சென்னைக் கோட்டூர்புரத்தில் இளைஞரணியினர் நடத்திய எழுச்சி மிகு தந்தை பெரியார் நினைவு நாள் உறுதியேற்புப் பொதுக்கூட்டம் தமிழர் தலைவர், இரா.முத்தரசன், ஆளூர் ஷாநவாஸ் முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 26, 2023

சென்னைக் கோட்டூர்புரத்தில் இளைஞரணியினர் நடத்திய எழுச்சி மிகு தந்தை பெரியார் நினைவு நாள் உறுதியேற்புப் பொதுக்கூட்டம் தமிழர் தலைவர், இரா.முத்தரசன், ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

featured image

சென்னை, டிச. 26- தந்தைபெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் உறுதியேற்புப் பொதுக்கூட்டம் கழக இளைஞரணி சார்பில் 24.12.2023 அன்று மாலை சென்னை கோட்டூர்புரம் மார்க்கெட் சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
பொதுக்கூட்டப்பகுதியில் தந்தைபெரியார் உருவ வண்ண விளக்கு அலங்காரம் மக்களின் கவனத்தைக் கவர்ந்தது.
தொடக்க நிகழ்வாக கலப்பை கிராமிய கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் மணித்துரை தலைமையில், மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் துரை.அருண் வரவேற்றார்.

துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமைக்கழக அமைப்பாளர்கள் தே.செ.கோபால், வி. பன்னீர்செல்வம்,தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ஆர்.டி.வீரபத் திரன், தாம்பரம் ப.முத்தையன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வெ.மு.மோகன், மயிலை டி.ஆர்.சேதுராமன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன் முன்னிலையில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மு.சண்முகப்ரியன் தொடக்க உரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் நோக்க உரையாற்றினார்.

சைதை கிழக்குப் பகுதி தி.மு.க. செயலாளர் 13ஆவது மண்டலக் குழுத் தலைவர் இரா.துரைராஜ், துணைப்பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பொருளாளர் வீ.குமரேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப் பினர் ஆளூர் ஷாநவாஸ், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

ரூபாய் நோட்டு மாலை

திமுக 170ஆவது வட்டச்செயலாளர் கோட்டூர்புரம் க.மணி தமிழர் தலைவருக்கு புத்தகம் வழங்கி சிறப்பு செய்தார்.
இளைஞரணி சார்பில் ரூபாய் நோட்டுமாலையுடன் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மாவட்ட கழகம் சார்பில் விடுதலை சந்தா வழங்கினார்.
இளைஞரணி சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு பய னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர் ச.மகேந்திரன் இணைப்புரையாற்ற, மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து நன்றி கூறினார்.

சென்னை மாநகராட்சி மாமன்ற மதிமுக உறுப்பினர் சைதை ப.சுப்பிரமணி, திமுக 170(அ) வட்டச்செயலாளர் கோட்டூர் கோ.சண்முகம், இளைஞரணி பொழிசை கண்ணன், நா.பார்த்திபன், பொறியாளர் ஈ.குமார், கழக மகளிரணித் தோழர்கள் சி.வெற்றிசெல்வி, வேண்மாள் நன்னன், வி.வளர் மதி, பூவைசெல்வி, க.இறைவி,பசும்பொன், தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, மு.பவானி, சீர்த்தி, வி.தங்கமணி, செ.பெ.தொண்டறம், விடுதலைநகர் ஜெயராமன், கோ.தங்கமணி, மு.இராஇமாணிக்கம், செம்பியம் கி.இராமலிங்கம், புரசை சு.அன்புசெல்வன், பல்லாவரம் அழகிரி, தாம்பரம் சு.மோகன் ராஜ், மா.குணசேகரன், உடுமலை வடிவேல், கு.பா.அறிவழகன், க.விஜயராஜா, மு.பாரதி, நுங்கை வெற்றிவீரன், பூவை தமிழ் செல்வன், வை.கலையரசன், க.கலைமணி, தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, சோழிங்கநல்லூர் மாவட்டங் களிலிருந்து கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, வழக்குரைஞரணி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் பெருமளவில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆளூர் ஷா நவாஸ்

