பெரும் வெள்ளக்கடலில் மக்கள் தத்தளிப்பு - ஒன்றியஅரசு ‘‘அரசியல்'' செய்வதற்கு இதுவா நேரம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

பெரும் வெள்ளக்கடலில் மக்கள் தத்தளிப்பு - ஒன்றியஅரசு ‘‘அரசியல்'' செய்வதற்கு இதுவா நேரம்?

featured image

தமிழ்நாடு முதலமைச்சர் கோரிய நிவாரண நிதியை உடனே அளிக்கவேண்டும்!
இல்லையேல், மக்களின் துயர வெள்ளம் ஒன்றிய அரசை தேர்தலில் மூழ்கடிக்கும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

பெரும் வெள்ளத்தில் தமிழ்நாட்டு மக்கள் தத்தளிக்கும் நேரத்தில், உதவிக்கரம் நீட்டாமல், அரசியல் செய்வது ஆபத்தானது – மக்களின் துயர வெள்ளம் ஒன்றிய அரசை மூழ்கடிக்கும், எச்சரிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் நூறு ஆண்டு காணாத மழை – அதன் காரணமாக பெருவெள்ளத்தின் திடீர்ப் பாய்ச்சலால் தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தது. மக்கள் பெற்ற அவதி அளவிடற்கரியது.
முதலமைச்சர் முதல், அத்தனை அமைச்சர்களும், அதிகாரிகளும் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை போர்க்கால வேகத்தில் பணியாற்றினார்கள்.
கண்ணுள்ள எவருக்கும் இந்த உண்மை புரியும் – ஆனால், ஒரே ஒருவருக்கு மட்டும், உண்மை மட்டும் கண்ணுக்குத் தெரியாது!

ஒன்றிய நிதியமைச்சரின் ஆணவம்!
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (22.12.2023) செய்தியாளர்களைத் திடீரென்று சந்தித்து இருக்கிறார். பிரதமரை நமது முதலமைச்சர் சந்தித்து வெள்ள நிவாரண நிதி கோரியதன் தொடச்சியாக ஒன்றிய நிதியமைச்சர் தமிழ்நாட்டுக்கு நிதி அறிவிப்பு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், ‘‘சாவு வீட்டில் சங்கிகளின் சங்கீதக் கச்சேரியை” நடத்தியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிதி அளிப்பதுபற்றிப் பேச்சே இல்லை. தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது; அவ்வாறு அறிவிக்கும் வழக்கமில்லை என்று வாயில் தெறித்த ஒவ்வொரு சொல்லும் ‘‘முதல் கோணல் முற்றும் கோணல்” என்ற முறையில் அமைந்திருந்தது.
மக்களைச் சந்தித்து வாக்குப் பெற்ற பழக்கமில்லாதவர் – ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல் நியமனம்மூலம் நிதியமைச்சர் என்ற உப்பரிக்கையில் உட்கார்ந்திருப்பவர் அல்லவா – இதுவும் பேசுவார் – இன்னமும் பேசுவார்.
டில்லியிலே பிரதமரை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்த நேரத்தைக் குறித்துக்கூட ஏளனம் பேசுகிறார். ஒரு பிரதமரை சந்திக்கவேண்டுமானால், நேரம் ஒதுக் குவது பிரதமர் அலுவலகம்தான் என்ற அடிப்படைக் கூடத் தெரியாதவர்தான் இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சர்! மகாவெட்கம்!!

பிரதமரை, முதலமைச்சர் சந்திக்க
நேரத்தை நிர்ணயிப்பது யார்?
பிரதமரை சந்திக்க முதலில் நண்பகல் 12.30 மணி என்று நேரம் ஒதுக்கி, பிறகு அதை இரவு 10.30 மணி என்று மாற்றி நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகமே என்பதை அவர் ஏனோ அறியாமல் கூறுகிறார்!
தமிழ்நாடு என்றால், ஆத்திரம் நெஞ்சை அடைக் கிறது. அந்த எரிச்சலில் எடுத்தேன்- கவிழ்த்தேன் என்று ஒரு நிதியமைச்சர் பேட்டி அளிப்பது பரிதாபமே!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் டில்லி சென்று, நிதியமைச்சரை சந்திக்கக் காத்திருந்தும், கடைசிவரை சந்திக்காமல் அவமதித்தவர் அல்லவா!
பிரதமரைச் சந்தித்து 20 நிமிடங்கள் பேசி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். வெள்ள நிவாரண கோரிக் கையை முன்வைத்தார்.
‘‘கோரிக்கை மனு இருக்கிறதா” என்று பிரதமர் கேட்க, தயாராக வைத்திருந்த மனுவை நமது முதல மைச்சரும், பிரதமரிடம் அளித்துள்ளார்.
எல்லா உதவிகளையும் ஒன்றிய அரசு செய்யும் என்றும் பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார்.
உண்மை இவ்வாறு இருக்க, ‘‘வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ” என்ற முறையில், 140 கோடி மக்களுக்கான நிதியமைச்சர் அநாகரிக வார்த்தைகளை எல்லாம் அள்ளிக் கொட்டலாமா? தமிழ்நாட்டுப் பெண்மணி என்பதை எண்ணும்போது என்ன சொல்ல?

தேசியப் பேரிடர் என்பது நடைமுறையில்
இல்லாத ஒன்றா?
தேசியப் பேரிடர் அறிவிப்பு என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று என்று நிதியமைச்சர் கூறியிருப்பது-அவரின் அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது.
உண்மை என்ன?
29.10.1999 அன்று ‘பைலின் புயல்’ ஒடிசாவைத் தாக்கியது. இதனை அப்போதைய ஒன்றிய அரசு ‘தேசியப் பேரிடராக’ அறிவித்தது.
2021 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி குஜராத்தைப் புயல் தாக்கியபோது, பிரதமர் நேரில் பார்வையிட வில்லையா? அதனைத் ‘தேசியப் பேரிடர்’ என்று அறிவிக்கவில்லையா?
19 ஆம் தேதி பிரதமர் பார்வையிடுகிறார், மறுநாளே அவசர நிதியாக (NDRF) ரூபாய் ஆயிரம் கோடி அறிவிக்கப்படவில்லையா?

தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதி –
முதலமைச்சர் கோரிக்கை!
தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதி ரூ.21 ஆயிரத்து 692 கோடியாகும். அவசர நிதியாக ரூபாய் 2000 கோடி நிதியைக் கோரியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர்.
அதைக்கூட செய்வதற்கு மனம் இல்லையா?
ரூபாய் 450 கோடி நிதியை ஒன்றிய அரசு அளித்திருப்பதாகக் கரடி விடுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்திற்கும், இந்த நிதிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதி உள்ளது. அந்த வகையில், அளிக்கப்பட்ட நிதியை இப்பொழுது ஏற்பட்டுள்ள கொடு வெள்ளத்திற்காகத் தேவைப்படும் நிவாரண நிதியோடு முடிச்சிப் போடுவது யாரை ஏமாற்றிட?
எதிலும் அரசியல் பார்வை என்பது ஏற்கக்கூடியதல்ல – அது ஓர் ஓரவஞ்சனைப் பார்வை. மாநில அரசு கோரிய நிதியை ஒன்றிய அரசு உடனே அளிக்கவேண்டும்.

கேரளாவில்,ஒன்றிய அரசு நடந்துகொண்ட விதம்!
2018 இல் கேரளாவில் பெருவெள்ளம் சூழ்ந்தபோது, கேரளாவுக்கு அரிசி கொடுத்து உதவினோம் என்று ஒன்றிய பி.ஜே.பி. அரசு சொன்னதுண்டு. உண்மை என்னவென்றால், பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுக்கப்பட்ட அரிசிக்குக்கூட விலை வைத்து கேரள அரசிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டது பா.ஜ.க. அரசு என்பதை மறந்துவிடக் கூடாது. கரோனா காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலங்களுக்குத் தொழிலாளர்கள் மூட்டை முடிச்சியுடன், குழந்தை களுடன் நடந்தே சென்றனரே! ரயில்வே துறையைத் தன்வசம் வைத்துள்ள ஒன்றிய பி.ஜே.பி. அரசு அம் மக்களை இலவசப் பயணத்துக்கு அனுமதி அளித்ததா?
இன்னொரு குற்றச்சாட்டு என்ன தெரியுமா? வானிலை அறிக்கையைக் கூர்ந்து கவனித்து முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தவறிய தாம்!
உண்மை நிலை என்ன?

வானிலை அறிக்கை கூறியது என்ன?
மழை அளவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட அறிக் கைகள்:
டிசம்பர் 12: 16 ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை (6.45 செ.மீ. முதல் 11.5 செ.மீ.) பெய்யும்.
டிசம்பர் 15: 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதிவரை கனமழை பெய்யும் – ஆரஞ்சு அலர்ட் (11.5 செ.மீ. முதல் 20 செ.மீ.).
டிசம்பர் 17: மதியம் ஒரு மணிமுதல் அதி கனமழை பெய்யும் – ரெட் அலர்ட் (20 செ.மீ. மேல்.). 18 ஆம் தேதி மிக கனமழை பெய்யும். ஆரஞ்சு அலர்ட் (11.5 செ.மீ. முதல் 20 செ.மீ.).
ஆனால், பெய்த மழையின் அளவு என்ன?
டிசம்பர் 17 ஆம் தேதி காலை 8.30 மணிமுதல் டிசம்பர் 18 காலை 8.30 மணிவரை பெய்த மழையின் அளவு:
காயல்பட்டினம் 94.6 செ.மீ.
திருச்செந்தூர் 68.9 செ.மீ.
சிறீவைகுண்டம் 61.1 செ.மீ.
மூலைக்கரைப்பட்டி 61.5 செ.மீ.
மாஞ்சோலை 55.2 செ.மீ.
உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, தலைகீழாகப் புரட்டி, தமிழ்நாடு அரசின்மீது அபாண்டப் பழி சுமத்துவது – ஒன்றிய அரசின் உண்மை உருவத்தை வெளிப்படுத்துகிறது.

மக்களின் துயர வெள்ளம்
ஒன்றிய ஆட்சியை வீழ்த்தும்!
தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியவில்லை என்பதால், அதன் காழ்ப்புணர்ச்சியை ஒரு சோதனை யான காலத்திலும்கூடக் காட்டுவது – சேற்றில் புதை யுண்ட யானை வெளியேற முண்டி எழ முயற்சிக்கும் போது, மேலும் மேலும் ஆழத்தில் புதைந்து போகும் நிலைதான்! மக்களின் ஆறாத் துயர வெள்ளம் ஒன்றிய ஆட்சியை மூழ்கடிக்கும்!
‘இந்தியா’ கூட்டணியை நினைத்துக்கொண்டு, அவர் இப்படி பேசியிருப்பதன்மூலம், ‘‘காவிக்கட்சி இனி பல ஆண்டுகளானாலும் தமிழ்நாட்டு பக்கமோ, மற்ற பக்கமோ நுழைய முடியாது” என்பதை உணர்ந்த தால்தான் அம்மையாருக்கு இவ்வளவு ‘நிதானம் தாண்டிய கோபம்’ போலும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
23.12.2023

No comments:

Post a Comment