“மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாக (திணீsலீவீஷீஸீ) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது” (1976 மே மாதம் காஞ்சிபுரத்திலே நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியது)
இதோடு நிறுத்தினாரா அந்த சங்கராச்சாரியார்? இதோ அதே சங்கராச்சாரியார் பேசுகின்றார்.
“பத்துப் பதினைந்து வருஷங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென் படுகிறது. ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணங்கள் என்ன? ஓரளவிற்கு நமக்கு கடவுள் பக்தி இருந்த போதும் பேராசையும், ஒழுக்கமின்மையும், சுயநலமும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன”
(காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கோயில் கும்பாபி ஷேகத்தில் கலந்துகொண்டு ஜெயேந்திர சரஸ்வதி பேசியதுதான் இது) (‘தினமணி’ 7.9.1976).
இவற்றை மனதிற் கொண்டால் திருப்பதியிலும், சபரிமலை யிலும் கூட்டம் கூடும் காரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.
சபரிமலை தேவஸ்தான நிர்வாகம், திருப்பதியைவிட எங்கள் சபரிமலைக்கு அதிகக் கூட்டம் கூடுகிறது என்பதற்கான யுக்தியில் ஈடுபடுகின்றனர். பத்தரிகைகளைப் பயன்படுத்தி பக்தர்களின் எண்ணிக்கையை ஊதிப் பெருக்கிக் காட்டு கின்றனர்.
திருப்பதி போல் கூட்டத்தைக் காண்பிக்க மக்களை அதிக நேரம் காத்திருக்கவைத்த கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைதான் மூச்சுத்திணறி இறந்துபோன சிறுமியின் மரணத்திற்கான காரணம் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் துவங்கி விட்டது அய்யப்பன் கோவில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. கோவில் திறக்கப்பட்ட நாள் முதலே சபரிமலையில் கூட்டம் அதிகரித்து வருவதாக அன்றாட செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன – இது ஒரு திட்டமிட்ட பிரச்சாரம்.
இந்த நிலையில் கூட்டத்தை அதிகம் காட்ட திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான நிர்வாகம் பின்பற்றும் வரிசையில் காத்திருக்கும் முறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. நடந்து வரும் மக்கள் சில கிலோமீட்டர் தூரம் உள்ள சரங்குத்தி அருகே இருந்தே வரிசைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி போன்றே கூட்டம் கூட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டு கோவிலுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் சபரிமலை அய்யப்பனை எத்தனை மணிநேரத்தில் பார்க்க முடியும் என்பது உள்ளிட்ட தகவல்களுடன் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மரக்கூட்டம் என்ற பகுதி முதல் சரங்குத்தி பகுதிகளில் உள்ள ஓய்வறைகளில் கூட்டம் கூட்டமாக தங்க வைக்கப்பட்டு பின்னர் மண்டப நடைப்பந்தலில் இருந்து படிப்படியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனையே ஊடகங்கள் மூலம் “பல கிலோமீட்டர் காத்திருக்கும் பக்தர்கள். 40 மணி நேரம் வரிசையில் நின்று…..” என்று எல்லாம் நாளிதழ்களில் செய்திகளாக வெளியிடச் செய்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து குழுவாக சென்றவர்களில் 10 வயது சிறுமி கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்
சபரிமலை அய்யப்பனை கும்பிடச் சென்ற பத்மாசிறீகூட்ட நெரிசலால் மூச்சு திணறி உயிரிழந்து விட்டதாக பெற்றோர் கதறியுள்ளனர்.
திருப்பதி போன்ற முறையில் மக்களை அடைத்து வைக்க வேண்டாம் என்றும், இதனால் கோவிலுக்குள் பெரும்கூட்ட நெரிசல் ஏற்படும் என்றும், காவல்துறையினர் எச்சரித்து திருப்பதி மாடலை ஏற்க மறுத்துள்ளனர். இதனை தேவசம் கண்டு கொள்ளாமல் “இதன் மூலம் மக்கள் மேலும் அதிகம் வருவார்கள்; வருமானம் அதிகம் பார்க்கலாம்” என்று காவல்துறை எச்சரிக்கையை மதிக்காமல் செயல்பட்டுள்ளது
இந்த மாதத்தில் மட்டும் இரண்டு சிறுமிகள், ஒரு நபர் என மூன்றுபேர் கூட்ட நெரிசலில் மரணமடைந்துள்ளனர். ஆகவே திருப்பதி மாடல் வரிசை திட்டத்தை நிறுத்தி, மக்களை காத்திருக்க வைக்காமல் உடனுக்கு உடன் அவர்கள் வீடுதிரும்ப கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கடவுள் என்று நம்பி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மரணிப்பது வேதனைக்குரியது. இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு? கடவுளா – தேவஸ்தானமா?
No comments:
Post a Comment