நம்முடைய கொள்கைகளை முதலில் மற்றவர்கள் ஏற்க மறுத்தாலும்,
ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு அவர்களுடைய அறிவு வாசல் திறக்கும்!
மூளைக்குள்ளே பெரியார் நுழைந்துவிட்டார் என்று அர்த்தம்!
புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்'' தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
புதுச்சேரி, டிச.3 மேலும் மேலும் உற்சாகமாக, மேலும் பணியாற்றவேண்டும் என்ற உணர்வோடு திரும்பிப் போகிறேன்! நம்முடைய கொள்கைகளை முதலில் மற்றவர்கள் ஏற்க மறுத்தாலும், ஏற்கவேண்டிய கட்டாயத் திற்கு அவர்களுடைய அறிவு வாசல் திறக்கும்! மூளைக் குள்ளே பெரியார் நுழைந்துவிட்டார் என்று அர்த்தம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடல்கடந்த 19.11.2023 அன்று காலை புதுச்சேரியில் நடை பெற்ற பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத் துறை அமைப்புகளின் மாநில, மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நேர்மைதான் நமக்கு மிகவும் முக்கியம்!
கொடுக்கப்படும் பணம், எதற்காகக் கொடுக்கின்றார் களோ, அதற்குப் பயன்படும் என்கிறபொழுதுதான், கொடுக்கின்றவர்களுக்கு நம்பிக்கையும், மனநிறைவும் ஏற்படும். நேர்மைதான் நமக்கு மிகவும் முக்கியம்.
அய்யா அவர்கள், ‘‘பொய் சொல்லமாட்டேன்'' என்று சொல்லி, நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிறைச் சாலைக்குப் போயிருக்கிறார்.
தந்தை பெரியாரின் நேர்மை!
1903 இல் தந்தை பெரியார் வியாபார ரீதியில் தமது தந்தையின் கையெழுத்தை, தானே போட்டு அனுப்பிய ஒரு நிகழ்வுக்காக, அவர்மீது ‘‘ஃபோர்ஜரி - கள்ளக் கையெழுத்துப் போட்டு மோசடி செய்துவிட்டார்’’ என்ற கிரிமினல் வழக்கில், அவர்மீது கிரிமினல் குற்றச்சாற்று வழக்கு - வெள்ளைக்கார கலெக்டர் - நீதிபதிமுன் வந்த போது, பிரபல வழக்குரைஞர்கள் ‘‘அக்கையெ ழுத்தை நான் போடவில்லை என்று நீதிபதியிடம் மறுப்புச் சொல்லுங்கள்; அது என் கையெழுத்து இல்லை என்று சொல்லி விடுங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று எவ்வளவோ கூறியும், ‘‘தான் கையெழுத்துப் போட்டது உண்மை தான்’’ என்று கூறி, அதற்குரிய காரணத்தையும் விளக்கமாகக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு பிறந்த நாள் அறிக்கை - செய்தி யாகக்கூட சொல்லவிருக்கிறேன்.
பகுத்தறிவாளர்கள் என்றால், நேர்மையான வாழ்க்கை. புரட்டு இல்லாத வாழ்க்கை. இரட்டை வாழ்க்கை நமக்குக் கிடையாது.
நேர் எதிராக இரண்டு தத்துவங்கள்!
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அண்ணா அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்பொழுது, ‘‘‘Rationalism is nothing but the annihilation of duties notes of thoughts and action’’ - ‘‘பகுத்தறிவு என்பது இருக்கிறதே, இரட்டை வேடத்தை ஒழிப்பது; சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று.’’
நேர் எதிராக இரண்டு தத்துவங்கள் நிற்கின்றன.
ஒன்று, திராவிடத்துவ இந்தியா - திராவிட இந்தியா.
இன்னொன்று ஹிந்துத்வா இந்தியா.
இரண்டிற்கும் இடையே போராட்டம்.
