ஞாயிறன்று உருவாகும் புயல் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் - சூறாவளி வீசும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

ஞாயிறன்று உருவாகும் புயல் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் - சூறாவளி வீசும்

சென்னை, டிச. 2- வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் வரும் 4ஆம் தேதி நிலவக்கூடும். இது 5ஆம் தேதி காலை நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைகொண்டுள்ளது. இது நாளை (டிச.3) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்று, 4ஆம் தேதி தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். 5ஆம் தேதி காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும். அப்போது அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (டிச.2) முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழ்நாடு கடலோரத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் 80 கி.மீ. வேகத்திலும், நாளை மாலை முதல் 90 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment