பாணன்
முற்போக்குச் சிந்தனை கொண்டவரை அன்று விரட்டியது பா.ஜ.க. தொலை நோக்கோடு அரவணைத்த காங்கிரசுக்கு வெற்றியை தேடித்தந்தார் ரேவந்த் ரெட்டி.
தெலங்கானா மாநிலம் 2014ஆம் ஆண்டு உருவானதில் இருந்தே அங்கு ஆட்சி நடத்திவந்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை (பாரத் ராஷ்ட்ரிய சமிதி) இப்போது காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வீழ்த்தியுள்ளது.
ஹிந்தி பேசும் மாநிலங்களில் தோல்வியை தழுவிய காங்கிரசுக்கு தெலங்கானாவின் வெற்றி தெம்பைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமானவர் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி
அவர், தெலங்கானாவின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
தெலங்கானாவின் தந்தை என்று கருதப்பட்ட சந்திரசேகர ராவை வீழ்த்தி 15 ஆண்டுகளுக்கு முன்பே முடங்கிப்போன காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அவர் எப்படி அழைத்துச் சென்றார்?
யார் இந்த ரேவந்த் ரெட்டி?
பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் மகபூப்நகர் மாவட்டத்தில் 1969-ஆம் ஆண்டு பிறந்த அனுமுலா ரேவந்த் ரெட்டி, மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடத் துவங்கினார்.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ரெட்டி, மாணவப் பருவத்தில் சமூகப் பணிகளில் தீவிரம் காட்டவே அப்போதைய அவரது நட்புவட்டங்கள் அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பில் சேரக் கோரிக்கை விடுத்தனர். அன்றைய காலகட்டத்தில் மதவாத அரசியல் குறித்த சரியான பார்வையில்லாத காரணத்தால் ஒரு அமைப்பில் சேர்ந்தால் தன்னுடைய பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற ஆவலில் அவர் அந்த அமைப்பில் சேர்ந்தார். சேர்ந்த சில ஆண்டுகளிலேயே அந்த அமைப்பின் மதவாத முகம் புரிய ஆரம்பித்தது. மேலும் அவர் அந்த மாணவர் அமைப்பின் கூட்டத்தில் நாம் மக்களுக்காக இயங்குகிறோம் – இங்கே மதவாதம் எதற்கு? மாணவர்களான நமக்கு மதவாதம் தேவையில்லை – நம் எதிர்காலம் குறித்தும் மக்களின் தேவைகள் குறித்தும் நாம் பேசவேண்டும் என்று கூறினார். இதனால் உள்ளடிவேலைகள் நடக்கத்துவங்கியது,
அதே நேரத்தில் அவர் அந்த மாணவர் அமைப்பின் பிரபலமான முகமாக மாறிவிட்டார். ஹிந்துத்துவ என்ற பிற்போக்கு சிந்தனை கொண்ட அமைப்பில் முற்போக்குச் சிந்தனைகொண்ட ஒருவர் இருப்பதையும் அவர் வளர்ந்து வருவதையும் கண்ட அம்மாநில பாஜக அவர் மீது பல்வேறு பழிகளைச்சுமத்தியது, இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் ஏபிவிபியில் இருந்து அவர் விலகினார். இருப்பினும் தன்னுடைய அரசியல் பணிக்கான களமாக அரசியல் கட்சியை தேர்ந்தெடுக்க நினைத்த போது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி அவரை அழைத்துக்கொண்டது.
தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக, 2009-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் கோடங்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்தலில் வெற்றி பெற்றார். இவரின் அரசியல் வளர்ச்சியை பா.ஜ.க. தீவிரமாகக் கண்காணித்து அவரை அரசியல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டது, காரணம் எதிர்காலத்தில் இம்மாநிலத்தில் இவர் தங்களுக்கு பெரும் போட்டியாளராக வருவார் என்ற ஒரு அச்சம்தான் – இதை பேட்டி ஒன்றில் அம்மாநில பா.ஜ.க. பிரமுகர்களே கூறியுள்ளனர்.
இருப்பினும் ஆந்திர அரசியலில் அவரின் வளர்ச்சி வேகமெடுக்கத் துவங்கியது. தெலங்கான மாநிலம் உருவான பிறகு நடந்த தேர்தலில் 2014-ஆம் ஆண்டு தெலங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பா.ஜ.க. தனது தலைவர்களை முடக்கிப்போட நடத்திய அதே ஸ்டிங் ஆபரேசன் என்னும் ரகசிய வீடியோ ஆயுதத்தை கையில் எடுத்தது.
2015, தெலங்கானா சட்டப்பேரவை மேல்சபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க நியமன சட்டமன்ற உறுப்பினராக எல்விஸ் ஸ்டீபன்சனுக்கு ரேவந்த் ரெட்டி லஞ்சம் கொடுத்ததாக ஒரு ‘ஸ்டிங்-ஆபரேஷன்’ செய்யப்பட்டது. இதை திட்டமிட்டு நடத்தியது பா.ஜ.க.
