நாகை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் மாவட்ட மய்ய நூலகம் மயிலாடுதுறையில் அமைவதற்கான நிதி ஒதுக்கீடு அரசால் செய்யப்பட்டது.
மேற்படி நூலக கட்டடம் கட்டுவதற்கு 50 மீட்டர் - 50 மீட்டர் என்றளவில் சுமார் 26500 சதுர அடி இடம் மயிலாடுதுறை நகரில் பொதுநூலகத்துறைக்கு ஒதுக்க வேண்டி மாவட்ட நூலக பொறுப்பு அலுவலர் மூலம் மயிலாடு துறை நகராட்சி ஆணையருக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது.
நகரில் போதுமான இடம் இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட மய்ய நூலகம் அமைவது தாமதமாகி வந்ததோடு மேற்படி நிதி வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே தோன்றியது.
இதனை அறிந்த திராவிட முன்னேற்ற கழக உயர்மட்டக் குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் இரெ.செல்லதுரை ஆகியோர் கொண்ட குழு மாவட்ட நூலகத்திற்குத் தேவையான இடத்தை தேடிப்பெறுவதில் தொடர் முயற்சி எடுத்துவந்தது. இது தொடர்பாக பொது நூலகத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் ஆகியோரை நேரிலும், கடிதம் மூலமும் தொடர்ந்து சந்தித்து கோரிக்கை வைத்து வந்தது.
இன்று மீண்டும் மேற்படி குழுவினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை கேட்புக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் நகராட்சி ஆணை யரிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு மாவட்ட நூலகத்திற்குத் தேவையான இடத்தை ஏதேனும் ஒரு பகுதியில் உடன டியாக ஒதுக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை ரயிலடிப் பகுதியில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வரும் இடத்திற்கு இடது புறத்தில் தேவையான இடம் இன்று காலை அளவீடு செய்யப்பட்டது. விரைவில் நூலகத்துறைக்கு அந்த இடத்தை அளிப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் என நகராட்சி ஆணையர் கூறினார்.
No comments:
Post a Comment