கடந்த 48 மணி நேரமாக சென்னை - அதைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மற்றும் தாம்பரம் நகரப் பகுதிகளில் மிக்ஜாம் புயலும் அதனையொட்டி கடும் மழையும் மக்களை உண்டு - இல்லை என்று ஒரு கை பார்த்து விட்டது.
47 ஆண்டுகளுக்குப்பின் இப்படி ஓர் இயற்கையின் கோரத் தாக்குதல் - மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் திணறல்!
சென்னை மாநகரம் மழை வெள்ளத்தில் தெப்பமாக மிதக்கிறதோ என்று நினைக்கும் வகையில் ஒரு தத்தளிப்பு.
முதல் மாடி வரை - இடுப்பு வரை தண்ணீர் என்றால், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களின் நிலையைச் சொல்லத்தான் வேண்டுமோ!
இயற்கையின் இந்தக் கோணல் புத்தியிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரே திகைப்பு!
ஆனாலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட போர்க்கால அடிப்படையிலான - புயலை விஞ்சிய வேகமான நிவாரணப் பணிகள் - மக்களைப் பெரு மூச்சிலிருந்தும், அச்சத்திலிருந்தும் காப்பாற்றியது என்று சொன்னால் மிகையாகாது.
சென்னை மாநகராட்சிப் பணியாளர்களும், மின்வாரியப் பணியாளர்களும், காவல்துறையினரும், பேரிடர் மேலாண்மைத் துறை, ஊடகத்துறை இன்னபிற துறைகளைச் சார்ந்தவர்களும் கொட்டும் மழை - சூறாவளிக் காற்றுக்கிடையே தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்கள் உயிரைக் காப்பாற்றிய மாண்பு அசாதாரணமானது.
முதல் அமைச்சரின் மேற்பார்வையில் அமைச்சர்கள் களம் இறக்கப்பட்டனர். அவரவர்களுக்கென்று பகுதிகள் ஒதுக்கப் பட்டன. அய்.ஏ.எஸ்., அதிகாரிகளும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தங்கள் கடமையை மேற் கொண்டனர்.
வீட்டிற்குள் தண்ணீர்ப் புகுந்து தத்தளித்த குடும்பத்தினரை ரப்பர் படகுகள் மூலம், நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்தனர். முதியவர்களைத் தூக்கி வந்தனர்.
ஆங்காங்கே நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தங்கும் இடம், உண்ண உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்த கொடுக்கப்பட்டன.
மாடிகளில் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்குப் பொட் டலங்கள் மூலம் உணவு வழங்கிடும் ஏற்பாடு சாலச் சிறந்தது.
வாகனங்கள் ஆங்காங்கே சிக்கிக் கொண்ட நிலையில் அவற்றை மீட்டுத் தரும் பணியிலும் ஈடுபட்டனர்.
தீயணைப்புத் துறையினரின் தீவிரப் பணிகளும் முக்கியமானவை.
ஆம்புலன்ஸ்களும் பல பகுதிகளில் தயாராக இருந்தன. இதற்கு முன்பு கூட மழை வெள்ளம், புயல் முதலியவற்றால் மக்கள் தத்தளித்ததுண்டு. இந்த அளவு நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்றதில்லை.
இதில் குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால், இவ் வளவுக் கடுமையான இயற்கையின் சீற்றத்திலும், உயிர்ப் பலி பெரிய அளவில் இல்லை என்பது அடிக்கோடிட்டுச் சுட்டிக்காட்டத் தகுந்ததாகும்.
பல இடங்களில் மின் துண்டிப்பு நடந்தது என் றால் - அதற்குக் காரணம் மழை காரணமாக மின் கசிவால் விபத்துகள் நடந்து விடக் கூடாது என்கிற தொலைநோக்குதான்.
வீதிகளில், சாலைகளில் சுரங்கப் பாதைகளில் கரை புரண்ட வெள்ளத்தை மோட்டார்கள் மூலம் அவ்வப்போது வெளியேற்றிய பாங்கு சிறப்பானது.
இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட அசாதாரண நிலையிலிருந்து மக்களை மீட்க வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் - மீட்புப் பணியில் அனுபவப்பட்டவர்களும் மின்துறை ஊழியர்களும் ஆயிரக்கணக்கில் வரவழைக் கப்பட்டனர்.
இயந்திரங்களும் - இயந்திரங்களாகவே மாறி பாடுபட்ட மனிதர்களின் உழைப்பும் - மகத்தானவை.
ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிவந்த நிலையில், நீரை வெளி யேற்றியே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; அதன் காரணமாக மக்கள் வாழும் பகுதிகளிலும், பயணிக்கும் பாதைகளிலும் சூழ்ந்த வெள்ளத்தை மித மிஞ்சாமல் வெளியேற்றிய பாங்கு போற்றத் தக்கது!
ஒரு நெருக்கடியிலிருந்து மக்களை எப்படி மீட்பது என்பதை தமிழ்நாடு அரசிடமிருந்து மற்ற மாநிலத்தவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக இருந்தது என்று சொன்னால், அது மிகையா காது. பழுதுபட்ட சாலைகளைச் சரி பார்க்கும் பணிகள், இப்பொ ழுதே தொடங்கப்பட்டுள்ளது ஆச்சரியமானதே!
பேரிடர் ஏற்படும் போதெல்லாம் உரிய வகையில் ஒன்றிய அரசு உதவிக் கரத்தை நீட்ட வேண்டும். அது குறித்தும் நமது முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசுக்கு உரிய முறையில் கோரிக்கையை அதிகாரப் பூர்வமாக வைத்துள்ளார்.
இதிலும் அரசியல் பார்வையைக் காட்டாமல், ஒன்றிய அரசு செய்ய வேண்டிய அடிப்படைக் கடமையைச் செய்யும் என்று எதிர்பார்ப்போமாக!
முதலமைச்சருக்கும், அமைச்சர் பெரு மக்களுக்கும் அதிகாரிகளுக்கும், களத்தில் இறங்கித் தோள் கொடுத்த பல துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும் - நன்றியும் உரித்தாகட்டும்!
மழை புயல் வீசும் பருவத்திற்கு முன்னதாகவே தொலை நோக்கோடு எத்தகைய பணிகளை இனிமேல் மேற்கொள்ள வேண்டும் என்ற பாடத்தையும் கற்க வேண்டியிருந்தால், அதனையும் உள்வாங்கிக் கொண்டு நமது அரசு எதிர் காலத்தில் செயல்படும் என்பதில் அய்யமில்லை.
No comments:
Post a Comment