ஒன்று உண்மை; இன்னொன்று பொய்.
ஆகவே, நாம் நேர்மையாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறோம். இருப்பதை எடுத்துச் சொல்கிறோம்; பொய் சொல்லாதீர்கள் என்று சொல்கிறோம்.
கண்ணுக்குத் தெரியாத ஒரு உலகம் இருக்கிறது என்றால், கண்ணுக்குத் தெரியாமல் ஏன் இருக்க வேண்டும்?
‘‘சரி, கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதினால், அதை நான் ஒப்புக்கொள்ளவேண்டுமா?’’ என்று பெரியார் கேட்டார்.
கேள்வி கேட்டதினுடைய அடிப்படை - அதை பிறரிடம் எடுத்துச் சொல்லும்பொழுது, சிலரால் பதில் சொல்ல முடியவில்லை.
‘ஆ', என்று போவானே தவிர, என்னால், மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல் வானே தவிர, பதில் சொல்லுவானா?.
கண்ணுக்குத் தெரியுமா?
கண்ணுக்குத் தெரியாது.
காதால் கேட்க முடியுமா?
கேட்காது.
அதை உணர முடியுமா?
உணர முடியாது.
மனோவாஸ்து காதல்.
மனதிற்கு எட்டாது.
சொல்லால் வர்ணிக்க முடியாது. அதைத் தொட்டுக் காட்ட உணர முடியாது.
சரி, உனக்கு எப்படி இவையெல்லாம் தெரிகிறது என்று கேட்டார்.
அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை.
நான் எல்லாவற்றையும் மறுக்கவில்லையே, கண்ணுக்குத் தெரிந்தால்தான் ஒப்புக்கொள்வேன்!
அதற்கடுத்து இன்னும் வேகமாகச் சொல்கிறார், ‘‘நான் எல்லாவற்றையும் மறுக்கவில்லையே, கண்ணுக்குத் தெரிந்தால்தான் ஒப்புக்கொள்வேன் என்றுதானே சொல் கிறேன். காற்று இருக்கிறதே, அது கண்ணுக்குத் தெரிகிறதா? ஆனால், சுவாசிக் கின்றோமே, மூச்சு விடுகிறோமே, பலூனை ஊதுகிறோமே - ஒருவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? என்பதற்காக என்ன செய்கிறோம்; அவர் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தால், மூச்சு விடுகிறாரா, இல்லையா? என்று பார்க்கிறோம் அல்லவா!
ஸ்டெதஸ்கோப் கருவி எந்தக் கடவுள் கண்டுபிடித்தது?
ஏன், டாக்டர் ஸ்டெதஸ்கோப் வைத்து பார்க்கிறார்? ஸ்டெதஸ்கோப் கருவி எந்தக் கடவுள் கண்டுபிடித்தது; எந்த முனிவர் கண்டுபிடித்தது?
ஸ்டெதஸ்கோப் வைத்துப் பார்க்கும்பொழுது லப்-டப் என்று அடித்தால்தானே இதய துடிப்பதற்கு அடையாளம்.
‘‘மருத்துவ அறிவியல்தான் நம்மை வாழ வைக்கிறது.''
பெரியார் சொல்கிறார், ‘‘23 வயது சராசரி உள்ள காலகட்டத்தில், எனக்கு 82 வயதாகிறது இப்பொழுது - எனக்குப் பெருமையாக இருக்கிறது'' என்று அவர் சொல்கிறார்.
இது இயற்கையையொட்டியது; நேர்மையையொட்டி யதே தவிர வேறில்லை என்று பெரியார் சொல்கிறார்.
ஆகவே, அந்தப் பணியை நீங்கள் செய்கின்றபொழுது, உங்களை வெகுவாகப் பாராட்டுகிறோம். நீங்கள் மேலும் உற்சாகத்தோடு பணியாற்றுங்கள்.
ஒரு முக்கியமான அறிவிப்பு. சில புதிய பொறுப் பாளர்களை அறிவிக்க இருக்கிறேன்.
கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்.
‘பெரியார் 1000’ என்ற ஒரு நிகழ்ச்சியை மாணவர் களுக்காக நடத்துகின்றோம்; அதேபோல, அவர்களுக்கு ‘பெரியாரால் வாழ்கிறோம்‘ என்ற ஒரு தலைப்பைக் கொடுத்தோம்.
‘பெரியார் பிஞ்சு’ இதழை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்!
பிறகு ‘பெரியார் 1000’ என்று கேள்விகள் கேட்டு, அது மாணவர்களிடையே, இளைஞர்களிடையே சென்ற டைய வேண்டும். இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டும். ‘பெரியார் பிஞ்சு’ இதழை பிள்ளை களுக்கு வாங்கிக் கொடுங்கள்.
நீங்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைச் சாலைக்கு வரவேண்டாம்; குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களிடம் ‘பெரியார் பிஞ்சு’ சந்தாக்களை கேட்டு வாங்குங்கள். ஒவ்வொரு ‘பெரியார் பிஞ்சு’ இதழும் அதிகமாக அதிகமாக எங்களுக்கு மூன்று மடங்கு நட்டம்தான். ஆனாலும், அவ்வளவு நட்டத்தையும் தாங்கிக்கொண்டு, அந்த இதழைத் தொடர்ந்து நடத்துகின்றோம்.
உங்களிடம் துண்டேந்துகிறோம்; நீங்கள் நன்கொடைகளைக் கொடுக்கிறீர்கள்!
காரணம், உங்களிடம் துண்டேந்துகிறோம்; நீங்கள் நன்கொடைகளைக் கொடுக்கிறீர்கள். நட்டத்தை ஓரள விற்கு சரி செய்துகொள்கிறோம்.
உங்கள் பிள்ளைகளுக்கு இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்லுங்கள். அப்படிப்பட்ட ஒரு சிந்தனையை பிள்ளைகளிடையே உருவாக்கும் வாய்ப்புப் பெற்ற வர்கள் ஆசிரியர்கள்தான்.
நான் இங்கே உங்களுக்குப் பயன்படுகிறேன்; உங் களுடைய வேலைக்காரனாக இருக்கிறேன். இதைத் தவிர எனக்கு வேறு எந்தப் பணியும் இல்லை. நேற்றுகூட மாணவிகள் என்னிடம் நேர்காணல் எடுத்தனர்.
‘‘நீங்கள் இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்களே, அதற்கு என்ன காரணம்?'' என்று கேள்வி கேட்டார்கள்.
‘‘சுறுசுறுப்பாக இருப்பதுதான் காரணம்'' என்றேன்.
சிறிது நேரம்தான் பேசவேண்டும் என்று நினைத்து இங்கே வந்தேன். உங்களிடம் பேச ஆரம்பித்தவுடன், துண்டுச் சீட்டு கொடுக்கிறார்கள், ‘‘நேரமாயிற்று, நீண்ட நேரம் உரையாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்’’ என்று.
மேலும் மேலும் உற்சாகமாக, மேலும் பணியாற்றவேண்டும் என்ற உணர்வோடு திரும்பிப் போகிறேன்!
நான் இங்கு வரும்பொழுது இருந்ததைக் காட்டிலும், திரும்பிப் போகும்பொழுது மேலும் மேலும் உற்சாகமாக, மேலும் பணியாற்றவேண்டும் என்ற உணர்வோடு போகிறேன் என்றால், அதற்குக் காரணம் நீங்கள்தான். இந்தப் பணியில் உங்களிடம் உள்ள உறுதிப்பாடு, ஈடுபாடு.
முன்பு 20 பேரை வைத்து கலந்துரையாடல் நடத்தினோம். இன்றைக்கு அரங்கமே நிறைந் திருக்கிறது - 250 பேருக்குமேல் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பார்க்கும்பொழுது மகிழ்ச்சி ஏற்படு கிறது.
நான் பிறந்த தேதிதான் - என் ஆசிரியர் திராவிடமணி பிறந்த தேதியும்!
ஆகவே, என்னுடைய ஆசிரியர் திராவிடமணி என்னை தயாரித்தார். அவருக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம். நான் பிறந்த தேதிதான் - அவர் பிறந்த தேதியும்.
அவர், அறிவாசான் அய்யாவிடம் என்னை அறி முகப்படுத்தினார். அப்பொழுது அண்ணா அவர் களும் இருந்தார்.
உங்களை அன்போடு கேட்டுக்கொள்வது என்ன வென்றால், ஆசிரியர்கள் இங்கே நிறைய பேர் வந்திருக் கிறீர்கள். பகுத்தறிவு ஆசிரியரணி மிக நன்றாக இருக் கிறது. மற்ற எல்லா அணிகளுக்கும் நான் பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியரணியைச் சேர்ந்த தம்பி பிரபாகரன் அவர்கள் மிகச் சிறப்பாக சொன்னார்.
சில மாற்றங்களை செய்யவிருக்கின்றோம்!
ஒரு புதிய யோசனை என்னவென்றால், ஈரோட்டில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் எப்படி சில மாற்றங்களைச் செய்தோமோ, அதேபோல சில மாற்றங்கள்.
ஊடகப் பிரிவு, எழுத்தாளர் பிரிவு போன்றவை இருக் கின்றன. ஆசிரியர் பிரிவை நாம்தான் உருவாக்கினோம். இதற்குமுன் பகுத்தறிவாளர் கழகத்தில்தான் எல்லோரும் இருந்தார்கள்.
ஆசிரியரணியினர் மிக உற்சாகமாக இருக்கிறார்கள். அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆசிரியர்களிலேயே, தொழிற்சங்க ரீதியாக இருக்கக்கூடிய அமைப்புகள் போன்று பல அமைப்புகள் இன்றைக்கு இருக்கின்றன.
நம்முடைய தோழர்களே என்ன செய்கிறார்கள் என்றால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக இருந்தாலும், மற்ற ஆசிரியர்களாக இருந்தாலும், ஒவ்வொரு அணி யிலும் ஒவ்வொருவர் இருக்கிறார்கள்.
இவர் ஓர் அணி; அவர் வேறொரு அணியில் இருக் கிறார் என்கிறபொழுது, அவர்களிடையே ஒரு பிரச் சினை வரும்பொழுது, அந்தப் பிரச்சினை தேர்தலிலும் வருகிறது என்றால், என்னாகும்?
அவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்கிறார்; இவர், இன்னொருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்கின்ற பிரச்சினைகள் இருக் கின்றன. அது நமக்குத் தேவையே இல்லை.
இரட்டை உறுப்பினர் முறை என்பதே தேவையில்லை!
இரட்டை உறுப்பினர் முறை என்பதே தேவையில்லை என்ற அடிப்படையில்தான் திராவிடர் கழகத்திலேயும் இருக்கிறது.
ஆகவே, நாங்கள் என்ன யோசனை செய்தோம் என்றால் - நான், துணைத் தலைவர், மற்ற பொறுப் பாளர்கள் எல்லாம் சேர்ந்து என்ன முடிவு செய்தோம் என்றால், முக்கொம்பு மாதிரி பிரிந்தது - பிறகு இணைந் தது. ஆசிரியரணியையும் இதிலேயே இணைத்து, ஆசிரியரணியில் உள்ளவர்களை முக்கிய பொறுப்பாளர் களாகப் பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பைக் கொடுப்பது என்பதுதான் அது.
பெரியார் 1000 என்றால், முழுக்க முழுக்க அதனை ஆசிரியர்கள்தான் செய்யவேண்டும்!
ஆனால், அப்படி பொறுப்பு கொடுத்தாலும்கூட, அமைச்சர்களுக்கு எப்படி துறையை ஒதுக்கி, தனித்தனியாகப் பணிகளைக் கொடுக்கிறார்களோ, அதுபோன்று அந்தப் பணிகளைச் செய்யவேண்டும். உதாரணமாக, பெரியார் 1000 என்றால், முழுக்க முழுக்க அதனை ஆசிரியர்கள்தான் செய்யவேண்டும்.
பொதுச்செயலாளர், துணைத் தலைவர் என்று ஒரு குழுவை நியமித்துக் கொள்ளவேண்டும்.
பணிகளைப் பிரித்துப் பிரித்து செய்யவேண்டும்!
ஆசிரியரணியை பகுத்தறிவாளர் கழகத்தில் இணைக்கின்றோம் - அவர்கள் என்ன செய்யவேண்டும்? மற்றவர்களோடு இணைந்து, பெரியாரியல் பயிற்சி வகுப்பு ஒருவர் பொறுப்பு - பெரியார் உலகம் அது இன் னொருவர் பொறுப்பு என்று பிரித்துக் கொள்ளவேண்டும்.
இப்படித் தனித்தனி பிரிவாக வந்து, பல பிரிவுகள் என்று வரும்பொழுது, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக, ஊடகப் பிரிவு இதை செய்தது; எழுத்தாளர் பிரிவு அதை செய்தது; ஆசிரியர் பிரிவு இதனைச் செய்தார்கள் என்று வரவேண்டும்.
பகுத்தறிவாளர் கழகத்தில் பகுத்தறிவு ஆசிரிய ரணியை இணைத்து எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிறபோது, முழுக்க முழுக்க எண்ணிக்கையைப் பெருக்கி, மொத்தமாக இவ்வளவு இருக்கிறோம் என்று எடுத்துக்காட்டுவதற்கும் சிறப்பாக இருக்கும். எப்படியும் அந்த எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும்.
யார் யாருக்கு முக்கியப் பொறுப்புகளைக் கொடுக்க வேண்டுமோ அதனை நாங்கள் முடிவு செய்து செய்யவிருக்கின்றோம்.
பதவி கிடையாது - பொறுப்புதான்!
பலர் தொடர்ச்சியாக ஒரே பொறுப்பிலிருந்து பணி செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் பொறுப்புகளை மாற்றி மாற்றி கொடுக்கவிருக்கின்றோம். எல்லோருக்கும் அனுபவம் வரவேண்டும் என்பதற்காகத் தான். இது பதவி கிடையாது - பொறுப்புதான்.
இரண்டு ஆண்டுகளோ, மூன்று ஆண்டுகளோ பொறுப்பில் ஒருவர் இருக்கிறார் என்றால், அடுத்த ஆண்டிற்கு இன்னொருவரை அவரே அடையாளம் காட்டவேண்டும். ‘‘எனக்குப் பிறகு, இவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுங்கள்; அதனை நன்றாக இவர் செய்வார்'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரவேண்டும்.
அதேபோன்று பகுத்தறிவாளர் கழகத்தில் மகளிரணி என்ற ஓரணியை தனியாக நாம் உருவாக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், திராவிடர் கழகத்தில் மகளிரணி என்ற ஓர் அணி இருக்கிறது. அதை இன்னும் விரிவு செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.
பிரிவு, பிரிவு, பிரிவு என்று நிறைய பிரிவுகள் என்பதும் அவசியமில்லை!
அதுபோல், பகுத்தறிவாளர் கழகத்தில் தேவை யில்லை. ஏனென்றால், பிரிவு, பிரிவு, பிரிவு என்று நிறைய பிரிவுகள் என்பதும் அவசியமில்லை.
பகுத்தறிவாளர் கழகத்திற்கு என்னென்ன வகையில் உங்களால் ஒத்துழைப்பு கொடுக்க முடியுமோ அதனை செய்யுங்கள். உங்கள் தொழில் முக்கியம்; உங்கள் பணி முக்கியம் - அதில் நாங்கள் குறுக்கிடுவது இல்லை. போராட்டக் களத்தில் நீங்கள் வந்து, எங்களை சிறைச் சாலைக்கு வழியனுப்புவதற்கு வந்தால் போதும்; எங்க ளோடு சிறைச்சாலைக்கு வரவேண்டிய அவசியமில்லை.
‘விடுதலை’ உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு!
அதேநேரத்தில், என்னென்ன வகையில் உதவ முடியுமோ அதனை நீங்கள் செய்யலாம். எனக்கு நல்ல முறையில் வருமானம் வருகிறது; ஆசிரியரைப் பார்க் கக்கூட எனக்கு நேரமில்லை என்றால், தோழர்களிடம் சந்தாக்களைக் கொடுத்தால் போதுமானதாகும்.
‘விடுதலை’ உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு!
World’s only Rationalist Daily
திராவிடர் கழகம் நாளேடு என்று போடவில்லை. பகுத்தறிவு நாளேடு என்றுதான் போடப்பட்டு இருக்கிறது. எனவே, உங்களுக்குத்தான் உரிமை அதிகம் இருக்கிறது. நீங்கள்தான் ‘விடுதலை' சந்தாக்களை அதிகமாகச் சேர்க்கவேண்டும்.
இருகரம் நீட்டி உங்களிடம் சந்தாக்களை சேர்க்க வேண்டுகிறோம்!
ஆகவே, இருகரம் நீட்டி உங்களிடம் சந்தாக்களை சேர்க்க வேண்டுகிறோம். ‘விடுதலை'க்கு மட்டுமல்ல, ‘உண்மை', ‘பெரியார் பிஞ்சு', ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆகிய இதழ்களுக்கும் சந்தாக்களை சேருங்கள்.
அது நமக்காக அல்ல - மற்றவர்களுக்கு அறிவொளி பரப்புவதற்காக.
நம்மைத் தவிர வேறு யாரும் இந்தப் பணியை செய்வது கிடையாது.
நீங்கள் பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்தால் கூட, நம்முடைய ‘விடுதலை' நாளிதழை வைத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் சுயமரியாதைக்காரர்கள் அந்த டெக்னிக்கைத்தான் கடைப்பிடிப்பார்கள்.
உடன் பயணம் செய்பவர்கள், ‘‘என்ன பேப்பர் அது கொடுங்கள்'', என்று கேட்டு வாங்கி, ‘‘அய்யோ இந்தப் பேப்பரா?'' என்று சொல்லி கொடுத்துவிடுவார்கள். சிறிது நேரம் கழித்து, அவரே ‘‘கொடுங்கள், அதை நான் பார்க்கிறேன்'' என்று வாங்கிப் படிப்பார்.
‘‘படித்தேன், இதில் சொல்வது நியாயமாகத்தான் இருக்கிறது'' என்று சொல்லி பேப்பரை திருப்பிக் கொடுப்பார்.
எனவேதான், தாய்மார்களுக்கு நன்றாகத் தெரியும் - நோயால் அவதியுறும் குழந்தையின் காலையும், கையையும் பிடித்துக்கொண்டு, மூக்கையும் பிடித்து மருந்தை வாயில் ஊற்றுவார்கள். கொஞ்சம் கீழே கொட்டினாலும், மீதி மருந்து வயிற்றுக்குள் போய், நோயைக் குணமாக்குகின்ற வேலையை செய்யும்.
நம்முடைய கொள்கைகளை முதலில் மற்றவர்கள் ஏற்க மறுத்தாலும், ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு அவர்களுடைய அறிவு வாசல் திறக்கும்!
அதுபோல், நம்முடைய கொள்கைகளை முதலில் ஏற்க மறுத்தாலும், ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு அவர்களுடைய அறிவு வாசல் திறக்கும். உங்களுடைய ஒத்துழைப்பு அதுபோல் அமையவேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் பகுத்தறிவாளர் கழகம் உங்களை வரவேற்கிறது.
புதிதாக ஒரு செய்தி - ஏற்கெனவே செஞ்சி மாநாட் டிலும் அறிவித்தோம்.
இலச்சினை என்பது ஒர் அடையாளம்!
பகுத்தறிவாளர் கழகத்திற்கு இலச்சினை என்பது ஒர் அடையாளம். பகுத்தறிவாளர் கழகம் என்று பெரிதாக எழுதவேண்டிய அவசியமில்லை. கேள்விக்குறி (?) தான் அதற்கான இலச்சினை.
ஏன்? எப்படி? எதனால்? எப்பொழுது? யாரால்? இந்த அய்ந்தும்.
அறிவுப் பஞ்சம் எங்கே இருக்கிறதே, அங்கே மேற்கண்ட அய்ந்தும் தேவை.
திராவிடர் கழகத்திற்கு அறிவுச்சுடர் இலச்சினை.
பகுத்தறிவாளர் கழகத்திற்கு கேள்விக்குறி (?) இலச்சினை.
இது என்ன கேள்விக்குறி? என்று கேட்கிறார்களே, அதுவே கேள்வி கேட்கின்ற தன்மையை உருவாக் குவதுதான்.
ஆகவேதான், பகுத்தறிவாளர் கழகத்தினுடைய லோகோ (இலச்சினை) கேள்விக்குறி (?).
மூளைக்குள்ளே பெரியார் நுழைந்துவிட்டார் என்று அர்த்தம்!
அந்தக் கேள்விக் கேட்கும் தன்மையை ஒருவரிடம் உண்டாக்கினாலே, அவருக்குள்ளே, அவரது மூளைக் குள்ளே பெரியார் நுழைந்துவிட்டார் என்று அர்த்தம்.
சமூக வலைதளத்தில் யார் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அந்தப் பணியை சிறப்பாக செய்யுங்கள். நம்முடைய அழகிரிசாமி அந்தப் பணியை சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.
எழில்வாணன் அவர்களும் மிகச் சிறப்பாக அந்தப் பணியை செய்கிறார். யார் யாருக்கு வாய்ப்பு இருக் கிறதோ, அவர்கள் அந்தப் பணியை செய்யுங்கள். ஒருவர் மூலமாக பத்து பேருக்குச் சென்றால், அது நமக்கு லாபம்தான்.
அப்படிப்பட்ட உணர்வை நீங்கள் உருவாக்குங்கள். புதிய உற்சாகத்தோடு அந்தப் பணியைச் செய்யுங்கள். புதிய திருப்பம் ஏற்படும்.
வேதத்தை நம்பு என்று சொல்பவர்கள் அவர்கள் - வேதத்தை நம்பாதே! ஜாதி கூடாது என்று சொல்பவர்கள் நாம்!
2024 ஆம் ஆண்டு ஒரு பெரிய கேள்விக் குறி!
மறுபடியும் காவிகள், மறுபடியும் பாசிஸ்டுகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - நம்பு, நம்பு, ஜாதியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வது அவர்கள்.
நம்பாதே, நம்பாதே, வேதத்தை நம்பாதே! ஜாதி கூடாது என்று சொல்பவர்கள் நாம்.
வேதத்தை நம்பு என்று சொல்பவர்கள் அவர்கள்.
ஆகவே நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரும்பிப் போகும்பொழுது உறுதியெடுத்துக் கொள்ளுங்கள்!
இக்கலந்துரையாடல் முடிந்து ஒவ்வொருவரும் திரும்பும்பொழுது, ‘‘நான் ‘விடுதலை'யைப் பரப்புவேன், இயக்க ஏடுகளைப் பரப்புவேன், கேள்விக்குறி இலச்சினையைப் பரப்புவேன், மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வேன், பெரியார் 1000 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வேன்'' என்று உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்.
வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment