பகுத்தறிவுப் பேராசான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது போல் 'யான் பெற்ற அறிவு பெறுக இத்தமிழ் உலகம்' என்று வாழ்வைச் செம்மை செய்யும் உண்மைகளால் வாழ்வியல் வழிகாட்டியாகிறார் ஆசிரியர்.
இவர் திராவிடர் கழகத் தலைவராயிற்றே என்று சற்றே தள்ளிச் செல்கிறவர்களையும் தழுவிக்கொண்டு, அன்போடு அறிவூட்டுகின்ற ஆசிரியர் மீது எனக்கு எப்போதும் மதிப்பும் வியப்பும் உண்டு.
மதிப்பு ஏனெனில் - இழந்த பெரியாரைச் சொல்லாலும் செயலாலும் தொடர்ச்சியான உழைப்பாலும் பாடுபட்டு ஈடுகட்டும் அஞ்சாத பெருவாழ்வு.
வியப்பு ஏனெனில் - அவரது ஓயாத் தொண்டு; உற்சாக உழைப்பு; அன்றாட விறுவிறுப்பு; அணில் வாலின் சுறுசுறுப்பு; எதற்கும் ஆதாரம் காட்டும் அகன்ற அறிவு; நீண்டு கொண்டே வரும் நினைவாற்றல்; தன் உடலை வென்று ஓடிக் கொண்டேயிருக்கும் ஓட்டம்; தன் மனத்தை வென்று களத்தில் நிற்கும் வீரம்; வீழாத பகுத்தறிவு; தாழாத தன்மானம். இவர் ஒரு தீராத திராவிடர் நூலகம்.
இந்தப் பகுத்தறிவுப் பெருமகனைப் பாராட்டிப் பாராட்டி நாம் பாதுகாக்க வேண்டும். ஆசிரியர் கி.வீரமணி வாராது போல் வந்த மாமணி.
மறைந்த பிறகும் அண்ணாவாய் வாழ்வதற்குக் கலைஞர் கிடைத்தார்; பெரியாராய் வாழ்வதற்கு ஆசிரியர் கி.வீரமணி கிடைத்தார். இந்த இரண்டு பெருமக்களும் பெரியார் - அண்ணா நீட்சிக்குக் கிடைத்த பெருங்கொடைகள். இந்த இருபெரும் தலைவர்களும் தத்தம் தலைவர்களை நிரப்பப் பிறந்தவர்கள்.
ஆசிரியர் கி.வீரமணி இல்லையென்றால் பெரியார் இவ்வளவு நீளமாக நினைக்கப்பட்டிருப்பாரா என்கிற கேள்விதான் கி.வீரமணி அவர்களின் கீர்த்தி.
திராவிடப் பேரியக்கப் பெருவரலாற்றில் ஒரு பங்குதாரராகவும், பல நேரங்களில் பாத்திரமாகவும் விளங்குகிறார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரைத் தட்டிப் பார்த்தால் திராவிட இயக்கத்தின் வரலாற்று ஓசை கேட்கும். சற்றொப்ப ஒரு நூற்றாண்டுச் சம்பவங்கள் உருண்டோடி வரும். அவர் தாங்கும் தழும்புகளையும், வரலாற்று வடுக்களையும், ஆறாத காயங்களையும், அணையாத நெருப்பையும் அவரது கருப்புச் சட்டை காக்கிறது.
அவர் நீண்டகாலம் நின்று நிலவ வேண்டும். பகுத்தறிவும் தன்மானமும் அவருக்கு இரு கண்கள். இயக்கம் அவரது உடல்; பெரியார் அவர் உயிர்.
- கவிஞர் வைரமுத்து
No comments:
Post a Comment