கேள்வி 1: நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும் மற்றும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்‘பிராமணர்’ சமூகத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடு துறையில் நடைபெற்ற பார்ப்பனர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே?
– இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்
பதில் 1: பார்ப்பனர் சங்கத்தவரின் இந்தத் தீர்மானம் ஒன்றே போதும்; நுழைவுத் தேர்வை ரத்து செய்தால்தான் மருத்துவத் துறையில் உண்மையான சமூகநீதி ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்களுக்கு – ‘அனிதா’க்களுக்கு கிடைக்கும் என்பதற்கான ஆதாரம்! அவாள் என்றும் ‘அவாளாகவே’ இருக்கிறார்கள்; நம்மவர்கள்தான் கண்டனத்துக்குரிய அண்ணாமலைகளாகவும், தமிழிசைகளாகவும் இருக்கும் வேதனையும் வெட்கமும் நிறைந்த நிலை உள்ளது!
—-
கேள்வி 2: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.10,400 கொடுக்கவேண்டும்; ஆனால், ரூ.6000 தான் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது என்று இணைய தளங்களில் செய்தி வெளியாகியுள்ளதே?
– கே.சங்கர், காஞ்சிபுரம்
பதில் 2: தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒன்றிய அரசின் நிதி வராமல், நமக்கு வர வேண்டிய ரூ.450 கோடி மட்டும் வந்தது. நிதி நெருக்கடியிலும் முதல்அமைச்சர் இப்படி தந்துள்ளதற்கு நன்றி கூற வேண்டும்! ஆனால், வக்கணை பேசி, குறுக்குச்சால் விடுவதற்கான நேரமல்ல இது!
—-
கேள்வி 3: விவாதமின்றி தங்களுக்குச் சாதகமான பல மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து இடைநீக்கமா?
– பா.கண்மணி, வேலூர்
பதில் 3: அதிலென்ன சந்தேகம்; பல எதிர்க்கட்சித் தலைவர்களே தெளிவாக அதை அம்பலப்படுத்தி விட்டார்களே!
கேள்வி 4: மேனாள் அமைச்சர் க.பொன்முடியைத் தொடர்ந்து இன்னும் சில அமைச்சர்கள் சிறைக்குப் போவார்கள் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே?
– க.மணி, பெங்களூரு
பதில் 4: என்ன… பா.ஜ.க. தலைவரும், நீதிமன்றமும் கூட்டணி ஏதாவது அமைத்துவிட்டது போல பேசுகிறவர்கள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். மக்கள் மன்றம் உரிய தீர்ப்பை, உரிய நேரத்தில் வழங்கும்!
—-
கேள்வி 5: தமிழ்நாடு அரசின் மழை, புயல் நிவாரணப் பணிகளை ஒன்றியக் குழுவினர் பாராட்டுகிறார்கள்; ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சிலர் குறை சொல்கிறார்களே?
– மு.சந்தீப், தருமபுரி
பதில் 5: நல்ல உள்ளம் படைத்த நடுநிலையாளர்கள் பாராட்டுகிறார்கள். கள்ள சிந்தனையாளர்கள் பள்ள உள்ளம் பெற்றுள்ள உள்ளத்தவர்கள் எரிச்சலில் உளறுகிறார்கள்!
—-
கேள்வி 6: மீண்டும் ராகுல் காந்தியின் எம்.பி, பதவியைப் பறிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறதா?
– மு.ஆனந்த், கள்ளக்குறிச்சி
பதில் 6: பதில் சொல்ல முடியாதவர்கள் இப்படி ஒரு சூழ்ச்சிப் பொறி வைக்க முயலுகிறார்கள். ஆனால், அது எளிதில் வெற்றி பெறாது!
—-
கேள்வி 7: 5 மாநில தேர்தலின்போது இல்லாத ஒருங்கிணைப்பு – வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலாவது இந்தியா கூட்டணியில் ஏற்படுமா?
– தே.ஏழுமலை, வந்தவாசி
பதில் 7: நிச்சயமாக – எங்கே தவறு நடந்தது! எங்கே ஓட்டைகள் என்பதை உணர்ந்துவிட்டனர் பலரும்! எனவே, அறிஞர் அண்ணா சொன்ன, “விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை, கெட்டுப் போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை” என்ற தத்துவம் அங்கே நன்கு பதிய ஆரம்பித்துவிட்டது.
—-
கேள்வி 8: நாடாளுமன்றத்தில் பெரியாரின் பெயரைக் கேட்டாலே, பா.ஜ.க.வினர் அலறுவது – அஞ்சுவது ஏன்?
– மு.முக்தர், சென்னை
பதில் 8: சிங்கத்தின் கர்ச்சனை கேட்டு சிறு நரிகள் அலறாமல் வேறு என்ன செய்யும்! உடலால் மறைந்த பெரியார் 50 ஆண்டுகளுக்குப் பின்பும் மறையவில்லை; வாழ்கிறார்; பேராயுதமாக – போராயுதமாக வாழ்கிறார் என்பது புரிகிறதல்லவா?
—-
கேள்வி 9: அத்துமீறி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த இளைஞர்களின் செயல்களை நீங்கள் எந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறீர்கள்?
– பெ.செல்வம், கடையம்
பதில் 9: வேலை கிட்டா இளைஞர்கள் இவ்வாறு திசைமாறிய பறவைகளாக உள்ளனர் என்பதும், அவர்களைத் தண்டிப்பதை விட, அவர்கள் துயரங்களைக் களைவதே அறிவார்ந்த அணுகுமுறையாக அமையும்.
—
கேள்வி 10: இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கேவை முன்னிறுத்தலாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூறியதை, மல்லிகார்ஜூன கார்கே ஏற்க மறுத்திருக்கிறாரே?
– கு.ரமேஷ், மும்பை
பதில் 10: மறுக்கவில்லை; பிரதமர் வேட்பாளரை அறிவிக்க இது உகந்த நேரமல்ல. அரசியல் முதிர்ச்சியை முத்திரை இட்டுள்ளார்!
No comments:
Post a Comment