மோடியின் அலங்கோல நடவடிக்கைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 22, 2023

மோடியின் அலங்கோல நடவடிக்கைகள்

தென் மேற்கு மும்பை – முக்கியமாக திரைத்துறை மற்றும் வைர தங்க நகை வணிகத்தில் மிகவும் சிறந்து விளங்கும் பகுதியாகும். ஆங்கிலேயர் காலம் தொட்டே வைரக் கற்கள் பட்டை தீட்டவும், ஆபரணங்களாக செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலைச் செய்து வரும் பகுதி. 1990களில் வைர வணிகத்திற்கு என்றே பாந்திரா குர்லா வணிக வளாகம் உருவாக்கப்பட்டது. அந்த வணிக வளாகம் உருவான பிறகு அதைச்சுற்றி பல்வேறு தொழில் நிறுவனங்கள் உருவாகி, இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வணிகப் பகுதியாக மும்பையின் பாந்திரா குர்லா வளாகம் உருவானது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ‘டிஜிட்டல் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ போன்ற பல திட்டங்களை இந்த பாந்திரா குர்லா வளாகத்தில் இருந்துதான் துவக்கி வைத்தார். முக்கியமாக பாந்திரா குர்லா வளாகத்தில் ‘மேக் இன் இந்தியா’ கண்காட்சி 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து பல பெரிய தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. வைரங்களை பட்டை தீட்டும் தொழிலுக்கு சூரத் சிறந்த நகரமாக திகழ்ந்த போதிலும், மும்பை அதனை ஒருங்கிணைத்து ஏற்றுமதிக்கான முக்கிய தளமாக விளங்கியது. இந்தத் தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக உள்ளது. அதே போல் மாநிலத்திற்கு வரிவருவாயில் அதிகபங்கும் வகிக்கிறது.
20 விழுக்காடு பட்டைதீட்டும் பணிகள் செய்து வந்த சூரத் நகரில் மும்பையில் உள்ள அனைத்தும் இடம் பெறும் விதமாக ஒரே இடத்தில் மிகப் பெரிய வணிக வளாகத்தை மோடி 17.12.2023 அன்று திறந்து வைத்தார்.

சூரத் வைர வணிக வளாகத்தின் வருகையால் மகாராட்டிரா மற்றும் உடுப்பி, மங்களூர் போன்ற கருநாடக நகரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஒன்றியத்தில் இருந்து மிகப் பெரிய வருமானம் பரவலாக கிடைக்கும் தொழிலை ஒரு மாநிலத்தின் ஒரு நகரத்திற்கு மட்டுமே நகர்த்துவதால் ஏற்படும் பேரிழப்பைப் பற்றி மோடி கவலைப்படுவதாக தெரியவில்லை. வைர வர்த்தகம் என்றாலே மும்பை தான். அந்நகரில் இருந்த பந்த்ரா குர்லா காம்ப்ளக்சில்தான் வைர வர்த்தகம் நடைபெற்று வந்தது.
இவ்வாறு மிகப்பெரிய சந்தையின் இடம் மாற்றப்பட்டு விட்டதால் லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந் துள்ளனர். குறிப்பாக உள்ளூர் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையில் மும்பையை சேர்ந்த வர்த்தகர்கள் சூரத் வைர வியாபார வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் வைர வியாபாரம் என்பது மும்பையை மய்யமாக கொண்டு தான் செயல்பட்டு வந்தது. அதை படிப்படியாக சூரத் நகருக்கு மாற்றி அங்கு மிகப்பெரிய வர்த்தக வளாகத்தை திறந்து மும்பைக்கு குட்பை சொல்லி விட்டனர். இதனால் அங்கு பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். வைரம் பட்டை தீட்டும் பணி மங்களூர் மற்றும் உடுப்பியிலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் சூரத்திற்கு மாற்றப்பட்டதால் மகராட்டிரா, மேற்கு கருநாடகா மாநிலத்தில் வைர வணிகத்தை நம்பி இருக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். விடுதலைக்குப் பிறகு மும்பையை யூனியன் பகுதியாக்கவேண்டும் அல்லது குஜராத்தின் ஒரு பகுதியாக மாற்றும் சூழ்ச்சி நடைபெற்றது. அதற்காகப் பெரும் போராட்டம் நடந்தது. அதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் பெயர் மும்பையில் உள்ள புளோரா பவுண்டன் பகுதியில் கல்வெட்டாக பதியப்பட்டுள்ளது. அதில் மராட்டியர்களோடு தமிழர்கள், உத்தரப்பிரதேசம், பீகார் வங்காளிகள் மற்றும் இதர மாநிலத்தில் உள்ள அனைவரது பெயர்களும் உள்ளன. ஆனால் அதில் குஜராத்திகளின் பெயர் இல்லை.
நீண்ட போராட்டம் உயிரிழப்பிற்குப் பிறகு மும்பை 1960 ஆம் ஆண்டு மே முதலாம் தேதி மகாராட்டிராவோடு இணைக்கப்பட்டு, இந்தியாவின் பொருளாதார தலை நகரமாக திகழ்கிறது. இந்த நிலையில் அதன் பெருமையைச் சிதைக்கும் வண்ணமும், மோடி தனது மாநிலமான குஜராத்தின் தொழிலதிபர்களின் வசதிக்காகவும் ஒட்டு மொத்த வைர வர்த்தகத்தை சூரத் நகருக்கு மாற்றியுள்ளார். பிரதமர் மோடியின் இச்செயலை மகாராட்டிர மேனாள் முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத்பவார் கடுமையாக எதிர்த்துள்ளார். மகாராட்டிரா மாநில எதிர்க்கட்சிகள் விரைவில் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளன.

No comments:

Post a Comment