அந்த வீடியோ வெளியாகி சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அந்த ஆண்டு மே மாத இறுதியில் ரேவந்த் ரெட்டியை ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்தது. அவர்மேல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன்னை பா.ஜ.க.வினர் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்ட அவர் தகுந்த சான்றுகளோடு வழக்காடினார் இதனால் 2015-ஆம் ஆண்டு, ஜூலை 1-ஆம் தேதி ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட பிறகு பா.ஜ.க.வும் தெலுங்குதேசமும் சேர்ந்தே தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப்போட திட்டமிட்டார்கள் என்பதை தெரிந்துகொண்டார். இதனால் அவர் தெலுங்கு தேச உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். மேலும் தெலுங்குதேசம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் காங்கிரஸ் நெருக்கடியான காலகட்டத்தில் ஆதரவாக இருந்தது. இதன் காரணமாக அவர் 2017 ஆம்,ஆண்டு ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மறுபக்கம் காங்கிரஸில் ரேவந்த் ரெட்டியின் வளர்ச்சி அதிகரித்துவருவதையும் அதை நீண்ட காலம் ஆக்கினால் காங்கிரஸ் போட்டியாக வந்துவிடும் என்ற காரணத்தால் ஓராண்டிற்கு முன்பாக சட்டமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்திவிட்டார் கே.சி.ஆர். இதனால் தேர்தல் பணிகளை உடனடியாக செய்யமுடியாத காரணத்தால் அந்த தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவைச்சந்தித்தது
இருப்பினும் 2019 மக்களவைத் தேர்தலில் மாநிலத்திலேயே மிகப்பெரிய தொகுதியான மல்காஜ்கிரியில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. அதில் அவர் 10,919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021-ஆம் ஆண்டில், காங்கிரஸ் அவரை மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுத்து, மிகப்பெரும் பொறுப்பைக் கொடுத்தது. தெலங்கானா காங்கிரஸ் கட்சியில் தலைவர் பொறுப்பை ஏற்று, சிக்கல்களைச் சமாளிக்க முயன்ற அவர், கட்சித் தலைமைக்கு அருகில் சென்றார்.
கருநாடகாவுக்குப் பிறகு தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் தலைமை அதிக கவனம் செலுத்தியதால் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேரா மாநிலம் முழுவதும் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இதன் போது ரேவந்த் ரெட்டி அவர்களுடன் தங்கி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் பங்கேற்ற ரேவந்த் ரெட்டி, ராகுல்காந்தியின் நட்பைப் பெற்றார். இந்தத் தேர்தலில், காமாரெட்டி தொகுதியில் அவர் தற்போதைய முதலமைச்சர் கே.சி.ஆரை எதிர்த்துப் போட்டியிட்டார். 2021-ஆம் ஆண்டில், காங்கிரஸ் அவரை மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. மேலும் ராகுலின் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு என்ற முடிவின் படி ரேவந்த் ரெட்டிக்கு பல அதிகாரங்கள் கொடுக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர்களிடையே அவர் மிகப் பிரபலமாக இருந்தார். பிரச்சாரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அவரோடு இருந்தனர்.
இந்நிலையில் அடுத்த தெலங்கானா முதலமைச்சராக அவரது பெயர் அறிவிக்கப்படுவதற்கு அறிகுறியாக. ரெட்டியின் சுவரொட்டிகளில் அவர் தெலங்கானா காங்கிரஸின் ‘ஜோதியை முன்னெடுத்துச் செல்பவர்’ என்று வர்ணிக்கப்பட்டார்.
இந்த வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது?
தேர்தலுக்கு முன்னர் ஊடகத்திற்கு அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், தான் 20 ஆண்டுகளாக அரசியல் செய்து வருவதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் இருந்ததால், பொது மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டதாகவும் கூறினார்.
ரேவந்த் ரெட்டி மிகப் பெரிய ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்தார். காங்கிரஸின் வேர்களை வலுப்படுத்திய ரேவந்த் ரெட்டி – இந்தச்செயல்களால் அவர் மக்களிடையே எளிதில் சென்று சேர்ந்தார்.
“அப்போதுதான் காங்கிரஸின் வேர்கள் அப்படியே இருக்கின்றன என்பது புரிந்தது. கருநாடக மாநிலத்தில் காங்கிரசிற்குக் கிடைத்த வெற்றியும் குறிப்பிடத்தக்க அளவில் அவர்களுக்கு ஊக்கம் அளித்தது. டில்லித் தலைமையும் மாநிலத்தில் கட்சியை மறு கட்டமைப்புச் செய்தது. உள்ளூரில் இருந்த அரசியல் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது,” என்றார். முக்கியமாக தொழிலாளர் அமைப்பில் அவர் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அரசின் கொள்கைக்கு எதிராக முழங்கியதால் அவரை தொழிற்சங்கத்தினர் மத்தியில் பிரபலமாக்கியது.
இந்தத் தேர்தலிலும் பி.ஆர்.எஸ் தலைவரான கே.சி.ஆரை எதிர்த்து ரேவந்த் ரெட்டி போட்டியிட்டதற்குக் காரணம், தன்னை அவருக்குப் போட்டியாக உணர வைக்க வேண்டும் என்பதுதான். காரணம் தெலங்கானா மேனாள் முதலமைச்சர் சந்திர சேகரராவ், ரேவந்த் ரெட்டியை தான் ஒரு அரசியல் எதிரியாகவே கருதவில்லை, காட்டாற்று வெள்ளத்திற்கு அருகில் ஓடும் சிற்றோடை என்று குறிப்பிட்டிருந்தார்,
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு பின்னடைவைச் சந்தித்து இனிமேல் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு இடமில்லை என்று ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கூறியபோதும், மாநிலத்தில் செயல்பாடுகள் கிட்டத்தட்ட முடங்கிய நிலையில் இருந்த காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டி குறுகிய காலத்திலேயே ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு கொண்டு வந்துவிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கருநாடக முதலமைச்சர் சித்தராமையா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரிசையில் முற்போக்கு சிந்தனை கொண்ட ரேவந்த் ரெட்டியும் சேர்ந்ததால் தென் இந்தியாவில் இனி ஹிந்துத்துவம் வேரோடு ஒழிக்கப்பட்டுவிடும் என்பது மட்டும் உண்மை.
No comments:
Post a Comment