புதுடில்லி, டிச. 6- சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளை சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, அசதுத்தீன் ஒவைசியின் ஏஅய்எம்அய்எம் மற்றும் இடதுசாரிகள் பெற்றுள்ளன.
டில்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் கட்சியாக, அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உள்ளது. இக்கட்சி சார்பில் ராஜஸ்தானில் 88 பேர், ம.பி.யில் 70 பேர் மற்றும் சத்தீஸ்கரில் 57 பேர் போட்டியிட்டனர். இவர்கள் அனை வருமே தங்கள் வைப்புத்தொகையை இழந்துள்ளனர். இவர்களுக்காக டில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரி வால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் சிங் மான் ஆகியோர் 12-க்கும் அதிகமான பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் ராஜஸ்தானில் 0.38%, மத்தியப் பிரதேசத்தில் 0.94%, சத்தீஸ்கரில் 0.43% வாக்குகளை மட்டுமே ஆம் ஆத்மி பெற்றது. இவற்றை விட அதிக வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. அதாவது நோட்டாவுக்கு ராஜஸ்தானில் 0.96%, ம.பி.யில் 0.99%, சத்தீஸ்கரில் 1.30% என வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுபோல் இதர முக்கிய கட்சி களும் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்றுள்ளன.
ராஜஸ்தானில் சமாஜ்வாதி 0.01%, இந்திய கம்யூனிஸ்ட் 0.04%, மார்க்சிஸ்ட் 0.97%, சிபிஅய் எம்எல் மற்றும் ஏஅய் எம்அய்எம் 0.01% வாக்குகள் பெற்றுள்ளன. ம.பி.யில் சமாஜ்வாதி 0.43%, இந்திய கம்யூனிஸ்ட் 0.03%, மார்க்சிஸ்ட் 0.02% மற்றும் ஏஅய்எம்அய்எம் 0.12% வாக்குகள் பெற்றுள்ளன. சத்தீஸ்கரில் இந்திய கம்யூனிஸ்ட 0.42%, சிபிஅய் எம்எல் 0.05% வாக்குகள் பெற்றுள்ளன. கடந்த 2018 தேர்தலில் நோட்டாவுக்கு ராஜஸ்தானில் 1.3%, ம.பி.யில் 1.5% வாக்குகள் பதிவாகியிருந்தன.
No comments:
Post a Comment