என் உடல்நிலை சரியில்லை என்பதால் வந்து சென்றால் போதும் என்றார்கள் தோழர்கள். 91 வயதில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைக் கண்டபின்னர் உற்சாகம் பெற்றுள் ளேன். நமக்கான அசல் பகையை காட்டியுள்ளார் தந்தை பெரியார். கோடானுகோடி இந்து மக்கள் பிற்படுத்தப்பட்ட வர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடி மக்களின் வாய்ப்பு களை, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஆகக் கூடாது என்று அவர்களின் இடத்தை அடைத்துக் கொண் டிருப்பவர்கள் யார்? முசுலீம்களா? அதிகாரமிக்க உச்ச பொறுப்புகளில் அமர்ந்திருப்பவர்கள் முசுலீம்கள் அல்ல.

மண்டல் குழு அறிக்கையின்படி, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இடஒதுக்கீடு அளித்தபோது பட்டியலினத்தவர்கள் எதிர்க்கவில்லை. பட்டியலினத்தைச்சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான் மண்டல் அறிக்கையை அமல்படுத்த சமூகநீதிக் காவலர் விபிசிங்குக்கு உறுதுணையாக இருந்தார்.

இந்துக்களுக்கு முசுலீம்கள் எதிரிகள் என்றும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கு பட்டியலினத்தவர்கள் எதிரிகள் என்பது போலவும் போலியான எதிரிகளைக் காட்டுகிறார்கள். இங்கு தான் தந்தை பெரியார் தேவைப்படுகிறார்.
பெரியார் என்று சொன்னாலே அவர்களின் அடிவயிறு கலங்குகிறது.

பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடி யின மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும்போது தகுதி, திறமை பேசியவர்கள் இப்போது இடஒதுக்கீட்டுக்குள் இருக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராடி ரத்தம் சிந்தியதுண்டு. போராடித்தான் இடஒதுக்கீடு பெற முடிந்தது. ஆனால், கோரிக்கையே இல்லை, போராட்டம் கிடையாது, ஆணைய பரிந்துரை இல்லை. 10 விழுக்காடு (EWS) உடன் அளிக்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டவகுப்பைச் சேர்ந்தவர்தான் பிரதமர். ஆனாலும், பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களின் உரிமைக்காக போராடுகிறார்கள்.
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஒன்றிய அமைச்சர் முருகன் என யாரும் அவர்களின் சமுதாயத்துக்காக போராடவில்லை.
சோசஷியல் எஞ்சினியரிங் என்பது வேறு, சோஷியல் ஜஸ்டிஸ் என்பது வேறு. பாஜக செய்வது சோஷியல் எஞ்சினியரிங். உயர் பதவிகளிலுள்ள தனி மனிதர்களால் சமுதாயத்துக்கு பயன் இல்லை. சோஷியர் ஜஸ்டிஸ் என்பது தந்தை பெரியார் வழியில் உள்ளது. சமூக நீதிக்கானது.

தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் பதவியைத் துறந்தவர்கள். கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக்காக போராடினார்கள். அம்மக்களை தலைநிமிர வைத்த மகத்தான தலைவர் தந்தை பெரியார். மனிதம், மானுட நேயம், ஆதிக்க சுரண்டல் எதிர்ப்பு இதுதான் தந்தை பெரியாரின் நோக்கம். தந்தை பெரியார் தேவை இன்று அதிகப்பட்டுவருகிறது.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்

18.12.2023 அன்று தியாகராயர் நகரில் ‘தந்தைபெரியார் 50 ஆண்டு இறுதி முழக்கமும் நமது உறுதி முழக்கமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டு, உடன் 120 கூட்டங்கள் அறிவிக்கப்பட்டு, இதே நேரத்தில் 16 கூட்டங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகின்றன.

தினமும் மக்களால் பேசப்படுகின்ற தலைவர் என்ற சிறப்பு தந்தைபெரியாருக்கு உள்ளது.
இணையத்தில் ட்ரெண்டிங் ஸ்கேலில் 40 விழுக்காட்டினர் தினமும் பெரியார் பெயரைத் தேடுகிறார்கள்.
தந்தைபெரியார் ஒரு தொலைநோக்காளர். இன்று நாம் பயன்படுத்துகின்ற நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தொலைநோக்காக 1938-1944களிலேயே தந்தைபெரியார் கூறியுள்ளார்.

How is Periyar Relevant today? இன்றைய காலக் கட்டத்தில் தந்தைபெரியார் எப்படி பொருத்தமாக இருக்கிறார் என்பது குறித்து தேடப்படுகிறார். கூகுள் ட்ரெண்ட்டுகளில் பெரியார் தேடப்பட்டு வருகிறார். அடுத்த தலைமுறை தந்தைபெரியார் குறித்து அறிந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்கள். ‘பெரியார் உலகம்’விரைவில் அடுத்த தலைமுறைக்கு இன்னும் அதிகமாகக் கொண்டு செல்லும்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

அதிகமாக பொதுக்கூட்டங்களை போடுகிற இயக்கம் திராவிடர் கழகம்தான் என்று காவல்துறை சொல்கிறது. கழகத்தின் அணுகுமுறைகளில் ஒன்று பிரச்சாரம், அடுத்தது போராட்டம்.

ஜூம்- காணொலிக் கூட்டங்கள் இருந்தாலும், பொதுக்கூட் டங்களை தொடர்ந்து நடத்தி மக்களை சந்தித்து வருகிறது நம் இயக்கம்.
அரசியல் கட்சிகளிலும் அடிப்படைக்கொள்கைகளை பேசுகிறார்கள் இங்கு பேசிய துரைராஜ்போன்றவர்கள்.
இந்த கொள்கைகளை சொன்னால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

திருப்பத்தூரில் தந்தைபெரியார் சிலையை சேதப்படுத் தினால், சேதப்படுத்தியவரை மனநிலை சரியில்லாதவர், குடிகாரர் என்பார்கள். மறுநாள் சாலை மறியல் நடைபெறுகிறது தொலைக்காட்சியில் காட்டினார்கள். அதிலே பக்திமான்கள், பெண்கள் என பலரும் இருந்தார்கள். தொலைக்காட்சியில் சாமி பக்தி உள்ளவரிடம் நீங்கள்கூட பெரியாருக்காக மறியல் செய் கிறீர்களே என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, பெரியாரால்தான் என் மகன் இன்று அமெரிக்காவில் இருக்கிறார் என்றார்.

தந்தைபெரியார் பிரச்சாரம் செய்து செய்துதான் இந்தியாவே இன்று தந்தைபெரியார் கொள்கைகளை பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ‘தந்தைபெரியார் வாழ்க’ முழக்கம் ஒலிக்கிறது.

ஏன் காவி காலூன்ற முடியவில்லை என்றால் தந்தை பெரியார் கொள்கைகள், கழகத்தின் தொடர் பிரச்சாரம்தான் காரணம். இந்த நிகழ்ச்சி வெறும் சடங்கு அல்ல, பிரச்சாரத்துக் காகத்தான். புரோகிதர் இல்லாத முதல் திருமணம் சுக்கில நத்தத்தில் தந்தைபெரியார் நடத்திவைத்தார். ஒரு மாப் பிள்ளை, இரண்டு மணப்பெண்கள்.

செய்யாறு வாழ்குடையில் மாப்பிள்ளை போலீஸ் கான்ஸ்டபிள். அந்த மணவிழாவில் அய்ந்தரை மணி நேரம் பெரியார் பேசினார். மயிலாடுதுறையில் பொதுக் கூட்டத்தில் நான்கரை மணிநேரம் பெரியார் பேசினார். அப்போதெல்லாம் சிறப்புக்கூட்டம் என்றால், மைக் செட் உண்டு என்று இருக்கும். தந்தைபெரியரால் ஜாதிப்பட்டம் ஒழிந்திருக்கிறது.
தந்தைபெரியார் மறைவுக்குப்பின் இயக்கம் குறித்து ஆசிரியரிடம் செய்தியாளரின் கேள்விக்கு கழகம் கலையாது, பிரியாது, நூலிழை பிசகாமல் பெரியார் வழியில் செல்லும் என்றார்.

