அறிந்து இவரும் ரேவந்த் ரெட்டியோடு சேர்ந்து தெலுங்கு தேசம் கட்சியை விட்டு வெளியேறி இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
2020ஆம் ஆண்டில் தெலங்கானா-சத்தீசுகர் எல்லைக்கு அருகிலுள்ள 400க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு முழு அடைப்பின் போது நிவாரணம் வழங்கினார். அரிசி, பருப்பு போன்றவற்றை விநியோகித்தார். இவரது முயற்சிகள் மக்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றன, ” எனது மக்களுக்கு எனது கடமையாக இதைச் செய்கிறேன்” என்று கூறினார்.
விரைவில் அகில இந்திய மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் பின்னர் சத்தீசுகர் மகளிர் காங்கிரசின் மாநிலப் பொறுப்பாளராகவும் ஆனார். இவர் 2018 மற்றும் 2023 பொதுத் தேர்தல்களில் முலுக் தொகுதிக்கான சட்டமன்ற காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.
இவரது வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்டபோது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்த பகுதியே மக்கள் முழக்கத்தால் அதிர்ந்தது.
தன்னுடைய அரசியல் பயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்ததும், அது மட்டுமல்லாமல் காங்கிரஸின் தலைவராக தற்போது இருக்கும் கார்கேவை தனது அரசியல் தந்தை என்றே கூறும் அளவிற்கு அவரிடம் அரசியல் கற்றார். எந்த மக்களுக்காக அவர் ஆயுதம் ஏந்தினாரோ அதே மக்களுக்கு உரிமைகள் வழங்க அண்ணலின் பாதையில் அரசியல் ஆயுதம் ஏந்தி அதிகாரத்தை வழங்க அமைச்சர் பதவி ஏற்றுள்ளார்.
No comments:
Post a Comment