அத்வானியின் அவல நிலை.. ராமன் கோயில் திறப்பு விழாவுக்கு வராதீங்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 21, 2023

அத்வானியின் அவல நிலை.. ராமன் கோயில் திறப்பு விழாவுக்கு வராதீங்க!

அவமானப்படுத்தியதா அயோத்தி நிர்வாகம்?

லக்னோ,டிச.21- ராமன் கோயில் திறப்பு விழா நிகழ்வுக்கு வர வேண் டாம் என அயோத்தி நிர்வாகம் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரிடம் கேட்டுக்கொண்டு உள்ளது.
அயோத்தியில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்ற இயக்கத்தை முன்னெடுத்து குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து அயோத்தி ராம ரத யாத்திரை சென்று, பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டவர் பாஜக மூத்த தலைவர் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும். உத் தரப்பிரதேச மாநிலம் அயோத் தியில் முகலாய பேரரசர் பாபரால் கிபி 1528 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 495 ஆண்டுகள் பழைமையான பாபர் மசூதி அமைந்து உள்ள நிலத்தை ராம ஜென்ம பூமி என்று உரிமை கோர அத்வானி தலைமையிலான இந்துத்துவா அமைப்பினர் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்தனர்.
அதன் தொடர்ச்சியாக பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு விசாரணை கீழமை நீதிமன்றம் தொடங்கி உச்சநீதி மன்றம் வரை நடைபெற்று வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதி மன்ற மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு அப்போது அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துத்துவ அமைப்பினர் கேட்டுக் கொண்ட படி ராமன் கோயில் கட்ட அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து பிரதமர் மோடி கோவிலின் அடிக்கல்லை 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டினார்.
ராமன் கோயில் கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம், ராமன் கோவிலின் தரை வேலைப்பாடுகளின் படங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் அறக்கட்டளை பகிர்ந்து இருந்தது.

வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அயோத்தியில் ராமன் கோவில் திறப்பு விழா நடை பெற உள்ளது. இந்த நிலையில், ‘ராம் லல்லா’வின் விழாவிற்கு மக்களை அழைக்கும் நிகழ்ச்சிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கின.
அயோத்தியில் நடைபெறும் ‘பிரான் பிரதிஷ்டா’ எனப்படும் விழாவில் கலந்து கொள்ள சுமார் 6,000 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ராமன் கோவிலின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளார்கள். அதேபோல் விளையாட்டு மற்றும் திரையுலக பிரபலங்களும் இதில் பங்கேற்க உள்ளார்கள். இது ஒருபுறம் இருக்க இத்தனைக்கும் மூலக்காரணமான பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இதில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இருவரையும் திறப்பு விழாவிற்கே வரவேண்டாம் என அயோத்தி ராமன் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டு இருப் பதாக வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. இது குறித்து ராமன் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில்,
இருவரது வயது மூப்பு காரணமாக அவர்களை வரவேண் டாம் என தெரிவித்து இருப்பதாக விளக்கி இருக்கிறார். அவர்கள் தங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். வயதை காரணமாக கூறி இருந்தாலும் அவர்களை வர வேண்டாம் என்று அறிவிப்பது அவமதிக்கும் செயல் எனவும் விமர்சனங்கள் வருகின்றன.

No comments:

Post a Comment