பூண்டுநின்ற போர்க்களங்கள் பொன்னெழுத்து வரலாறு!
பொய்களுக்கு இவர்தருவார் சாட்டையடி பலநூறு!!
மாண்டாரா பெரியாரும்? வாழ்கின்றார் என்பதனால்
வாழ்கின்றோம் நாமென்றே வரைந்துவைப்பார் நாள்தோறும்!
யாண்டுகண்டோம் இவரைப்போல் நாளெல்லாம் விழிப்போடு
தமிழினத்தைத் தாங்கிநிற்பார் தாய்மடியின் தவிப்போடு?
வேண்டாதார் யாருண்டு? வீரமணி அய்யாதான்
வெளிச்சத்தைப் பாய்ச்சுவாரே விடுதலையால் பாராண்டு!!
நீண்டபல உரைதந்து நிகழ்காலத் தலைமுறைக்கு
நேற்றுவரை நிகழ்ந்தவற்றை நெஞ்சினிலே பதியவைத்தே
தோண்டவரும் தங்கம்போல் தொடர்ந்தெழுதி வாழ்வியலைத்
தொண்டறமே வாழ்வென்று சொல்லிவைப்பார் இவர்தாமே!
சீண்டவரும் பகைவர்களைச் செருமுனையில் சந்திப்பார்!
திராவிடத்தார் நலமொன்றே செம்மனத்தால் சிந்திப்பார்!!
காண்பாரைக் கைகுலுக்கும் கனிமுகத்துக் காந்தந்தான்!
காலத்தாய் வாழ்த்தொலிக்க காண்பாரே நூறுந்தான்!!
ஆண்டுகளை நொடியாக ஆக்கிவிடும் கடிகாரம்!
அய்யாசொல் தலைசுமக்க வேண்டிவந்த பெருந்தாகம்!!
தீண்டவரும் ஆரியத்தின் தீநாக்கை அறுத்தெறியத்
திக்கெட்டும் திராவிடத்தைத் தீட்டிவைக்கும் சாணைக்கல்!!
பாண்டிசேர சோழரெல்லாம் பண்டிழந்த மானத்தைப்
பண்டுவத்தால் மீட்டெடுக்கும் பகலவனின் மதியாற்றல்!!
மீண்டுகண்டோம் இவரால்தான் திராவிடத்தின் மறுமலர்ச்சி!
மேதினியில் என்றென்றும் பெரியாரின் அரசாட்சி!!
- சுப.முருகானந்தம், மாநிலப் பொதுச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். தமிழ்நாடு.
No comments:
Post a Comment