இந்தியாவில் பல சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. சமூகப்புரட்சியாளர்களின் மறைவுக்குப்பின்னரும் ஓர் இயக்கம் தொடர்ந்து இயங்கிவருகிறது என்றால் அது திராவிடர் கழகம்தான். அதற்கான ஏற்பாட்டை செய்து வைத்தவர் தந்தைபெரியார். இயக்கத்துக்கு தலைவரை அடையாளங்காட்டி, பத்திரிகைக்கு ஆசிரியரையும் காட்டினார். ஆசிரியர் அவர்களை நாற்காலியில் அவரே அமரவைத்து, ஏகபோகமாக விடுதலையை ஒப்படைக்கிறேன் என்றார். 89 ஆவது ஆண்டில் விடுதலை வருகிறது.

இயக்கம் உண்டாக்கியது மட்டுமல்லாமல், எதிரிகள் எப்படிப்பட்டவர்கள் என்று அதற்கேற்ற ஆயுதத்தை உண்டாக்கினார்.
தமிழ்நாட்டில் காங்கிரசில் உச்சபட்ச தலைவராக இருந்தவர் ஏன் விலகினார்? பல ஆண்டுகளாக சமூக நீதிக்காக 100க்கு 97 பேர்களுக்கு வெறும் 50 விழுக்காடு கேட்டார்.

ஒரு காலம் வரும் எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று பார்ப்பனர்கள் கேட்கும் காலம் வரும் என்றார் பெரியார்.
பார்ப்பன நடிகர் எஸ்.வி.சேகர் திடீரென்று பெரியார் திடலுக்கு வந்தார். பார்ப்பனர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக் கீடு வேண்டும் என்று கலைஞரிடம் கேட்டபோது ஆசிரியர் வீரமணியைப்போய்ப்பார் என்றார் என்று வந்தபோது, நீதிக்கட்சி ஆட்சியில் 15 விழுக்காடு இருந்தது, அப்போது இடஒதுக்கீடே கூடாது என்றீர்கள் இன்று 10 விழுக்காடு கேட்டு வருகிறீர்கள் என்றார். அப்படியா, அதுவிவரம் தெரியாது என்றார் அவர்.

50 விழுக்காடு கேட்டார் பெரியார்-இன்று தமிழ்நாட்டில் 69விழுக்காடு உள்ளது. 9ஆவது அட்டவணைப்பாதுகாப்பில் இருக்கிறது தமிழ்நாட்டில்தான்.

இடையில் திராவிட, அண்ணா, பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க 9ஆயிரம் வருமான உச்ச வரம்பு ஆணை கொண்டுவந்தார். எல்லா பிரச்சினைகளுக்கும் வகுப்பு-பாடம் எடுப்பவர் ஆசிரியர்.
அரசமைப்புச்சட்டம் உருவானபோதே இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல்குறித்த விவாதம் வந்தது. பொருளாதார அளவுகோல் நிலையானதல்ல,

அரசமைப்புச்சட்டத்தில் Socially and Educationally என்றுதான் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல மாநாடுகள் நடைபெற்றன. நம்முடைய மாநாடுகளில் கலை ஞர், தோழர் தா.பாண்டியன், பன்மொழிப்புலவர் அப்துல் லத்தீப், அனந்தநாயகி என பலர் கலந்துகொண்டனர்.

வருமான வரம்பு ஆணையை எரித்து சாம்பலை கோட்டைக்கு அனுப்பினோம். இப்படி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் பிரச்சாரம் செய்தார்.
அப்போதுதான் தோல்வியையே காணாதவர் என்று கூறப்பட்ட எம்.ஜி.ஆர். நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங் களில் தோல்வி அடைந்தார். தோல்விக்கான காரணத்தை அறிந்து அனைத்துக்கட்சிக்கூட்டத்தைக் கூட்டினார். இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது என்று ஆசிரியர் பாடம் எடுத்தார். அதன்பின்னர், பிற்படுத்தப்பட் டவர்களுக்கு 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடானது.
இன்றும் நீட் ஆபத்து உள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு என்று சமூக நீதிக்கு எதிரான நிலைகள் உள்ளன. தமிழர் தலைவர் தலை மையில் சமூக நீதிக்கு எதிரான சமூக அநீதியை வேரறுப்போம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன்
மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதால் அத்வானி ரத யாத்திரையை நடத்தினார். பீகாரில் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் அவரைக் கைது செய்தார்.

விபிசிங் ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாஜ்பாய் திரும்பப்பெற்று ஆட்சி கலைக்கப்பட்டது. காந்தியாரைக் கொன்றவர்கள் சோசலிசத்தை ஏற்காதவர்கள் அவர்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்வார், உலகில் சொந்த கொள்கையை சொல்லாத கட்சி பாஜக என்பார். ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி எல்லாம் செய்கிறார்கள். எதிர்க்கட்சியே இல்லாத நாடாளுமன்றம் என்று தினமணியே கருத்துப்படம் வெளியிடுகிறது. தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு கடுமையானது. வரலாறு காணாத மழை – 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளது.
முதலமைச்சர் பிரதமரை சந்திக்க டில்லி சென்றார். பிரதமர் கொடுத்த நேரம் இரவு 10 மணி. ரூ.21ஆயிரம் கோடியை முதலமைச்சர் கேட்டார். இதுவரை ஒரு பைசாகூட ஒன்றிய பாஜக அரசு கொடுக்கவில்லை. இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனத்துக்கான கண்மாய்கள் உடைந்து, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் மூழ்கியுள்ளன. தேர்தலுக்காக மட்டுமல்ல, நாம் நடத்துவது ஒரு தத்துவப்போராட்டம். தந்தைபெரியாரின் தத்துவம் என்றைக்கும் அழியாது. காரணம் அது விஞ்ஞானம்.

தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவு சிறப்புரை

அண்ணா சந்திரோதயம் நாடகத்தில் கொள்கையை சொல்லுகின்ற கதாபாத்திரத்தின் பெயர் துரைராஜ். இங்கு பேசிய திமுக தோழர் துரைராஜ்க்கு பாராட்டு. 18ஆண்டுகளுக்குமுன் இளைஞரணி சார்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குறித்த கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டேன்.

இந்த பகுதியில் அண்ணா சிலை திறப்பு விழாவில் திமுக பொறுப்பாளர்கள் பலரும் இந்திரா காந்தியை வழியனுப்புவதற் காக சென்றார்கள். அவர்கள் வரும் வரை பேசுவதென்று ஒன்றரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நீங்கள்தான் சிலையைத் திறக்க வேண்டும் என்றார்கள். அப்படி அண்ணா சிலையை திறந்துவைத்தேன். இந்த பகுதிக்கு உரியவன் நான். ஆகவே புதிதல்ல.
இந்த காலக்கட்டத்தில் பெரியார் கொள்கைப்போர் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு போடப்பட் டதைவிட, பெரியார் என்றதும் மிரளுகிறார்கள்.

தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் என்று தந்தைபெரியாரை அண்ணா கூறினார். மாலை நேர பொதுக்கூட்டங்கள்மூலம் தமிழ்நாட்டில் எழுச்சியை தந்தைபெரியார் உருவாக்கினார்.

தந்தைபெரியார் மறைவுற்ற 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் பெரியார் உலக அளவில் பேசப்படுகிறார்.
கல்வி, பதவிகள், தன்மானம் என பெற்ற உரிமைகள் நீடிக்க வேண்டுமானால், இழிவை ஒழிக்க பாடுபடுபவர்கள் வரவேண்டும்.
நீதிக்கட்சி தொடங்கி திராவிட மாடல் ஆட்சி சாதனை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தப் பணி தொடர வேண்டும். கருப்புச்சட்டைக்காரன், காவலுக்குக் கெட்டிக்காரன். திராவிட மாடல் ஆட்சி சாதனை நாடு முழுவதும் தொடர வேண்டும்.

No comments:

Post a Comment