பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை, டிச.8 ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் சந்திப்பு நடைபெற்றது. பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆலோசனை மேற்கொள்ள ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (7.12.2023) சென்னைக்கு வருகை தந்தார். ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சருடன், ஒன்றிய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய லாளர் கமல் கிஷோர் ஆகியோரும் வருகை தந்தனர்.
மழை வெள்ளச் சேதங்கள் குறித்தும்,
ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் விளக்கம்!
ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்று, மழை வெள்ளச் சேதங் கள் குறித்தும், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் எடுத் துரைத்தனர்.
பின்னர், சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வங்கக் கடலில் உருவாகிய புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள் ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் இராணிப் பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, பாதிப்பிற்குள்ளாகக் கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி, அவர்களை நிவாரண மய்யங்களில் தங்க வைத்திடவும், நிவாரண முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சார வசதி உள்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்திடவும், மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க மின்சார வாரியத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல் படுவதை உறுதி செய்திடவும், பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும், மாவட்ட நிருவாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தப் பட்டது.
வரலாறு காணாத வகையில்
பெய்த கனமழை!
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட் டங்களில் மொத்தம் 109.41 செ. மீட்டர் பெய்து, மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது குறித்தும், குறிப்பாக வரலாறு காணாத வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் 32 செ.மீ., சென்னை – பெருங்குடியில் 29 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது குறித்தும் தெரிவிக் கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெரு மக்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வை யில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் விரைவாகச் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் ஒன்றிய பாது காப்புத் துறை அமைச்சர் அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது.
இந்தப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தேவை யான நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த மாநிலத்தின் 20 அமைச்சர்களையும், 50-க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும், இந்திய காவல் பணி அலுவலர்களையும் நியமித்து, அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வரும் விவரங்களும் எடுத்துரைக்கப்பட்டது.
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க
மருத்துவ முகாம்கள்
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வரு வதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட்டு வருவதையும், மழைக் காலங்களில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருவதும் தெரிவிக்கப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து விரைவாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவது குறித்தும் விளக்கப்பட்டது.
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட் டங்களில், சாலைகள், பாலங்கள், பொதுக் கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந் துள்ளது குறித்தும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சிறு வியாபாரி கள் மற்றும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதா ரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் விளக்க மாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இடைக்கால நிவாரணத் தொகையை
விரைவில் வழங்க கோரிக்கை!
மேலும், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது குறித்தும் தெரி வித்து, புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசின் கோரிக்கையான இடைக்கால நிவாரணத் தொகையை விரைவில் வழங்கிட வேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட உடனடியாக சென்னைக்கு வருகை தந்து வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டமைக்காக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
கோரிக்கை மனு ஒன்றிய அமைச்சரிடம் அளிப்பு!
இக்கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக் கால நிதியுதவி கோரும் கோரிக்கை மனுவினை (Memorandum) ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர் களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது:
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் இன்று (7.12.2023) ஆய்வு செய்துள்ளார்கள்.
இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சென்னையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெய்த பெருமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு, சென்னை நகரமும், மக்களும் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்த பெரும் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
அனைவரும் இணைந்து
களப்பணி ஆற்றி வருகின்றோம்
அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து களப்பணி ஆற்றி வருகின் றோம்.
தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளால் இத்தகைய பெருமழையிலும், உயிரிழப்பு களும், பொருட்சேதங்களும் பெருமளவில் தவிர்க்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் போன்ற பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 5 ஆயி ரத்து 60 கோடி ரூபாயினை வழங்கிடுமாறு பிரதமர் மோடி அவர்களுக்கு ஏற்கெனவே நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.
இழப்பீடுகளை மதிப்பீடு செய்திட
ஒன்றிய அரசின் குழு விரைவில் வருகை!
நமது கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றினையும் ஒன்றிய அமைச்சர் அவர்களிடம் அளித் துள்ளேன். இழப்பீடுகளை மதிப்பீடு செய்திட ஒன்றிய அரசின் குழு ஒன்றும் விரைவில் தமிழ்நாடு வர உள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்தக் கோரிக்கைகளை பரி சீலித்து, உரிய நிதி உதவியை ஒன்றிய அரசு விரைவில் வழங்கிடும் என ஒன்றிய அமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.
நிவாரணப் பணிகளை முழுவீச்சில் தொடர்ந்து மேற்கொண்டு, அனைத்துப் பகுதிகளையும் இயல்பு நிலைக்கு விரைவில் கொண்டுவரத் தேவையான நட வடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறினார்.
இக்கூட்டத்தில், ஒன்றிய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் கமல் கிஷோர், அரசு துறைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், கடற்படை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment