என்ன சவால்கள் வந்தாலும், எத்தனைப் போர்கள் வந்தாலும் அந்தக் களங்களை நாங்கள் சந்திப்போம்!
அந்தப் போரிலே நாங்கள் வெற்றி அடைவோம்!
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, டிச.30 ‘‘பெரியார் உலகமயமாகவேண்டும் – உலகம் பெரியார் மயமாகவேண்டும்!’’ என்பது அடுத்த கட்டம். அதை நோக்கி நாங்கள் செல்கிறோம். இடையில் என்ன சவால்கள் வந்தாலும், எத்தனைப் போர்கள் வந்தாலும் அந்தக் களங்களை நாங்கள் சந்திப்போம்! களங்களிலே எப்படிப்பட்ட நிலைகள் ஏற்பட்டாலும், அந்தப் போரிலே நாங்கள் வெற்றி அடைவோம்! வெற்றி அடையாவிட்டாலும், நாங்கள் மடிந்தாலும், எங்கள் சந்ததிகள் வெற்றி பெறும்! எங்கள் சந்ததிகள் மானம் பெறும்! எங்கள் சந்ததிகள் அறிவு பெறும்! எங்கள் சந்ததி கள் சுயமரியாதை பெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளும் – தொடரும் அறைகூவல்களும்’’ – கருத்தரங்கம்!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளான 24.12.2023 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், ‘‘தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளும் – தொடரும் அறைகூவல்களும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
28.12.2023 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:
சுயமரியாதை மருந்து!
மனிதனை மனிதன் இழிவாக நடத்துவதா? என் பதைக் கண்டு மனம் வெந்து, அந்தப் புண்ணோடு உள்ள மக்களுக்கு, சுயமரியாதை மருந்து – 97 சதவிகித மக்கள் பயன்படவேண்டும்; மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும்; 3 சதவிகித மக்களாக இருக்கக்கூடியவர்கள் உயர்ஜாதி என்று சொல்லிக் கொண்டிருப்பதா? என்று கேட்டார்.
இது ஒரு சமூக விஞ்ஞானம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வந்ததினால்தான், இன்றைக்கு வெற்றி அடைகிறார்கள்.
இன்றைக்கு ஏன் காவிக் கூட்டத்தினர் மிகப்பெரிய அளவிற்கு ஆத்திரப்படுகிறார்கள்?
அரசியல் ரீதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்று சொல்கிறார்கள்; ஏதேதோ பித்தலாட்டங்கள் செய்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். தேர்தல் வெற்றி என்பது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்.
அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த
பதவிப் பிரமாணத்தை காப்பாற்றவேண்டாமா?
ஆனால், ஆட்சிக்கு நீங்கள் அரசமைப்புச் சட்ட ரீதியாக அல்லவா வந்திருக்கிறீர்கள். அந்த அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த பதவிப் பிரமாணத்தை நீங்கள் காப்பாற்றவேண்டாமா? அதன்படி நடந்துகொண்டிருக்க வேண்டுமல்லவா? என்பதுதான் மிகவும் முக்கியம்.
ஆகவே, பெரியார் என்ற அந்தப் பேராயுதத்தினுடைய பணி – அந்தப் போராயுதம் நமக்குப் பயன்படவேண்டிய முறை இனிமேலும் இருக்கிறது. அதுதான் இந்த நேரத்தில் சொல்லவேண்டியதாகும்.
சுருக்கமாக ஒரு செய்தி –
நேற்று முன்தினம் ஒரு செய்தி வெளிவந்திருக் கிறது.‘குஜராத் மாடல் – ‘திராவிட மாடல்’பற்றி இங்கே பேசினார்கள்.
குஜராத்தில் ‘பகவத் கீதை’யை
பாடப் புத்தகமாக வைத்திருக்கிறார்கள்
குஜராத்தில் மோடி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே, 8 ஆம் வகுப்பில், மனுதர்ம சாஸ்திரம் பாட புத்தகமாக வைக்கப்பட்டது. ஜாதியை, பிறவி இழிவை வற்புறுத்தி, பெண்களைக் கொச்சைப்படுத்துவதே மனுதர்மம்.
இப்பொழுது போட்டிருக்கின்ற உத்தரவு என்ன வென்றால், புதிய கல்வி கொள்கை அடிப்படையில், ‘பகவத் கீதை’யை பாட புத்தகமாக வைத்திருக் கிறார்கள்.
நாம் கொஞ்சம் அசந்தால், இந்தியா முழுவதும் இந்தப் பாட முறை வரவேண்டும் என்று சொல் வார்கள்.
கீதை என்ன அவ்வளவு பெரியதா?
‘‘கீதையின் மறுபக்கம்‘’
அது எப்படி உருவானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், ‘‘கீதையின் மறுபக்கம்” புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறோம். பல லட்சக்கணக்கான புத்தகங்கள் பரப்பப்பட்டு இருக்கின்றன. 28 ஆவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது.
இந்தப் புத்தகம் ஏன் வந்தது என்று சொன்னால், பெரியார் விட்ட பணிதான். அய்யாதான் சொன்னார், ‘‘நான் இராமாயணத்தைப்பற்றி எழுதியிருக்கிறேன், பாரதத்தைப்பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால், கீதை யைப்பற்றி எழுதவில்லை. அந்தக் கீதை என்பது, ஜாதியை நிலைநாட்டுவது, பெண்களைக் கொச்சைப் படுத்துவது, ஜாதிக்கு ஆதாரமானது; மனுதர்மத்திற்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் இதைப் பரப்பி வைத்திருக்கிறார்கள். இதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவேண்டும். ஆகவே, கீதைக்கு மறுப்பு எழுது பவருக்கு சன்மானம் கொடுக்கிறேன்” என்று சொன்னார்.
யாரும் வரவில்லை.
இரண்டாண்டுகள்
அதே பணியாக இருந்தேன்!
கடைசியாக பெரியார் விட்ட பணியைத் தொடர வேண்டும் என்பதற்காக நானே இப்பணியை செய்தேன். இரண்டாண்டுகள் இதே பணியாக இருந்தேன். கீதையைப் படிப்பதைவிட, இரண்டு குடம் விளக்கெண் ணெய்யைக் குடித்துவிடலாம்.
எப்படிங்க இதைப் படித்தீர்கள்? அதற்காகவே உங்களுக்குத் தனியே ஒரு பரிசு கொடுக்கவேண்டும் என்று சொல்வார்கள்.
கீதை முழுவதையும் படித்து, அதற்கு ஆதாரத்தோடு மறுப்பை எழுதி ‘‘கீதையின் மறுபக்கம்” என்ற தலைப்பில் வெளியிட்டோம்.
அப்பொழுது கலைஞர் அவர்கள் இப்புத்தகம் குறித்து பெரிய அளவிற்குப் பாராட்டவும் இல்லை. அவருடைய பணியை அவர் செய்துகொண்டிருந்தார்.
தி.க.வும் – தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி – திராவிடர் கழகம் தாய்வீடு!
எங்களையும், கலைஞரையும் அவர்கள் எந்தக் காலத்திலும் பிரித்துப் பார்த்ததே இல்லை. அதுதான் எங்களுக்கு இருக்கின்ற பெருமையும், எங்களுக்கு இருக்கின்ற பலமும்கூட. தி.க.வும் – தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி – திராவிடர் கழகம் தாய்வீடு.
இதில் வேடிக்கை என்னவென்றால், ‘‘கீதையின் மறு பக்கம்” புத்தகத்தில் ஒரு படத்தோடு செய்தி வெளி யிட்டிருக்கிறோம். படம் – பாடம் இரண்டுமே முக்கியம்.
8.9.2004 அன்று மாலை, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், கலைஞர் அவர்களை, அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்றார்.
அப்பொழுது கலைஞர் அவர்கள் வீட்டில் இல்லை. வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டின் அருகே தி.மு.க. தோழர்கள் கூட்டமாக பதற்றத்தோடு இருந்தனர்.
கலைஞர் அவர்கள், ‘‘என்ன விஷயம்?” என்று கேட்டார்.
‘‘இராமகோபாலன் உங்களைச் சந்திக்க வருகிறாராம்” என்று சொன்னார்கள்.
‘‘வந்தால், நான் பார்த்துக் கொள்கிறேன்; நீங்கள் ஏன் பதற்றமடைகிறீர்கள்? அமைதியாக இருங்கள்” என்று சொல்லிவிட்டு, அவர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
வீட்டின் உள் சென்றவர், இராமகோபாலன் வந்தால், மேலே அனுப்புங்கள் என்றார் கலைஞர்.
இராமகோபாலன் கொடுத்த ‘‘பகவத் கீதையும்” – கலைஞர் கொடுத்த ‘‘கீதையின் மறுபக்கமும்!”
இராமகோபாலன் அவர்களும் வந்தார்; கலைஞரைப் பார்த்து, வணக்கம் சொல்லிவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறேன்; அந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கவேண்டும்” என்றார்.
‘‘கொடுங்கள், நான் நிறைய புத்தகம் படிக்கின்றவன்” என்று சொன்னார் கலைஞர்.
‘‘இது ‘பகவத் கீதை’ புத்தகம், இதை நீங்கள் படிக்க வேண்டும்” என்று சொல்லி, பகவத் கீதை புத்தகத்தைக் கொடுத்தார் இராமகோபாலன்.
நன்றி! என்று கலைஞர் அவர்கள் சொல்லிவிட்டு, மேசையின் டிராயரைத் திறந்து, ‘‘கீதையின் மறுபக்கம்” புத்தகத்தை எடுத்து, இராமகோபாலன் கையில் கொடுத்துவிட்டு, ‘‘நீங்கள் பகவத் கீதை புத்தகத்தைக் கொடுத்தீர்கள்; கண்டிப்பாக நான் படிக்கிறேன். ‘‘கீதை யின் மறுபக்கம்” புத்தகத்தை வீரமணி எழுதியிருக்கிறார்; அதை நீங்கள் அவசியம் படிக்கவேண்டும்; அவர் தவறாகக்கூட எழுதியிருப்பார்; ஆகவே, எங்கே தவறு இருக்கிறதோ, அதை நீங்கள் சுட்டிக்காட்டவேண்டும்” என்றார்.
இது நடந்தது 2004 ஆம் ஆண்டு.
சில ஆண்டுகளுக்குமுன்பு இராமகோபாலன் அவர் கள் இறந்துவிட்டார் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றுதான். எதிரிகள் உயிரோடு இருக்கும்பொழுது சந்திப்பதுதான் நம்முடைய வீரத்தினுடைய அடை யாளமே தவிர, அவர்கள் இறந்து போனார்கள் என்று மகிழ்ச்சியடைகின்ற ‘சின்ன புத்தி’ நம்முடைய திரா விடத்திற்குக் கிடையவே கிடையாது.
இதுவரையில், கீதையின் மறுபக்கத்திற்கு, ஏதாவது பதில் வந்ததா என்றால், இல்லையே!
கீதை அடிப்படையில்தான் இன்றைக்கு ‘‘விஸ்வகர்மா யோஜனா’’ திட்டம்!
அந்தக் கீதையில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது – ஜாதி அடிப்படையில் தொழிலை செய்தாகவேண்டும் என்றுதானே! அதே கீதை அடிப்படையில்தான், இன் றைக்கு ‘‘விஸ்வகர்மா யோஜனா” திட்டம்.
அதையும் நாம்தான் சுட்டிக்காட்டுகிறோம்; இந்தியா வில் உள்ள மற்றவர்களுக்குத் தெரியவில்லை. மீண்டும் குலத்தொழில் என்று வரக்கூடிய சூழ்நிலை.
ஜாதி ஒழிப்புச் சின்னமாகவும்
தேர்தலைப் பார்க்கவேண்டும்!
கீதையைப் பாடத் திட்டமாக வைத்தால், இன்றைக்கு தேர்தலை நாம் ஓர் அரசியல் களமாக மட்டும் பார்க்காமல், ஒரு சமூகப் பண்பாட்டுப் பாதுகாப்பு, மனிதர்களைக் காப்பாற்றுவது, பேதத்தை அகற்றுவது என்ற ஜாதி ஒழிப்புச் சின்ன மாகவும் தேர்தலைப் பார்க்க வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு அது தேர்தல். நமக்கு அது தலைமுறைப் பாதுகாப்பு என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்படி வரக்கூடிய சூழ்நிலையில்தான், இன் றைக்கு நம்முடைய பணி என்பது மிக முக்கிய மானதாகும்.
மனுதர்மத்தைத் தாண்டி, கீதையில், ‘‘பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள்” என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இவர்கள் எங்கே இருந்து பிறந்தார்கள்? அய்யப்பன் கதையா? நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
2020 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 5 ஆம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு போடப்பட்ட இராமர் கோவிலுக்கான பூமி பூஜையின்போது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகிறார்.
‘“முதலில் பிறந்தவர்களிடமிருந்து (‘பிராமணர்கள்’) அந்தத் தேசத்தில் பிறந்த அவனிடமிருந்து பூமியில் உள்ள அனைத்து மானிடர்களும், அவரவர்களுக்குரிய கடமைகளைக் கற்றுக்கொள்ளட்டும்; வருணாசிரமக் கொடியை ஏற்றிக்காட்டுவோம்.”
மனுதர்மத்தின் கடைசியில்….!
மனுதர்மத்தில் கடைசியில் ஒரு சுலோகத்தோடு முடியும்.
‘‘இதுவரையில் பிருகுமஹாரிஷியினால் நன்றாகச் சொல்லி முடிக்கப்பட்டிருக்கிற மனுசாஸ்திரத்தை சிரத் தையுடன் படிக்கிறது விஜன் எப்போதும் நல்லொழுக்க முள்ளவனாயிருந்து மறுமையில் தான் கோரிய சுவர்க்கமோக்ஷாதி சித்தியையும் அடைகிறான்” என்று அந்த சுலோகம் முடிகின்றது.
கடைசியாகப் பின்பற்றவேண்டியவை என்னவென் றால், என்னென்ன மற்றவர்கள் சொல்கிறார்களோ, அதை அப்படியே சாஸ்திரத்தில் இருப்பதைப் பின்பற்ற வேண்டும். இதில் விட்டுவிட்டாலும்கூட.
ஆகவே, மீண்டும் மீண்டும் அவர்கள் செய்வது, நம்மை மனிதர்களாக ஆக விடாது, மிருகங்களைவிடக் கேவலமாக, உரிமைகள் பறிக்கப்பட்டவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, தள்ளி வைக்கப்பட்டவர்களாக, படிக்கக் கூடாதவர்களாக நம்மை ஆக்குவதுதான்.
இப்படிப்பட்ட ஒரு ஒன்றிய ஆட்சியை, நாம் மீண்டும் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ மறுபடியும் கொண்டுவந்தால், 97 சதவிகிதம் உள்ள மக்களுடைய எதிர்கால வாழ்வு என்னாவது? என்ற கவலையோடு எடுத்துச் சொல்லவேண்டும்.
முழுக்க முழுக்க சமூகநீதியைப் பறிப்பது, பேதத்தை நிலைநாட்டுவது!
ஆகவே, இராமர் கோவிலை அவர்கள் காட்டுவது பக்தி – ஆனால், அதற்குப் பின்னால் இருக்கின்ற சதி இருக்கிறதே, ஜாதி தத்துவம் இருக்கிறதே, அது முழுக்க முழுக்க சமூகநீதியைப் பறிப்பது, பேதத்தை நிலை நாட்டுவது.
ஆகவேதான், இந்தப் போராட்டம் என்பது – வருணதர்மத்தை முன்னால் வைத்துப் பாதுகாக்கக்கூடிய ஒரு ஹிந்துத்துவ ஆட்சி – கட்சிக்கும்,
‘‘எல்லாருக்கும் எல்லாம்”, ‘‘அனைவருக்கும் அனைத் தும்”, ‘‘எல்லா விஷயங்களிலும் சமத்துவம் வேண்டும்” என்று சொல்கிற திராவிடத்துக்குமான போராட்டம்!
திராவிடம் என்பது ஏதோ ரத்தப் பரிசோதனை செய்வது போன்றதல்ல.
உடனே சிலர் புரியாமல் சொல்வார்கள், ‘‘ஆரியமும், திராவிடமும் கலந்துவிட்டதே” என்று.
கலந்துவிட்டது என்று எல்லோருக்குமே தெரியுமே, நீண்ட நாள்களுக்கு முன்பே!
அது முக்கியமல்ல! நாங்கள் இனவெறியைத் தூண்டவில்லை. இது ஒரு கல்ச்சுரல் மூவ்மெண்ட்ஸ்.
திராவிடத் தத்துவத்தை செயல்படுத்தக்கூடிய ஓர் ஆட்சி!
அதுதான் திராவிடம். இந்தியா முழுவதும் திராவிடம். திராவிடத் தத்துவத்தை செயல்படுத்தக் கூடிய ஓர் ஆட்சிதான் – தமிழ்நாட்டில் ஒப்பற்ற முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களு டைய தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சி – ஓர் எடுத்துக்காட்டான ஆட்சி.
‘இந்தியா’ என்று சொன்னாலே, காவி கட்சியினர் பயப்படுகிறார்கள்.
ஆகவே, இந்தியாவைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பும் இப்பொழுது நமக்கு இருக்கிறது.
இந்தியாவைப் பிளவுபடாமல் காப்பாற்றுவது எப்படி? பேதமிலாத வாழ்வின்மூலமாக!
திராவிடம் என்றாலே, பிரிவினை, பிரிவினை என்று சொல்கிறார்கள்.
திராவிடம் என்பது என்றும் வெல்லும்!
காலம், பெரியாருடைய காலடியில் வந்து நிற்கும் என்பது வரலாறு. திராவிடம் என்பது என்றும் வெல்லும்!
பெரியார் சொல்கிறார்,
‘‘என்னுடைய போராட்டங்களில் நான் தோற்றுப் போனது இல்லை. வெற்றி வேண்டுமானால் கொஞ்சம் காலதாமதமாகலாமே தவிர, நான் தோற்றுப் போன தில்லை” என்று.
மூத்த பத்திரிகையாளர் டி.ஜி.எஸ்.ஏ.ஜார்ஜ்
சமூகவியல் அறிஞரும், மூத்த பத்திரிகையாளருமான (‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’) டி.ஜி.எஸ்.ஏ.ஜார்ஜ், நமக்கு மாறுபட்டவர்; மூத்தவர், கேரளத்தைச் சேர்ந்தவர். அவர் எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய ஒரு பத்திரிகை ஆசிரியர்.
அவர் எழுதுகிறார்,
‘‘நீதிக்கட்சி 1914 இல் உருவானதற்குப் பிறகு, உருவான திராவிடர் இயக்கம் இயல்பாக, ஒரு இனவெறி இயக்க மாக மாறியிருக்க முடியும்” என்று.
ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் வேனில் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது, வேன் ரிப்பேர் ஆகி நின்றது; அந்த இடத்தில் ‘‘தட்சண பாரத் ஹிந்தி பிரச்சார சபா” இருக்கிறது.
அதனுள் இருந்த நிர்வாகிகள் ஓடிவந்து, ‘‘அய்யா, உள்ளே வந்து அமருங்கள்; வெளியில் வெயிலாக இருக்கிறது; வண்டியை சரி செய்வதற்கு நேரமாகும்” என்று சொல்கிறார்கள்.
‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் திரிபுவாதம்!
உடனே அய்யா அவர்கள், ‘‘இது எந்த இடம்?” என்று கேட்கிறார்.
‘‘தட்சண பாரத் ஹிந்தி பிரச்சார சபா” என்கிறார்கள்.
அங்கே பார்ப்பன நண்பர்கள் மற்றும் சிலரும் இருந்தனர்.
பெரியார்மீது மரியாதை வைத்து அவர்கள் அழைத்த வுடன், அய்யாவும் உள்ளே சென்று அமர்கிறார்.
அடுத்த நாள் ‘‘சுதேசமித்திரன்” பத்திரிகையில் பெரிய எழுத்தில், ‘‘ஹிந்தி பிரச்சார சபைக்குள் பெரியார்!” என்று செய்தி வெளியிட்டார்கள்.
எந்த இடமாக இருந்தால் எங்களுக்கு என்ன? சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று, கர்ஜனை செய்யக்கூடிய இயக்கம் திராவிட இயக்கம்.
ஒரு இன வெறி இயக்கமாக மாறியிருக்க முடியும் என்று எங்களைப்பற்றி குறித்துள்ள நிலையில், நாங்கள் இனவெறி இயக்கமல்ல – திராவிடர் இயக்கம், சமூகநீதி கோரும் சமத்துவ இயக்கம்.
திராவிட உறுதிமொழிகளை, திராவிடர் கழக மாநாட் டிலேயே நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம்.
திராவிடர் கழகத்திற்கு ரத்தத்தையும், சதையையும் வழங்கிய கலாச்சார அடையாளங்கள்!
நாம் சொல்வதைவிட, அந்த மூத்த பத்திரிகையாளர் மேலும் சொல்லுகிறார்,
‘‘மாறாக, அது தமிழ்மொழி, பண்பாடு, சமூகநீதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, ஒரு கலாச்சார இயக்கமாக வலுப்பெற்றது. அதற்கான காரணம் இது தான், திராவிடர் கழகத்திற்கு ரத்தத்தையும், சதையையும் வழங்கிய கலாச்சார அடையாளங்கள் – திரிமூர்த்திகளான பெரியார் – அண்ணா – கருணாநிதி ஆகியோர்” என்று சொன்னார்.
எனவே, தத்துவங்கள் மிகப்பெரிய அளவில் இன் றைக்கு இருக்கின்ற காரணத்தினால்தான், இப்பொழுது நடைபெறுவது தத்துவப் போர்.
சமத்துவம் உண்டு, உரிமை உண்டு என்று சொல்வதற்கு நமக்கு முழுத் தகுதி உள்ளது!
முகத்தில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்றெல் லாம் சொல்லும்போது, இல்லை, இல்லை, நான் இயற்கை வழியில் பிறந்தவன், எனக்கு சமத்துவம் உண்டு, உரிமை உண்டு என்று சொல்வதற்கு நமக்கு முழுத் தகுதி உள்ளது.
‘‘இல்லை, இல்லை, வருணாசிரம தர்மம்தான்; நாங்கள் கீதையைத்தான் சொல்லிக் கொடுப்போம். நாங்கள் மனுதர்மத்தைத்தான் சொல்லிக் கொடுப்போம்” என்று இன்றைக்கும் முற்படுகிறார்கள்.
‘‘இல்லை, எங்களுக்குத் திருக்குறள்தான் -‘‘பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும்” என்பதுதான் எங்கள் தத்துவம்.
திராவிடம் என்பது உலகத்தையே
தன்வயப்படுத்தி இருப்பதுதானே!
‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற சகோதரத் துவத்தை வலியுறுத்துவதுதான் திராவிடம் என்று சொன்னால், இந்தத் திராவிடம் என்பது உலகத்தையே தன்வயப்படுத்தி இருப்பதுதானே!
எத்தனைப் போர்கள் வந்தாலும் –
அந்தக் களங்களை நாங்கள் சந்திப்போம்!
எனவேதான், பெரியார் உலகத் தலைவராக இன் றைக்குக் காட்சியளிக்கவேண்டும்; காட்சி அளிக்கிறார்.
பெரியார் உலகமயமாகவேண்டும் –
உலகம் பெரியார் மயமாகவேண்டும்! என்பது அடுத்த கட்டம். அதை நோக்கி நாங்கள் செல்கிறோம்.
இடையில் என்ன சவால்கள் வந்தாலும், எத்தனைப் போர்கள் வந்தாலும் அந்தக் களங்களை நாங்கள் சந்திப்போம்!
நாங்கள் மடிந்தாலும்,
எங்கள் சந்ததிகள் வெற்றி பெறும்!
களங்களிலே எப்படிப்பட்ட நிலைகள் ஏற்பட்டாலும், அந்தப் போரிலே நாங்கள் வெற்றி அடைவோம்! வெற்றி அடையாவிட்டாலும், நாங்கள் மடிந்தாலும், எங்கள் சந்ததிகள் வெற்றி பெறும்!
எங்கள் சந்ததிகள் மானம் பெறும்!
எங்கள் சந்ததிகள் அறிவு பெறும்!
எங்கள் சந்ததிகள் சுயமரியாதை பெறும்!
அதுதான் இந்த நாட்டில் தெளிவுரை, தெளிவுரை என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, முடிக்கின்றேன்.
வாழ்க பெரியார்!
வளர்க திராவிடம்!
வெல்க திராவிடம்!
இந்தியாவைக் காப்போம் – திராவிட இந்தியாவாக மீட்போம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
No comments:
Post a Comment